அண்மை

ஊனம் - சிறுகதை

 

ஊனம் - சிறுகதை

கதையை ஒலி வடிவில் கேட்க

 

அது ஒரு வியாழக்கிழமை. அந்த கடைத் தெருவிற்கு கிழமைகள் ஒரு பொருட்டே அல்ல. சோவென மழைக் கொட்டினாலும் ஈ மொய்ப்பது போலே கூட்டம் இருக்கும். அதற்கு காரணம் நகரத்தின் முக்கியமான கடைகள் அனைத்துமே அந்த தெருவில் தான். வேலை இல்லாத அனைவருக்கும் வேலை வாய்ப்புத் தருவது அந்த தெருவின் சுபாவம். ஐம்பது ரூபாய் முதல் போட்டு ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பது அங்கு சர்வ சாதாரணம். திடீரென முளைக்கும் கடைகள் கூட நாளொன்றுக்கு ஆயிரமாவது சம்பாதிக்காமல் கடையை கட்டாது. இந்த திடீர் கடைகளுக்கு சில விதிமுறை உண்டு. இடமும் நேரமும் தவறினால் அன்றைய நாளே நட்டம் போல் தான். ஆனாலும் இத்தனை பரபரப்பான தெருவிலும் விதியும் முதலும் இல்லாத தொழில் அங்கே உண்டு. யாசகம். அந்த தெருவிற்கு வியாழக்கிழமை பிச்சைக் காரர்களின் நாள். தலைக்கு ஒரு ரூபாய் வைத்தாலும் ஆயிரம் ரூபாய் நிச்சயம். தட்டில் ஆயிரம் சேராமல் பார்த்து கொள்வது தான் அங்கு தந்திரம். சில்லறைகள் கைகளுக்குள் சிலிர்த்து கொண்டிருக்கும் சத்தம் எல்லா கடை வாசல்களிலும் கேட்டது. யாசகர்கள் இப்போதெல்லாம் பேசுவதையுமே நிறுத்திக் கொண்டார்கள் போலும். ஈ காந்தம் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டு ஒலி எழுப்புவது போல் சில்லறை குலுங்கல் ஒலியே அந்த இனக்குழுவின் அடையாளமாகிவிட்டது. இடுப்பில் ஒரு குழந்தை, தோளில் அழுக்கு மூட்டை, துவைக்காத மேலாடை, கழுவாத முகம், செருப்பற்ற கால் அல்லது போலி சாமியார் வேஷம் என்ற இவர்களது எளிய முதலீடு நல்ல லாபத்தைத் தான் தருகிறது. நாம் இந்த குருட்டு இசைக்குழுவை நம்புவது சரிதானா? அல்லது இவர்களையும் அவர்களைப்போல் கையில் தட்டைக் கொடுத்து அனுப்பிப் பார்போமா?


நடுத்தர அளவிலான தகர உண்டியலுடன் வேண்டா வெறுப்போடு இவ்வாறு சிந்தித்தபடியே தெருவையும் கவனித்து நின்றான் மேகலா இசைக்குழு நிர்வாகி காளிதாஸ்.


'சார் பாட ஆரம்பிக்லாங்களா?' டாட்டா ஏஸ் வண்டியின் உள்ளிருந்து வந்தது ஒரு பெண் குரல். 


'இரும்மா இங்க ஏற்கனவே ஒரு பெரிய சாமியார் குரூப்பே இறங்கிருக்கு.. நாம இப்போ ஆரம்பிச்சா சரிவராது.. வெயிட் பண்ணு'


மேகலா இசைக்குழு. இன்றைக்குத் தான் தொடங்கி உள்ளார்கள். மொத்தம் 5 பேர். டிரைவரையும் சேர்த்தால் ஆறு பேர். குழு என்று பார்த்தால் ஐந்து பேர் தான். நிர்வாகி காளிதாஸ் மட்டுமே பார்வை உள்ளவர். மீதம் நால்வருமே குருடர்கள். பின்னணி இசைக்கு ஆட்கள் இல்லை. பிளேயரில் ஓடும் இசைக்கேற்ப பாட வேண்டும். பிளேயர் ஸ்பீக்கர் ஆகியவற்றை டிரைவரே தயார் செய்வதாய் கூறிவிட்டார். உண்டியலைக் குலுக்கிக் கொண்டே ஒவ்வொரு கடையாக ஏறி இறங்குவது தான் காளிதாஸின் வேலை. ஒருநாளைக்கு ஒரு தெரு வீதம் திட்டம் போட்டு வைத்து இருந்தார்கள். அதுபடி முதல்நாளான இன்றைக்கு கடைத்தெரு.


காளிதாஸ் சரியான நேரத்திற்காக காத்து கொண்டிருந்தான். ஆனால் அதே சமயம் ஒரு மேளக்காரன் அந்த தெருவினுள் நுழைந்து விட்டான்.


அவன் தட்டி எழுப்பும் நாராசமான இசையைக் கேட்கும் எந்த கடைக்காரரும் வாடிக்கையாளருக்கு முன் அவனைத் தான் அனுப்பப் பார்ப்பார்கள். 'நிக்காத எடத்த காலி பண்ணு' அவனுக்கு பழகிய வாசகம். இருந்தும் 'டின் டனாக்க டிக்' ஒரு கடைக்கு அவன் செலவிடும் ஓசை இவ்வளவு தான். லாபம் 1 முதல் பத்து வரை.


வழக்கமான யாசக பெருமானார்கள் வந்து சென்றுவிட்டார்கள். காளிதாஸ் ஏற்கனவே வங்கிக்கு சென்று வாங்கி வைத்திருந்த நூறு ஒரு ரூபாய் நாணயங்களை பிரித்து உண்டியலில் கொட்டினான்.


'ஜல் ஜல் ஜல்' அழுத்தமான அந்த சில்லறைகளின் குலுங்கல் தகர உண்டியலில் இருந்து விகாரமாய் எதிரொலித்து மக்கள் அனைவரின் கவனத்தையும் ஒருகணம் அவன் பக்கம் ஈர்த்தது.


இசைத் தொடங்கியது. பாடலும் ஆரம்பித்தது. நால்வரும் பழைய பாட்டிலிருந்து புது பாட்டிற்கு வருவோமென்று ஏற்கனவே பேசி வைத்திருந்தார்கள்.


முதல் நாள் முதல் பாடல் என்பதால் சென்டிமென்டாக சாமி பாடலில் இருந்து துவங்கினார்கள்


'அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி' - கல்வியா? செல்வமா? வீரமா? படத்தில் ஊமை சிவாஜி பேச்சு வந்ததும் பாடும் முதல் பாட்டு. ஒரு ஊனன் ஆனாலும் என்னாலும் முடியும் என்ற உள்ளக்குமுறல் அந்த பாட்டில் ஊடுருவி நிற்கும். அதனாலே அந்தப் பாடலைப் பாடினார்கள். அடுத்து சில எம்.ஜி.யாரின் தத்துவப்பாடல்கள், சிவாஜி டூயட், வாலியின் கிளு கிளு பாடல்கள், வைரமுத்து, நா.முத்துகுமார், பா.விஜய், மதன் கார்க்கி என இந்த பாடல் பரிணாம வளர்ச்சி தற்கால பாடல்களில் வந்து முடிந்தது. மதியத்தையும் தொட்டது. காளிதாசும் வந்தார்.


"போதும் முடிச்சுகலாம்.. எல்லாரும் ரொம்ப நல்லா பாடினீங்க.. உங்கள பாராட்டி நூறு இருநூறுனு நிறைய பேர் சன்மானம் தந்து இருக்காங்க.. அதையெல்லாம் இந்த கவர்ல வச்சிருக்கேன். எடுத்துக்கோங்க.. டிரைவர்க்கு செட்டில் பண்ணிட்டேன்.. அவர் உங்கள உங்க வீட்லையே விட்டுடுவார்.. நிறைய சில்லறை சேர்ந்திருக்கு.. அதை பணமா மாத்திட்டு வர நேரமாகும்.. நீங்க புறப்படுங்க.. நாளை பஸ் ஸ்டாண்டுக்கே போய்டுவோம்..' காளிதாஸ் கூற அந்த நான்கு பார்வையற்றோரின் உள்ளமும் தன் நன்றி உணர்வை முகத்தில் பிரதிபலித்தது.


காளிதாஸ் புறப்பட்டார். வண்டியும் புறப்பட்டது.


சிறிது நேரத்திற்கு பின், நான்கு அந்தகர்களில் ஒருவன் மட்டும் தான் அமுக்கி வைத்திருந்த கருவிழிகளை லேசாக பார்வைக்கு கொண்டுவந்தான்.


கண் பார்வை அற்றவன் போல் நடித்து யாருக்கும் தெரியாமல் மொத்த பணத்தையும் சுருட்டி கொண்டு ஓடுவது தான் அவனது திட்டமாய் இருந்தது. ஆனால் இப்போதோ இம்மூவரின் வெகுமதி தான் அவனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி.


சத்தமே வராதபடி பொறுமையாக அந்த கவரை எடுத்தான். மிகவும் சாமர்த்தியமாக கவரின் உள்ளே இருப்பதை உரசாதபடி கவரைக் குறுக்கி வெளியே எடுத்தான். 


காகிதம். ஒரு மொத்தமான காகித மடிப்பு. அதற்குள் பணம் கட்டாய் இருக்கலாம். ஆனால் அதற்கு இடையில் நீலமும் பச்சையும் கலந்ததுமான ஒரு தாள் தான் தெரிந்தது. அதையும் வெளியை எடுத்த போது தான் அவனது முகமே மாறிப் போனது.


அந்த ஐம்பது ரூபாய் நோட்டு, அவனைப் போல் அல்லாமல் உண்மையிலே ஊனமாய் இருந்தது.


தீசன்

8 கருத்துகள்

  1. Semma story keep it up my dear friend 😍

    பதிலளிநீக்கு
  2. டின் டனாக்கு டின்!!

    பதிலளிநீக்கு
புதியது பழையவை