அண்மை

ஆய்தக்குறுக்கம்: அஃது இஃது பயன்பாடு

ஆய்தக்குறுக்கம்

அஃது - அது

இஃது - இது


அது, இது என வரும் இடத்தில் எல்லாம் அஃது, இஃது என்னும் சொல்லை பயன்படுத்த முடியாது. அதன் காரணத்தை பிறகு தருகிறேன்.


முதலில் அஃது - இஃது என்ற சொற்களின் தன்மைப் பற்றி காண்போம்


அஃது - இஃது ஓர் ஆய்தக் குறுக்கச்சொல். எது ஆய்தக்குறுக்கச் சொல்? என்பதை அறிவது மிக எளிது.


ஆய்தக்குறுக்கம்


குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி

உயிரோடு புணர்ந்தவல் ஆறன் மிசைத்தே


ஆய்தக்குறுக்கத்திற்கான தொல்காப்பிய மொழிமரபு இலக்கணம் தான் இது.


இந்த நூற்பா சொல்லவருவது யாதெனில்,


குற்றெழுத்து ➡️ முன்னர் (ஃ) ஆய்தப் புள்ளி + (உ) உகர உயிரானது வல் எழுத்துக்களோடு (க ச ட த ப ற) புணர்ந்து வந்திருந்தால் அது தனிமொழிக்கண் வந்த ஆய்தக்குறுக்கம் ஆகும்.


தனிமொழிக்கண் என்பது தனிச்சொல்லின் இடத்து என்று பொருள். மொழி என்பது இங்கு சொல்லைக் குறிக்கிறது. இரண்டு சொல் புணர்ந்து ஒரு சொல் உருவாகும் போது இந்த விதி எடுபடாது. 


உதாரணம்: கல்+தீது = கஃறீது


இது தனிச்சொல் இடத்து வந்த ஆய்தக்குறுக்கம் அல்ல ஆனாலும் இதும் ஆய்தக்குறுக்கச் சொல் தான். கல் என்ற தனிச்சொல்லும் தீது என்ற தனிச்சொல்லும் இணைந்து கஃறீது எனும் சொல்லை உருவாக்குகிறது. நிலைமொழியும் வருமொழியும் இணைந்து உருவாக்கும் சொல்லை புணர்மொழி என்பார்கள். புணர்மொழிக்கண் வரும் ஆய்தக்குறுக்கத்தினை பிறகு காணலாம்.


தனிமொழிக்கண், புணர்மொழிக்கண், நிலைமொழி, வருமொழி என்பன இலக்கண கலைச்சொல் என்பதை அறிக.


குறில் + + (க்+உ = கு, ச்+உ = சு, ட்+உ = டு, த்+உ = து, ப்+உ = பு, ற்+உ = று)


இவ்வாறு ஒரு சொல் அமைந்திருப்பின் அது ஆய்தக்குறுக்கச் சொல் ஆகும். எழுத்தின் அமைப்பு அடிப்படையில் இதுதான் ஆய்தக்குறுக்கம் ஆனால் இலக்கணம்படி எழுத்து என்பது தான் ஒலி. ஆய்தக்குறுக்கம் உச்சரிப்பு அடிப்படையில் தான் உருவாகிறது. ஆய்த எழுத்தை தனியாகவும் கீழே உள்ள சொற்களோடும் சரியாக உச்சரித்துப் பார்த்தால் ஆய்தம் குறுக்கமடைவதை அறியலாம். ஆய்தம் பிற சொற்களோடு இணைந்து இருக்கும் போதே குறுகும். அதனால் தான் அதை சார்ந்து வரல் ஒலி என்பார் தொல்காப்பியர்.


குறில் + ஃ + (உ) க் = எஃகு

குறில் + ஃ + (உ) ச் = கஃசு

குறில் + ஃ + (உ) ட் = கஃடு

குறில் + ஃ + (உ) த் = அஃது, இஃது

குறில் + ஃ + (உ) ப் = கஃபு

குறில் + ஃ + (உ) ற் = கஃறு


தனிமொழிக்கண் வந்த ஆய்தக்குறுக்கம் மேற்கண்ட சொற்கள் படி தான் இருக்கும். இதிலே சில இன்று வழக்கில் இல்லை.


மாத்திரை


மெய்யின் அளபு அரைஎன மொழிப

அவ்வியல் நிலையும் ஏனைய மூன்றே


என்னும் விதிப்படி தொல்காப்பிய சார்ந்துவரல் (சார்பெழுத்து) எழுத்துக்களான குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் (ஏனைய மூன்றே) என்ற மூன்றிற்கும் அரை மாத்திரை தானென்று அறிக.


அரை அளபு என்பதற்கும்

அரை மாத்திரை என்பதற்கும் பொருள் ஒன்றே. மாத்திரை என்பதன் பொருள் அளபு. 


'எத்தனை மாத்திரை எடுக்க வேண்டும்?' என்று மருத்துவரிடம் கேட்பது இன்று மாத்திரை என்பதற்கு Tablet எனும் பொருளைத் தந்திருக்கலாம் ஆனால் மாத்திரை என்பது அளபினைத் (அளவு) தான் குறிக்கிறது.


அஃது இஃது பயன்பாடு


அஃது, இஃது இரண்டுமே சுத்தமான ஆய்தக்குறுக்கச்சொல்.


ஃ - எனும் எழுத்து மொழி முதலாகவோ, மொழி ஈற்றிலோ வரவே வராது. கவிதை இன்பம் கருதி சில புதுக்கவிதைகளில் அஃதை இன்று காணலாம்.


நான் இப்போது "அதை" என்பதற்கு பதில் இங்கு "அஃதை" என்று குறிப்பிட்டு இருப்பதை பார்க்க.


ஒரு ஊரில் என்பது தவறு.

ஓர் ஊரில் என்பது தான் சரி.


ஏன்?


A apple என்பது தவறு.

An apple என்பது தான் சரி.


ஏன்?


அது தான் இலக்கணம். அது, இது, ஒரு போன்ற சொற்களுக்கு அடுத்து வரும் சொல்லில் உயிர் எழுத்து முதல் எழுத்தாய் இருந்தால் அவை அஃது, இஃது, ஓர் என்று மாற்றம் அடையும்.


A apple என்பதில் A க்கு அடுத்து Vowel (a,e,i,o,u) வந்ததால் An என்று குறிப்பிடுவது மரபு.


அதே போல, அஃது வந்தது என்பது மரபல்ல. 'அஃது அமர்ந்தது' என்பது மரபு.


மரபை எதிர்ப்போர் இம்மரபுகளை மீறுவது மரபு. அதுபடியே ஜெயகாந்தனும் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' எனும் புத்தகத்தை எழுதி இருப்பார்.


இந்த தலைப்பிலே 'ஒரு உலகம்' என்பது தவறு. மக்கள் வழக்கமாய் வழங்கி வந்ததற்கே முன்னோர் இலக்கணம் வகுத்துள்ளார்கள். 


ஒரு உலகம் என்பதை நம்மவர்கள் ஓருலகம் என்று பேச்சு வாக்கில் கூறுவர். அப்படி பார்த்தால் "ஒரு உலகம்" என்பது எந்த அடிப்படையில் ஓருலகம் ஆனது?


இதற்குத் தான் இலக்கணம். 


ஒரு+உலகம் = இரண்டு தனிமொழிகள்


இவை புணர்ந்து ஓருலகம் என்ற சொல்லை ஆக்காது. அதனாலே நுண்ணிதின் உணர்ந்த இலக்கண ஆசிரியர்கள், 'ஒரு' எனும் சொல்லுக்கு அடுத்து உயிர் முதலாகக் கொண்ட சொல் வந்தால், 'ஒரு' - 'ஓர்' ஆகும் என்று இலக்கணம் வகுத்தனர்.


ஓர் + உலகம் = ஓருலகம்

அஃது + அமர்ந்தது = அஃதமர்ந்தது


மக்களின் புணர்ச்சி வழக்கினை விதியாய் எழுத்துக்களால் பதிவு செய்திருப்பது தான் இலக்கணம்.


இலக்கணத்தை நாம் எழுத்திலிருந்து நேரே விளங்க விரும்பினால் கஷ்டம் தான். காரணம், இலக்கண ஆசிரியர்களே அவ்வாறு செய்யவில்லை. மக்களின் வழக்கை, அவர்கள் பேசிக்கொள்வதை, சொல் புணர்ச்சி செய்வதை கூர்ந்து கவனித்தே இலக்கண ஆசிரியர்கள் இலக்கணம் யாத்துள்ளனர். அவ்வாறே நாமும் படித்தால் மிகு சுலபம்.


இடையில் வந்த சில இலக்கண அறிவு முதிர்ச்சி மிக்கோர் தங்களது முழு திறனையும் உரையிலே காட்டியதாலே இன்று இலக்கணம் சிரமமாகப் பார்க்கப்படுகிறதென்று எனக்குப் படுகிறது.


நாளை முதல் நான் உயிரோடு இருக்க மாட்டேன்; இந்த வகுப்பிலே எனக்கு தெரிந்த மொத்த அறிவினையும் மாணவர்களிடத்தில் சொல்ல போகிறேன் - என்று எண்ணமுள்ள ஆசிரியர்கள் இருப்பார்களாம்


தீசன்

8 கருத்துகள்

  1. தீசனாருக்கு என்று ஒரு எளிய நடை இருந்தது.. அதை தொல்லுரையாசிரியர்கள் மென்று தின்று விட்டார்கள் போலும்... மூன்றாவது முறையாக இதை படித்து விளங்க முயல்கிறேன்.. ஏனோ தொடர்ச்சி அறுபட்டு போகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்றவர்களைக் காட்டிலும் எளிமையாகவே கூறியுள்ளேன் என்பதைக் காட்டிலும் சரியாக கூறேனேன் என்பேன்.

      நன்னூலாரை விட்டுவிடுங்கள். தொல்காப்பியரை மட்டும் கவனியுங்கள்

      உகரம் பற்றி விவரிக்காததால் உங்களுக்கு புரியவில்லை போலும்

      நீக்கு
  2. அஃது - இஃது ஓர் ஆயுதக்குறுக்கச் சொல். எது ஆய்தக் குறுக்கச்சொல் என்பதை....

    இவ்வாக்கியத்தில்,,,, " *இஃது* ஓர் ஆய்தக்குறுக்கச்சொல்.." என்று போட்டவர்..

    அதைப்போல

    " *எஃது* ஆய்தக்குறுக்கச்சொல்..?" என்று ஏன் போடவில்லை???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது ஆய்தக்குறுக்கம் என்பதை இவ்வரிகளில் தந்து உள்ளேன்.

      குற்றெழுத்து ➡️ முன்னர் (ஃ) ஆய்தப் புள்ளி + (உ) உகர உயிரானது வல் எழுத்துக்களோடு (க ச ட த ப ற) புணர்ந்து வந்திருந்தால் அது தனிமொழிக்கண் வந்த ஆய்தக்குறுக்கம் ஆகும்.

      நீக்கு
    2. எஃது - எனப்போடாததற்கு காரணம் அங்கு அஃதோர் புறனடையாய் கொள்ள வேணும்

      நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. புறனடை- விளக்கம் தேவை..
    புறனடைக்கண் ஆய்த விதிகள் பொருந்தா..வா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குற்று உகரம் சொல்லின் ஈற்றில் வருவது விதி. ஒரே ஒரு சொல்லில் மட்டும் முதலில் வரும்: நுந்தை

      அது புறனடை. விதிவிலக்கு. விதிமீறல். விதியோரன்ன.

      எப்படியும் சொல்லலாம். அதுபோல் அங்கு ஆய்தக்குறுக்கம் ஒரு புறனடையாகக் கொள்ளவும்

      இது என் அம்மா

      என்று தானே சொல்கிறோம்.

      இஃதென்னம்மா

      என்றா சொல்கிறோம்?

      முறைப்படி அப்படி தான் சொல்ல வேணும்

      ஆனால் வழக்கிற்கு தான் இலக்கணம். இலக்கணம் வழக்கு ஆகிவிடாது.

      அஃதோர் முறைமை. அவ்வளவே.

      நமது வாழ்க்கையே ஓர் விதிவிலக்கு தான்

      நீக்கு
புதியது பழையவை