நோக்கம்
'தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை' என்பது தமிழ் மூதாட்டி ஔவையின் நல்லுரை. அந்தத்தாயினும் சிறந்தது தாய்நாடு. அதனால்தான் மகாகவி பாரதி 'பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தன' என்றார். பிறந்த பொன்னாடு அந்நியனுக்கு அடிமைப்பட்டபோது அதன் விடுதலைக்குப் பாடுபட்ட வீரர் பலர். இப்போது சுதந்திரதினப் பவளவிழா ஆண்டைக் கொண்டாடுகிறோம் என்றால் அதற்குக் காரணம் அவ்வீரர்கள் சிந்திய கண்ணீரும் செந்நீருமே. தாய்த்திரு நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட வீரர்களுள் சிரோன்மணியாய் விளங்கியவர் கப்பலோட்டிய தமிழர் என்று போற்றிப் புகழப்படும் மாவீரர் சிதம்பரனார் நாட்டுக்குழைத்த அந்த நல்லவர் பற்றி இக்கட்டுரையில் கண்டு அவர் நினைவைப் போற்றுவோம்.
பிறப்பு
தென்பாண்டி நாட்டில் திருநெல்வெலி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் என்னும் சிற்றூரில் பெருஞ்செல்வராய் விளங்கிய வழக்கறிஞர் உலகநாதப் பிள்ளைக்கும், பரமாயி அம்மையார்க்கும் 1872 - ஆம் ஆண்டு நன்மகனாய்ப் பிறந்தார் நம் சிதம்பரனார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தார். வீரப்பெருமாள் அண்ணாவியார் என்பவரிடம் தொடக்கக் கல்வி கற்றார்.
வழக்கறிஞராதல்
தூத்துக்குடியில் அருந்தமிழும் ஆங்கிலமும் கற்றார். தமிழகத்துக்கு உரிய வீரவிளையாட்டுகளிலும் வல்லவராய் விளங்கினார். தந்தையைப் போன்று வழக்கறிஞராக விரும்பினார். திருச்சியில் புகழ்பெற்று விளங்கிய வழக்கறிஞர்களிடம் சட்ட நுணுக்கங்களைக் கற்றார். 1895 - இல் வழக்கறிஞர் தேர்வில் வெற்றி பெற்றுத் தொழிலைத் தொடங்கினார். வள்ளியம்மை என்னும் பெண்ணணங்கை மணந்தார். வழக்கறிஞர் தொழிலில் வாய்மைவழி ஒழுகினார். பொய் வழக்குகளை ஏற்க மறுத்து வெறுத்து ஒதுக்கினார். ஏழை எளிய மக்களிடம் பொருள் ஏதும் பெறாது அவர்களுக்காக வழக்காடினார். சிதம்பரனார் தம் அன்புத் துணைவியாரை இளமையிலேயே இழக்க நேர்ந்தது. அவரது மறைவால் சிதம்பரனார் ஆறாத்துயருற்றார். காலப்போக்கில் ஆறுதலடைந்து மீனாட்சியம்மை என்னும் மங்கை நல்லாளை மறுமணம் புரிந்து கொண்டார்.
தேசப்பணியில் ஈடுபடுதல்
1905 - இல் ஏற்பட்ட வங்கப்பிரிவினை, நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்து வங்காளம், முஸ்லீம் வங்காளம் என்று பிரித்ததை ஆங்கில அரசின் பிரித்தாளும் சூழ்ச்சி என்று நாடே கிளர்ந்து எழுந்தது. போராட்டத்தின் ஒரு பகுதியாகச் சுதேசி இயக்கம் வலுப்பெற்றது. மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும் மிக்க சிதம்பரனார் தம் தொழிலை உதறிவிட்டுக் காங்கிரசில் சேர்ந்தார். தம்மிடமிருந்த விலையுயர்ந்த அந்நிய ஆடைகளை எல்லாம் தீவைத்துக் கொளுத்தினார். இனி வெளிநாட்டுப் பொருள்களை வாங்குவதில்லை என்று உறுதி பூண்டதுடன் நாட்டு மக்கள் அனைவரும் அவ்வுறுதியை மேற்கொள்ளும்படி தீவிரப் பிரச்சாரம் செய்தார். நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று மக்கள் மனத்தில் விடுதலை உணர்ச்சியை ஊட்டினார்; வீரக்கனலை மூட்டினார்.
சுதேசிக்கப்பல் கம்பெனி
வெள்ளையரின் செல்வாக்கிற்கு வாணிகமும் ஒரு காரணம் என்பதால் ஆங்கிலக் கப்பல் கம்பெனிக்கு எதிராகச் சுதேசிக்கப்பல் கம்பெனியை அரும்பாடுபட்டுத் தொடங்கினார். திலகர் கப்பல் வாங்க அவருக்குப் பொருளுதவி பெற்றுத் தந்தார். இரு கப்பல்களை விலைக்கு வாங்கித் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கு மிடையே கப்பல் விட்டார். "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி" என்ற பெயரையும் பெற்றார். சுதேசிக் கப்பலையும் சிதம்பரனாரையும் ஆங்கிலேயர் ஒழிக்க முயன்றனர். தக்க தருணத்தை எதிர்பார்த்திருந்தனர். விபின் சந்திர பாலரின் விடுதலையைக் கொண்டாடு முகத்தான் நாடு முழுவதும் பெருவிழா நடைபெற்றது. அதற்கு ஆங்கில அரசு தடைவிதித்தது. தடையை மீறிச் சிதம்பரனார் விழாவில் கலந்துகொண்டு பேசினார் அவர்மீது குற்றம் சாட்டி அரசாங்கம் அவரைக் கைது செய்தது.
ஆயுள் தண்டனை
சிதம்பரனார் மீது அரசு தரப்பில் தேசத்துரோகக் குற்றம்சாட்டி வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதி பின்ஹே சிதம்பரனார்க்கு இரண்டு ஆயுள் தண்டனைகளை (40 ஆண்டுகள்) விதித்து உத்தரவிட்டார். இத்தீர்ப்பை அறிஞர்கள் கண்டித்தார்கள். அப்போது இந்திய மந்திரியாக இருந்த மார்லி பிரபுவே இதைக்கேட்டு மனம் பதைத்தார்; தீர்ப்பு வழங்கிய நீதிபதியைக் கண்டித்தார். அதன் பயனாக மேல் விசாரணையில் ஆயுள்தண்டனை ஆறாண்டுக் கடுங்காவல் தண்டனையாக மாற்றப்பட்டது.
சிறையில் சிதம்பரனார்
சிதம்பரனார் கோவைச் சிறையில் அடைக்கப் பட்டார். சிறையில் அவர் பட்ட துன்பங்கள் சொல்லில் அடங்காதன. சிறையில் செக்கிழுத்தார்; கல்லுடைத்தார்; கேழ்வரகுக் கூழ் குடித்தார். ஓர் அரசரைப் போல வாழ்ந்த அந்த ஏந்தல் வெஞ்சிறையில் வாடினார். எனினும் தம் ஓய்வு நேரங்களில் தமிழ்நூல்களைப் படிப்பதிலும் ஆராய்வதிலும் ஈடுபட்டார். ஜேம்ஸ் ஆவன் இயற்றிய அரிய ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தார். திருக்குறளை நன்கு ஆராய்ந்து சிறந்த குறிப்புரைகள் எழுதினார். பல தமிழ்நூல்களையும் எழுதினார். சிதம்பரனார் சிறையில் வாடியதைக் கண்டு துடித்த அவரது ஆருயிர் நண்பரான பாரதியார்,
"மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?"
என்று தம் உள்ளக் குமுறலைக் கடவுளிடம் முறையிட்டுக் கதறிக்கண்ணீர் வடித்தார்.
விடுதலை பெறல்
தண்டனைக்காலம் முடிந்து விடுதலையடைந்து வெளியில் வந்த அவரை வரவேற்கக்கூட ஒருவரும் வரவில்லை. ஆட்சியாளரின் அடக்குமுறைக்கு அஞ்சி மக்கள் அவரை உரியமுறையில் போற்றத் தவறி விட்டார்கள். உடைந்த உள்ளத்துடன் சென்னையில் பல காலம் வாழ்ந்து வந்தார். சிறைப்பட்டதால் வழக்கறிஞர் தொழில் செய்யும் உரிமையையும் இழந்து விட்ட அவர் வறுமையில் வாடினார். அவரது நிலையை அறிந்த நீதிபதி வாலஸ் துரை மனம் கசிந்துருகினார். அவரது முயற்சியால் சிதம்பரனார் இழந்த வழக்கறிஞர் உரிமையை மீண்டும் பெற்றார். தூத்துக்குடி சென்று தொழில் புரிந்தார். அரசியலை விட்டு விலகி வாழலானார். தமிழ் ஆராய்ச்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். நன்றி மறவாமை என்னும் நற்பண்பு அவரிடம் தலைசிறந்து விளங்கியதால் சுதேசிகப்பல் கம்பெனியின் வளர்ச்சிக்கு உதவிய நண்பர் ஆறுமுகம்பிள்ளையின் பெயரைத் தம் ஒரு மைந்தருக்கு வைத்தார். தமக்கு வழக்கறிஞர் தொழில் நடத்த உரிமை பெற்றுத் தந்த வாலஸ் துரையின் நினைவாகத் தம் மைந்தருக்கு வாலீஸ்வரன் என்று பெயரிட்டுத் தனது மற்றொரு நன்றியுணர்வை வெளிப்படுத்தினார்.
இறப்பும் சிறப்பும்
தென்னாட்டுத் திலகரென்றும் கப்பலோட்டிய தமிழரென்றும் செக்கிழுத்த செம்மலென்றும் போற்றப்படும் வ.உ.சிதம்பரனார் 1936 - ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 11 - ஆம் நாள் தம் பொன்னுடலை நீத்துப் புகழுடம்பு எய்தினார். நாடு விடுதலை பெற்றபின் அந்தமாவீரருக்குப் பற்பல வழிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டன. தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் போக்குவரத்துச் செய்ய வாங்கிய முதல் கப்பலுக்கு வி.ஓ. சிதம்பரம் என்று பெயரிடப் பட்டது. சிதம்பரனார் கனவு நனவானது. அந்த ஒப்பற்ற தலைவருக்குச் சிலை வைத்துப் போற்றியது தமிழக அரசு கப்பலோட்டிய தமிழரின் திருவுருவச்சிலையைக் கப்பல்துறைமுகத்திற்கு எதிரில் அமைத்திருப்பது சாலவும் பொருத்தமானதாகும். நாட்டுக்கும் தமிழுக்கும் நற்றொண்டு புரிந்த அவ்வீரத் திருமகனாரின் புகழ் என்றென்றும் நின்று நிலவும்படி அவர் வழியில் பணியாற்றுவோமாக. இன்னும் விடுதலைப் போராட்டத்தில் பாடுபட்ட பலரை அறிய இக்கட்டுரையைக் காண்க.
புலவர் மா. பேபி சரோஜா