அண்மை

குடியரசு தினம் பற்றிய பேச்சு போட்டி

குடியரசு தினம் பற்றிய பேச்சு போட்டி


தொடக்கம்


அனைவருக்கும் வணக்கம்! ஜனவரி 26 இந்திய திருநாட்டின் குடியரசுத் திருநாள்.


1950 ஆம் ஆண்டு இந்தத் திருநாளில்தான், எதிர்காலத்தில் ஆட்சி நடத்துவது எப்படி? என்ற ஆவணத் தொகுப்பு அறிமுகம் ஆனது.


குடியரசு என்றால் என்ன?


மன்னராட்சி போன்று அல்லாத மக்களாட்சியே குடியரசு.


இந்திய குடிமக்களாகிய நாமே, நமக்கான சட்டங்களை, வழிமுறைகளை, உருவாக்கி ஆட்சி செய்யும் முறையே குடியரசு.


குடியரசு


இதில் ஜனவரி 26 என்ற தேதி எப்படி வந்தது?


1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி பூரண சுவராஜ்யமே நமது குறிக்கோள் என்ற அறைகூவல் மகாத்மா காந்தியடிகளால் விடுக்கப்பட்டது.


பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம். ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் மக்களுக்கு துரோகம் செய்யும் ஆங்கில அரசை விரட்ட, விடுதலை நாள் உறுதி மொழி, சிற்றூர், பேரூர் எங்கிலும் நிறைவேற்றப்பட்டு, விடுதலை எழுச்சி ஏற்படுத்தப்பட்டது. அந்த நாளே குடியரசு நாளாக முடிவு செய்யப்பட்டது.


அடிமையல்ல


விடுதலைக்கு முன்னேற்பாடாக 1946 ஆம் ஆண்டு  டிசம்பர் 12 ஆம் தேதி, அரசியல் அமைப்பை உருவாக்கும் வரைவுக்குழு, அண்ணல் அம்பேத்கார் தலைமையில் உருவாக்கப்பட்டது. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்களில் அரசியல் சட்டம் எழுதி முடிக்கப்பட்டது. இந்த வரைவு, காந்தியடிகள் விருப்பப்படி ஜனவரி 26, 1950 அன்று சட்டமாக்கப்பட்டு இந்தியா குடியரசு ஆனது. குடியரசு தினத்திற்கு இரண்டு நாள் முன்னமே ரவீந்தரநாத் தாகூரின் ஜன கண மன பாடல் தேசிய கீதமாய் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது


யாருக்கும் அடிமையாக இல்லாமல், விடுதலைக்கு பிறகு, நமக்கான சட்டங்களை நாமே உருவாக்கினோம். நமக்கான வளர்ச்சி திட்டங்கள் நம்மாலேயே உருவாக்கப்பட்டன.


அறுசுவை விருந்தை அடுத்தவர் வீட்டில் அருந்துவதை விட, நம் வீட்டில் உருவான, ரசமும், மோரும் சிறப்பானதல்லவா?


இருநூறு ஆண்டு காலம் அடிமைப்பட்டு கிடந்தோம்.


பஞ்சம் பிழைக்க வந்த, ஆங்கில வணிகக் கூட்டத்திடம் நாம் அடிமைகளானோம்.


முற்காலம்


சேரர்கள், சோழர்கள்,பாண்டியர்கள், பல்லவர்கள், சாளுக்கியர்கள், குப்தர்கள், சமணர்கள், மொளரியர், மொகலாயர் என எத்தனையோ வம்சங்கள் இந்தியாவை ஆட்சி செய்துள்ளன.


அவர்களால் நமக்கு எந்த பிரச்சனையுமில்லை. சொல்லப்போனால், குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம் ஆக இருந்தது. சோழ, சேர பாண்டியர் காலங்களில் ஜனநாயகமும் ஆன்மிகமும் செழித்து ஓங்கியது.


ஆங்கிலேயர் நுழைவு


ஆனால் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், தங்கள் தந்திரத்தால் சூழ்ச்சி செய்து நம்மை அடிமைப்படுத்தினார்கள்.


இப்போது உள்ள இந்தியா, ஐநூறுக்கும் மேற்பட்ட குறு நில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. அவர்களுக்குள் ஆயிரமாயிரம் சண்டை, சச்சரவுகள் இருந்தது. ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி ஒருவருக்கு ஒருவர் அடித்து கொள்வதில் அவர்கள் காலத்தை கழித்தார்கள்.


இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலேயர்கள், பிரித்தாளும் சூழ்ச்சியால் சமஸ்தான மன்னர்களுக்குள், பிளவுகளை உண்டாக்கி மோதலை தூண்டினார்கள்.


மோதிக்கொண்ட மன்னர்களில் ஒருவர் பக்கம் நின்று, கத்தியாலும், ஈட்டியாலும் தாக்கியவர்களை துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் பயன்படுத்தி வீழ்த்தினார்கள். வீழ்த்தப்பட்டவர்களிடம் உள்ள சமஸ்தானங்களை எதிரிகளிடம் ஒப்படைத்து, ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட ஆணையிட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை தங்கள் காலடிக்கு கொண்டு வந்தார்கள்.


உப்புக்கு கூட வரி போடப்பட்டது. கோவில்களில் உள்ள அம்மன் சிலைகள், ஆபரணங்கள், பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையடித்த பொருட்கள் கொண்டு செல்ல இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.


எதிர்ப்பு காட்டுபவர்களுக்கு, சிறைக்கதவு பரிசாக கிடைத்தது.


அமைதியாக கூடிய விடுதலை வீரர்கள், ஜாலியன் வாலாபாக்கில் காக்கை குருவிகளை போல சுடப்பட்டார்கள்.


நம் வீரர்கள்


ஆங்கிலேயருக்கு எதிராக வரி செலுத்த மறுத்த கட்டபொம்மன், கயத்தாறிலே தூக்கிலடப்பட்டான்.


ஆங்கிலேயனுக்கு எதிராக கப்பல் கம்பெனி தொடங்கிய செல்வ சீமான் வ உ சிதம்பரம் பிள்ளையை, சிறையில் செக்கிழுக்க வைத்தான் வெள்ளைக்காரன்.


போராட்டக் களத்தில், தடியடிக்கு தலை கொடுத்தான் கொடி காத்த குமரன்.


ஆஷ் துரையை கொன்று விட்டு, தன்னையும் மாயத்துக் கொண்டான் வீர வாஞ்சிநாதன்.


பொல்லா பருந்தை எதிர்த்து சிறு கோழி போரிடுவது போல், உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் ஏராளம் ஏராளம்.


தமிழ் நாட்டில் ஆங்கிலேயனை எதிர்த்த முதல் மன்னன் வீரன் அழகு முத்துக்கோன்.


பூலித் தேவனும், வேலு நாச்சியாரும், வீரன் வேலுத்தம்பியும், தில்லையாடி வள்ளியம்மையும் செய்த தியாகங்கள் எழுத்திலும் பேச்சிலும் அடங்காதவை.


விடுதலை பாடல்களால் எழுச்சியை உண்டாக்கிய பாரதியார் கூட ஆங்கிலேயனுக்கு அஞ்சி பாண்டிச்சேரியில் பதுங்கி வாழ நேரிட்டது. இருந்தாலும் தேச பக்தி பாடல்களை எழுதுவதை நிறுத்தவில்லை நம் பாரதியார்.


காந்தி


சட்ட மறுப்பு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், அந்நிய துணி மறுப்பு இயக்கம், உப்பு சத்தியாக்கிரகம் என காந்தியடிகளால் அகிம்சா முறையில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இறுதிப் போராட்டமாக வெள்ளையனே வெளியேறு இயக்கம் காந்தியடிகளால் தொடங்கப்பட்டது.


மூன்று முழ வேட்டியை இடுப்பிலும், இரண்டு முழத் துண்டையும் தோலிலும் அணிந்து போராடும் காந்தியடிகள் உண்ணா நோன்பை தொடங்கினால் தேசத்தில் உள்ள பலர் தாங்கள் உண்பதை  நிறுத்திவிடுவார்கள்.


எத்தனை முறை காந்தியடிகளை சிறையில் அடைத்தாலும், அவர் உண்டாக்கிய மக்கள் எழுச்சியை ஆங்கிலேயர்களால் முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை.


"வெள்ளையனே வெளியேறு" என்ற வீரமிக்க முழக்கம், வெள்ளையனை நாட்டை விட்டு வெளியேறும் முடிவுக்கு தள்ளியது. விடுதலை வழங்கும் தீர்மானம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேறியது.


சுதந்திரம்


சும்மா கிடைக்கவில்லை இந்த சுதந்திரம். ஒரே இரவில் கிடைக்கவில்லை இந்த சுதந்திரம். "இந்தாருங்கள் சுதந்திரம்" என்று தங்கத் தட்டில் வைத்துத்  தரப்பட்டதல்ல இந்த சுதந்திரம். இலட்சம் பேரின்  இரத்தத்தாலும், சதையாலும், கட்டப்பட்ட கோட்டைதான் சுதந்தரம். விடுதலைப் போரில் மண்ணோடு மண்ணாக மக்கிப் போனவர்கள் எத்தனையோ பேர். சிறைக் கொட்டடியிலேயே சிதைந்து போனவர்கள் எத்தனையோ பேர்.


பாரதி சொன்னதுபோல் தண்ணீர் விட்டு வளர்த்தது அல்ல இந்த விடுதலை. கண்ணீரால் காக்கப்பட்டது இந்த விடுதலை. இதைக் கருக விடலாமா?


மகாபாரதமும், இராமாயணமும், சிலப்பதிகாரமும் ஆட்சி செய்வது எப்படி என்பதை நமக்கு கற்று கொடுத்துவிட்டன. குடவோலை முறையை ஊருக்கு சொல்லி உலகிற்கு தந்தவன் தமிழன்.


அதனால் குடியரசால் நல்லரசை உருவாக்கி, அதையும் வல்லரசாக்க அனுதினமும் உழைப்போம்.


நன்றி வணக்கம்


ஜெ மாரிமுத்து

1 கருத்துகள்

புதியது பழையவை