அண்மை

கேடில் விழுச்செல்வம் கல்வி கட்டுரை

 

கேடில் விழுச்செல்வம் கல்வி கட்டுரை

முன்னுரை 


'கண்ணுடைய ரென்பவர் கற்றோர், முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்' என்று வள்ளுவர் கூறுகிறார். கல்வியறிவில்லாதவர் விலங்குக்கு ஒப்பாவர் என்றும் குறிப்பிடுகிறார். மனித வாழ்க்கைக்குக் கல்வியானது கண்போல் இன்றியமையாதது என்பதை இதனால் அறியலாம். 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறார் அதிவீரராம பாண்டியர். வள்ளுவரால் 'கேடில் விழுச்செல்வம்' என்று போற்றப்படும் கல்வியின் சிறப்புப் பற்றி இப்பதிவில் காண்போம். 


எண்ணும் எழுத்தும்


நூல்களைக் கற்பதற்குக் கருவியாக விளங்குபவை எண்ணும் எழுத்துமாகும். எண் என்பது இலக்கியங்களையும் அவற்றை உருவாக்க உதவும் சூத்திரங்களையும் (நூற்பா), எழுத்து என்பது அவற்றின் அடிப்படை அமைப்பையும் குறிக்கும். இதனையே ஒளவையார் 'எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்' என்று மிகச் சுருக்கமாகக் கூறியுள்ளார். கல்வியானது அறியாமை என்னும் அக இருளைப் போக்கி, அறிவு என்னும் ஒளியைத் தருவதால் கண் எனப் போற்றப்படுகிறது. அக்கல்விக்கு அடிப்படை எண்ணும் எழுத்தும்தான். எழுத்தறிவுடையவரே கண்ணுடையவர் ஆவர். கல்வியறிவில்லாதவர் கண்ணில்லாதவரே; அவர் பெற்றுள்ள கண்கள் புண்களேயாகும். 


கல்வியின் சிறப்பு 


கல்வியைச் சிறப்பித்து எண்ணற்ற புலவர்கள் பாடியுள்ளார்கள். 'கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு, மன்னர்க்குத் தன் தேசமல்லால் சிறப்பில்லை'. எனவே மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் என்கிறார் ஒளவையார். 'கற்றோர்க்கு ஆற்றுணா வேண்டுவதில்' என்று பகர்கிறது பழமொழி.


➤ ஒழுக்கம் விழுப்பம் தரும் கட்டுரை


'கல்வியின் ஊங்கில்லை சிற்றுயிர்க்கு உற்ற துணை'


என்று சிறப்பிக்கிறது நீதி நெறி விளக்கம். 'கல்வி போல் மம்மர் அறுக்கும் மருந்து உலகில் வேறெதுவும் இல்லை' என்கிறது நாலடியார். கல்விச் செல்வமானது வெள்ளத்தால் அழியாது வெந்தழலால் வேகாது; கள்வரால் கவரப்படமாட்டாது; வேந்தராலும் கொள்ள இயலாது; பிறர்க்குக் கொடுப்பதால் (கற்பிப்பதால்) குறைவுபடாது. அஃது இம்மையிலும் மறுமையிலும் பயனளிக்கும். அதனை ஈட்டலும் காத்தலும் எளிது, இழத்தல் என்பது இல்லை. ஆனால் பொருட்செல்வமோ பகைவராலும் கள்வராலும் மன்னராலும் சகவர்த்து கொள்ளப்படக்கூடியது. கொடுத்தால் குறைவுபடும், தெருப்பாலும் நீராலும் அழியக்கூடியது. எனவே அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியேயாகும். 


கற்கும் முறை 


கல்வி கரையில, கற்பவர் நாள் சில. மெல்ல நினைக்கிற் பிணிபல. எனவே தெள்ளிதின் ஆராய்த்த தல்ல நூல்களையே கற்க வேண்டும். கல்வியைக் கற்கும் போது ஐயம் திரிபு இல்லாமல் கசடறக் கற்க வேண்டும். செல்வர் முன் வறியவன் பணித்து நிற்பது போல ஆசிரியர் முன் பணித்து நின்று அவரை வழிபடுதலை வெறுக்காது கற்றல் வேண்டும். அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் இழிந்தவரேயாவர். இதனையே வள்ளுவர் 'உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லாதவர்' என்கிறார். 


"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே


என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன், கல்வியை எவ்வாறு கற்றல் வேண்டும் என்பதை விளக்கியுள்ளார். 'ஒரே குடியில் பிறந்திருந்தாலும் கல்லாத, வயதில் மூத்தவனை வருக' என்னாது, அக்குடியில் கற்றோன் இளைஞனாயினும் அவனையே பாராட்டுவர் என்று நான்மணிக்கடிகை கூறுகிறது. தாயும் தன் பிள்ளைகளுள் கற்றவனையே விரும்புவாள் என்கிறது ஒரு சங்கப்பாடல் இதிலிருந்து கல்வியின் சிறப்பை அறியலாம்.


➤ முயற்சி திருவினை ஆக்கும் 


நன்னூல் கூறுவது


மாணவர் எவ்வாறு நூலினை கற்க வேண்டும் என்பதனை நன்னூல் வகுத்து  தருகிறது. 


  • உலக வழக்கு அறிந்து நூல் பயிலுதல்
  • பாடத்தை பற்றியே சிந்தித்தல்
  • கேட்ட பாடத்தை பொறுமையாக நினைத்து பார்த்தல்
  • ஆசிரியரிடம் தன் ஐயத்தை தீர்க்க முயலுதல்


கல்வி கற்கும் முறையை இலக்கணமாகச் செய்ததில் இருந்து நம் முன்னோர்கள் கல்வியை எவ்வாறு மதித்தினர் என்பதை அறியலாம். அதோடு இருமுறை பாடம் கேட்டல் பிழையின்றி அறியவும், மும்முறை பாடம் கேட்டல் ஆசிரியனாகும் தன்மையையும், அதை பிறருக்கும் போதித்தல் முழு புலமை தரும் என்பதையும் நம்மவர்கள் இலக்கணமாய் நுட்பமாய் ஆய்ந்து வகுத்ததில் இருந்து தமிழர்களின் கல்வி மாட்சிமையை உணரலாம்


முடிவுரை 


ஒரு நாட்டின் செல்வ வளத்தைக் கண்டு உலகம் அந்நாட்டை மதிப்பது இல்லை. அந்நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே அந்த நாடு மதிக்கப்படும். மக்கள் மனவளம் பெற கல்வி அவசியம். மகனைக் கற்றறிந்தோனாக்கி அவையத்து முந்தி இருப்பச் செய்வதே தந்தையின் கடமை என்கிறார் பொய்யில் புலவர். 


அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுதல், ஆலயம் பதினாயிரம் நாட்டுதல், இன்னறுங்கனிச் சோலைகள் வைத்தல், இனிய நறுநீர்ச் சுனைகள் அமைத்தல் 


இவை யாவற்றையும் விட ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்கிறார் பாரதியார். அவர் கருத்துப்படி ஊர்தோறும் பள்ளிகளை அமைத்து நாட்டு மக்கள் அனைவரும் கல்வி பெறச் செய்ய வேண்டும். அப்போது தான் குடியாட்சியின் பயனை நாம் முற்றிலும் அடைந்தவர்களாவோம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை