அண்மை

முயற்சி திருவினையாக்கும் கட்டுரை

 

முயற்சி திருவினையாக்கும் கட்டுரை


முன்னுரை


முயற்சி என்பது உடலாலும் மளத்தாலும் உழைத்துச் செய்வது. 'முயற்சி திருவினை ஆக்கும்' முயன்றால் முடியாதது இல்லை, 'முயற்சி உயர்ச்சி தரும்', 'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்' என்னும் சொற்றொடர்கள் முயற்சியின் பெருமையை விளக்குகின்றன. நம் முன்னோர்களால் இவ்வாறெல்லாம் சிறப்பித்துக் கூறப்படும் முயற்சி உயர்ச்சி பற்றி இக்கட்டுரையில் காண்போம். 


முயற்சியால் முன்னேறியோர்


உலகில் தம் முயற்சியினால் முன்னுக்கு வந்தவர் பலர். தனியுரிமை நாடாக இருந்த ஸ்காட்லாந்து இங்கிலாந்தின் ஆட்சிக்கு உட்பட்டபோது அதை மீட்கப் பலமுறை போர்புரிந்து தோல்வியுற்ற இராபர்ட்டு புரூஸ் என்ற ஸ்காட்லாந்து மன்னன் மனமுடைந்து ஒரு குகையில் ஒளிந்திருந்தபோது அங்கிருந்த ஒரு சிலந்தி, வலைபின்ன இயலாமல் பலமுறை கீழே விழுந்தது. எனினும் அது தன் முயற்சியைக் கைவிடாமல் மேலும் மேலும் முயன்று இறுதியில் வெற்றி கண்டது. சிலந்தியின் செயலைக் கண்ணுற்ற இராபர்ட்டு புரூஸுக்கும் ஊக்கம் ஏற்பட்டது. மீண்டும் படைதிரட்டிச் சென்று போர் புரிந்து தனது நாட்டை மீட்டான்.


புராணத்தில் முயற்சி


கௌசிக மன்னனாக இருந்த விசுவாமித்திரர் இடைவிடாது மேற்கொண்ட முயற்சியினால்தான் (தவத்தினால்) பிரம்மரிஷியானார். 


வேட்டுவர் குலத்தில் பிறந்த ஏகலைவனைத் தம் சீடனாக ஏற்றுக்கொள்ள துரோணர் மறுத்துவிட்ட போதிலும் அவரையே மானசீகக் குருவாகக் கொண்டு முயற்சியில் தளராது பயிற்சி செய்து அர்ச்சுனனுக்கு நிகரான வில் வீரனானான் ஏகலைவன். 


புத்தரின் முயற்சி


சுத்தோதனரின் மகனான சித்தார்த்தர் அரசைத் துறந்து கானகம் சென்று கடுந்தவம் புரிந்தகாலை அவருக்கு ஏற்பட்ட இன்னல்கள் எத்தனை எத்தனையோ! அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது தாம் மேற்கொண்ட செயலில் முனைந்து ஈடுபட்டதால்தான் அவரால் ஞானம் பெற முடிந்தது. அவர் 'புத்தரானார்' , இன்று 'ஆசியாவின் ஜோதி' என்று போற்றப்படுகின்றார்.


அறிவியலும் முயற்சியும்


கொலம்பஸின் விடா முயற்சிதான் அவரைப் புதிய உலகமான அமெரிக்காவைக் கண்டுபிடிக்கச் செய்தது. 


புகை வண்டியில் அறிவியல் பரிசோதனைகளைச் செய்த காரணத்தால் பயணச் சீட்டுப் பரிசோதகரின் சினத்துக்கு ஆளாகி அவரால் பலமாக அறையப்பட்டதால் காது கேட்கும் திறனையிழந்த தாமஸ் ஆல்வா எடிசன் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் புதுமைகளைக் கண்டு பிடித்து உலகிற்கு அளித்திருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவரது உழைப்பும் முயற்சியுமே.


கல்வியில் முயற்சி


பிறக்கும்போதே தந்தையை இழந்த சர்.தி. முத்துசாமி ஐயர் தெரு விளக்கின் வெளிச்சத்தில் படித்துப் பட்டம் பெற்றதுடன் சட்டமும் பயின்று சென்னை உயர்நீதி மன்றத்தின் நடுவராய் விளங்கினார். அவரது வாழ்க்கை 'முயன்றால் முடியாதது இல்லை' என்பதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.  


ஆரம்பப் பள்ளிப் படிப்பு மட்டுமே படித்த ஜி.டி.நாயுடு தம் முயற்சியினால்தான் உலகம் வியக்கும் விஞ்ஞானியாகி அரிய பல அறிவியல் கருவிகளைக் குறைந்த செலவில் தயாரிக்கலாம் என்று நிரூபித்துக் காட்டினார். 


தமிழ் தந்த முயற்சி


அந்தகராய் (குருடராக) பிறந்த வீரராகவர் தம் முயற்சியால் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்ததுடன் கவிபாடும் ஆற்றலையும் பெற்றார். மன்னர்களையும் வள்ளல்களையும் பாடி மகிழ்வித்துப் பரிசில்களையும் பெற்ற அவர் தம்மைப் பற்றி 'ஏடாயிரங் கோடி எழுதாது தள் மனத்து எழுதிப் படித்த விரகன், இமசேது பரியந்தம் புகழ் பெற்ற கவிஞன்’ என்று பாடியிருக்கிறார். 'குருடர்' என்ற இகழ்ச்சியை அவரது முயற்சி போக்கியதுடன் 'கவிஞர்' என்ற புகழ்ச்சியையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதைக் கவிராயர் மெய்ப்பித்து விட்டார். 


அம்பேத்காரின் முயற்சி


அரிசன வகுப்பில் பிறந்த அம்பேத்கார் தம் அரிய முயற்சியினால்தான் மேல்நாடு சென்று கல்வி கற்று சட்ட வல்லுனராய் விளங்கியதுடன் நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தைத் தொகுத்தளித்து இந்திய வரலாற்றில் அழியா இடம் பெற்றார் டாக்டர் அம்பேத்கர்.


ஆப்ரகாமின் முயற்சி


அமெரிக்காவில் ஏழை விறகு வெட்டியின் மகனாகப் பிறந்த ஆபிரகாம் லிங்கன் தம் முயற்சியினால் முன்னேறி அமெரிக்காவில் நடைபெற்று வந்த அடிமை வாணிகத்தை ஒழித்தார். மக்களாட்சி என்பதற்கு அவர் அளித்த விளக்கமே இன்று மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் எல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்டுப் போற்றப்படுகிறது. 


K.R.நாராயணனின் முயற்சி


கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தவர் கே.ஆர்.நாராயணன். அவர்தம் முயற்சியால் கல்வி கற்று, இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் வெற்றிபெற்று, அயல்நாடுகளில் இந்தியத் தூதராகப் பணியாற்றினார். இருமுறை மத்திய அமைச்சராகவும் இருந்தார். இந்தியக் குடியரசின் துணைத்தலைவர் பதவியை வகித்ததுடன் தலைவர் பதவியையும் பெற்று பாரதத்தின் முதல் குடிமகனாய்த் திகழ்ந்தார் என்றால் அது அவர் மேற்கொண்ட முயற்சியின் பயனேயாகும். 


காந்தியின் முயற்சி


இன்று நம் நாடு முழு உரிமை பெற்ற குடியரசு நாடாகத் திகழ்கிறது என்றால் அதற்கு நம் தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகள் மேற்கொண்ட முயற்சியே காரணம். 


“கருமமே கண்ணாயினார் பசி நோக்கார் 

கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் 

செவ்வி அருமையும் பாரார்" 


என்னும் பழம் பாடலுக்கேற்ப மேற்கூறப்பட்ட பெரு மக்கள் அனைவரும் முயன்று வெற்றி பெற்றதை அறிகிறோம். 'முயற்சியின் முடிவில் வெற்றி' என்பதுதான் உலகம் காலங்காலமாகக் கண்டு வரும் உண்மை.


முடிவுரை 


'ஊழையும் உப்பக்கம் காண்பர்' என்று வள்ளுவர் விடா முயற்சியுடையவர்களின் சிறப்பை விளக்குகிறார். எல்லார்க்கும் வள்ளுவர் கூறுவது போல் பிறப்பு ஒக்க இருந்தாலும் சிறப்பு முயற்சியினால் வேறுபடுகிறது. முயற்சியே எச்செயலுக்கும் அடிப்படையாய் விளங்குகிறது. முயற்சியுடன் செய்யப்படும் எச்செயலுக்கும் இறுதியில் வெற்றிகிட்டும் என்பது உறுதி. முயற்சி செய்பவர்களுக்கு வறுமை தடையாய் இருப்பதில்லை. 'தன்னை உயர்த்திக் கொள்ளுபவன் தானே' என்கிறது ஓர் ஆங்கிலப் பழமொழி. நாலடியாரும்,


‘நன்னிலைக் கண் தன்னை நிறுப்பானும் தன்னை 

நிலை கலக்கிக் கீழிடுவானும் - தானே" 


என்று கூறி அவ்வாங்கிலப் பழமொழியின் கருத்தை வலியுறுத்துகிறது. எனவே நாமும் முயற்சி செய்து முன்னேற்றம் காண்போம் .

கருத்துரையிடுக

புதியது பழையவை