அண்மை

மாணவர்களின் கடமைகள்

 

மாணவர்களின் கடமைகள்

இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள் மாணவர்களும் சமுதாயத்தின் ஓர் அங்கமே. எனவே பல்வேறு துறைகளில் சீரழிந்து வரும் இச்சமுதாயத்தில் காணப்படும் குறைகளை நீக்கிச் சீர்பெறச் செய்வதில் எதிர்காலத் தலைவர்களாகிய மாணாக்கர்க்கும் பங்குண்டு. எனவேதான் பள்ளிகளில் மாணாக்கர்க்குக் கல்வியறிவுடன் தொண்டு மனப்பான்மையையும் வளர்க்கும் வகையில் சாரணர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் போன்றவை ஏற்படுத்தப்பட்டு மாணவர்க்குப் பொது நலப்பணியில் ஆர்வத்தை ஊட்டி, பயிற்சியும் அளிக்கின்றனர். 'இளமையிற் கல்வி சிலைமேல் எழுத்து' என்பர். எனவே இளம் பருவத்திலேயே பொது நலப்பணிகளில் ஈடுபாட்டைப் பள்ளிகள் மாணவர்கட்கு உண்டாக்கி, சமூக நன்மைக்குப் பாடுபடுவது தங்கள் கடமை என்று உணரச் செய்து வருகின்றன. இக்கால மாணவர்களே நம் நாட்டை வளப்படுத்த உகந்தவர்கள். 


பொது நலப்பணியை மாணவர்கள் தங்கள் வகுப்பறையிலிருந்தே தொடங்கலாம். தங்கள் வகுப்பில் படிக்கும் ஏழை மாணாக்கர்க்குப் பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், எழுதுகோல்கள் போன்றவற்றை வசதியுள்ள மாணவர்கள் வாங்கிக் கொடுக்கலாம். வகுப்பறைகளையும், பள்ளியின் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள ஆவன செய்யலாம். 


கிராமங்களில் சிலர் எழுத்தறிவின்மையால் சுத்தத்தைப் பற்றியும், சுகாதாரத்தைப் பற்றியும் போதிய கவனம் செலுத்துவதில்லை. சாக்கடை நீர் போக இடமில்லாமையால் தெருக்களில் தேங்கிக் கிடப்பதைக் காணலாம். பொதுக் கழிப்பிடமும் சரிவரத் துப்புரவு செய்யப்படாமையால் பல சுகாதாரக் கேடுகள் விளைகின்றன. மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியில்லாமையால் குடிப்பது, குளிப்பது, மாடுகளைக் குளிப்பாட்டுவது என்று எல்லாவற்றையும் ஒரே இடத்தில் செய்வர். அதனால் பலவகையான நோய்களுக்கு ஆளாகின்றனர். இப்படிப்பட்ட சிற்றூர்களுக்கு விடுமுறை நாள்களில் சென்று அம்மக்களுக்குச் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறி, அதனால் ஏற்படும் நன்மைகளையும் விளக்கலாம். இதையே மாணவர்கள் செய்ய வேண்டிய கடமையாக டாக்டர் அப்துல் கலாம் ஐயாவும் வலியுறுத்துகிறார். இன்று வைரஸ் தொற்று பரவல் சகஜம் ஆகிவிட்டது. அதுபோன்ற சமயங்களில் அரசாங்கத்துக்கு அறிவித்துத் தடுப்பூசிகள் போடவும், தக்க மருந்துகள் தரவும் ஆவண செய்யலாம். கிராம மக்களில் பெரும்பாலோர் மூடப் பழக்க வழக்கங்களுக்கும், குருட்டு நம்பிக்கைகளுக்கும் ஆளாகி அல்லல் படுகின்றனர். முரட்டுத்தனமான கொலை முதலிய பாவங்களுடன் மத சடங்குகள் அவர்களிடம் காணப்படும். மாணவர்கள் பொறுமையுடன் இவற்றை யெல்லாம் களையப் பாடுபட வேண்டும். 


பெரும்பாலான மக்கள் சம்பாதிக்கும் பணத்தை எதிர்காலத் தேவைக்குச் சேமித்து வைக்கத் தெரியாது கண்டபடி செலவழித்துப் பின்னர் தேவைக்குக் கடன் வாங்கிக் கஷ்டப்படுகிறார்கள். எனவே அவர்களுக்குச் சிக்கனத்தின் சிறப்பையும் சேமிப்பின் அவசியத்தையும் எடுத்துக் கூறி எப்படி வங்கிகளில் சேமிக்கலாம் என்பதற்கும் வழி காட்டலாம். அதே போல நம் மக்களுக்கு உணவுப்பொருளை எவ்வாறு சேமிப்பதென்றும் தெரியவில்லை அதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். ஓய்வு நேரங்களைப் பயனுள்ள வகையில் கழிக்கவும் வருமானம் பெறவும் ஏதேனும் ஒரு கைத் தொழிலைக் கற்கச் செய்யலாம். 


'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என்பது நம் முன்னோர் வாக்கு. கல்வி கொடுத்தவர் கண் கொடுத்தவர் ஆவர். எனவே எழுதப் படிக்கத் தெரியாத மக்களுக்கு ஓய்வு நேரத்தில் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தாலே நாட்டில் எழுத்தறிவின்மையைப் பெருமளவு போக்கி விடலாம் என்பதால்தான் 'Each one teach one' 'Each one teach ten' என்று கல்லாமையை இல்லாமையாக்க முயல வேண்டும். மாணவர்கள் இதில் பெரும்பணியாற்றலாம். பள்ளிப் பருவத்துக் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறிப் பள்ளிக்கு அனுப்பும்படி செய்யலாம். பள்ளிகளில் சாதிக் கொடுமைகள் இருப்பின் அதை களைய முனையலாம்.


திருவிழாக் காலங்களில் மக்கள் அவ்விடங்களில் திரளாகக் கூடுகின்றார்கள். கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு இடித்துக் கொண்டு செல்கின்றனர். அங்கெல்லாம் சாரணர்கள் நின்று அவர்களை ஒழுங்குப்படுத்தி வரிசையாகச் செல்லும்படி செய்யலாம். இப்படிப்பட்ட இடங்களில் திருடர்கள் பொது மக்களிடம் திருடுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே மாணவர்கள் அதைத் தடுக்கும் வகையில் ஆங்காங்கே கண்காணிப்பை மேற்கொள்ளலாம். மக்கள் மிகுதியாகக் கூடுமிடங்களில் நெரிசலில் குழந்தைகள் காணாமற் போவதும் இயல்பு. அவர்களைத் தேடிப்பிடித்துப் பெற்றோரிடம் ஒப்படைக்கலாம். பாதுகாக்கப்பட்ட குடிநீரை விழாவிற்குப் வந்திருப்பவர்க்கு வழங்கலாம். 


சாலைகள் இல்லாத கிராமங்களுக்குச் சாலை அமைக்க ஏற்பாடு செய்தல், பழுதடைந்த சாலைகளைச் செப்பனிடுதல் போன்ற பணிகளில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு தொண்டாற்றலாம். மரம் நடுதல், குளங்களைச் சுத்தம் செய்தல், தெருக்களைச் சுத்தம் செய்தல், கோவில்களைச் சுத்தம் செய்தல், கோவில் சுற்றுச்சுவர்களுக்கு வெள்ளையடித்தல் போன்ற பணிகளை மாணவர் கூட்டாகச் சேர்ந்து செய்யலாம். கிராம மக்கள் தங்கள் கிராமத்துத் தேவைகளை அரசு கொடுக்கும் மானியத்தைக்கொண்டு தாங்களே செய்து கொள்ளும் திட்டமே 'நமக்கு நாமே' என்னும் திட்டம். அதன் சிறப்பை எடுத்துக் கூறி அதனை மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி செய்யலாம். 


'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்றார் அப்பர் பெருமான். 'ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்' என்கிறார் அருட்பெருஞ்சோதி வள்ளலார். 'எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணி இரங்கவும் நின் தெய்வ அருட் கருணை செய்வாய் பராபரமே' என்று வேண்டுகிறார் தாயுமானவர். அம்மகான்களின் அருள் வாக்குகளை நினைவில் கொண்டு நாமும் பிறருக்குத் தொண்டு செய்வதை நம் கடமையாகக் கொண்டு வாழ்ந்து, நம் பிள்ளைகளுக்கும் இதைக் கூறி வளர்ப்போம்


மா.பேபி. சரோஜா

1 கருத்துகள்

  1. 9:30 மணிக்கு பள்ளி தொடங்கி 4 அல்லது 4:30மணிக்கு முடிந்த காலத்தில் மாணவர்கள் இதுபோன்ற சமூக ஒன்றாடலில் இருந்தார்கள்.. இப்போது பள்ளி 8மணிக்கு மார்னிங் ஸ்பெஷல் கிளாஸ்.. சாயங்காலம் ஈவினிங் கிளாஸ்.. பிறகு டியூஷன்.. டெஸ்ட்.. லொட்டு லொசுக்கு என பாடங்களை ஏதோ பாறாங்கல் சுமையை போன்றதொரு தோற்ற மாயையை உண்டு பண்ணி...

    விளையாட்டு ஆடல் பாடல் சமூக உறவாடல் திருவிழாக்களை கொண்டாடுதல்
    மற்ற பங்கேற்பு நடவடிக்கைகள் முற்றாக மூடிவிட்டார்கள்.

    முன்பாவது இதுபோன்ற சிலசமூகஇயக்க பங்கேற்பு சான்றிழ்களுக்கு மதிப்பு/வேலைவாய்ப்பில் முன்னுரிமை இருந்தது. இன்று நாட்டில் வேலைவாய்ப்புக்கே வாய்ப்பு இல்லை என்றான பிறகு இதெல்லாம் எதற்கு என்று விட்டு விட்டார்கள்.. வணிக நோக்கில் இயங்கும் தனியார் பள்ளிகள் இதை செய்ய போவதில்லை. பாரம்பரிய யமாக இயங்கிவரும் ஒருசில பள்ளிகளும் ஒழுக்கத்துக்கு முதலிடம் தரும் கல்வி நிறுவனங்களும் எஞ்சிபோய் எங்காவது காலம் தள்ளி கொண்டிருக்கும்..அவை செய்தால்தான் உண்டு.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை