அண்மை

கருணாநிதி கொட்டாய் - சிறுகதை

 

கருணாநிதி கொட்டாய்

எப்போதும் போல் தான் பொழுது விடிந்தது என்றாலும் முகிலனுக்கு வெள்ளிக்கிழமை என்றாலே தனி பிரியம்


காலை வேகமாக எழுந்து முகிலன் படுக்கையை கூட சுற்றாமல் வெளியே ஓடினான்


என்னவென்று புரியாமல் முழித்தாள் ஆத்தா ( எங்கள் ஊரில் பாட்டியை ஆத்தா என்று தான் சொல்வார்கள்)  


"டேய் எங்கடா ஓடுற என்ன ஆச்சு" என்று கத்தினாள்


"இரு ஆத்தா வந்துடுறேன்" என்று விரைந்தான் முகிலன்


வலது புறத்தில் இரண்டு வீடு தள்ளி பொன்னையா பிள்ளை டீக்கடை பக்கத்தில் தந்தி மரம் ஒன்று இருக்கும் அங்குதான் கருணாநிதி கொட்டாய் பட போஸ்டர் ஒட்டி இருக்கும் இன்று வெள்ளிக்கிழமை படம் மாற்றினால் அங்கு போஸ்டர் மாற்றியிருப்பார்கள் அதை காணத்தான் விரைந்தான் முகிலன்... 


ஆனால் இன்னும் போஸ்டர் மாற்றவில்லை அங்கேயே சற்று நேரம் நின்றான்.‌... 


டீக்கடைக்காரர் பொன்னையா பிள்ளை "என்ன முகிலா ஆத்தா காப்பி வாங்கி வர சொல்லிச்சா சொம்பு காணும்" என்றார்... 


கவனிக்காதவாறு "ஏன் இன்னும் போஸ்டர் மாற்ற வில்லை" என்றான்


ஒரு முறை முறைத்து பார்த்தபடி டீ போடச் சென்றார் பொன்னையா பிள்ளை. 


தன் அரைக்கால் டவுசரை சரி செய்தவாறே வீட்டிற்கு வந்தான்  "என்னடா இந்த ஓட்டம் ஓடுற" - ஆத்தா 


"அது ஒன்றும் இல்ல ஆத்தா இன்னிக்கு வெள்ளிக்கிழமை கொட்டாயில் புதுசா படம் வந்துருக்கானு போஸ்டர் பாக்க போனேன்" என்றான் முகிலன் 


"மணி 7 தான் ஆகுது எட்டு மணி ஒன்பது மணி ஆகும் மொத நீ போய் வாய் கொப்பளித்து விட்டு காபியை குடி"  என்றாள் ஆத்தா 


கருணாநிதி கொட்டாய் முகிலனின் வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்து பார்த்தால் தெரியும்


திருவாரூரில் மொத்தம் ஐந்து ஆறு திரையரங்கு தான் இருந்தன. அதுவும் முகிலனின் ஊர்  டவுனில் இருந்து தள்ளி இருக்கும். 


புலிவலம் வாழவாய்கால் பக்கத்தில் தான் முகிலனின் வீடு இருந்தது.


அங்கு உள்ள மக்களை மகிழ்வித்தது இரண்டு விஷயங்கள்தான் ஒன்று புலிவலம் பெருமாள் கோயில் இரண்டு கருணாநிதி கொட்டாய் டவுனிற்க்கு சென்று படம் பார்பது என்பது அரிது.  ஆனால் கருணாநிதி கொட்டாயில் படம் பார்க்க ஆத்தா எளிதில் சம்மதிப்பாள்.


சினிமா ஆவல் உடையவள் ஆத்தா. எல்லா படங்களையும் பார்பாள். அதில் கதாநாயகி அணியும் புடவையை  அந்த வருடம் தீபாவளிக்கோ பொங்கலுக்கோ மறக்காமல் கண்டுபிடித்து தனது மூன்று மகள்களுக்கும் எடுத்துக் கொடுப்பாள்.


சரி கருணாநிதி கொட்டாய்க்கு வருவோம்.


எப்போதும் இரவு காட்சி தான் முகிலனை அழைத்து செல்வார்கள் இரவு 9 மணியிலிருந்து 9:30 மணிக்குள் இந்தி பாடல்கள் ஒலிக்கும் அது ஒரு சமிக்ஞை.


இரவு காட்சி தொடங்க போகிறது என்று அர்த்தம் பல தினங்களில் முகிலன் பாதி சாப்பாட்டில் கூட இருந்து ஓடி இருக்கிறான். கருணாநிதி கொட்டாய் ஊருக்கு வெளியே வயகாட்டுக்கு பக்கத்தில் இருக்கும்.


பொன்னையா பிள்ளை கடையைத் தாண்டி 1-2 வீடு மட்டுமே காட்சி தரும். 


இரவு காட்சிக்கு செல்லும்போதே மையப்பியது போல இருக்கும். கொட்டாய் விளக்குகளும் சமிக்ஞை பாடல்களும் தான் அடையாளம். 


படம் முடிந்து வரும் போது அதுவும் இருக்காது கும்பலாக தான் வருவோம் வழி நடுவே நிறைய பனைமரங்களும் அதில் தூக்கணாங்குருவிக் கூடுகளும் கூட்டில் மின்மினிப் பூச்சிகளும் இருக்கும்.


பல படங்களில் பிற்பாதியில் தூங்கினாலும் காட்சி முடிந்து வரும் போது பனை மரத்தில் தூக்கணாங் குருவிக் கூட்டையும் மின்மினி பூச்சியும் ஒரு நாள் விடாமல் ரசித்துப் பார்ப்பான் முகிலன்.


ஏதோ இந்த கொட்டாயில் ஒலிக்கும் பாடல்கள் காகத்தான் இவை எங்கு இருக்கிறது என்று அவனுக்குள் தோன்றும்.


அன்று முகிலன் காலை உணவு சாப்பிடும்போது எதிர்வீட்டு மீனாட்சி ஆத்தா வேகமாக உள்ளே வந்தாள்.. 


முகிலனின் ஆத்தாவை பார்த்து "அக்கா பாத்தீங்களா கொட்டாயில்   காதல் பரிசு படம் போட்டு இருக்கான் கமல் அக்கா தங்கை இரண்டு பேருடன் ஜோடியாக நடித்த படம் எப்போ போகலாம்" என்றவுடன் முகிலன் சாப்பாட்டை விட்டு ஒரே ஓட்டமாக ஓடி பொன்னையா பிள்ளை டீ கடை போஸ்டர் ஒட்டும் இடத்திற்கு முன் போய் நின்றான்.


கமல் ராதா கருப்பு கலர் டிஸ்கோ ட்ரஸ்சுடனும் அம்பிகா ஊதா கலர் புடவையுடன் போஸ்டரில் சிரித்தார்கள்.


அன்று மாலையே முகிலனும் ஆத்தாவும் திரையரங்கை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.


"சீக்கிரம் நட ஆத்தா.... டிக்கெட் தீந்துர போகுது" என்று ஆத்தாவை அதட்டியபடியே நடந்தான் முகிலன்.. 


75 பைசா தர டிக்கெட் 


1 ரூபாய் 25 பைசா பென்ச்  


ஒன்னே முக்கால் ருபாய் நாற்காலி


75 பைசா தர டிக்கெட் தான் ஆத்தா எடுக்கும். காசுக்காக இல்லை திரைக்கு பக்கத்தில் முதலில் உட்கார்ந்து படம் பார்க்கணும் அப்படி ஒரு மனநிலை.


கிட்டத்தட்ட தர டிக்கெட் மட்டும் தான் நிறையும் 


மற்றவை எல்லாம் கூட்டம் இருக்காது மாலை காட்சியில் சற்று இருட்டியவுடன் கதவுகளைத் திறந்து வைத்து விடுவார்கள் நல்ல காற்றுடன் குலுகுலுவென்ற படம் பார்க்கலாம்....


இரவு காட்சிக்கு செல்லும் 


போதெல்லாம் முகிலன் உறங்குவது  இப்படித்தான்.


முறுக்கு கடலை மிட்டாய் எப்போதாவது சில்வர் கப் கலர் வாங்கி தருவாள் ஆத்தா.‌


இப்படியே முதல் மூன்று நாளும் காதல் பரிசு படத்தை ஆத்தாவுடனும் மாமாவுடனும் பார்த்தான் முகிலன்.


ஒவ்வொரு முறை படம் பார்க்கும்போதும் டிக்கெட் சேகரிக்கும் பழக்கம் இருந்தது முகிலனுக்கு மறக்காமல் டிக்கெட்டை வாங்கி சேகரித்து வைத்துக் கொண்டான்


சில காலங்கள் இப்படியே கழிந்தது 


டிவியும் கேபிலும் வந்த புதிது.


முகிலன் வீட்டில் டிவி இல்லை பக்கத்து வீட்டில் டிவியும் கேபிலும் வைத்திருந்தார்கள் மதியம் 2 மணிக்கு ஒரு படம் இரவு 9 மணிக்கு ஒரு படம் என்று கேபிள் களைகட்டும்.


எங்கள் ஊரில் புது படம் ஒரு வாரமாகவோ அல்லது பத்து நாட்கள் கழித்து தான் டவர் திரையரங்க்கே ரிலீசாகும் ஆனால் கேபிளில் இரண்டு நாட்களே படத்தை போட்டு விடுவார்கள்.


கொஞ்ச நாட்களில் முகிலன் வீட்டிலும் டிவியும் கேபிலும் வந்தது முக்கால்வாசி புது படங்கள் டிவியிலே பார்க்க ஆரம்பித்தார்கள். திரையரங்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கிய காலகட்டம் அது‌.


முகிலனுக்கு 14 வயது படிப்பு சுமையும் கூடிக்கொண்டே போனது திரையரங்கு செல்வது அரிதானது.


நெல்லுக் காயவைக்கும் போது அதை ஆடு மேயாமல் பார்த்துக் கொண்டாலோ பிறகு தோட்டத்திலிருந்து வரும் பச்சை பயிறை கல் நீக்கி ஒரு மரக்கா உடைத்து கொடுத்தால் சினிமாவுக்கு கூட்டி செல்வாள் ஆத்தா.


இப்படியே போக கருணாநிதி கொட்டைக்கும் முகிலனுக்குமான நெருக்கம் குறைந்து கொண்டே போனது.


முகிலனின் டிக்கெட் சேகரிப்பும் பெரிதாக சேரவில்லை.


பல நாட்களில் முகிலனுக்கு கொட்டாயில் என்ன படம் ஓடுது என்பதே தெரியாமல் இருந்தது.


அப்பாவும் மாமாவும் டவுனில் வீடு வாங்கி செட்டில் ஆன காலகட்டத்தில் கேபிள் டிவி விஸ்வரூபம் எடுத்திருந்தது.


ஸ்டார் டிவியில் டேரிமினேட்டர் படம் பார்த்தான் முகிலன் அந்த மாதிரி படமெல்லாம் எங்கள் ஊருக்கு வரவே வராது


முகிலன் தனியாக படம் பார்க்க ஆரம்பித்த பிறகு கூட இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது கருணாநிதி கொட்டாயில் படம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தான்.


ஒருமுறை அங்கு செல்லும் போது டிக்கெட் கிழிப்பவரிடம் "என்ன அண்ணே கூட்டமே இல்ல" என்றான் "யார் தம்பி வரா கொட்டாயே இருக்குமான்னு தெரியல" என்று பதில் வந்தது.


"என்ன இப்படி சொல்றீங்க"  


"என்ன தம்பி பண்றது இப்பபெல்லாம் கொட்டாய்க்கு மவுசு போச்சு தம்பி.. கூட்டமே இல்ல.. ஓனர் கூட ஏதோ மண்டபம் கட்டலாம்னு சொல்றாரு" என்றார் 


இந்த முறை வாங்கிய டிக்கெட்டை பத்திரமாக பாக்கெட்டில் வைத்து தடவிப் பார்த்துக் கொண்டான்.


காட்சி முடிந்ததும் வரும்போது பனைமரம் மட்டுமே இருந்தது தூக்கணாங்குருவி கூடு மின்மினிப்பூச்சிகள் காணவில்லை.... முகிலன் +2 முடித்து திருச்சியில் ஒரு கல்லூரியில் பட்டப் படிப்புக்காக புலம்பெயர்ந்து வேலைக்காக வெளியூர் சென்றான்.... எப்போதாவது யாரிடமாவது ஊர் பற்றி பேசும்போது கருணாநிதி கொட்டாய் பற்றியும் விசாரிப்பான்.


மற்றொருநாள் கருணாநிதி கொட்டாய் திருமண மண்டபமாக மாறியது.


மக்களை தன்வசம் வைத்துக் கொண்டே இருந்தது.


ஒருமுறை நண்பனுக்கு திருமணம் என்று ஊருக்கு வந்த முகிலன் கருணாநிதி கொட்டாயில்தான் திருமணம் என்றதும் சற்று சந்தோசமானான் திங்கட்கிழமை முகூர்த்தம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை இரவு வரவேற்புக்கு செல்லலாம் என்று முடிவு செய்தான்.


தனது ஆத்தாவையும் வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு சென்றான். இருவரும் வழக்கம்போல் இருட்டியதும் ஆட்டோவில் ஏறி கருணாநிதி திருமண மண்டபம் முன்பு நின்றார்கள்.


ஆத்தா எந்த அசைவும் இன்றி வெளியே நின்று மண்டபத்தை பார்த்தாள். ஆத்தா மனதில் என்ன ஓடுகிறது என்று முகிலனுக்கு புரியவில்லை.


முகிலன் சற்று திரும்பிப் சுற்றிலும் பார்த்தான் 


மையிருட்டு இல்லை 


பனைமரம் இல்லை தூக்கணாங்குருவி கூடு இல்லை மின்மினிப்பூச்சி இல்லை 


எதோ நினைத்தவாறு ஆத்தாவை  நோக்கினான். 


ஆத்தா இவன் முகத்தை பார்த்து "எவ்ளோ அழகா இருந்துச்சு கொட்டாய்"என்றாள்  


இருவரும் மண்டபத்துக்கு வெளியே நின்று கருணாநிதி கொட்டாயை  தேடிக் கொண்டிருந்தார்கள்.


கவிஞர் ம.செ

கருத்துரையிடுக

புதியது பழையவை