அண்மை

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

 

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.’ எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது. எழுதப்பட்டு ஏறத்தாழ முப்பத்தைந்தாண்டுகளைக் கடந்த பின்னரும் இன்றைய சூழலுக்கும் பொருந்துவதான வாசிப்பனுபவத்தைத் தருவதன் மூலம் இந்த நாவல் ஒரு கலைப்படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது.


நாவல் பற்றி ஜெயகாந்தன்


'ஒரு மனிதன்' என்ற தலைப்பில் ஒரு பெரிய கதையை என்னுள் நான் காதலித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கதையின் ஆரம்பமும் முடிவும், இடையில் நடப்பனவும் மிகத் தெளிவாக என்னுள் அடிக்கடி முகிழ்த்து சரம்சரமாய்ப் பெருகும் இந்தப் புவனம் முழுவதும் மலர்க்காடாய்த் தெரியும். ஒவ்வொரு இதழும் மிகத் தெளிவாகத் தென்படும். பிறகு எல்லாம் கனவு போல் மறந்துபோகும். கண்ட கனவை நினைவு கூர்வதற்காகக் கண்களை மூட மறுபடியும் ஒரு கனவு தொடரும்.


இப்படி ஒரு தன்னிலை மயக்கமாக, சுயானுபூதியாக இந்தக் கதை இன்னும் நிறைய என்னோடு இருக்கிறது. பின்னர் இந்தக் கதைக்கு 'ஒரு வீடு' என்ற தலைப்புக் கொடுக்கலாமா? என்று யோசித்து, 'ஒரு உலகம்' என்று மாற்றி, கடைசியில் எல்லாவற்றையும் சேர்த்து என் கனவு மாதிரியே எல்லாவற்றோடும் தொடர்பு கொண்ட ஒரு முழுமையான தலைப்பு மிகப் பொருத்தமாகக் கிடைத்தது. வீட்டில் மனிதரும் உண்டு. மனிதரில் உலகமும் உண்டு. இந்த மூன்றும் எப்படி வேண்டுமானாலும் ஒன்றோடொன்று புகுந்து கொள்ளும், அறம், பொருள், இன்பம் மாதிரி; பக்தி, ரசனை, படைப்பு மாதிரி.


கருத்துரையிடுக

புதியது பழையவை