அண்மை

மாமியார் மருமகள் உறவு

மாமியார் மருமகள்


சன் டிவியில் ஒளிபரப்பாகும் கல்யாண மாலை நிகழ்ச்சியை பார்த்திருப்பீர்கள். மோகன் என்பவர் நிகழச்சியை அருமையாக நடத்துவார்.


அதில் கலந்து கொண்டு தனது பிள்ளைக்கு பெண் தேடும் பெண்கள் தங்களது மகனுக்கு வரும் பெண்ணை, தங்கள் மகள் போல பார்த்துக் கொள்வதாக, சொல்வார்கள்.


"நீங்கள் ஆசைப்பட்டபடியே உங்களுக்கு நல்ல மருமகள் கிடைப்பாங்கம்மா" என்று கல்யாண மாலை மோகன் வாழ்த்தி  அனுப்புவார்.


இப்படி பாசமலராக இருந்த மாமியார் பிள்ளைக்கு கல்யாணம் ஆனவுடன், ஏன் பாயும் புலியாக மாறுகிறார்?


இரும்பு பெண்மணி என போற்றப்பட்ட முன்னால் பிரதமர்,  இந்திரா காந்தியே, தன்னை எட்டி உதைத்து, வீட்டை விட்டு துரத்தியதாக மருமகள் மேனகா காந்தியால் குற்றஞ்சாட்டப்பட்டவர்தான்.


பெரும்பாலும் மாமனாருக்கும் மருமகளுக்கும் சண்டை வந்ததில்லை. மாமியாருக்கும் மருமகனுக்கும் சண்டை வந்ததில்லை. ஆனால் மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை வராத வீடே இல்லை. சில வீட்டில் வெளிப்படையாக மோதல் இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் புகையாக, புகைந்து கொண்டுதானிருக்கும்.


மாமியாரை அடக்கி ஆளும் மருமகளும் உண்டு. மாமியார் தலையில் அம்மிக் கல்லை போட்டு கொன்ற மருமகளும் உண்டு. மருமகளை தீ வைத்து எரித்த மாமியாரும் உண்டு.


பெற்ற தாயை எடுத்தெறிந்து மகன் பேசினால் கூட," என் பிள்ளை அப்படி எல்லாம் பேச மாட்டான். வந்தவள் அவனை மயக்கி, மந்திரம் போட்டு, என்னை பேச வைக்கிறாள்" என்று தாய் குறைபடுவது உண்டு.


ஊர் ஊராக அலைந்து பிள்ளைக்கு பெண் தேடி கட்டி வைத்துவிட்டு "என்னுடைய  வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறே இவளை, இவனுக்கு கட்டி வைத்ததுதான்" என்று அங்கலாய்க்கின்ற பெண்களை அடிக்கடி பார்த்திருப்போம்.


உளவியல் ரீதியாக பார்த்தால் இதற்கு என்ன காரணம்? மகன் மீது தாய் வைத்திருக்கும் அதீத பாசமே, மருமகள் மீது வெறுப்பாக மாறுகிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?


பத்து மாதம் சுமந்து பிள்ளையை பெற்றெடுக்கிறாள் தாய். ஆண் பிள்ளை என்றால் அவளுக்கு அகமகிழ்ச்சி அதிகம். குப்புறப்  படுத்தால் கூட குழந்தைக்கு வலிக்குமே என கவனமாக படுக்கிறாள். பிறந்த பிள்ளைக்கு பசியால் அவன் அழுவதற்கு முன் முகமறிந்து பாலூட்டுகிறாள். ஈ எறும்பு அருகில் வந்தால் கூட மணம் துடிக்கிறாள். அம்மாவின் முந்தானையை பிடித்து வளர்கிறான் மகன். குழந்தைக்கு தடுப்பூசிகள் போட போகும்போது கூட துண்டு ஒன்றை மகனுக்கு போர்த்தி வெயில் படாமல் பார்த்துக் கொள்கிறாள்.


பள்ளி செல்லும் வயதில் அம்மாவைவிட்டு விட்டு பள்ளிக்கு செல்லமுடியாது என அடம்பிடிக்கிறான் மகன். தன் மகன் படித்து பெயர் வாங்க வேண்டும் என்பதால் கண்ணீரை துடைத்துக் கொண்டு பள்ளிக்கு அனுப்புகிறாள். பார்த்து, பார்த்து சமைத்து, அவன் விரும்பும் உணவை அவனுக்கு கொடுக்கிறாள். பள்ளியில் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் அம்மா அலுத்துப் போகும் வரையில் சொல்லி மகிழ்கிறான் மகன்.


படித்து முடித்து, பருவ வயதில், பணிக்கு செல்லும் மகனுக்கு தேடி, தேடி ஒரு துணையைத் தேர்ந்தெடுக்கிறாள் தாய்.


திருமணம் முடிகிறது.


காலையில் எழுந்து கணவனுக்கு காபி கொண்டு போகிறாள் மனைவி. அப்போதே அம்மாவின் பதவி பறிபோகிறது.


"என் பிள்ளைக்கு இனிப்பு அதிகம் போடாதே. அவன் குடிக்க மாட்டான்" என்று சொல்கிறார் மாமியார். இனிப்பு டீயை குடித்த மகன் கோபப்படுவான் என நினைக்கிறாள். ஆனால் மகனோ "உன் கைபட்டதால்தான் டீ இவ்வளவு இனிக்கிறதா?" என டீ கொடுத்த கரங்களை முத்தமிடுகிறான். தாய்க்கு அவன் செய்கை புதிதாக உள்ளது.


ஆபிஸுக்கு போகும் மகன் வழக்கமாக அம்மாவிடம் சொல்லிக் கொண்டு போவதை விட்டுவிட்டு, மனைவியிடம் டாடா காட்டுகிறான்.


எனக்கு தெரிந்த பையன் ஒருவனுக்கு புதிதாக திருமணம் நடந்தது. வேலைக்கு போகும் போது வாசலில் உட்கார்ந்து இருந்த அம்மாவிடம், " போய் வருகிறேன்" என்று சொல்லி இருக்கிறான். அதற்கு அவர் "பத்து நாளாக யாரிடம் சொல்லிக் கொண்டு போனாயோ, அவளிடமே சொல்லிக் கொண்டு போ" என கோபப்பட்டுள்ளார். மகனுக்கு இது புதிராக இருந்துள்ளது.


வேலைக்கு சென்று வரும் மகன், அலுவல் இடத்தில் நடந்த சுவையான செய்திகளை, அம்மாவிடம் சொல்வது வழக்கம். கல்யாணம் ஆன பிறகு அம்மாவிடம் அவன் அதிகம் பேசுவது கூட இல்லை. மனைவியின் அறையில் எப்போதும் புகுந்து கொள்கிறான். அன்பும், அதிகாரமும் இடம் மாறுகிறது. கணவனை தன் காலடிக்கு கொண்டு வந்த மனைவி, மாமியாரிடமும் தன் அதிகாரத்தை செலுத்துகிறாள்.


தன் முந்தானையைப் பிடித்து வளர்ந்தவன், பத்து நாளைக்கு முன்னர் வந்தவளிடம் அடங்கி போகும்போது, ஏதோ ஒன்றை இழந்துவிட்ட உணர்வு அவளுக்கு ஏற்படுகிறது. தன் பிள்ளையை தன்னிடம் இருந்து மருமகள் பிரித்துவிட்டதாக  எண்ணுகிறாள். கோபம் பிள்ளை மீது வருவதில்லை. மாறாக மருமகள் மீது வருகிறது.


மருமகள் எது செய்தாலும் அவளுக்கு குற்றமாகவே தெரிகிறது. நன்றாக மருமகள் சமைத்தாலும், ஏதாவது குற்றம் கூறுகிறார் மாமியார்.


வேண்டுமென்றே குறை கூறுவதால், சாம்பாரில் வேண்டுமென்றே உப்பை போட்டு மாமியாருக்கு கொடுக்கும் மருமகள்கள் இருக்கிறார்கள்.


எனக்கு தெரிந்து சிவபக்தன் ஒருவனுக்கு லேட்டாக நாற்பது வயதில் திருமணம் நடந்தது. அவன் தாய்தான் வற்புறுத்தி பல புரோக்கர்களிடம் சொல்லி திருமணம் செய்து வைத்தாள். திருமணமான இரண்டே  மாதத்தில் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று புதிய பெண் கணவனிடம் முரண்டு பிடித்தாள். காரணம் மாமியார் வயது முதுமையால்  இருக்கும் இடத்திலேயே சிறுநீர் கழித்துவிடுவாராம். உறவாக நினைத்திருந்தால் உரிமையோடு உதவி செய்திருப்பாள்.


அது மட்டும் இல்லாமல், ஒத்துழைக்காத மருமகளை திட்டிக் கொண்டே இருப்பாராம். அது அவளுக்கு அருவெறுப்பை உண்டாக்கி உள்ளது. அதனால் அவள் மாமியார் அருகில் கூட செல்வதில்லை. தாயிடமிருந்தும், தாரத்திடமிருந்தும் பஞ்சாயத்து தினமும் வருகிறது. மகனுக்கோ மன உளைச்சல்


"இன்னும் கொஞ்ச நாளைக்குதான் என் அம்மா உயிரோடு இருப்பார். அதுவரை பொறுத்துக் கொள்" என்று கூட கணவன் சொல்லி பார்த்து இருக்கிறான். அவள் கேட்பதாக இல்லை. அம்மா பக்கமும் பேச முடியாமல், மனைவி பக்கமும் பேச முடியாமல் "தூக்கில் தொங்கப் போகிறேன்" என ஒரு நாள் கதவை சாத்திக் கொண்டான். முதலுக்கே மோசமானதால் இப்போது மாமியாரும் மருமகளும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.


காதலித்து வந்த பெண் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. பணமும் பவுனும் கொண்டுவராமல் வீட்டை விட்டு வந்த பெண்ணாயிருப்பதால் மாமியாரின் அர்ச்சனை அதிகமாக இருக்கும்.


கணவன் வெளிநாடு சென்று விட்ட குடும்பங்களிலும் ஒற்றுமை இல்லை. கணவனைப் பிரிந்து, தனிமையில் வாடும்  மருமகளுக்கு, ஆதரவாக இருக்கவேண்டிய மாமியார், மருமகளை பற்றி ஏதாவது தொடர்ந்து குற்றம் குறை சொல்லி மகன் மணதில் நஞ்சை வளர்ப்பார். போன் பேசக் கூட விடாத மாமியார்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு பெண் ஆயிரம் பேர் எதிர்த்தாலும் கவலைப் படமாட்டாள். ஆனால் கட்டிய கணவன் ஆதரவாக இல்லாவிட்டாள் மணம் ஒடிந்துவிடுவாள்.


தனக்கு எதிராக எது செய்தாலும் கண்டு கொள்ளாமல், பிள்ளைப் பூச்சியை போல் வாழ்கின்ற மாமியார்களையும் நான் பார்த்திருக்கிறேன். "இப்படி செய்கிறாளே உன் மருமகள், நீ கண்டிக்க மாட்டாயா?" என்று கேட்டால் "ஏதோ ஒரு வேளை சோறு போடுகிறாள். அதையும் கெடுத்துக் கொள்ள சொல்றியா?" என்று கேட்ட மாமியாரும் உண்டு.


கிராமத்து பெண்கள் வெளிப்படையாக மாமியாரை திட்டினாலும், அன்போடு இருப்பதையும் பார்த்திருக்கின்.


படித்த பெண்கள் சைக்காலஜி தெரிந்து, மாமியாரிடம் ஒற்றுமையாக இருந்தும் பார்த்திருக்கிறேன்


இதற்கு தீர்வுதான் என்ன?


மருமகள் என்பவளும், இன்னொரு வீட்டில் பிறந்த மகள்தான் என்பதை மாமியார்கள் உணர வேண்டும்.


மருமகளும், தானும் ஒரு நாள் மாமியார் ஆவோம் என்பதை உணர வேண்டும்.


தன் மகள் எட்டு மணி வரை தூங்கினாலும், "பாவம் தூங்கட்டும், அவளை எழுப்பாதீர்கள்" என சொல்லும் தாய் காலையில் எழுந்து, கூட்டி கோலம் போடவில்லை என மருமகளை மட்டும் குறை சொல்வது ஏன்?


பெண்களை ஆண்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் ஏற்கலாம். பெண்களை பெண்களே புரிந்து கொள்ளாவிட்டால் அதை என்னவென்று சொல்வது?


"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா" என கவிமணி பெண்ணைத் தானே போற்றி உள்ளார்?


சமையலே செய்யாமல் செல்லமாக வளர்க்கப்பட்ட பெண், தன் முயற்சியால் தட்டுத் தடுமாறி சமைத்து கொடுக்கும் போது, அதைக் குறை கூறி திரிவது மாமியார்களுக்கு அடுக்குமா?


சக்கரா டீத்துளை குடித்து விட்டு, திரிரோஸுக்கு மாறினாலே சுவை மாறிவிடுகிறது.  ஊர் விட்டு ஊர் வந்து சமைக்கும் மருமகளிடம் பழைய சுவையை எதிர்பார்க்கலாமா?


சமீபத்தில் காணொளி ஒன்று பார்த்தேன். கிளாஸ் டம்ளரில் மருமகள்,மாமியாருக்கு காபி கொடுக்கும்போது  மாமியார் வயது முதிர்வினால் கை நடுங்கி டம்ளரை கீழே போட்டு உடைத்து விடுகிறாள். சத்தம் போடுகிறாள் மருமகள். மறு நாளும் இதே நடக்கிறது. "உங்களுக்கு அறிவே இல்லையா?" எனக் காய்ச்சி எடுக்கிறாள்.


இதைப் பார்த்துக் கொண்டு இருந்த அந்த மருமகளின் மகன் இரண்டு ஸ்டீல் டம்ளர்களை வாங்கி வந்து கொடுக்கிறான். "எதற்கு இரண்டு டம்ளர்?  ஒன்று போதாதா?" என்கிறாள் தாய்.


அவன் சொல்கிறான்,"ஒன்று பாட்டிக்கு. இன்னொன்று உனக்கு. உனக்கும் வயது ஆகும். உனக்கும் கை நடுங்கும். அப்போது  கிளாஸ் டம்ளரை நீ உடைத்தால் என் மனைவி உன்னைத் திட்டுவாள். அதை என்னால் தாங்க முடியாது".


அவன் என்ன சொல்ல வருகிறான், என்பதை  தாய் உணருகிறாள்.


பெண் என்பவள் எல்லா உறவுகளையும் ஒரே நாளில் விட்டு விட்டு, புது இல்லம் வருபவள். அவளைப் போற்றி காக்க வேண்டும்.


டாக்டர் சிவா என்ற படத்தில் மலரே குறிஞ்சி மலரே என ஒரு பாடல், கவிஞர் வாலி  சொல்கிறார்,


"யார்மடி சுமந்து தான் பிறந்தாலும்

தாய் மடி மறந்து தலைவனைச் சேரும்

பெண்ணென்னும் பிறப்பல்லவோ


கொடி அரும்பாக செடியினில் தோன்றி கோவிலில் வாழும் தேவனைச் சேரும்

மலரே நீ பெண்ணல்லவோ" என்கிறார்.


அதுமட்டுமல்ல.


"தாய்வழி சொந்தம் ஆயிரம் இருந்தும் தலைவனின் அன்பில் விளைவதுதானே உறவென்னும் சாம்ராஜ்யம்" என்கிறார்.


அதனால் பெண்ணே!

உனக்கென்று சில குணங்களை கடவுள் படைத்துள்ளார்.

அன்பு, பொறுமை, கருணையின் வடிவம் நீ. அதை என்றும் நீ விட்டுக் கொடுக்காதே.


நீ மருமளாக இருந்தாலும், மாமியாராக இருந்தாலும் நீ அன்பின் வடிவம் என்பதை மறந்துவிடாதே.


வங்கியில் பணத்தை போட்டால் அந்தத் தொகை பல மடங்கு வளருவது போல்


நீ அன்பை அள்ளிக் கொடு. அது பல மடங்காகி உறவாக உன்னை அடையும்.


நமக்கு ஒரு துன்பம் என்றால் ஓடோடி உதவிக்கு வரும் உள்ளங்களை சேர்த்து வை.


நல்ல ஒரு பெண்ணை, மனைவியாக பெற்றவன், பாடுவதாக, வியட்நாம் வீடு படத்தில் அமைந்த, கண்ணதாசனின் பாடலைக் கூறி இக்கட்டுரையை முடிக்கிறேன்.


"உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி!

என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா! என் உயிர் நின்னதன்றோ!

உன்னைக் கரம் பிடித்தேன்!

வாழக்கை ஒளிமயமானதடி!

உன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி!

கால சுமைதாங்கி போலே மார்பில் எனை தாங்கி வீழும் கண்ணீர் துடைப்பாய்! அதில் என் இன்னல் தணியுமடி!

ஆழம் விழுதினை போல் உறவு ஆயிரம் வந்துமென்ன? வேரென நீயிருந்தாய். அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்.

பேருக்கு பிள்ளையுண்டு! பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு!

என் தேவையை யார் அறிவார்?

உன்னைப்  போல் தெய்வம் ஒன்றே அறியும்".


இந்தப் பாடலின் மூலம் பெண்ணே தெய்வம் என்று தீர்ப்பளித்து விட்டார் கண்ணதாசன்.


மாமியாராயிருந்தாலும் மருமகளாயிருந்தாலும்

அவர்கள் பெண்கள்தானே!


ஜெ மாரிமுத்து

கருத்துரையிடுக

புதியது பழையவை