ஒன்றின் மீது வெறுப்பை வளர்த்து கொள்ளாமல் எதிர்பதென்பது ஞானப் பாதையில் முதல்படி.
வெறுப்பு ஏற்படும் போது தானே எதிர்க்கவும் செய்கிறோம் அப்புறம் எவ்வாறு அது ஞானநிலையில் சேரும்? எனில் ஞானம் என்பது குணங்களை கட்டிப்போட்டுக் கொண்டு இயல்பான மனிதநிலையில் இருந்து உயர்ந்து விட்டதாய் எண்ணுவது அல்ல.
காணும் பொருள் அனைத்திலுமிருந்து நல் குணங்களை சேகரிக்கும் ஒருவர் பிற்காலத்தில் நல்ல குணங்களின் நூலகமாய் திகழ்வார். அது ஒரு நல்ல ஞான விளைநிலமாகும். அத்தகையோருடைய பழக்கம் கூட நம்மையும் ஞான பாதத்தைப் பற்ற வைக்கிறது.
இந்திய மகாகவி தாகூர் சொல்கிறார், "உனக்கு ஞானம் வேண்டுமெனில், அனைத்தையும் ஏற்றுக் கொள்"
தாமச குணம் நிறைந்த குகை வாழ் துறவிகள் அனைத்தையும் ஏற்கும் பக்குவத்தை இழக்கிறார்கள். ஒருசிலர் இதில் விதிவிலக்காவும் உளர்.
விபத்தில் கண்களை இழந்த ஒருவன் இனி உலக அழகினை பார்த்து ரசிப்பதில்லை என்று சபதமெடுப்பதும் குடும்பங்களை விட்டு தள்ளி வந்த ஒருவன் மோகத்தையும் பணத்தாசையையும் ரத்த பாசங்களையும் துறந்ததாய் எண்ணுவதும் ஒன்றே.
எவன் ஒருவன் சாக்கடையில் நின்று கொண்டே சாப்பிடவும் கற்று கொள்கிறானோ அவனே மெய்ஞானியாக இருக்க முடியும்.
பற்றி யுள்ளான் எனினும் பற்று இல்லை
பற்று உள்ளான் ஞானப் பற்றில் உள்ளான்
மரங்கள் விளைவிக்கும் இலைகள் உதிர்ந்த பின் அந்த மரத்திற்கே தான் உரமாகின்றதா? இல்லை! தனக்கே உரமாகும் என்ற எண்ணத்தோடு தான் மரங்கள் இலைகளை தளிர்கின்றதா?
ஒவ்வொரு தருக்களும் ஞான குருக்கள். பழுத்தது மரமாகினும் பறிப்பது யாரோ! பறிப்பதும் யாரோ! பலன் எடுப்பதும் யாரோ! இருந்தும் மரங்கள் தளிர்ப்பதை நிறுத்துமா?
மரம் போல் வாழ கற்க வேண்டும். இறைவன் இட்ட வழி நான் செல்கிறேன். அது பூப்பாதை எனினும் முட்பாதை எனினும் செல்வதே கடமை.
பூக்களை ரசித்து கடக்கவும் முட்களை மிதித்து கடக்கவும் இறைவன் அளித்ததே ஞானம்.
பூக்களின் மணத்தால் மயங்குபவனும் முட்களை மதித்து அழுபவனும் அஞ்ஞானத்தைப் பற்றியவர்கள்
பற்ற வேண்டும் பற்று விடற்கு. எதற்கு பற்ற வேண்டும்? நித்தியமான கடமைக்கு.
உன்னை உன் தாய்-தந்தை தான் ஆக்கினார்கள். அவர்களை பற்று.
உனக்கு அறிவளித்தவர் உன் ஆசிரியர். அவரையும் பற்று.
உற்றார் சுற்றார் உதவியுள்ளர். அவரையும் பற்று.
இந்நிலம் உன்னை காக்கிறது. அதையும் பற்று
உலகம் உன்னை சுமக்கிறது. தவறாதே பற்றி விடு.
இவற்றை வெறுத்து விட்டுவிட்டு பற்றை விட்டதாய் எண்ணாதே.
புரியவில்லையா? இந்த கட்டுரையின் முதல் பத்தியை படி.
ஈசதாசன்