ஆண்மை என்பதன் பொருள் என்ன?
ஆளும் தன்மை ஆண்மை
எதை ஆளும் தன்மை?
எதையும் ஆளும் தன்மை
நல்ல பல நாவல் செய்த நா.பார்த்தசாரதியின் இந்த வரிகள் எனக்கு 'பெண்மை என்பதன் பொருள் என்னவாக இருக்கும்?' என்ற கேள்வியை சிந்திக்க இடம் தந்தது.
பதில் தெரியாத பட்சத்தில் தமக்கு தெரிந்ததையே பதிலாக எண்ணுவது மனித வழக்கம்.
'பேணும் தன்மை பெண்மை'யாக இருக்கலாம்
எதை பேணும் தன்மை?
'எதையும் பேணும் தன்மை'
இந்த பதிலை எதார்த்தமாக முடிவாக்கினாலும் மறுப்பதற்கில்லை.
'பேணும் தொழில் பெண் தொழில்'
"எனில் ஆண் எதையும் பேணுதல் கூடாதா? ஆளும் தகுதி பெண்ணுக்கு கிடையாதா?" என்றால் ஆணில் பெண்ணும் பெண்ணில் ஆணும் தம் மனத்தின் வெளிப்பாடு என்பதே என் முடிபு.
இயல்பான மனித குலத்தில் பெண்ணில் அடங்கியுள்ள ஆண் குணமும் ஆணில் பதுங்கி உள்ள பெண் குணமும் உற்ற நேரத்தில் கட்டுக்கு அடங்காமல் வெளிப்படுகிறது. அதற்கு காரணம் ஒவ்வொரு உயிருமே ஆண்-பெண் என்ற இரு பண்பின் சேர்ப்பால் பிறந்த பிறப்பு
உலகத்தில் உயிர்கள் தோன்றிய சமயத்திலிருந்து ஆண் பெண் என்ற பால் பேதமும் தோன்றியிருக்கக் கூடும். ஆண் பெண் என்ற பால் பேதம் அண்டத்தினை உயிர்ப்புடனும் சமநிலையாக்கவும் உதவுகிறது என்றே எண்ணுகிறேன்.
ஆனால் இந்த பால் பேதத்தை எளிதாக கடந்துவிட முடியாமல் இரண்டு வகையாக பகுத்தறிய முடிகிறது. அவை, 1.உடல் சார்ந்த பால் பேதம் 2.மனம் சார்ந்த பால் பேதம்
நீங்கள் ஆணா? பெண்ணா? என்பதை உங்களுக்கு அறிவுறுத்தியது யார்? உங்களது உடலா? அல்லது உங்களது மனமா?
இவள் ஒரு பெண் அல்லது இவனொரு ஆண் என்பதை அங்கங்களைக் கொண்டு பிறந்த கணமே முடிவு செய்கிறார்கள்.
ஆனால் வளர்ந்து கொண்டிருக்கும் போதே ஒரு பெண் தன்னை ஆணாக உணர்கிறாள். ஒரு ஆணோ தன்னை பெண்ணாக உணர்கிறான்.
நான் திருநங்கை/திருநம்பிகளை பற்றி கூறவில்லை. மூன்றாம் பாலினத்தவரான இவர்களுக்கு உடல்சார்ந்த குரோமோசோம் குறைபாடும் இருக்கும். ஆனால் நான் குறிப்பிடுபவர்கள் மனம் சார்ந்த பால் பேதத்தை உணர்பவர்கள், இவர்களுக்கு உடலியல்பில் எந்த குறையும் இருக்காது.
ஆணுக்குரிய அனைத்து தகுதிகளையும் உடைய ஓர் ஆண் தன்னை பெண்ணாகவும், பெண்ணுக்கு உரிய அனைத்து நலன்களை கொண்ட ஒரு பெண் தன்னை ஆணாகவும் எண்ணுவது, மனம் சார்ந்த பால் பேதம் உடையவர்களின் வழக்கம்.
பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டதாய் செய்திகளில் கவனித்திருக்கலாம்.
உடலாலும் மனத்தாலும் ஆணாகவோ அல்லது உடலாலும் மனத்தாலும் பெண்ணாகவோ இயல்பாக இருக்கும் நமக்கு இந்த செய்தி அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்.
இருந்தாலும் ஒரு உண்மைத் தகவலை உங்களுக்குச் சொல்கிறேன்.
ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்குமான திருமணம் உடலளவில் ஓரினத் திருமணமாய் இருந்தாலும் மனதளவில் குறைந்தபட்சம் ஒருவராவது தன்னை அங்கே ஆணாக உணர்வார்கள். ஒரு பெண் தன்னை ஆணாக உணர்வதால் தான் அவள் இயல்புக்கு மாறாக இன்னொரு பெண்ணையே விரும்புகிறாள். விரும்பப்படுபவளும் தன்னை ஆணாக உணர்ந்தால் பெண்ணுக்கும் பெண்ணுக்குமான திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.
படிக்க வேடிக்கையாக இருந்தாலும் இந்த வழக்குகள் உலகில் சகஜமாகி வருவது கண்கூடு.
இதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். "ஒரு பெண் இன்னொரு பெண்ணை விரும்புவதற்கு காரணமே அவள் தன்னை ஆணாக கருதிக்கொள்வது தான். இதே போல் ஓர் ஆண் இன்னொரு ஆணை திருமணம் செய்வதும் இவ்வாறே"
இப்போது ஒரு முடிவுக்கு வரலாம். ஆண்மை,பெண்மை குணங்கள் பிறப்பாலே வருவது தானா? என்றால் 'இல்லை'
பிறந்த உடன் நாம் அறிவது குழந்தை உடலால் எந்த பாலினம் என்பதையே. வளர வளர உடல் சார்ந்த பால் குணம் தான் மனத்திலும் ஒட்டும் ஆனாலும் ஒரு குழந்தை பிறந்த கணத்தில் நாமறிவது என்னவோ உடல் சார்ந்த பால் குணத்தை மட்டுந் தான்.
உடல் உங்களை ஆண் அல்லது பெண் என்று கூறினாலும் அந்த கூற்றை எப்போது மனம் ஏற்கிறதோ அப்போதே அந்த பால் குணம் நம்மோடு ஒன்றுகிறது. உடலும் மனமும் ஒன்றாகி ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரும் போது தான் தானொரு ஆணா அல்லது பெண்ணா என்பதை முடிவுக்கு கொண்டுவர முடியும். ஆண் பெண்ணாக வாழ்வதை விரும்புவதும், பெண் ஆணாக வாழ்வதை விரும்புவதும் அவரவர் மனத்தின் விருப்பமே. அதுவே மனம் சார்ந்த பால் பேதத்தின் துவக்கம்.
அவ்வாறு இருந்தும் இங்கு எவராலும் ஆண் அல்லது பெண் குணத்தை முழுமையாக பெற முடியாது. உடலியலில் மட்டுமல்ல மனம் சார்ந்தும் ஆணில் பெண் குணமும் பெண்ணில் ஆண் குணமும் அடங்கி இருப்பதே இயல்பானது. இதில் ஏதும் ஒன்று உயர்ந்தாலும் குறைந்தாலும் இயல்பு குலைவது உறுதி.
ஆளும் குணமும் பேணும் குணமும் நிறைந்திருக்க, ஓங்கி இருக்கும் குணமே பால் குணமாகிறது. அவையே இயல்பாக ஆணில் ஆண்மையாகவும் பெண்ணில் பெண்மையாகவும் வெளிப்படுகிறது.
நீங்கள் ஆணாக இருந்து எப்போதாவது யாராவது உங்களை 'ஏன் பொண்ணு மாதிரி நடந்துகுற?' என்றும், நீங்கள் பெண்ணாக இருந்து எப்போதாவது யாராவது உங்களை 'ஏன் ஆம்பள மாதிரி நடந்துகுற?' என்றும் கேட்கவில்லை என்றால் தான் பிரச்சனையே.
காரணம் யாதெனில், கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பல ஆண்-பெண் இணையின் கலவை தான் நீங்கள்.
தீசன்
nice content
பதிலளிநீக்கு