அண்மை

வாரிசு - சிறுகதை

வாரிசு - சிறுகதை


கொல்லையில் வெட்டிப் போட்ட மரக்கிளைகளை, விறகாக கோடரியால் பிளந்து கொண்டிருந்தான் சிவனாண்டி.


"யோவ் சேதி தெரியுமா? நம்ம வடக்குத் தெரு மணி வாத்தியார் செத்துப் போயிட்டாராம். கடவுள் நம்ம கண்ண தெறந்துட்டாரு" என்று கூறியபடியே ஓடி வந்தாள் சிவனாண்டியின் மனைவி வேலம்மா.


பிணத்தை புதைப்பதையும், எரிப்பதையும், தொழிலாகக் கொண்ட சிவனாண்டிக்கே, மணி வாத்தியார் இறந்த செய்தி சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கண்களின் ஓரத்திலிருந்து சிறு நீர்த்துளி உருண்டு விழுந்தது.


"என்ன புள்ள சொல்ற ? அந்த நல்ல மனுஷனா செத்துபோனாரு?  நம்ம புள்ள, இன்னைக்கு மெட்ராசுல பேக்டரில வேலை செய்யுறான்னா, அதுக்கு அவர் சொல்லிக் கொடுத்த படிப்புதான் காரணம். அவருக்கா இந்த கதி?


என்னய்யா பன்றது? நம்ம பொழப்பையும் பார்க்கனும்ல. பத்து நாளாக ஊருல சாவே இல்ல. அத நம்பிக்கெடக்குற நமக்கு, சோறு தண்ணீ யாரு போடுவா? நல்ல வேள பெரிய வீட்டு சாவா வந்திருக்கு. அவரு பையன் அமெரிக்காவில் தானே  இருக்காரு? சாவுக்கு வருவார்ல?"


"அவங்க வீட்டம்மா, போனதுலேருந்தே, அந்த அய்யா முகமே துவண்டு போச்சு. அந்தம்மா சாவுக்கு, அவங்க பெத்த ஒத்த புள்ள வரல. எல்லோரிடமும் கலகலன்னு  பேசுறவரு, அப்படியே அமைதி ஆயிட்டாரு. வெளியே எங்கேயும் போகாம வீட்டுலேயே முடங்கிட்டாரு."


மனைவி இறந்த பிறகு மணி வாத்தியரோடு கூட இருந்தது, இரண்டு காளை மாடுகளும், ஒரு பசு மாடும்தான்.


காலையில் எழுந்ததும், மூன்று மாடுகளையும் ரெங்கசாமி மேய்ச்சலுக்கு அழைத்து சென்று மாலையில் வந்து கட்டுவான். "என் காலத்துக்கு பிறகு மூனு மாட்டையும் நீயே ஓட்டிக்க" என்று வாத்தியார் அவனிடம் சொல்லி வைத்து இருந்தார்.


வாத்தியார் இறந்த அன்றும், துக்கம் மனதுக்குள் இருந்தாலும், மாட்டை ஓட்டிக் கொண்டு மேய்ச்சலுக்கு தயாரானான் ரெங்கசாமி. வழக்கமாக துள்ளிக்கிட்டு வரும் பசு மாடு, வராமல் அடம்பிடித்தது. திரும்பி பார்த்தான் ரெங்கசாமி.  பசுவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. வாத்தியார் இறந்து போனது அதற்கும் தெரிந்துவிட்டது


அதற்குள் பிரசிடெண்ட் வீட்டிலிருந்து சிவனாண்டியை கூப்பிட ஆள் வந்துவிட்டது.


"என்ன சிவனாண்டி சேதி தெரியுமில்ல. உடனே கிளம்பி வர வேண்டியதுதானே? உனக்கு வெத்தல, பாக்கு வச்சு கூப்பிட்டாத்தான் வருவியா? ஒன்னோட அண்ணன் மவனுங்க கிட்ட தப்புக்கு சொல்லிடு. வெறகு, ராட்டி உள்பட ஒனக்கு என்ன வேணும்னு லிஸ்ட் குடு. டவுனுக்கு ஆளு அனுப்பனும்.


வேறு வேட்டிய மாற்றிக் கொண்டு, அரிவாளை எடுத்து கொண்டு, அண்ணன் மகன்களையும் உடனே வரச் சொல்லிவிட்டு, வடக்குத் தெரு புறப்பட்டான் சிவனாண்டி.


மணி வாத்யார் வீட்டு வாசலில் பெரிய பந்தல் போடப்பட்டு இருந்தது. ஊர் தலைவர் சிவானந்தம் பரபரப்பாக எல்லோருக்கும் உத்தரவு பிறப்பித்துக் கொண்டு இருந்தார்.


மணி வாத்தியார் உள்ளூரிலேயே பல வருடம் ஆசிரியராக இருந்து விட்டதால், மாணவர்களும், பெற்றவர்களும் கூடி விட்டார்கள்.


மணி வாத்யார் வீட்டை விட, அந்தக் கிராமத்தில் இருக்கும் ஒரே பூக்கடையில்தான் மாலைக்காக கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


மணி வாத்யாரின் நண்பரும் அவரோடு பள்ளியில் வேலை பார்த்தவருமான தமிழாசிரியர் அண்ணாமலை சேதி தெரிந்து காலையிலேயே வந்து விட்டார். சேரை எடுத்து போய் பிரசிடெண்ட் அருகில் போட்டு அமர்ந்தார்.


அவருக்கும் அவர்தான் ஆசிரியர் என்பதால், பதறிய படியே எழுந்து நின்றார் சிவானந்தம்.


அவரை அருகில் உட்கார வைத்தார் ஆசிரியர் அண்ணாமலை.


"தம்பி! நீ ஊர் தலைவர் ஆனதிலும், எல்லாம்  நல்லபடியா நடப்பதிலும் மகிழ்ச்சி. இறந்து போன மணி, என்னிடம் முப்பதாயிரம் ரூபாயை கொடுத்து," எனக்கு ஒன்னு ஆச்சுன்னா இறுதி காரியம் செய்யும் செலவுக்கு இத வச்சுக்க" என்று என்னிடம் கொடுத்துட்டு போனாரு.


"எனக்கு உள்ள நோவுக்கு, நான்தானப்பா முதல்ல போவேன்" என்று விளையாட்டா சொன்னேன். கடைசியில் அவரு நினைச்சதை சாதிச்சுட்டு போயிட்டாரு.


காலையிலிருந்து இது விஷயமா, நீதான் ஓடியாடி வேலை செய்யுற. இந்தா! இந்தப் பணத்தை வச்சுக்க" என்று முப்பதாயிரம் கட்டியிருந்த பொட்டலத்தை சிவானந்தத்திடம் நீட்டினார்.


"இவ்ல அய்யா! மணி சார் இறந்த செய்தியை, அமெரிக்காவில் உள்ள அவர் மகன் அரவிந்த்துக்கு  காலையிலேயே போன் அடிச்சு சொல்லிட்டேன். அவர் குடும்பத்தோட வர வாய்ப்பில்லையாம்,  தான் மட்டும் வரப் போவதாக சொன்னாரு. அவர் வர மூன்று நாளாகும் என்பதால் நல்ல படியாக பாடிய நம்மலயே எடுத்துட சொன்னார்."


இதைக் கேட்டதும் சில பெண்கள் ஆவேசமானர்கள். "அந்த புள்ளதான் புத்தி இல்லாமல் சொல்லுதுன்னா,  கேட்குறவங்களுக்கு, எங்கேபுத்தி போச்சு? அவரு முகத்தை அந்த புள்ளக்கு காட்டாம, அடக்கம் பண்ணக்கூடாது. புள்ளய பார்க்குலேன்னா, அவர் ஆத்மா ஆவியா அலையாது? இது ஊருக்கு நல்லதா? என்று ஆளுக்கு ஆள் சத்தம் போட்டார்கள்.


"என்னை எதிர்பார்க்காம பாடிய எடுத்துருங்க" என்ற அரவிந்த் சொன்ன செய்தியை கேட்ட தமிழ் ஆசிரியர், மேல் துண்டால் முகத்தை மூடிக் கொண்டு தேம்பி தேம்பி அழுதார்.


கோவில் பூசாரி அருகே வந்து, " அய்யா அழாதீங்க! நீங்களே இப்படி கலங்கலாமா?" என்றார்.


"இல்ல ராமசாமி! இந்த புள்ளைக்காக மணி எவ்வளவு பாடுபட்டு இருப்பாரு?  வாத்தியார் புள்ள மக்குன்னு இந்த ஊர் சொல்லிடக் கூடாதுன்னு சென்னையில் பெரிய காலேஜில்  படிக்க வச்சாரு. சென்னையில படிச்சு முடிச்சதும் கேம்பஸ் இன்டர்வியூல அமெரிக்கா கம்பெனிக்கு செலக்ஷன் ஆனான். பிள்ளைய விட்டுட்டு  இருக்க முடியாதுன்னு, "அமெரிக்கா வேண்டாம்"னு அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ கெஞ்சி பார்த்தாங்க.


"லட்ச ரூபாய் சம்பளத்த இங்கே யாராவது  கொடுப்பாங்களா? கடவுள் நமக்கு கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தாமல்  வீணடிக்க கூடாது" என்று அரவிந்த் அவர்களை சமாதானப்படுத்தி விட்டான்.


மனசக் கல்லாக்கிக் கொண்டு, அரவிந்தை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள். வாரா வாரம் அம்மாவுக்கு வரும் போன், பின்னர்  மாதா மாதம் ஆனது.


அங்கேயே சிட்டிசன் ஆகிவிட்டால் சலுகைகள் அதிகம் கிடைக்கும் என, ஆபிஸில் கூட வேலை செய்யும் அமெரிக்கப் பெண்ணையும் திருமணம் செய்துவிட்டான்.


அவன் திருமணம் செய்ததே அவன் அம்மா லட்சுமிக்கும், மணிக்கும் ஒரு வருடம் கழித்துதான் தெரியும். இரண்டு பிள்ளைகள்.


லட்சமி போன் பேசும்போதெல்லாம், மருமகளையும், பேரப்பிள்ளைகளையும் கொண்டு வந்து காட்டச் சொல்லி பல முறை போனில் அழுதிருக்கிறாள்.


"அவங்களுக்கு இங்லீஸ்தான் தெரியும். உனக்கு தமிழ்தான் தெரியும். நீ அவங்களை பார்த்து என்ன செய்யப் போற" என்று அம்மாவை மடக்கிவிடுவான்.


பாசம் என்றால் என்ன என்று அவனுக்கு எப்படி தெரியும்?

என் பிள்ளையையும், வெளிநாடு அனுப்பனும்னு எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனா எம் மவன், நான் வெளிநாடு போயிட்டா, உடம்பு முடியாத உங்களையும், அம்மாவையும் யாரு பார்த்துப்பான்னு போக மாட்டேன்னுட்டான். அது மட்டுமல்லமால் சாதாரண ஓட்டல்ல மேனேஜரா சேர்ந்துட்டான். அப்ப பொழைக்க தெரியாதவனா இருக்கானேன்னு நினைச்சேன். இன்னைக்கு நான் பொழச்சு கிடக்கிறதே, என் புள்ளையால்தான்னு தெரிஞ்சுக்கிட்டேன்." என்று பேசிக்கொண்டே இருந்தார்.


சேதி கேள்விபட்டு, அலறி அடித்து கொண்டு ஓடி வந்தாள் மணி வாத்தியார் ஒரே தங்கச்சி, அலமேலு.


"எங்க அண்ணன் சாகக் கிடக்குதுன்னு  யாருமே சொல்லலேயே. தெரிஞ்சுருந்தா வந்து நாலு வார்த்தை பேசிட்டாவது போயிருப்பேனே! போன வருடம் அண்ணி சாகக்கிடக்கிறக்கப்பே வந்தேன்.


எல்லோரும் புள்ளய படிக்க வைக்காம போனோமேன்னு அழுவாங்க. ஆனால் அண்ணி, என் புள்ளய படிக்க வைச்சு வெளிநாட்டுக்காரிக்கு தார வாத்துட்டனேன்னு அழுதாங்க. படிக்காமல் விட்டிருந்தா கூட ,விவசாயத்தை பாரத்துகிட்டு என் காலடிய சுத்தி, சுத்தி வந்திருப்பானேன்னு அழுதாங்க. ஒரு தடவையாவது என் புள்ளய எங்கிட்ட  காமிங்கன்னு அழுது அழுதே உயிர விட்டாங்க" என்று புலம்பிக்கிட்டே இருந்தாள்.


மூன்று நாள் கழித்து தகனம் செய்வதால், வெளியூரில் வேலை செய்யும் அவருடைய பழைய மாணவர்கள் எல்லாம் அஞ்சலி செலுத்த வந்துவிட்டார்கள்.


அரவிந்தன் வரும்வரை ஃபிரீசர் வேலை செய்ய, வாசலில் ஜெனரேட்டர் இறங்கியது. தெருவுக்கே டியூப்லைட் கட்ட பிரசிடெண்ட் ஏற்பாடு செய்துவிட்டார். டவுனிலிருந்து சாவுக்கு கிளாரிநெட் இசைக்கும் இசைக் கலைஞர்கள் மூன்று நாளுக்கும் புக் செய்து விட்டார் பிரசிடெண்ட்.


சாவுக்கு வேலை செய்பவர்கள் சாப்பிட, பக்கத்து தோட்டத்தில், பந்தல் போட்டு உணவு தயாரிக்கப்பட்டது. துக்கம் விசாரிக்க வந்தவர்கள் உள்பட அனைவருக்கும் காபி டீ இருபத்து நாலு மணி நேரமும் வழங்கப்பட்டது. வந்த பணத்தை  வேறு எப்படிதான் செலவு செய்வது?


அரவிந்த் சென்னை வந்துவிட்டதாக,  பிரசிடெண்டுக்கு போன் செய்தான். டவுனில் புக்கிங் செய்துள்ள ஹோட்டல் பெயர், ரூம் நெ போன்றவற்றை கேட்டுத் தெரிந்து கொண்டான். ஊருக்கு வந்ததும் ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு, ஸ்பாட்டுக்கு வந்து விடுவதாக சொன்னான்.


மாலை 4 மணி


குளு குளு ஏசி கார், மணி வாத்தியார் வீட்டு வாசலில் வந்து நின்றது. அரவிந்தன் இறங்கினான். வாசலில் நின்று கொண்டிருந்த கிராமத்து மக்கள் அவனை  பார்த்ததும், பெருங்குரலெடுத்து அழுதார்கள். கிராமத்து மக்களின் அழுகை அரவிந்தையே சற்று சலனப்பட வைத்தது. அவன் கண்களிலும் நீர் துளிர்த்தது.


"நீங்க தேடின உங்க புள்ள வந்துட்டான். கண்ணை திறந்து பாருங்கையா" என்ற சத்தம் வாசல்வரை கேட்டது.


அப்பாவுக்கு மாலை ஒன்றை போட்டுவிட்டு வாசலில் வந்து அமர்ந்தான் அரவிந்த். பிள்ளையை பார்க்கும் சடங்கு முடிந்தவுடன், விறுவிறுவென குளிப்பாட்டுதல் முடிந்து, உடல் பாடையில் ஏற்றி இடுகாடு எடுத்துச் செல்லப்பட்டு, காரியங்கள் முடிந்தது.


மறுநாள் ஊர் தலைவர் சிவானந்தத்தை அழைத்தான் அரவிந்த்.


"எனக்கு பத்து நாள்தான் லீவ் இருக்கு. நான் இனிமேல் இந்தக் கிராமத்துக்கு வர வாய்ப்பில்லை. அதனால் அப்பாவுக்கு சொந்தமான நிலம், வீடு, கொல்லை எல்லாவற்றையும் விற்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்றான்.


"தம்பி அதற்கெல்லாம் ஏகப்பட்ட ஃபார்மாலிட்டீஸ் இருக்கு. டெத் சர்டிபிகேட் எடுக்கனும். வாரிசு சர்டிபிகேட் எடுக்கனும் விற்பதற்கு ஆள் பார்க்கனும். இதெல்லாம் உடனே ஆகக்கூடிய காரியமா?"


எனக்கு இன்டியன் பார்மாலிட்டீஸ் எல்லாம்  தெரியாது. உங்கள் கட்சிதானே ஆளுங்கட்சி. நீங்க நெனச்சா முடியாதா? எல்லா வேலையும் நீங்க பார்த்துக்குங்க. எங்க கையெழுத்து போடனும் சொல்லுங்க. எனக்கு பணம் மட்டும் செட்டில் பண்ணுங்க"


பிரசிடெண்ட்  சிவானந்தத்தின் குறுக்கு மூளை வேலை செய்தது. அவர் சார்ந்த கட்சியின் மாவட்ட செயலாளர் இப்படி வரும் சொத்துக்களை எல்லாம் வாங்கி போடுபவர்தான். அவரை பார்த்தால் என்ன?பத்திரமே இல்லாத சொத்துக்களை கூட வாங்கிப்  போட்டுக் கொண்டு, பிரச்சனை என்றால் பஞ்சாயத்து பேசி முடித்துவிடுவார். போலீஸ், கோர்ட் எல்லாம் அவரிடம் அடக்கம்.


மறுநாளே மாவட்டச் செயலாளரை பார்த்தார் சிவானந்தம்.


"அண்ணே! சொத்து ஒன்னு நம்ம ஊர்ல வருது. வீடு, கொல்லை, வயலெல்லாம் இருக்கு. பாடுபட்டு சொத்த சேர்த்தவரு, போய் சேர்ந்துட்டாரு. மகன் ஏதோ ஒரு ரேட்டுக்கு வித்துட்டு போக துடிக்கிறான். இரண்டு வருஷம் போனா ஒரு கோடி போகும். இப்போது இருபது, முப்பது லட்சம் கொடுத்து முடிச்சுடலாம். படிச்சவனா இருந்தாலும் அவனுக்கு உலக அறிவு இருக்கிறதா தெரியல."


"அப்படியா அந்த கோழிய அப்படியே அமுக்கு! உனக்கு அஞ்சு லட்சம் தனியே எடுத்து வச்சுடறேன்."


அரவிந்திடம்  மாவட்ட செயலாலரே வந்து பேசினார். முப்பது நாற்பது பேப்பர்களில் கையெழுத்து வாங்கினார்கள். ஒரு பெருந்தொகை கை மாறியது.


"நான் முக்கியமாக இந்தியா வந்ததே இந்த டீலை முடிக்கத்தான். நல்ல படியாக முடித்துக்கொடுத்தீர்கள். ரொம்ப தேங்ஸ்" என்று பிரசிடெண்டிடம் கை கொடுத்தான் அரவிந்த்.


மாலை ரெங்கசாமி மாடுகளை மேய்ச்சல் முடித்து ஓட்டி வந்தான்.


தமிழாசிரியர் அண்ணாமலை அரவிந்திடம், "தம்பி! அப்பா காலத்துக்கு பிறகு மூன்று மாடுகளையும் ரெங்கசாமியிடம் கொடுப்பதாக, வாக்கு கொடுத்துள்ளார். அதனால அந்த மாடுகளை பிடிச்சு அவன் கிட்ட கொடுத்திடுவோம்" என்றார்.


இந்த செய்தி  அரவிந்துக்கு புதுமையாக இருந்தது. ரெங்கசாமியை அருகே அழைத்தான்.


"மாடுகளை பராமரிக்க எங்க அப்பா சம்பளமாக எதுவும் கொடுத்தாரா?"


"என்ன அய்யா அப்படி கேட்டுட்டீங்க? சம்பளம் மட்டுமா? என்னோட மக   கல்யாணத்தையே, உங்க அப்பாதான் செஞ்சு வச்சார்"


"அப்படி இருக்கும்போது, மாடுகளும் வேணும்னு கேட்கிறீங்களே இது உங்களுக்கு நியாயமா தெரியுதா?"


"தம்பி, உங்களை வளர்த்த மாதிரிதான், புள்ளயா நினைச்சு, இந்த மாடுகளையும் அய்யா வளர்த்தார். என்னால பராமரிக்க முடியல வித்துருங்கன்னு சொன்னபோது எவன் கையிலேயாவது போனா, இதுக அடிமாடா போயிடும். உயிர் உள்ள வரைக்கும் நான் வளர்க்கிறேன், அதற்கு பிறகு நீ கொண்டு போய் வளர்த்துக்கன்னு அய்யா  சொன்னாருங்க.


அய்யா எனது தெய்வங்க. அய்யாவோட வாரிசு நீங்க. நீங்க என்ன சொன்னாலும் கேப்பேனுங்க"


"வெளியில, மூனு மாடும் ஒரு லட்ச ரூபா விலை போகும்னு  சொன்னாங்க. வேணும்னா, நீ பாதி காசு கொடுத்து எடுத்துக்க. வயல பார்த்துக்க சொன்னா, வயலே எனக்கு சொந்தம்னு சொல்றது, மாட பார்த்துக்க சொன்னா, மாடே எனக்கு சொந்தங்றது போன்ற சீட்டிங் கலாச்சாரம் எல்லாம் என்னிடம் நடக்காது"


அரவிந்த் பேச பேச அதிர்ச்சியில் உறைந்து நின்றான் ரெங்கசாமி.


ஆசிரியர் அண்ணாமலை வீட்டில் படமாக மாட்டியிருக்கும் மணி வாத்தியாரிடம் வந்தார்.


"ஊருக்கெல்லாம் நல்ல புத்தி சொல்லிக் கொடுத்தியே. உன்னோட வாரிசுக்கு நல்லது கெட்டது  சொல்லித்தர மறந்துட்டியே" என்றார் வேதனையுடன்.


ஊதுபத்தி போல உள்ளமும் புகைந்தது.


அரவிந்த், அமெரிக்க புறப்படும் நாளும் வந்தது. வாடகைக் கார் வாசலுக்கு வந்து விட்டது.


அப்போது அவனுடைய செல்லுக்கு ஒரு கால் வந்தது. அவனுடைய மனைவிதான் பேசினாள். அவளுடைய குரலில் ஒரு பதட்டம்,


"என்ன நான்ஸி எல்லோரும் நல்லா இருக்காங்கள்ல?"


"இல்ல அரவிந்த், இன்னைக்கு உங்கள்  ஐடிக்கு  கம்பெனியிலிருந்து, ஒரு மெயில் வந்தது. அமெரிக்காவுல உள்ள  எல்லா கம்பெனியிலேருந்தும், எக்கானமிக் கிரிஸிஸ் காரணமா, பத்து பர்சன்ட் ஸ்டாஃப நீக்குறாங்களாம். திறமை, வயது பார்த்து நீக்குனா பிரச்சனை வரும்னு, குலுக்கல் முறையில நீக்குறாங்களாம். அதில உங்க பேரும் இருக்காம். அடுத்த மாதம் முதல் வேலை இல்லையாம். இனி இங்க வேலை தேடுவது சாதாரண வேலை இல்ல.


அதனால நாம இந்தியாவுக்கே போயிடுவோம். நமக்குதான் சொந்தமா ஹவுஸ், லேன்ட், பிராப்பர்டி எல்லாம் அங்க இருக்குல்ல, உங்க திறமைக்கு இந்தியிவிலேயே வேலை வாங்கிக்குக்குவோம்" என்றாள்.


அவள் பேச பேச மறுவார்த்தை பேசமுடியாமல் சிலையாக நின்றான் அரவிந்த்.


ஜெ மாரிமுத்து

2 கருத்துகள்

  1. இந்த கதையை விடவா வம்சியின் வாரிசில் கதை இருந்துவிட போகிறது???

    பதிலளிநீக்கு
  2. சிவனாண்டி யை கொண்டு தொடங்கிய கதை அவனை அம்போனு விட்டிருக்ககூடாது.. அவனுக்கும் எதாச்சும்final touch வைச்சிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை