அண்மை

உழவர் பற்றிய கட்டுரை

 

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் கட்டுரை

முன்னுரை 


பாராளும் வேந்தன் முதல் காட்டிலே வேட்டை யாடித் திரியும் வேட்டுவன் வரை யாவர்க்கும் இன்றியமையாது வேண்டப்படுவன உணவும் உடையும் தான் அதனால் தான் ஒளவையாரும் நல்வழியில் 'உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்' என்று கூறுகிறார். உண்பதற்கும் உடுப்பதற்கும் தேவையான மூலப் பொருள்களை உற்பத்தி செய்து தருவது உழவுத்தொழிலே. 'உழுவார் உலகத்தார்க்கு ஆணி' என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். அவரே 


'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழு துண்டு பின்செல்பவர்' என்றும் கூறுகிறார். அத்தகு சிறப்பு வாய்ந்த உழவுத்தொழில் பற்றியும் உழவர் பற்றியும் இந்த கட்டுரையில் காண்போம். 


உழவின் பெருமை


பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலேயே உழவுத்தொழில் பற்றிக் கூறப்பட்டுள்ளது. நால்வகை நிலங்களின் கருப்பொருள்களைக் கூறுமிடத்து உணவு பற்றியும் விளைபொருள்கள் பற்றியும் மரம், பூ பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து பண்டைத் தமிழர்கள் எந்தெந்த நிலத்தில் எந்தெந்தப் பயிர்கள் நன்கு வளரும் என்ற வேளாண்மை நுணுக்கங்களை நன்கு அறிந்திருந்தார்கள் என்பது புலனாகிறது. உழவர் தம் தொழிலைச் செய்யாவிடில் துறவிகளும் தம் அறத்தின் கண் நிற்றல் இயலாது என்று வள்ளுவர் உழவின் பெருமையை விளக்குகிறார். 'எல்லாமே வயத்துக்குத்தாண்டா' 'ஒருசாண் வயிறு இல்லாட்டா இத்த உலகத்தில் ஏது கலாட்டா?' என்று திரைப்படப் பாடல்களும் ஒருசாண் வயிற்றினால் தான் இந்த உலகம் இயங்குகிறது என்பதை எடுத்துரைக்கின்றன. 


உழவுத்தொழிலின் அன்றைய நிலை


பண்டைத்தமிழ் மன்னர்கள் உழவுத்தொழிலை வளர்க்கும் பொருட்டுக் காடு கொன்று நாடாக்கிக் குளம்தொட்டு வளம் பெருக்கினார்கள். அணைகளும் மதகுகளும் கட்டினார்கள். ஆற்றினின்றும் வாய்க்கால்கள் வெட்டுவித்தார்கள். சோழன் கரிகாலன் காவிரிக்குக் கரையெடுத்தான்; கல்லணை கட்டினான். 


இடைக்கால நிலை


உழவர் கடும் வட்டிக்குக் கடன்வாங்கி உழைத்து விளையும் பொருளைக் கடன்காரனுக்குக் கொடுத்து வருந்தினர். அதனால்தான் 'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது' என்ற பழமொழியும் எழுந்தது.  சுதந்திரத்திற்கு முன் வரை உழுதவர்தான் அடுத்தவரைத் தொழுது உண்ண வேண்டிய நிலை இருந்தது. கூட்டுறவுக் கழகங்களாலும் அரசின் முயற்சிகளாலும் அந்நிலை இன்று மாறியுள்ளது. 


இன்றைய நிலை


இன்று அறிவியல் அறிஞர்கள் கண்டு பிடித்துள்ள உழவுக் கருவிகளும் செயற்கை உரங்களும் வீரிய விதைகளும் வேளாண்மையில் பெருத்த முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அரசு வேளாண்மைக் கல்லூரிகளை நிறுவி வேளாண்கல்வியை அளிக்கிறது. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் வேளாண்மை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. அத்துடன் அரசு, உழவர்களுக்குப் பல சலுகைகளை அளித்துள்ளது. விதை மானியம், உரமானியம், இலவச மின்சாரம் என்று அவர்களை ஊக்குவிக்கிறது. உற்பத்திப் பொருள்களை இடைத்தரகரின்றி நல்ல விலைக்கு விற்க, கூட்டுறவு அங்காடிகளை அமைத்துள்ளது. அதிக மகசூல் காட்டும் விவசாயிகளுக்குப் பரிசு வழங்கி ஊக்குவிக்கிறது. அன்று உழுதவனுக்கு உழக்குகூட மிஞ்சாமல் இருந்தது. இன்று உழவன் வீட்டில் நவீன விஞ்ஞானக் கருவிகள் - வசதிகள் அனைத்தும் உள்ளன. அந்த அளவுக்கு இன்று வெண்மைப் புரட்சி போன்றவற்றால் வேளாண்மை மேம்பட்டுள்ளது. கால்நடை அபிவிருத்திம் ஏற்பட்டுப் பால்வளம் பெருகியுள்ளது. விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள புதிய நெல் வகைகள், குறுகிய காலப்பயிர்கள் போன்றவையும் வேளாண்தொழில் முன்னேற்றத்திற்குக் காரணமாக அமைகின்றன. 


உழவு பற்றி ஔவையார் கூறியவை


ஆற்றங் கரையின் மரமும் அரசறிய

வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம்

உமுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்

பழுதுண்டு வேறோர் பணிக்கு


என்ற பாடலில் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழும் என்றும் அதனால் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை என்றும் வேறோர் பணிக்குப் பழுது உண்டு என்று கூறி உழவுத்தொழிலைச் சிறப்பிக்கிறார் நம் பெருமைமிகு மூதாட்டி ஔவையார். மேலும் சிறுவர் உள்ளத்தில் கருத்தைப் பதிய வைப்பதற்கு, 'பருவத்தே பயிர்செய்', 'தெற்பயிர் விளை', 'பூமி திருத்தியுண்', 'சீரைத்தேடின் ஏரைத் தேடு', 'தொழுதூண் கவையின் உழுதாண் இனிது', 'மேழிச் செல்வம் கோழை படாது' என்றெல்லாம் தம் ஆத்திச்சூடியிலும் கொன்றை வேந்தனிலும் கூறியுள்ளார் ஔவையார். கவிச்சக்கரவர்த்தி கம்பரும் உழவுத்தொழிலைச் சிறப்பித்து 'ஏரெழுபது' என்னும் பெயரில் ஒரு நூலையே இயற்றியுள்ளார். 


முடிவுரை 


நாட்டின் இலக்கணத்தைக் கூறவந்த வள்ளுவர் 'தள்ளா விளையுளும்' என்று முதற்கண் வேளாண்மையைத் தான் குறிப்பிடுகிறார். சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் உழன்றும் உழவே தலை என்றும் வள்ளுவரால் பெருமைப் படுத்தப்பட்ட உழுதொழிலைச் செய்யும் உழவர் இன்று உற்சாகமிழந்து நிற்கின்றனர். அரசு பல சலுகைகளை அளித்தபோதும் வரிப்பளு மிகுதியாக உள்ளதாகக் கருதுகின்றனர். கற்றவர்கள் இன்று இத்தொழிலைச் செய்ய படித்துப் பட்டம் பெற்று கையில் மண்படாமல் முன்வருவதில்லை. விவசாயிகளும் தங்கள் குழந்தைகள் உத்தியோகம் பார்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள். அரசு, உழவர் நிலை உயர ஆவன செய்ய வேண்டும். உழவர்களும் அத்தொழிலை ஆர்வத்துடன் செய்திட வேண்டும். 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்றார்  பாரதியார். உழவு செழித்தால் தான் தொழில் செழிக்கும். இவை இரண்டும் செழித்தால்தான் நாடு செழிக்கும். இதை உணர்ந்தே அன்று ஒளவை மன்னனை 


வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான்


என்று வாழ்த்தினார். நாமும் அதையே கூறி உழவர்களை வாழ்த்துவோமாக.

கருத்துரையிடுக

புதியது பழையவை