அண்மை

அப்பா - கவிதை

அப்பா - கவிதை


அம்மாவைப் பற்றி ஆயிரம் கவிதைகள் படித்ததுண்டு.

அப்பாவைப் பற்றி அதிகம் படித்ததுண்டா?

அப்பா என்றாலே அய்யோ பாவம்!


மாதத்தின் முதல் தேதி காலண்டரில் கிழியுமுன்னே, பர்ஸ் கிழிய ஆரம்பித்துவிடும்.


கேபிள்காரன் வருமுன்பே, கேஸ்காரன் வந்துவிடுவான்.


பால்காரன் வருமுன்பே, பள்ளிக்கு வைத்துள்ள பாக்கியை கட்ட வேண்டும்.


வாடகை வாங்க சிரித்த முகத்தோடு வருவார் வீட்டு உரிமையாளர்," அடுத்த வாரம் தருகிறேன்" என்று அப்பா சொன்னதும் சீறிய முகத்தோடு செல்வார்.


மின்கட்டணத்தையும் பாக்கி வைக்க முடியாது. கட்டாவிட்டால் ஃபியூஸ் கேரியர் மின் நிலையத்துக்கு போய்விடும்.


கொழுந்தியாள் கல்யாணத்துக்கு வாங்கிய குழுக் கடன் முடியுமுன்னே, அடுத்த குழு வந்துவிடும். வாராவாரம் குழுவுக்கு எடுத்து வைத்த பிறகுதான், குடிக்கும் கூழை பற்றி சிந்திக்க முடியும்.


நாலு போனுக்கும் EMI, மாதத்தில் நாலு நாள் கட்ட வேண்டும். ஒரு நாள் தவறினாலும் பைனான்ஸ்காரனுக்கு ஐநூறும், பேங்குக்காரனுக்கு ஐநூறும் அழ வேண்டும்.


கல்யாண பத்திரிக்கைக்கு கொடுக்கும் மரியாதையை, கருமாதி பத்திரிக்கைக்கும் கொடுக்க வேண்டும்.


மருந்து மாத்திரைக்கும் மாத செலவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.


இரண்டு முழ முல்லை பூவுக்கு, நூறு ரூபாய் கேட்கும் பூக்கடைக்காரன்.


அரைக்கிலோமீட்டர் போனாலும் ஒரு நோட்டு கேட்கும் ஆட்டோக்காரன்.


பக்கத்து வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து விட்டதாக, பால் விளையாட போன பையன் மீது பஞ்சாயத்து வரும். ஆயிரம் ரூபாய், பட்ஜெட்டை தாண்டி பணம் போய்விடும்.


அப்பா இருக்கும்வரை யாரும் அழ வேண்டிய அவசியம் இல்லை.


வேலைக்கான போட்டித் தேர்வை எழுதி முடித்து, போன் செய்வான் மகன்.


என்ன சாப்பிட்டே? என்பாள் அம்மா.

எப்படி எழுதினே? என்பார் அப்பா.


அதனால்தான் கவிஞர் வாலி சொன்னார்,


"அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்" என்று.


கோவில் திருவிழாவில் வலம் வரும் அம்மனையும், பவனி வரும் தேரையும், தனக்கே தெரியாவிட்டாலும், தலைக்கு மேலே தூக்கி தன் பிள்ளைக்கு காட்டுபவர்தான் அப்பா.


எப்போ வருது தீபாவளி? குழந்தைகளுக்கு.


ஏன் வருது தீபாவளி? அப்பாவுக்கு.


பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும், சகோதரிகளுக்கும் தீபாவளிக்கு துணி எடுத்த பிறகு, மிச்சம் மீதி இருந்தா அப்பாவுக்கும் உண்டு வேட்டியோ! கைலியோ!


திருவிழா கூட்டத்தில், பார்த்ததை எல்லாம் வாங்கி கேட்பான் மகன். முடியாது என்றால்  பிள்ளைக்கு முகம் மாறும். அதைக் காண பொறுக்காது கேட்டதை வாங்கி கொடுப்பார் அப்பா.


தான் பெறாத கல்வியையும், தான் தொடாத உயரத்தையும் தன் பிள்ளை அடைய தவம் இருப்பார் அப்பா.


தான் பார்க்கும் வேலைக்கு தன் பிள்ளையை அனுப்ப மாட்டார் அப்பா. ஏனென்றால் தான் படும் கஷ்டம், தன் பிள்ளைக்கு வரக்கூடாது என நினைப்பார்.


கடைசி காலத்தில், பிள்ளைகள் கஞ்சி ஊற்றுவார்கள் என எந்த காரியத்தையும் செய்வதில்லை அப்பா.


அப்பாவின் அருமை பிள்ளைக்கு, அப்பா இல்லாத போதுதான் தெரியும்.


கட்டிக்கொடுத்த மகள் காய்கறி விற்றாலும், கடையில் வேலை பார்த்தாலும் அப்பாவுக்கு என்றுமே அவள் இளவரசிதான்.


மகளுக்கு பலமாதம் துணை தேடி மாங்கல்யம் முடிப்பார். மணமுடித்த பின்னாலே மகளில்லா வீட்டில் நடைப்பிணமாய் துடிப்பார்.


பான்கார்டில் கூட பாதுகாவலராக அப்பாவே இருக்கிறார். கணவர் அல்ல.


அம்மாவால் சிரிக்கவும் முடியும், அழவும் முடியும்.

அப்பாவால் அது முடியாது!


அப்பாவின் கண்ணீர் கண்களுக்குள் தோன்றி, கன்னத்தில் வழியாமல், கண்களிலேயே மறித்துவிடும்.


உழைத்து வாழும் அப்பாவுக்கு உயிர் மீது ஆசை இல்லை. கடமைகளை முடிக்கவே உயிர் வாழ ஆசைப்படுவார்.


வறுமையோடு இருந்தாலும் குடும்பத்தை பசியோடு விட்டதில்லை. வறுமை என்பதை வாரிசுகள் அறியாமலே, வாழ்க்கையைக்  கடந்தவர் அப்பா.


தனக்கென்று எதுவும் தேவைப்படாதவர் அப்பா.


விருட்சம் எல்லோருக்கும் தெரியும்.

வேர்கள் யாருக்கும் தெரியாது. அந்த வேர்தான் அப்பா.


கூகுலில் கூட குறைவான இடம்தான் அம்மாவைவிட அப்பாவுக்கு.


சராசரி அப்பாவுக்காகத்தான் இதை எழுதுகிறேன்.

மது அருந்தி, மட்டையாகி, மல்லாந்து கிடக்கும் அப்பாக்களுக்காக இதை எழுதவில்லை.


ஜெ மாரிமுத்து

கருத்துரையிடுக

புதியது பழையவை