அண்மை

அக்கினிப் பிரவேசம் - விமர்சனம்

 

அக்கினிப் பிரவேசம்

ஜெயகாந்தனைப் பற்றி அதிகம் விவரிக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். இலக்கியத்துறையிலே மிகவும் உயர்ந்த விருதான ஞானபீட விருதினை அகிலனுக்கு அடுத்து பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இலக்கியத்துறையில் தவிர்க்க முடியாதவர். அவரின் அக்கினிப் பிரவேசம் என்னும் இந்த சிறுகதை, வெளிவந்த காலத்தில் தீயாய் இருந்து இன்றும் தனலாய் இருக்கிறதென்றால் அக்கதையின் இலக்கியத் தரத்தை ஆராய்வது நம் கடமை. அக்கினிப் பிரவேசம் என்றொரு சிறுகதை இருக்கிறதென்றாவது கேள்விப்படாத இலக்கிய காதலர்கள் இருக்கவே முடியாது. இந்த அக்கினிப் பிரவேசக் கதைதான் ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது வாங்கித் தந்தது என்னும் வரலாற்றை இறுதியில் தருகிறேன். இதிகாசத்திற்கு எப்படி இராமாயணம், மகாபாரதமோ சிறுகதைக்கு அக்கினிப் பிரவேசம். நிச்சயம் செவியுற்றாவது இருப்போம். 1966ல் ஆனந்தவிகடனில் வெளியான இக்கதை இன்னமும் சிறந்த சிறுகதைப் பட்டியலை விட்டு இறங்கமாட்டேன் என்கிறதென்றால் அதை ஆயத்தானே வேண்டும்.


கதை மதியத்தைக் கூறி மாலை வேளையில் துவங்குகிறது. ஆரம்பித்தில் இருந்து கதை இறுதிவரை ஒரு கதாபாத்திரத்தின் பெயரையும் முதுகில் சுமக்கவில்லை என்பது ஆச்சரியம். அக இலக்கியங்களின் இலக்கணத்தை ஒரு சிறுகதை கொண்டிருப்பது ஆச்சரியம் தானே. சமீபத்தில் நமது அக இலக்கியங்கள் தலைவன் தலைவி பெயரை குறிப்பிடாது வாழ்வது போலே ஜப்பானிய இலக்கியத்திலும் அத்தகைய பண்புளதாய் கானகநாடர் கூறினார்கள். குறிப்பிடப்பட வேண்டியவர். பின்னர் அவரைப் பற்றி விரிவாய் பேசுவோம்.


கதையின் அடுத்த பேராச்சிரியம், 'பேருந்திற்காக காத்து கொண்டிருக்கும் அச்சிறுமி ஒரு கல்லூரி மாணவி'


ஜெயகாந்தன் கல்லூரி மாணவியை 'சிறுமி' என்று அறிமுகப்படுத்துவதும் கதையின் போக்கில் இடையிடையே அவள் குழந்தைத் தனமாக நடந்து கொள்வதைக் காட்டுவதும், அவளைக் குழந்தைப் போல் பாவிக்கும் ஒரு பெரியவளின் செயலும் நமக்கு, 'இவள் உலகம் அறியாத கிணற்றுத் தவளை'யாகத் தான் இருக்க வேணுமென்ற மெய்பாட்டினை விளங்கச்செய்கிறது.


ஆசிரியர் இக்கதையில் சொல்லாமல் சொல்லும் 'பிராமண பாஷா' அவள் யார்?, அவளின் பின்புலம் என்ன?, பின் வீட்டு மாமியுமா?' என்ற எல்லா கேள்விக்கும் பதிலளிக்கிறது.


மழைப்பெய்யத் தொடங்கியது. பேருந்து நிறுத்தத்தில் தனிமையில் நிற்கும் சிறுமியை ஒரு கார் கவனிக்கிறது. அவளின் அவசியத்தை புரிந்த அக்கா(ர)ர் அவளின் முன் வந்து நிற்கிறது. வற்புறுத்தலின் பேரில் இவளும் காரினுள் நுழைகிறாள்.


"அந்தக் கதவின் வழியே மழை நீர் உள்ளே சாரலாய் வீசுவதைப் பார்த்து அவள் அந்த கதவை மூடும்போது, அவள் கையின்மேல் அவனது கை அவசரமாக விழுந்து பதனமாக அழுந்துகையில், அவள் பதறிப் போய்க் கையை எடுத்துக் கொள்கிறாள். அவன் முகத்தை அவள் ஏறிட்டுப் பார்க்கிறாள். அவன் தான் என்னமாய் அழகொழுகச் சிரிக்கிறான்."


அப்போதாவது அவள் சுதாரித்திருக்க வேண்டாமா! என்ன செய்ய ஆசிரியர் தான் அவளை சிறுமி என்று கூறிவிட்டாரே.


ஒரு கட்டத்தில் கார் திசை மாறி போகத்தொடங்குகிறது. 


"இதென்ன கார் இந்தத் தெருவில் போகிறது?’


'ஓ! எங்க வீடு அங்கே இருக்கு' என்று அவள் உதடுகள் மெதுவாக முனகி அசைகின்றன.


'இருக்கட்டுமே, யார் இல்லேன்னா...'' என்று அவனும் முனகிக்கொண்டே அவளைப் பார்த்துச் சிரிக்கிறான்."


இதிற்கிடையில் சிறுமி நினைப்பவற்றை கோர்த்து பார்க்கும் போதெல்லாம் தான் 'இவள் சிறுமி தானா?' என்னும் சந்தேகம் வருகிறது.


"இன்னிக்கின்னு போய் இந்தத் தரித்திரம் பிடிச்ச தாவணியைப் போட்டுக்கொண்டு வந்திருக்கேனே" என்று அவள் தனக்குள் போரிடுதலே அவனுக்கு தான் அழகாக புலப்படவில்லையோ எனும் எண்ணம் தான். கல்லூரிக்கு வரும் போது வராத இவ்வெண்ணம் தனியே இவனோடு பயணம் செய்யும் போது மட்டும் வந்தால் அதை என்னவென்று கூறலாம்?


ஜெயகாந்தன் அவ்வப்போது இவள் குழந்தை புத்திக் கொண்டவள் என்பதை உணர்த்துகிறார் இருந்தும் அவன் எல்லை மீறுமிடத்தும் குழந்தையாகவே இருந்தாள் என்பதை ஏற்கமுடியவில்லை. கதைப்படி பார்த்தால் அதற்கு அவள் தயாராகிறாள்.


ஒருசமயத்தில் அவனுக்கு மீசை இருந்தால் இன்னும் அழகாய் இருப்பான் என்றும் கூட நினைக்கிறாள். 


கார் ஆள் அரவமற்ற ஓர் இடத்தில் வந்து நிற்கிறது. நல்ல மழை. 


முன்னே ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த அவன் வலியக்க பின்னே அவள் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு கொட்டும் மழையிலும் புகுந்த நனைந்து வருகிறான். பின் அவனிடமிருக்கும் ஒரு சூயிங்கத்தை எடுத்து அவளிடம் தருகிறான்.


என்ன அது?''


''சூயிங்கம்.''


''ஐயே, எனக்கு வேண்டாம்!''


''ட்ரை... யூ வில் லைக் இட்.''


அவள் கையிலிருந்த சாக்லேட்டை அவசர அவசரமாகத் தின்றுவிட்டு, அவன் தருவதை மறுக்க மனமின்றி வாங்கக் கை நீட்டுகிறாள்.


''நோ!'' - அவள் கையில் தர மறுத்து அவள் முகத்தருகே ஏந்தி அவள் உதட்டின் மீது அதைப் பொருத்தி லேசாக நெருடுகிறான்"


கூச்சத்தால் அவளது தலை கவிழ்ந்து கவிழ்ந்து பார்க்கிறது. அவன் மெல்ல மெல்ல இருக்கையில் தன் அருகே நெருங்கி வருகிறான் என்பதை உணருகிறாள்.


அக்கினிப் பிரவேசம்

இப்போது தான் விஷயமே ஆரம்பிக்கிறது. அவன் கேட்கிறான், "உனக்குத் தெரியுமா? இந்தக் கார் இரண்டு வருஷமாக ஒவ்வொரு நாளும் உன் பின்னாடியே அலைஞ்சிண்டு இருக்கு - டு யூ நோ தட்?'' என்ற கேள்வியோடு முகம் நிமிர்த்தி அவன் அவளைப் பார்க்கும்போது, தனக்கு அவன் கிரீடம் சூட்டிவிட்டது மாதிரி அவள் அந்த விநாடியில் மெய்ம்மறந்துபோகிறாள். ''ரியலி..?'' என்று ஆச்சரியமுடன் கேட்கிறாள்.


சிறுமி…? எங்கே அந்த சிறுமி!


"அவனது வெப்பமான சுவாசம் அவளது பிடரியில் லேசாக இழைகிறது; அவனது ரகசியக் குரல் அவளது ஹிருதயத்தை உரசிச் சிலிர்க்கிறது; ''டு யூ லைக் மீ?''- 'என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?’


''ம்'' - விலக இடம் இல்லாமல் அவள் தனக்குள்ளாகவே ஒடுங்குவதைக் கண்டு அவன் மீண்டும் சற்றே விலகுகிறான்."


இவனை இதற்கு முன் இவள் பார்த்ததே இல்லை. இன்று மாலை தான் பார்த்திருக்கிறாள். பார்த்தவுடனே தன்னையே கொடுக்கும் எண்ணம் எந்த பெண்ணுக்காவது ஏற்படுமா? இருப்பினும் அவளுக்கு பயம் இருப்பதை ஆசிரியர் குறிப்பிடாமல் இல்லை. அதாவது அச்சூழ்நிலையை அவள் தவிர்க்க விரும்பவில்லை. புதிதாக இருப்பதால் அது அவளுக்கு பயத்தைத் தருகிறது அவ்வளவு தான். அதனால் ஜெயகாந்தன் இவளைச் சிறுமி என்று குறிப்பிட்டது கதையோடு ஒன்றவில்லை என்பதை இதிலிருத்து விளங்கிக் கொள்ளலாம்.


"இந்த முறை பின்வாங்கப்போவதில்லை என்ற தீர்மானத்தோடு மீண்டும் அவளை அவன் நெருங்கி வருகிறான்.


''மே ஐ கிஸ் யூ?''


அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. நாக்கு புரள மறுக்கிறது. அந்தக் குளிரிலும் முகமெல்லாம் வியர்த்து, தேகம் பதறுகிறது.


திடீரென்று அவள் காதோரத்திலும் கன்னங்களிலும் உதடுகளிலும் தீயால் சுட்டுவிட்டதைப்போல் அவனது கரங்களில் கிடந்த அவள் துடிதுடித்து, ''ப்ளீஸ்... ப்ளீஸ்...'' என்று கதறக் கதற, அவன் அவளை வெறிகொண்டு தழுவித் தழுவி...


அவள் கதறல் மெலிந்து தேய்ந்து அடங்கிப்போகிறது. அவனைப் பழி தீர்ப்பதுபோல் இப்போது அவளது கரங்கள் இவனது கழுத்தை இறுகப் பின்னி இணைந்திருக்கின்றன."


உடலோ மனதோ அவளை படு வேதனையுறச் செய்கிறது. மனதிற்குள்ளே மௌனமாய் அழத் தொடங்குகிறாள். இந்நேரம் அம்மாவின் மடியில் தலை வைத்து அழ வேண்டும் என்று அவளுக்கு தோன்றுகிறது. 


அவள் தன்னை மீறிய ஓர் ஆத்திரத்தில் கீறிச்சிட்டு அழுகைக் குரலில் அலறுகிறாள்: ''என்னை வீட்டிலே கொண்டுபோய் விடப்போறீங்களா... இல்லையா?''


கதையில் சிறுமி இப்போது தான் குரலை உயர்த்துகிறாள். ஆனால் அடுத்த நொடியே அவள் மீண்டும் தன்னையே நொந்து கொள்கிறாள்.


'அவனை நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பிப் பரிதாபமாக அழுதவாறு அவள் கெஞ்சுகிறாள்: ''எங்க அம்மா தேடுவாங்க... என்னைக் கொண்டுபோய் வீட்டிலே விட்டுட்டா, உங்களுக்குக் கோடிப் புண்ணியம்'' என்று வெளியே கூறினாலும், மனதிற்குள் 'என் புத்தியைச் செருப்பால் அடிக்கணும். நான் இப்படி வந்திருக்கவே கூடாது. ஐயோ என்னென்னவோ ஆயிடுத்தே’ என்று நினைத்துக் கொள்கிறாள்.


இவ்வாறு நடக்குமென்று அவளுக்கு தெரியவில்லை. 'பார்க்கவும் நல்லவராகத் தான் தெரிகிறார்' என்று அவள் முன்பு நினைத்துக் கொண்டது, அவள் அவனை பார்த்த கணத்திலே அவளுக்கு அவன் மீதான நல்லதொரு அபிப்பிராயமும் ஒருகுட்டி அவாவும் ஏற்பட்டதை கூறும்.


காரில் உள் நுழையும் போதே அவனது விரல் இவளது கையை வேண்டுமென்று உரசியபோதே சுதாரித்திருக்கலாம்.


மிட்டாயை உதட்டில் வைத்த போதாவது ஒரு மூன்றாம் நபர் இத்தனை அன்யோன்யமாய் ஏன் பழகுகிறார், என்பதை சிந்தித்திருக்கலாம்.


இதையெல்லாம் விட, கார் வழிமாறி யாரும் இல்லாத ஒரு சந்திற்குள் நுழையும் போதாவது இவள், 'நிறுத்துடா கார' என்று கூச்சல் போட்டிருக்கலாம் அல்லவா!


அவனுடனான கார் பயணம் அவளுக்கு இன்பம் அளிக்கமால் இல்லை! அதை அவள் விரும்பினால் என்பதில் ஐயமில்லை. ஆனால் தன் கற்பே பறிபோகும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தான் உண்மை. 


அவன் அவளை வீட்டில் விடுகிறான். போனவன் சும்மா போகாமல் பண்ணியதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டு போய்விட்டான். அவளும் நடந்ததை அம்மாவிடம் கூறி அழுகிறாள்.


"அம்மாவின் பின்னே சமையலறையில் அடுப்பின் வாய்க்குள் தீச்சுவாலைகள் சுழன்றெரிய கங்குகள் கனன்றுகொண்டிருந்தன.


'அப்படியே ஒரு முறம் நெருப்பை அள்ளி வந்து இவள் தலையில் கொட்டினால் என்ன’ என்று தோன்றிற்று."


உணர்ச்சிகள் எல்லையற்றதாகிறது. தாய்க்கு தன் மகளை கொல்லலாமா? என்றும் கூடத் தோன்றச் செய்கிறது.


அக்கினிப் பிரவேசம்

'என் தலையெழுத்தே’ என்று பெருமூச்செறிந்தவாறு, இவளைக் கோபிப்பதிலோ தண்டிப்பதிலோ, இதற்குப் பரிகாரம் காண முடியாது என்று ஆழமாய் உணர்ந்து, அவளைக் கைப்பிடியில் இழுத்துக்கொண்டு, அரிக்கேன் விளக்குடன் பாத்ரூமை நோக்கி நடந்தாள்.


அவளை கழுவிவிட்டால் சுத்தமாகிவிடுவாள் என்ற எண்ணம் தாய்க்கு. 


"குளிரில் நடுங்குகிறவள் மாதிரி மார்பின் மீது குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு கூனிக் குறுகி நின்றிருந்தாள் அவள். கண்களை இறுக மூடிக்கொண்டு சிலை மாதிரி நிற்கும் மகளிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவளது ஆடைகளையெல்லாம் தானே களைந்தாள் அம்மா."


விளையாட்டாகக் கர்ணனை பெற்றெடுத்த குந்தி சூரிய தேவனால் மீண்டும் கன்னி நிலையை எய்தியது போலே தன் மகளும் தண்ணீரில் நனைந்தால் கன்னியாகி கலங்கமற்று விடுவாள் என்று நினைத்துக் கொண்டு,


''நீ சுத்தமாயிட்டேடி... உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி... நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே. நீ பளிங்குடீ, பளிங்கு. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ? அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு. என்னடீ அப்படிப் பாக்கறே? நான் சொல்றது சத்யம். நீ சுத்தமாயிட்டே... ஆமா - தெருவிலே நடந்துவரும்போது எத்தனை தடவை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம். அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம்? கழுவிட்டு பூஜை அறைக்குக்கூடப் போறோமே. சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறார். எல்லாம் மனசுதான்டி…"


என்று மகளுக்கு ஆறுதல் கூறும் தாய் அகலிகையோடு தன் மகளை ஒப்பீடு செய்கிறாள். இராமனது பாதம் அகலிகை சுத்தமாக இருந்ததால் தான் அவள் மீது படவே செய்தது என்றும் உன் மீது குற்றமில்லை என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறாள்.


தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டிருக்கும் போது சிறுமி சூயிங்கத்தை மென்று கொண்டிருப்பதை அம்மாக்காரி பார்க்கிறாள்.


''அதென்ன வாயிலே சவக் சவக்குனு மெல்லறே?''


''சூயிங்கம்.''


''கருமத்தைத் துப்பு... சீ!... துப்பு. ஒரு தடவை வாயைச் சுத்தமா அலம்பிக் கொப்பளிச்சுட்டு வா'' என்று கூறிவிட்டுப் பூஜை அறைக்குச் சென்றாள் அம்மா.


கையில் வாங்கிய சூயிங்கத்தை கற்பு போன பின்னும் எப்போது வாயில் போட்டாள் என்று தான் கண்டுபிடிக்க முடியவில்லை. 


மற்றபடி கதை ஜெயகாந்தன் சொல்வது போல் 'யதார்த்தமாய்' எல்லாம் இல்லை. ஆக்கப்பட்டது தெரிகிறது. ஒரு பெண் இத்தனை ஏமாளியாய் சித்தரிக்கப்படுவதும். ஆண் மேல் குற்றஞ்சொல்லாமல் பெண்ணே பெரும் பாவம் செய்தாற் போல் சுட்டுவதும்; ஆணாதிக்க போக்கைக் காட்டுகிறது. கதை நடை சிறப்பு தான் அதில் குறை கூறுவதற்கில்லை. கூறப்பட்ட கருத்து சில இடங்களில் பிசகுகிறது. இன்னும் இந்த கதை சிறந்த கதையிலிருந்து இறங்காமல் இருப்பதற்கு இதிலிருக்கும் மறைமுக காமாஞ்சர வார்த்தைகளேயன்றி வேறில்லை.


சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் முன்னுரையில் ஜெயகாந்தன் இவ்வாறு குறிப்பிடுகிறார்,


"இந்த நாவலுக்கு அடிப்படையான ஒரு சிறுகதை இருக்கிறது என்பதனை நான் மறுபடியும் ஞாபகப்படுத்துகிறேன். அந்த 'அக்னி பிரவேச' கதையின் முடிவை மறுத்தும் மாற்றியும் பலபேர் கதை எழுதினார்கள். நானும் மாற்றி எழுதி பார்த்தேன். அதன் விளைவே "சில நேரங்களில் சில மனிதர்கள்"


இப்போது புரிகிறதா! அக்கினிப் பிரவேசம் தான் ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருதினைப் பெற்று தந்ததென்று


தீசன்

கருத்துரையிடுக

புதியது பழையவை