அண்மை

கண்வலி: அறிகுறிகள் தற்காப்பு நடவடிக்கைகள்

 

கண்வலி: அறிகுறிகள் தற்காப்பு நடவடிக்கைகள்

கண் வெண்படல அழற்சி என்று அழைக்கப்படும் கண்வலி மழைக் காலங்களில் அதிகமாகப் பரவும் நோய் தொற்றுகளுள் ஒன்று. இது ஒரு வைரஸ் தொற்றாகும். சில சமயங்களில் கண்வலி பாக்டீரியா தொற்றாகவும் பரவக்கூடியதே. வைரஸ் மூலம் வரும் கண்வலியானது கருவிழியை பாதிக்கக்கூடியது. கண் பார்வை திறனை தீவிரமாக பாதித்து பார்வை மீதான பெரும் அபாயத்தை தந்துவிடும். இரத்தம் அழுத்தம் இருப்பவர்களுக்கும் கண் சிவப்பாகி வலி ஏற்படுகிறது. அதனால் கண்வலி தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.


கண்வலி எவ்வாறு பரவுகிறது?


கண்வலி நோய் பரவும் விதத்தினை தெரிந்து கொண்டால் அது வராமல் நம்மால் எளிதில் தற்காத்து கொள்ள முடியும். கண்வலி பாதிப்பு உள்ளவர்கள் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்துவது, நோய் பாதிப்பு உள்ளானவர்கள் தொட்ட இடத்தை தொடுவது போன்றவை மூலம் கண்வலி நோய் ஏற்படலாம். 


நோய் பாதிப்பு உள்ளானவர்களின் படுக்கை, தலையணை, ஒப்பனைப் பொருட்கள், செல்போன் போன்றவைகளை இன்னொருவர் பயன்படுத்துவதை தவிர்க்கவும். முடிந்தவகையில் கண்வலி நோய் வந்தவர்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது. வீட்டில் உள்ள யாருக்கேனும் கண்வலி நோய் ஏற்பட்டு இருந்தால் அடிக்கடி அனைவரும் கொரோனா நோய்த் தொற்று பரவிய போது எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதும் மேற்கொள்ளுதல் வேண்டும். தனித்து இருத்தல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், கைகளை கொண்டோ அல்லது பிறவற்றைக் கொண்டோ கண்களை தொடாது இருத்தல் கண்வலி நோய் வராமல் தற்காத்து கொள்ள சிறந்த வழியாகும்.


இதையும் காண்க: கொரோனாவுக்கு பின் வந்த நாற்ற நோய்


கண்வலி வருவதற்கான காரணம்?


வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று காரணமாக கண்வலி நோய் ஏற்படுகிறது. இந்த வைரஸ் தொற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட வேறுபாடுகள் உள்ளது. இவற்றில் சில வைரஸ் மாறுபாடுகள் கண் பார்வையை மொத்தமாக சிதைக்கும் தீவிரம் கொண்டவையாக இருக்கும். அதனால் கண்வலி ஏற்பட்டுவிட்டால் தானாக சுய வைத்தியம் பார்ப்பதை விடுத்துவிட்டு உடனடியாக மருத்துவரை அணுகவும். சிலருக்கு கண்வலி நோய் ஏற்பட்டதுமே கண் பார்வை மங்கலாகும் அது வாரக்கணக்கில் நீடிக்கும் முறையான மருத்துவம் இல்லையெனில் ஆபத்தில் முடியலாம். வைரஸ்கள் மாறுபாடு அடையக்கூடியவை அதனால் சொட்டு மருந்துகள் எல்லாவிதமான கண்வலிக்கும் உபயோகப்படாது.


கண்வலி அறிகுறிகள்

  • கண் சிவப்பு நிறமாக மாறுதல், கண்கள் உறுத்துதல்
  • கண் எரிச்சல்
  • அடிக்கடி பூழை ஏற்படுதல், கண்களில் நீர் வடிதல்
  • கண் கூசுதல்

போன்ற அறிகுறிகள் தென்படும். கண்வலி நோய் மாறுபாடு அடைந்த வைரஸ்களால் தீவிரமாக இருந்தால்

  • கண் வீக்கம்
  • பார்வை மங்குதல்
  • வெளிச்சத்தை பார்க்கமுடியாத நிலை

போன்ற அறிகுறிகள் வரும். எளிதில் அடுத்தவர்களுக்கும் பரவும் என்பதால் தன்னை தனிமைப்படுத்தி கொள்ளாத ஒருவரால் சுமார் பத்து முதல் இருபது பேருக்கும் பரவலாம்.


கண்வலி எப்போது குணமாகும்?


ஒருவருக்கு கண்வலி தொற்று ஏற்பட்ட உடனே அதற்கான அறிகுறிகள் தென்படாது. 4 முதல் 7 நாட்களுக்கு பிறகு தான் முதல் அறிகுறியே தென்படும். பின்பு 7 முதல் 14 நாட்கள் வரை கண்வலி நோய் நீடிக்கும். அதனால் சுமார் 21 நாட்கள் வரை தொற்று நோயாளியை விட்டு அகலாது. முறையாக மருத்துவரை அணுகினால் முதல் வாரத்திலே குணமாக வாய்ப்பு உள்ளது. 


கணினியில் செய்யும் அனைத்து வேலைகளையும் கண்வலி நோய் வந்தவர்கள் செய்யலாம். ஆனால் சுகாதார நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். கண்ணாடி அணிந்து கொள்வதால் நோய் குணமாகாது ஆனால் அது நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும். நீங்கள் அணியும் கண்ணாடியை வேறொருவர் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.


எப்போது மருத்துவர் முக்கியம்?


சில அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. 

  • கண் வீக்கம்
  • பார்வை மங்குதல்

இந்த இரண்டு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை காணவும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை பயன்படுத்தினால் 7 முதல் 14 நாட்களுக்குள் கண்வலி நோயை குணப்படுத்திவிடலாம். வைரஸ் தொற்று கடுமையாக இருந்தால் கண்வலி நோய் குணமாக ஒரு மாத காலம் ஆகலாம்.


வீட்டு மருத்துவம்


கண்வலிக்கு வீட்டு வைத்தியம் சுடுநீரில் விட்டு எடுத்த காட்டன் துணியை பாதிப்பட்ட கண்ணில் ஒற்றி எடுத்தல் ஒன்றே ஆகும். இதைத் தவிர கண்ணுக்கு வலு சேர்க்கும் ஆரஞ்சு, மாதுளை, கீரை வகைகள் போன்றவைகளையும் எடுத்துக் கொள்ளலாம். சுயமாக சொட்டு மருந்துகளையோ மாத்திரைகளையோ எடுத்து கொள்வதை தவிர்த்துவிடுங்கள். கண்வலி நோய் விரைவிலேயே குணமாகிவிடும். கண்வலி பற்றி மேலும் தெரிந்து கொள்ள healthline.com பதிவைப் பார்க்கவும்

கருத்துரையிடுக

புதியது பழையவை