அண்மை

பிரபஞ்சத்து பிள்ளை மகாத்மா காந்தி

 

பிரபஞ்சத்து பிள்ளை மகாத்மா காந்தி

மதங்களில் கடவுள் இருக்கிறார். கடவுள்களுக்கு மதம் இல்லை.


ஆன்மீகம் எல்லா மதங்களுக்கும் பொதுவாக நிற்பது. இந்து மதத்திற்கு மட்டும் உரிய வார்த்தை அல்ல அது. 


ஈசன் எல்லா உயிர்களிலும் உறைந்து நிற்கிறார். விஷ்ணு எல்லாமும் ஆக இருக்கிறார் என்பது இந்து தெய்வம் தான் இந்த அண்ட சராசரமே என்பது அல்ல. அங்கே 'கடவுள்' என்ற திருநாமம் மறைமுகமாக உருவகப்படுத்தப்படுகிறது.


கடவுள்களாக உயர்ந்து நிற்பது அவரவரின் தனிப்பட்ட வாழ்வை பொருத்து அமைகிறது. 


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்


அப்போது கூட வள்ளுவரின் பார்வை 'வையத்துள்' என்று ஓங்கி நிற்பதை கவனிக்க.


ஆன்மீகம் என்பது பரந்ததாக இருக்க வேண்டுமே அன்றி குறுகிய எண்ணத்தோடு மதங்களில் அடங்கிவிடக் கூடாது.


இந்துமதம் ஒரு மகா சமுத்திரம் ஆனாலும் அதன் அருகிலேயே சில சிறிய கிளை கடல்களும் தோன்றி இருப்பது நினைவில் இருக்க வேண்டும். நதிகள் கடலில் சங்கமித்தாலும் கடல்கள் பூமியில் இருப்பதை நினைத்து கொள்க.


எல்லா மதங்களும் ஆன்மீகம் என்ற மகரந்தத்தில் அமர விரும்பும் வண்டுகளாய் ரீங்காரமிடுகையில் யாரது ரீங்காரம் அபாரம் என்னும் போட்டி மலரை துன்பமடைய செய்யும். 


கடவுள்களில் உயர்ந்தது என்று ஏதும் இல்லை. "இறைவன்" என்ற கொள்கையே மகத்துவம் வாய்ந்தது. அதனுள் வறியோர்களுக்கு உதவுதல், நேர்மையாய் நடத்தல், பரந்த எண்ணத்தோடு செயல்படுதல், எல்லா உயிர்களையும் நேசித்தல் என்ற எல்லா நற்குணங்களும் அடங்கிவிடும்.


இறைவனை இல்லையென்று கூறுபவரும் இத்தகைய நற்குணங்களை பெற்று வாழ்வாராயின் அவரை தவிர்க்காமல் வாழ்வது நலத்தை நல்கும்.


"என்னை நான் ஒரு தேசியவாதி என்று கூறிக் கொள்கிறேன். ஆனால் எனது தேசியம் இந்த பிரபஞ்சம் போல் பெரிதானது" என்கிறார் மகாத்மா காந்தி.


அதாவது அவர் இந்தியர்களை நேசிக்கிறார் எனில் இவ்வுலக மக்கள் அனைவருமே இந்தியர்களே ஆவர். ஏன்! இந்த உலக உயிர்கள் அனைத்துமே இந்தியர்களாகவே அவருக்கு தெரியும்.


இதன் விளக்கம், சமத்துவம். அதும் எல்லா உயிர்களிடத்துமான மகா சமத்துவம். அதுவே ஆன்மீகம்.


ஆன்மீகம் யாரையும் வெறுக்கக் கற்றுதருவது இல்லை. சினம் பொறுக்க கற்றுத் தருகிறது. பொறி அடக்கக் கற்றுத் தருகிறது.


இந்த உலக மக்கள் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாய் மாறி போவதே காந்தியின் கனவாக இருந்திருக்கும். இந்து முஸ்லீம் பிரிவினையை அவர் வெறுத்தார். இந்துகளுக்குள் தாழ்த்தபட்டவன், பிற்படுத்தப்பட்டவன், உயர்ந்தவன் என்ற பிரிவினை பேதம் உருவாகிவிடுமோ என்று பயந்து அவற்றையும் எதிர்த்தார். இல்லற மனிதர்கள் தங்களுக்கென உருவாக்கிக் கொள்ளும் நிதர்சனம் துறவற புத்தி கொண்ட காந்திக்கு தவறாக தோன்றி இருக்கலாம் ஆனால் காந்திக்கு தோன்றிய ஒற்றுமை எண்ணம் அவருக்கு பின் தோன்றிய எந்த தேசியத் தலைவருக்கும் வாய்க்கவில்லை.


இந்த உலகத்தில் சாத்தியத்திற்கு அரிதான இரண்டு கொள்கைகள் உண்டு. அவைகளில் ஒன்று எல்லா உயிர்களையும் சமமாக பாவிக்கும் காந்தியம்/ஜீவகாருண்யம் மற்றொன்று எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்று எண்ணும் பொதுவுடைமை. 


இந்த இரண்டு கொள்கைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தே திரு.வி.கல்யாணசுந்தரனார் பொருளும் அருளும் என்ற புத்தகத்தைப் படைத்தார்.


ஆனால் இன்றைய விசித்திரத்தை பாருங்களேன். பொதுவுடைமையை நேசிக்கும் பெரும்பாலானோரின் எதிரிகளில் ஒருவர் காந்தி. 


"நல்லதைக் கூறும் அனைவரையும் அரவணைக்கவும், ஒழுக்கமற்ற தீயோர் அனைவரிடம் இருந்தும் விலகி வருவதையும் அறிஞன் தவறாமல் செய்கிறான்" என்ற ஆன்மீகக் கருத்து இன்று தன்னை ஆன்மீகவாதி என்று கூறுவோரிடையேயும் இருப்பதில்லை. ஏன்? ஆன்மீகம் பரந்ததாய் இல்லை.


அவர்கள் கிணற்றுத் தவளைகளாய் மதங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மதங்களில் அடங்கியவன் ஆன்மீகம் தரும் நல்லொழுக்கத்தை பெற வழியே இல்லை.


ஆங்கிலேயரை காந்தி எதிரியாய் எண்ணவில்லை ஆனாலும் எதிர்த்தார். மத பேய் அவருக்கு பிடிக்கவில்லை இருந்தும் எல்லா மதங்களையும் அவர் நேசித்தார். அவர் எல்லாரையும் ஒன்றாகவே பாவித்தார். அவரது சமத்துவம் எத்தகையதாய் இருந்தது என்பதை அவரது சொற்களின் மூலமே என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. "எனது தேசியம் இந்த பிரபஞ்சம் போன்று பெரிதானது" அத்தகைய சமத்துவ குணத்தை பெற நானும் விரும்புகிறேன். இதை விரும்புபவனே உண்மையான ஆன்மீகவாதியாக இருக்க முடியும்.


இருந்தும் பலரால் காந்தியை புரிந்து கொள்ள முடியாததன் காரணம் என்ன தெரியுமா?


ஒரு வீட்டின் பிள்ளை இந்த பிரபஞ்சத்து பிள்ளையை பற்றி எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்!


ஈசதாசன்

4 கருத்துகள்

  1. கீரையை (spinach) தின்றதும் புது பலம் பெறும் Popeye போல.. எந்த நூலை படித்தாரோ ஈசதாசன்.. எழுத்தில் மெருகேற்றி வந்திருக்கிறார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய புதிய சிந்தனைகளைத் தரும் மிகப் பழைய புத்தகங்கள் தான், குறளும் கீதையும்

      நீக்கு
  2. don't write about Gandhi. he ruined our indian culture and hindu dharma

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய பெயரைக் குறிப்பிட்டு இருந்தால் நான் இன்னும் மகிழ்வடைந்திருப்பேன்.

      காந்தியோ காந்தியமோ இந்திய கலாச்சாரத்தை கெடுத்திருப்பதாய் இனி வருங்காலங்களில் நானறிந்தால் அன்றே எனக்கு இன்னார் சொன்னார் என்று தென்றல் இதழிலே பதிவிடலாம் பாருங்கள்

      நீக்கு
புதியது பழையவை