அண்மை

ஜூடாஸ் இஸ்கேரியாட்டின் முகம்

 

ஜூடாஸ் இஸ்கேரியாட்டின் முகம்

நான் சிறுபிள்ளையாக இருந்த போது ஒரு வயதான பாதிரியார் இந்த கதையை என்னிடம் கூறினார். யாரிடமிருந்து இந்த கதை தோன்றியிருக்கும் என்பதை நினைக்கையில் இப்போது கூட எனக்கு வியப்பாக உள்ளது. அதை என்னிடம் கண்டிபிடித்து கூறவும் யாரும் இல்லை.


பல நூற்றாண்டுகளுக்கு முன், ஒரு தலைசிறந்த ஓவியர் சிசிலியன் நகரத்தில் இருக்கும் ஒரு தேவாலயத்தில் சுவரோவியம் வரைவதற்காக பணியமர்த்தப்பட்டார். அவர் வரையவிருக்கும் சுவரோவிய தலைப்பு 'இயேசுவின் வாழ்க்கை'. பல ஆண்டுகள் விடாமுயற்சியுடன் கூடிய கடின உழைப்பால் ஓவியம் நிறைவடைந்தது, ஆனால் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களைத் தவிர. அவை, குழந்தை இயேசு மற்றும் ஜூடாஸ் இஸ்கேரியாட். ஓவியர் இந்த இரண்டு பாத்திரங்களுக்கான உருவங்களையும் தேடிக் கொண்டே இருந்தார்.


ஒருநாள் சிசிலியன் நகரத்தின் மிகப் பழமையான வீதியில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது ஓவியர் சில குழுந்தைகள் அந்த தெரு வீதியில் விளையாடுவதைக் கண்டார். அவர்களில் பன்னிரண்டு வயதுள்ள அந்த சிறுவனின் முகம் ஓவியரின் இதயத்தை தட்டி எழுப்பியது.


அது தான் அந்த முகம். தேவதைகளுக்கு நிகரான முகம். சற்றே அழுக்குடன் இருந்தாலும் ஓவியர் எதிர்பார்த்து கொண்டிருந்த முகம் இது தான். ஓவியர் தன்னோடு அந்த சிறுவனை வீட்டுக்கு அழைத்து சென்றார். நாளுக்கு நாள் அந்த சிறுவன் குழந்தை இயேசுவின் முகம் முழுமையாக வரையப்படும் வரையிலும் பொறுமையாக அமர்ந்திருந்தான். ஆனால் இன்னும் அந்த ஓவியர் 'ஜூடாஸ் இஸ்கேரியாட்' பாத்திரத்திற்கான முன்மாதிரியை கண்டுபிடிக்கவில்லை. வருடங்கள் உருண்டோட, ஓவியருக்கு தனது தலைசிறந்த படைப்பு முடிக்கப்படாமல் போய்விடுமோ என்ற பயம் ஏற்பட்டது. இருந்தாலும் தேடுவதை தொடர்ந்தார்.


'இயேசுவின் வாழ்க்கை' எனும் இந்த தலை சிறந்த ஓவியம் முடிவடையாமல் இருக்கும் கதை நகரமெங்கும் பரவிற்று. பல ஆண்கள் அந்த கொடும்பாவ உருவத்திற்கு முன்மாதிரியாக ஆசைப்பட்டனர். ஜூடாஸிற்கு உருவம் கொடுக்க பலருக்கு வாய்ப்புத் தரப்பட்டது. இருந்தும் எல்லாமே வீண். ஓவியர் எதிர்பார்த்த விதத்திலான முகவெட்டு வந்த யாருக்கும் அமையவில்லை. அந்த ஆணின் முகம் வாழ்க்கை துயரால் திசை திருப்பப்பட்டதாய் இருக்க வேண்டும். பேராசையினாலும் பெருங்காமத்தினாலும் அவன் அமுக்கப்பட்டவனாய் தோன்ற வேண்டும். 


ஒரு நாள் மதியம். எப்போதும் போல ஓவியர் மதுக்கடையில் ஒருகை மது கிண்ணத்தோடு அமர்ந்திருந்தார். அப்போது மிகவும் மெலிந்த மற்றும் சிதைந்த தோற்றத்தினை உடைய ஒருவன் தள்ளாடி வந்து தரையில் வீழ்ந்தான். 'மது கொடு…மது' அவன் கெஞ்சினான். ஓவியர் அவனைத் தூக்கி அவனது முகத்தினை கவனித்தார். மனிதகுலத்தின் ஒட்டுமொத்த பாவத்தையும் அவன் முகம் தாங்கிக் கொண்டிருந்தது. ஓவியர் மகிழ்ச்சி அடைந்தார். அத்தகைய ஊதாரித்தனமான பாதங்களுக்கு அவர் உதவி செய்தார்.


'என்னோடு வா' ஓவியர் கூறினார். 'உனக்கு மது, உணவு மற்றும் உடை என அனைத்தும் தருகிறேன்'. 


இறுதியாக ஜூடாஸ் உருவமும் ஓவியருக்கு கிட்டியது. பல நாட்கள் மற்றும் அதன் பகுதியான பல இரவுகள் ஓவியர் தீராத கலை தாகத்தோடு தன்னுடைய மகத்தான ஓவியப்படைப்பை முடிக்க உழைத்தார். வேலைத் தொடர்கையில், அந்த இளைஞனிடம் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டதாய் தோன்றியது. அவனது இந்த திடீர் மாற்றம் அவனுடைய சிவந்த கண்களை மேலும் திகைப்படைய செய்ததாய் தோன்றிற்று.


ஒரு நாள், ஓவியர் அவனது திகைப்பான மனக்கிளர்ச்சியை நன்கு உணர்ந்தார். அதனால் தன் பணியை சிறிது தள்ளி வைத்தார்.


'மகனே! நான் உனக்கு உதவி செய்யவே விரும்புகிறேன். உனக்கு என்ன இடைஞ்சல் தருகிறது என்று கூறு?'


இதைக் கேட்ட கணமே அந்த இளைஞன் தனது கைகளுக்குள் முகத்தைப் புதைத்து அழத் தொடங்கினான். சிறிது நேரத்திற்கு பின் தன் கண்ணீர் வடியும் கெஞ்சும் கண்களால் ஓவியரின் முகத்தை கவனித்தான்.


"உங்களுக்கு என்னை ஞாபகம் இல்லையா? பல வருடங்களுக்கு முன் குழந்தை இயேசுவுக்கு முன் மாதிரியாக வந்தவன் நான் தான்"


போனி சேம்பர்லின்


தமிழில் - தீசன்

2 கருத்துகள்

  1. நல்ல கதை... நல்ல சம்பவம்.. மனங்கவர்ந்த கருத்து.

    பதிலளிநீக்கு
  2. நல்ல நடை. கதையோட்டம் நம்மை ஈர்க்கிறது.

    ஒரே மனிதன் தன் நடத்தையினால் இயேசுவாகவும் இருக்கிறான். ஜுடாஸ் ஆகவும் மாறுகிறான்.

    காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    புலமைபித்தன் சொல்வாரே,
    "நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே" என்று.

    அப்படி இருக்குமோ?

    பதிலளிநீக்கு
புதியது பழையவை