READ THIS ESSAY IN ENGLISH - CLICK HERE
🔴 இதையும் காண்க
> செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழலாமா?
முன்னுரை
உலகம் விரிந்த பெரிய பரப்பில் தேக்கி வைத்திருப்பது 'கடல்' என்ற நீர் பரப்பைத் தான். கடல் பரப்பானது எத்தனை நெடிய ஆழத்தையும் நீளத்தையும் கொண்டு இருந்தாலும் அதில் எங்கெங்கோ இடும் சிறு குப்பைகள் கூட ஒன்று கூடி அதுவே ஒரு தனித்தீவு போலே காட்சி அளிப்பதை செய்திகளில் படிக்கின்றோம். கடலில் இடும் குப்பைகள் அலைகளால் ஒன்றாக்கப்பட்டு பெரும் குப்பைப் பரப்பை உண்டாக்குகின்றது. இதை தவறுதலாக உண்ணும் கடல்வாழ் பிராணிகளும் மனிதனின் சிறு பிழையால் தனது இயல்பினை இழக்கின்றன. கடல் நீரும் மாசடைகின்றது. அதே போலே விண்வெளிக்கு நாம் அனுப்பும் செயற்கை கோள்களும், விண்கலங்களும், விண்வெளி வீரர்களும் வெளியிடும் அல்லது விட்டுவரும் செயற்கை கழிவுகளே விண்வெளிக் குப்பைகள் எனப்படும். உதாரணமாக ஒரு விண்வெளி வீரர் கொண்டு செல்லும் திருப்புளியை (screwdriver) விண்வெளியிலே தவறுதலாக விட்டு பூமிக்கு திரும்பினால், விண்ணில் மிதக்கும் அந்த பொருளே விண்வெளிக் குப்பை எனப்படும். இப்படியான விண்வெளிக் குப்பைகளை தணிக்கும் முறைகள் பற்றிய ஆராய்ச்சி கட்டுரையே இது.
விண்வெளிக் குப்பை
ஒரு விண்வெளி வீரர் தவறுதலாக விண்ணிலே விட்டு வரும் பொருள் மட்டும் விண்வெளிக் குப்பை ஆகிவிடாது. விண்வெளிக் குப்பைகளில் சில,
- தொடர்பு கொள்ள முடியாத செயற்கைக் கோள்
- நிலைத் தவறிய செயற்கைக் கோள்
- கோள்களில் மோதி சிதறிய ராக்கெட்/செயற்கைக் கோள்
- ராக்கெட் கழட்டி எறியும் பாகங்கள்
- விண்வெளி வீரர்கள் பயன்படுத்தி எறியும் பாகங்கள்
- கட்டுபடுத்த முடியாமல் விண்வெளியில் மிதக்கும் செயற்கைக் கோள்கள்/ ராக்கெட்டுகள்
விண்வெளிக் குப்பைகள் கடல் குப்பைகள் போன்று கடல்வாழ் பிராணிகளுக்கு மட்டும் அச்சுறுத்தலாக அல்லாமல் பெரும் உயிர் பரப்பைக் கொண்ட பூமிக்கும் அவை அச்சுறுத்தலாகவே உள்ளன. அதேப் போன்று விண்வெளிக் குப்பைகள் ஒரே இடத்தில் மிதப்பது அன்றி முடுக்குவிக்கப்பட்டு நகர்வது வருங்கால இடர்களுக்கு காரணமாக ஏற்படும் என்கின்றனர் விண்வெளி ஆய்வாளர்கள்.
விண்வெளிக் குப்பைகளின் அச்சுறுத்தல்
இதுவரை நடந்த ஆய்வின் படி பூமியின் மேற்பரப்பில் மட்டும் ஐந்து லட்சத்திற்கும் (5,00,000) மேற்பட்ட விண்வெளிக் குப்பைகளை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இவைகள் ஒன்றோடு ஒன்று மோதி மேலும் அதிகமான விண்வெளிக் குப்பைகளை உண்டாக்குகின்றன.
விண்வெளிக் குப்பைகள் வருங்கால தீமைகளுக்கு வழிவகுக்கும். பூமியின் மேற்பரப்பு முழுவதும் குவிந்து கிடக்கும் விண்வெளிக் கழிவுகளால் ராக்கெட் ஏவுதல் சாத்தியமற்றதாகி போகலாம்.
பூமியின் வளங்களையும் நிலங்களையும் விண்வெளியில் இருந்து கண்காணிக்கும் விலைமதிப்பு மிக்க செயற்கை கோள்களுக்கு விண்வெளிக் குப்பைகள் பெரும் ஆய்வுத் தடையாக இருக்கும்.
மேலும் மிகவும் முக்கியமான அச்சுறுத்தல் என்னெவெனில், விண்வெளிக் குப்பைகள் வளிமண்டல அடுக்குகளில் உள்நுழையுமானால் பூமி மீது மிகவும் சீற்றமான குப்பை மழை பொழியலாம். அவை கண்களுக்கு ஆனந்தம் அளித்து மகிழும் விதமாக இருக்காது. காரணம் ஒரு சிறிய அளவிலான விண்வெளிக் குப்பை சுமார் 17,500 மைல் வேகத்தில் பயணிக்கும்.
இந்த வேகத்தில் பூமியின் மீது வந்து மோதும் விண்வெளிக் குப்பைகள் ஒரு மாபெரும் அசம்பாவித விளைவை ஏற்படுத்தலாம். எரிக்கல் தாக்குதல் போலே விண்வெளிக் குப்பைகளின் தாக்குதல் பெரும் நாசத்தை விளைவிக்க வாய்ப்பு உண்டு.
தணிக்கும் முறைகள்
விண்வெளிக் குப்பைகளை தணிக்கும் முறைகள் பற்றியான ஆய்வினை பல்வேறு நாட்டு விண்வெளி ஆய்வு மையங்களும் சிரத்தை எடுத்து சிந்தித்து வருக்கின்றன. அதன் காரணம், இவை வருங்காலத்தில் மனித குலத்திற்கே பெரும் நாசத்தினை உண்டாக்கலாம்.
செயற்கைக் கோள்களையும் ராக்கெட்களையும் அனுப்பும் போது விண்வெளிக் குப்பை ஆகாமல் தடுக்க Space Garbage Trucks பயன்படுத்தப் படுகிறது. குப்பைகளை அகற்றுவதற்கென்றே அனுப்பப்படும் இந்த ஏவுகலம் விண்வெளியில் மிதக்கும் பெரிய கழிவுகளை அகற்றியோ அல்லது அழித்தோ விண்வெளியை தூய்மை ஆக்குகிறது. அமெரிக்காவின் DARPA அமைப்பு இந்த சோதனையை செய்து காட்டி வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாக, பெரும் அழிக்கும் கற்றைகளை பயன்படுத்தலாம். இவை LODR முறை என்று அழைக்கப்படுகிறது. அதிக பொருள் இழப்பு இல்லாத இம்முறையினால் பூமி மேற்பரப்பில் மிதக்கும் விண்வெளிக் குப்பைகளை தூசு போல் ஆக்கி சுத்தப்படுத்த முடியும்.
சூரியக்குடும்பத்தை விட்டு குப்பைகளை தொலைவாக தள்ளி விடும் முறையும் ஆய்வாளர்களால் யோசிக்கப்பட்டு வருகிறது. பூமிக்கும் அதன் நட்பு கிரகங்களும் விண்வெளிக் குப்பைகளால் எந்த வித பாதிப்பும் இல்லாதபடி அவைகளை முடுக்குவித்தால் அவை சூரியக்குடும்பத்தை தாண்டி சென்றுவிடும். இந்த முறையாலும் நம் பூமியை பாதுகாக்கலாம்.
ஸ்பேஸ் எக்ஸின் முறை
எலான் மஸ்கின் SpaceX நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பும் செயற்கை கோள்களை தாங்கி செல்லும் ராக்கெட்டுகள் விண்வெளியிலே நிலை நிறுத்தப்பட்டு விண்வெளிக் குப்பைகளை ஏற்படுத்துவதால் ஒரு புதிய தொழிற்நுட்பத்தினை கண்டறிந்து உள்ளது.
அதன்மூலம் செயற்கை கோள்களை தாங்கி செல்லும் ராக்கெட்டுகளை மீண்டும் பூமிக்கே பத்திரமாக கொண்டு வர இயலும். இதன்மூலம் பெரும் பொருள் இழப்பை தவிர்ப்பதோடு விண்வெளிக் குப்பைகளை தணிக்கவும் முடிகிறது.
உலக அரசு விண்வெளி ஆய்வு மையங்களுக்கு எலான் மஸ்கின் SpaceX நிறுவனம் ஒரு புதிய தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதோடு முன்மாதிரியாகவும் திகழ்கிறது.
குப்பைப் போர்வை
விண்வெளியில் மிதக்கும் குப்பைகளை முழுதுமாக நீக்க அமெரிக்க அரசாங்கம் 5 ஆண்டுகள் கெடு வைத்து உள்ளது. விண்வெளிக் குப்பைகள் பூமியின் சுற்று வட்டப்பாதையில் ஒழுங்காக சுற்றும் விண்கலங்களுக்கும் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் பூமியை சரியாக ஆய்வு செய்ய இயலவில்லை. செயல்படாத செயற்கைக் கோள்களையும் பிற குப்பைகளையும் அகற்றினாலொழிய பிற ஏவுகலன்களை சிக்கலின்றி அனுப்ப முடியும் என்று FCC அமைப்பு கூறி உள்ளது.
ஒன்றையொன்று மோதி பெருகி வரும் இந்த விண்வெளிக் குப்பைகள் 'லோயர் எர்த் ஆர்பிட்' எனப்படும் கீழ் வளிமண்டத்தில் அதிகமாக தேங்குவதாகவும் அதை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் இல்லையெனில் பூமியை மூடும் குப்பைப் போர்வை ஒன்று உருவாகுமென அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
முடிவுரை
தனி ஒரு மனிதனின் அறிவியல் வளர்ச்சி அந்த நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. ஆனால் ஒரு நாட்டின் விண்வெளி வளர்ச்சி மட்டுமே ஒட்டுமொத்த மனித குலத்தின் வளர்ச்சிக்கும் அடிப்படையாய் உள்ளது. விண்வெளிக் குப்பைகள் இன்றைய சூழலில் நமக்கு பெரியதொரு சவலாக இல்லையானாலும் 'கவனிக்காத காடு சுடுகாடு' ஆவதுபோலே விட்டுவிடாமல் அறிவியலை தேர்ந்த முறைகளில் பயன்படுத்தி முடிந்த வகையில் நமது விண்வெளியை நாம் சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். விண்வெளிக் குப்பைகளை தணிக்கும் முறைகள் பல இருப்பினும் பூமியின் இயற்கை வளங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையான முறைகளை பின்பற்றி விண்வெளிக் குப்பைகளை அகற்றுவோம். மாசற்ற விண்ணை உருவாக்குவோம். அதுவே உலக நன்மையை உருவாக்கும்