முன்னுரை
நமது வாழ்நாளைச் செம்மையாகக் கழிப்பதற்கு உணவு, உடை, உறையுள் ஆகிய இம்மூன்றும் இன்றியமையாதன. அவற்றைக் குறைவறப் பெறுவதற்குப் பொருள் வேண்டும். அதனால்தான் ஒளவை மூதாட்டி ‘திரைகடலோடியும் திரவியம் தேடு' என்று கூறினார். அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றும் இம்மைப் பயன்கள். இவற்றுள் நடுவணதாகிய 'பொருள்', இருப்பின் ஏனைய இரண்டனையும் எளிதில் பெறலாம். இதையே நாலடியார்,
'வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவணது எய்த இருதலையும் எய்தும்' என்கிறது.
அத்தகைய செல்வத்தை ஈட்டினால் மட்டும் போதாது. அதைச் சிக்கனமாய்ச் செலவு செய்து சேமித்தும் வைக்க வேண்டியதன் அவசியம் பற்றி இக்கட்டுரையின் கண்காண்போம்.
பொருள்
செல்வத்தின் சிறப்பும் சேமிப்பின் அவசியமும்:
- ‘பொருளில்லார்க்கு இவ்வுலக மில்லை'
- ‘இல்லானை இல்லாளும் வேண்டாள் மற்று ஈன்றெடுத்த தாய் வேண்டாள்'
- 'பணம் பத்தும் செய்யும்'
- 'பணம் பாதாளம் வரை பாயும்' 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு'
- 'பணம் இல்லாதவன் பிணம்'
- 'பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்'
என்னும் தொடர்கள் செல்வத்தின் சிறப்பை விளக்குகின்றன. இத்தகைய செல்வத்தை ஈட்டுவது மட்டுமல்ல, அதனை எதிர்காலத் தேவைக்காகச் சேமித்துப் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும்.
பொருளை ஈட்டும் முறை
நமது வாழ்வை ஓரளவு நல்ல முறையில் நடத்த வேண்டுமானால் பொருள் தேவையாகும். கையூட்டுப் பெற்றோ, கள்ளச்சந்தை நடத்தியோ, அளவுக்கு மேல் விலை வைத்தோ, பதுக்கி வைத்துக் கொள்ளை இலாபம் பெற்றோ, பொருளை ஈட்டாது, நல் வழியில் பொருளைத் தேடி வாழ வேண்டும். நல் வழியில் வரும் பொருளைக் கொண்டு மட்டுமே வாழ வேண்டுமானால் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படாமல், அதாவசிய செலவுகள் செய்யாமல் சிக்கன வாழ்வை மேற்கொள்ள வேண்டும்
சிக்கனமாக வாழும் வகை
சிக்கனம் என்பது வேறு, கஞ்சத்தனம் என்பது வேறு. சிக்கனம் என்பது அவசியத்துக்கு மட்டுமே செலவு செய்வது. கஞ்சத்தனம் என்பது அவசியத்துக்குக் கூட செலவு செய்யாமலிருப்பது.
தானும் தன் குடும்பமும் நல்ல முறையில் வாழ அவசியமான செலவுகளைச் செய்து கொண்டு, ஒரு பகுதியை எதிர்கால வாழ்க்கைக்காகச் சேர்த்து வைக்கும் பழக்கத்தை மேற்கொள்ளவேண்டும். எறும்பு மழைக் காலத்துக்கு வேண்டிய உணவைக் கோடை காலத்திலேயே தேடி வைக்கிறது. பறவைகளும், மழைக் காலத்தில் நனையாதவாறு வாழ முன்னதாகக் கூடு கட்டிக் கொள்கின்றன.
அதிகச் சம்பளம் பெறும் அதிகாரி, வீட்டினரின் ஆடம்பர, ஊதாரிச் செலவுகளால் மாதக் கடைசியில் குறைந்த சம்பளம் வாங்கும் கடைநிலை ஊழியரிடம் அவர் சிக்கனமாக வாழ்ந்து சேமித்து வைத்திருக்கிற பணத்திலிருந்து கடன் வாங்குவதைக் கண்கூடாகக் காண்கிறோம்.
இதிலிருந்து நாம் பாடம் சுற்றுக் கொண்டு ஆடம்பர, அநாவசிய செலவைத் தவிர்த்து, எச்சரிக்கை யோடு சேமித்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
என்ற கண்ணதாசனின் பாடல் வரவுக்கு மிஞ்சி செலவு செய்பவனின் நிலை என்னவாகும் என்பதை விளக்கி நாம் நமது எதிர் காலத்திற்காகச் சேமித்து வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
சிறு சேமிப்பு, பெரு நிதியாகும்
நாம் நமது வருவாய்க்குள் செலவு செய்து, ஒரு சிறு தொகையையாவது சேமித்து வைக்க வேண்டும். நமது அரசாங்கம் மருத்துவ காப்பீடு திட்டத்தை அனைவருக்கும் இலவசமாக அளிக்கிறது. சிக்கனமான வாழ்வுக்கு இதுபோன்ற காப்பீடுகள் பக்கபலமாய் இருந்து உதவுகின்றன. அஞ்சலகங்களும் தனிமனித சேமிப்புகளை ஊக்குவிப்பதோடு அதற்கான பல கவர்ச்சி திட்டங்களை கொண்டுள்ளது.
அவ்வாறு சேமிக்கப்படும் தொகை எதிர்பாராது திடீர் என்று ஏற்படும் எத்தனையோ செலவுக்குப் பயன்படும். அவ்வாறு சேர்ந்து வைக்கும் பணத்தை வீணே பெட்டியில் வைத்துப் பூட்டாமல், சிறு சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து சேமிப்போமாயின், அப்பணம் வட்டியுடன் சேர்ந்து பெரு நிதியாவதுடன் பத்திரமாகவும் இருக்கும்.
அங்ஙனமின்றிப் பணத்தை நம்மிடமே வைத்துக் கொண்டிருப்போமாயின், பணம் இருக்கின்றதே என்று அதை எடுத்துச் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து அஞ்சலகத்திலோ, வங்கியிலோ சேமிக்கும்போது அத்தொகை சிறுதுளி பெரு வெள்ளம் என்பது போல் பெருந்தொகையாகி நாட்டு முன்னேற்றத்திற்கான நல்ல பல தேசிய வளர்ச்சிப் பணிகளுக்கும் பயன்படுகிறது. கூட்டுறவு கொள்கைகளும் சமூகத்தை மேம்படுத்த சிக்கனத்தை போதிக்கின்றது.
எனவேதான் நமது அரசு சேமிப்பின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துரைத்து எளிய முறையில் சேமிக்கச் செய்கிறது. பட்டி தொட்டிகளில் எல்லாம் சேமிப்புத் தொகை திரட்டப்படுகிறது. காமதேனு வைப்புநிதி, நிரந்தர வைப்புநிதி, உண்டியல் சேமிப்பு, தினசரி சேமிப்பு, மாதாந்திர சேமிப்பு, சேமிப்புப் பத்திரங்கள் என்று பல வழிகளில் சேமிக்க மக்களுக்கு வசதி செய்துள்ளது. சஞ்சாயிகா திட்டம் என்ற பெயரில் பள்ளிக் குழந்தைகள் தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களின் வாயிலாகச் சேமிக்க வழி செய்து கொடுத்துள்ளது
குறுக்குவழி தவறு
நம் நாட்டு மக்களுக்கு இன்று ஒரு தீய சிந்தனை ஏற்பட்டுள்ளது. வேலை செய்யாமலே பலனை பெற சிலர் ஆசை கொள்கிறார்கள். இவர்களின் ஆசையை சரியாகப் பயன்படுத்தும் சில தனியார் நிறுவனங்கள் 'ரம்மி' போன்ற விளையாட்டுகளை பெரும் நடிகர்களைக் கொண்டு விளம்பரம் செய்து பணத்தை நம்மிடமிருந்து பறிப்பதோடு நமது சேமிப்பையும் சுரண்டுகிறார்கள். அதனால் சேமிப்பு பழக்கத்திற்கு குறுக்குவழி கூடாது என்ற முடிவுக்கு வருதல் வேண்டும். நீண்ட கால உழைப்பினால் வரும் வெகுமதியே நிம்மதியோடு நிலைக்கும் என்பதை மனதில் பதியவைத்து. சூதாட்டங்களையுள், முதலீடு தொழில்களையும் தவிர்த்து சேமிக்க வழிவகை செய்ய வேண்டும்.
முடிவுரை
மக்கள் தங்கள் உரிமைகளைக் கோரிப் பெறுவதில் பெருங்கவனம் செலுத்துகின்றார்கள். உரிமைகளைப் பெறவேண்டுமாயின் நமது கடமைகளை முதற்கண் உணர்ந்து செயல்பட வேண்டும். நமது முன்னேற்றத்திற்காக மட்டுமன்றி நாட்டு முன்னேற்றத்திற்காகவும் நாம் சேமிக்க வேண்டியது அவசியம்.
'சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும்'
என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து, தம் தேவைகளைக் குறைத்துக் கொண்டு சேமிப்பை அதிகரிக்கச் செய்தால் வீடும் நாடும் நலமும் வளமும் பெறும் என்பதில் ஐயமில்லை.