அண்மை

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை


முன்னுரை


"அரிது அரிது மாளிடராய்ப் பிறத்தல் அரிது" என்றார் தமிழ் மூதாட்டி ஒளவையார். அங்ஙனம் மூதாட்டி ஔவையால் பாராட்டப்பட்ட அரிய சிறப்பினை உடைய பிறவி மனிதப்பிறவி - உலகிலுள்ள உயிரினங்களில் மனிதப் பிறவியும் நீண்ட ஆயுளைக் கொண்ட பிறவியே. ஆனால் இன்று மனிதன் நெடுநாள் வாழ வேண்டுமாயின் நோயின்றி இருத்தல் வேண்டும். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று நம் முன்னோர் அதனால்தான் அவ்வாழ்வைச் சிறப்பித்துச் கூறினர். அதுபற்றி இக்கட்டுரையில் காண்போம்.


நோயற்ற வாழ்வின் இன்றியமையாமை 


உலகையே விலை பேச வல்ல உடைப்பெருஞ் செல்வராய் இருப்பினும் நோயினால் பீடிக்கப்படுவாராயின் அச்செல்வத்தால் அவர் ஒரு பயனும் அடைய மாட்டார். அதனால்தான் அருட்பெருஞ் சோதியாம் வள்ளலார் கூட இறைவனிடம் 'நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்' என்று வேண்டுகிறார். முற்றும் துறந்த முனிவர்களாயினும் நோயற்ற வாழ்வையே விரும்புவர். 


நோய்க்குக் காரணம்


'நோய்க்கு இடங் கொடேல்' என்பது ஔவையின் வாக்கு. 'நோய் நாடி நோய் முதல் நாடி' என்று வள்ளுவரும் கூறுகிறார். எனவே நோய்க்கான காரணத்தை முதற்கண் அறிதல் வேண்டும். தூய்மையற்ற உணவு. போதிய காற்றும் வெளிச்சமும் இல்லாத உறைவிடம், மாசுற்ற சுற்றுச்சூழல், ஒழுக்கமற்ற வாழ்க்கை போன்றவை நோய்க்குக் காரணங்களாகின்றன. 


நோய் வாராதிருக்கச் செய்ய வேண்டுவன


நோயின்மை வேண்டுபவர் நோய் வாராதிருப்பதற் குரிய வழி வகைகளை அறிந்து வாழ முயலவேண்டும். வைகறையில் துயிலெழுந்து முடித்தல் வேண்டும். வயிறு தூய்மையாய் இல்லை யெனில் குடலில் அழுக்குத் தங்கும். நச்சுக்காற்று தோன்றும். நரம்புகளை மந்தப்படுத்தும். அறிவு மங்கும். உடல் நலக் குறைவு உண்டாகும். 'கூழானாலும் குளித்துக்குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு' என்னும் பொன்மொழிக் கேற்ப குளிர்ந்த நீரிலோ வெந்நீரிலோ குளித்தபின் தூய உடையை அணிய வேண்டும்.


உணவு


பழங்கள், காய்கள், கீரைகள், பருப்புகள், தானியங்கள் முதலியவற்றுள் நம் உடல் நிலைக்குப் பொருத்தியவற்றை உணவாகக் கொள்ளலாம். காபி, தேநீர் போன்றவைகளை விலக்கி, நீர்மோர், பழரசம், இளநீர், கேழ்வரகுக் கஞ்சி போன்றவற்றைப் பருகலாம். நன்கு பசித்தபின் புசித்தல் வேண்டும். உணவில் காரம், உப்பு, புளி இவற்றைக் குறைத்து உண்ணுதல் நலம். உடல் எடை அதிகம் ஆகாதபடி உணவை எடுத்து கொள்ளுதல் வேண்டும். உணவை உற்பத்தி செய்யவும், உணவைச் சமைக்கவும் இன்றி யமையாததாக உள்ள தண்ணீரே ஓர் உணவாகவும் உள்ளது. எனவே ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும். 


உறக்கம்


படுக்கையறையும் படுக்கையும் தூய்மையாகவும் காற்றோட்டம் உள்ளதாயும் இருக்க வேண்டும். நாள் தோறும் இரவில் குறைந்தது ஆறுமணி நேரமாவது உறங்க வேண்டும். கிழக்குப் பக்கம் தலைவைத்து இடப்புறம் சாய்ந்து படுத்து உறங்குதல் நல்லது. 


சுற்றுச்சூழல் பாதுகாப்பு 


சுற்றுப்புறம் மாசுபடாமல் இருப்பது மிகவும் இன்றியமையாதது. காற்று, நீர், சுற்றுப்புறம் போன்றவை மாசுபடுவதால்தான் காசநோய், மஞ்சள் காமாலை, மலேரியா போன்ற நோய்கள் வருகின்றன. எனவே நம் வீட்டை மட்டுமன்றி நம் சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.


நோயால் ஏற்பட்ட இழப்பு


முன்னைய தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் புகையிலை பழக்கத்தால் நோய்வாய் பட்டு இவ்வுலக வாழ்க்கையை இழந்தார். பிளேக் நோயினாலே அயோத்திதாச பண்டிதர் இறந்து போனார். ஆரோக்கிய நலனில் ஏற்பட்ட பிரச்சனையாலே இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவும் மாண்டார். இன்னும் எத்தனையோ தலைவர்கள் தங்களது நோயற்ற வாழ்வின் மீது அக்கறை செலுத்தாமல் நாட்டிற்காக உழைத்தால் இயற்கை எய்தினர். உடல் நலத்தின் மீது அக்கறை செலுத்தும் போது இயற்கையை நீண்ட நாள் அனுபவிக்கும் பாக்கியம் நமக்கு கிடைக்கும். நோயற்ற வாழ்வை விட குறைவற்ற செல்வம் ஏதும் இல்லை.


முடிவுரை 


நீரும் காற்றும் ஒளியும் மனிதனின் புறத்தைத் தூய்மை செய்கின்றன. அன்பு, அருள், பொறுமை முதலிய நற்பண்புகள் உள்ளுறுப்புகளைக் காக்கும் அமிழ்தாயுள்ளன. அகத்தூய்மையும் புறத்தூய்மையும் ஒருவனுக்கு நல்லுடல் வழங்குகின்றன. நோயற்ற வாழ்விற்கு வழி வகுக்கின்றன.


உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே 


என்று திருமூலர் கூறுவது போல வைகறையில் துயிலெழுந்து, காலைக் கடன் முடித்து, நறுநீராடி, கடவுளை நினைந்துருகிப் பின் பொருந்திய உணவு கொண்டு உடலைப் பேணி வருவோமாயின் நோயற்ற வாழ்வெனும் குறைவற்ற செல்வம் பெற்று இன்புற்று வாழலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை