அண்மை

வலிக்குது - தீசன்

வலிக்குது - தீசன்

“மகமாயி குண்டாத்தா வந்துரக்கூடாது.. குண்டாத்தா வரக்கூடாது” வீட்லேந்து இத சொல்லிட்டே பொறப்பட்டதுதான் ஞாவகம் எப்படி ஸ்கூலு போயி சேந்தேனே தெரியல. வெள்ள சட்டையும் நீல டவுசரையும் மாட்டிவுட்டு அம்மா என்ன கெளப்பிகிட்டு இருந்தப்ப நா ஸ்கூலுக்குப் போமாட்டேன்னு அழுதுட்டு இருந்தேன்.

“அம்மா முடியலம்மா ரொம்ப வலிக்குதும்மா நா போம்மாட்டேன்.. எத்தன தடவ சொல்லுவேன் நீ வாம்மா கேளும்மான்னு”
“ஒத விழும் சீக்கரம் கெளம்பு”
“அம்மாஅஅ வலிக்குதும்மாஅஅஅ…..”னு தேம்பி தேம்பி அழுதேன்.

அப்ப அம்மா என் பாக்கெட்ல வாசல்ல இருக்குற வேப்பங் கொழுந்து ரெண்ட கிள்ளிப் போட்டு மகமாயி இருக்கா பயப்புடாதேனு சொன்னாங்க..

டீச்சர் வந்திருந்தாங்க.. “மகமாயி ஏமாத்திப்புட்டாளே..” ரொம்ப எரிச்சலா இருந்துச்சு. ஒடம்பு நடுக்குச்சி. ஒன்னுக்குப் போகயில சிலநேரம் சிலுத்துக்கிட்டு நடுக்குமே அப்புடி நடுக்குச்சு. ப்ரேயர் வராததுக்கு அடிவிழுமோனு ரொம்ப பயந்தேன். ஆனா டீச்சர் எதுவுமே சொல்லல. அம்மா வச்ச வேப்பலைய பாத்துக்கிட்டேன். உள்ள பாயில உக்காந்தப்போ கொஞ்சம் பதட்டம் தணிஞ்சிருச்சி.

எலிசபத்து டீச்சர் பக்கத்து கிளாஸ் டீச்சரு. ரெண்டாம்ப்பு டீச்சர். கட்டயா கறுப்பா இருப்பாங்க. வரும்போது கொடப்புடிச்சிட்டே வருவாங்க போம்போதும் கொடப்புடிச்சிட்டே போவாங்க. அவங்க புள்ளைங்களுக்குப் பந்து எடுத்தாந்து வெளாட வப்பாங்க. யாரயும் அடிக்க மாட்டாங்க. ரொம்ப நல்லவங்க.

வரவழில எலிசபத்து டீச்சர பாத்தேன்.

“குட் மார்னிங் டீச்சர்”
“குட் மார்னிங்.. எத்தனாது?”
“ஒன்னாது டீச்சர்”
“சீக்கரம்போ லேட்டாயிடுச்சில”
“சரி டீச்சர்”

எனக்கு எலிசபத்து டீச்சர ரொம்ப புடிக்கும். குண்டாத்தாவ எனக்கு சுத்தமா புடிக்கலே. மொகமெல்லாம் மஞ்சப் பூசி அவங்க பல்லும் முடியும் பெரியாச்சியாட்டம். “நா சீக்கரம் ரெண்டாம்ப்பு போவனும் ஒன்னாம்ப்பு புடிக்கலே”னு அப்பப்போ மனசுல சொல்லிப்பேன்.

அன்னிக்கி அம்மா எனக்குச் சோறூட்ட வந்திருந்தாங்க. பள்ளியோடத்து தூங்குமூஞ்சி மரத்த ஓடி தொட்டார ஒருவாயி அதான் கணக்கு. கூடப்படிக்குறவனு தட்டெடுத்தாந்து சத்துணோ வாங்கிட்டு எங்கூட சாப்புடுவானுவோ.

“சாப்புடகூடத் தெரியாதா ஒனக்கு” அஜய் கிண்டலடிப்பான்.
“நல்லா சொல்லுடா தம்பி” அம்மாவும்.

எப்பவும் அம்மா வந்துட்டு போறமாரிதான் ஆனா அன்னிக்கி ஈஸ்வரி டீச்சர் அம்மாவ பாத்துட்டாங்க.

“உங்க பையன் சுத்தமா படிக்கமாட்டேங்குறான். கிளாஸ்லே இருக்க மாட்டேங்குறான். பத்து வார்த்த டிக்டேசன் வச்சா பத்துக்கு ஒன்னு வாங்குறான். சுத்த மக்கு”

எங்க அம்மா அவங்க கணக்குக்கு, “ஒழுங்காவே சாப்புட மாட்டேங்குறான் டீச்சர் கொஞ்சம் சொல்லுங்க.. வாராவாரம் செருப்பு வாங்கியா தரமுடியும்.. நீங்க வெள்ளயே கழட்டி போட்டுட்டு வரச்சொல்றீங்களாம். காணா காணா போய்டுது.. எத்தன மொற வாங்கி தரது..”

“பாயி போட்டு இருக்குல.. செருப்பு போட்டுட்டேவா ஒக்கார வைக்க முடியும். இத்தன புள்ள படிக்குது. இதுவோளு எதுக்காது காணா போவுதா.. உங்க புள்ள சமத்து இல்ல”

அம்மா என்னய செருப்பு கண்ணுல படுறமாதிரி உக்காந்துக்கோனு சொல்லிட்டுப் போய்ட்டாங்க. அவங்க போனப்றம் ஈஸ்வரி டீச்சர், நாக்க துருத்திக்கிட்டே வந்து என் காத திருகி,

“உன் அம்மாவா அது….”
“ம்ம்”
“ஓவரா பேசுது..”

நா அழுதேன். வீட்டுபெல்லு அடிக்குற வரைக்கும் அழுதேன். “குண்டாத்தா செத்துப்போனும் சாமி..” அழுவுறப்ப வேண்டிக்கிட்டேன்.

ஜனனி அக்கா எனக்கு சொந்தமானு தெரியல. ஆனா அடியக்கமங்கலத்துல அவங்கள ரெண்டு மூனு மொற எங்க வீட்டுலயே பாத்து இருக்கேன். வெள்ளையா உயரமா இருப்பாங்க. திருஷ்டி பொட்டு வச்சாப்ல சரியா கன்னத்துல அவங்களுக்கு ஒரு மச்சம் இருக்கும். திருவாரூர் வந்த பிற்பாடுதான் அவங்களும் என் ஸ்கூல்லே படிக்குறது எனக்குத் தெரிஞ்சிது. அது எப்படினா.. ஒருநா மதியம் எங்கள பாத்துக்க ஜனனி அக்கா வந்தாங்க.

சாப்பாட்டுபெல்லு அடிச்சோன மொதல்ல நாங்க சாப்ட்டு முடிச்சிடுவோம் அப்பறந்தான் ஒன்னாம்ப்பு டீச்சருங்க எல்லாம் ஒன்னுகூடி சாப்புட ஆரமிப்பாங்க.. ஊருகத பேசிட்டே அவங்க சாப்புடும்போது ஒருசத்தம் வந்துடக்கூடாது. அவங்க வர வரைக்கும் வாயில வெரலு வச்சிகிட்டு கம்முனு உக்காந்துருக்கனும். இதுக்காண்டியே எட்டாம்ப்பு பொண்ணுங்க எங்கள பாத்துக்க வருவாங்க. யாராச்சும் பேசுனா டீச்சர்ட்ட மாட்டிவுட்டுட்டு போய்டுவாங்க. அவங்கள டொக்கு டொக்குனு நல்லா சத்தம் கேக்குறகணக்கா குண்டாத்தா கொட்டி கொட்டி அழவைப்பா. இதான் தெனம் மதியம் நடக்கும்.

அன்னிக்கி ஜனனி அக்கா வந்தோன எனக்கு ரொம்ப சந்தோசமாய்ட்டு, “ஏ.. இவங்க எங்க அக்காடா.. எனக்கு தெரிஞ்சவங்கடா”

ஜனனி அக்காவும் என்ன பாத்து நல்லா இருக்கீயானு கேட்டாங்க. எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு. வகுப்பே என் கட்டுப்பாட்டுல வந்ததாட்டம் நெனச்சிக்கிட்டேன். வேணும்னே அஜய்கிட்டயும் நவீனுகிட்டயும் குச்சி கொடுடா, சிலேட்ட எடுடானு பேசி வம்பிழுத்தேன். அவனுங்க பேச முடியாம உக்காந்திருக்கறது எனக்கு சிரிப்பா இருந்துச்சி. எல்லாரும் வாயிமேல வெரல வச்சிட்டு ஒக்காந்திருக்குறப்ப நாமட்டும் எந்திருச்சி நெலுவெடுத்தேன். ஜன்னல் பக்கம் ஓடிப்போயி வேடிக்க பாத்தேன். ஜனனி அக்கா என்ன ஒன்னுமே சொல்லல.

“நாளைக்கும் வருவீங்களாக்கா” நா இப்படி கேக்குறப்போ வெண்ணிலா டீச்சர் என்னய பாத்துட்டாங்க

“உங்க புள்ளங்கதான் டீச்சர் பேசுதுங்க”

சாப்ட்டுகிட்டு இருந்த ஈஸ்வரி டீச்சர் எழுந்துருச்சு வந்து என்னய பத்துக் கையோடே கொட்டுனாங்க. மொத கொட்டுலே என் கண்ணு கலங்கி போச்சி. அப்பறமும் விடாம கிளாஸ் நடுவுல என்ன முட்டிபோட வச்சிட்டாங்க. டவுசர் கால் முட்டி சுல்லுசுல்லுனு குத்திச்சு. ஜனனி அக்கா போகுறவரைக்கும் நா முட்டிபோட்டே இருந்தேன். அவங்கள பாக்க பாக்க எனக்கு அவமானமா இருந்துச்சு. தொண்டேல நிக்குற அழுகைய எவ்ளோ நேரம் அடக்கிட்டே இருக்க முடியும்? ஜனனி அக்கா போக போக தொண்டேல அடக்குனது தேம்பலாகிட்டு. அழுதேன்.

அம்மா பாக்கெட்ல வச்சுட்ட வேப்பலய ரொம்ப நம்புனேன்.

“ப்ரேயருக்கு வராம இருந்தும் டீச்சர் அடிக்காதது மகமாயினால தான். அவளவுட பெரிய சாமி வேற என்ன.. இந்த வேப்பல நம்மள்ட்ட இருக்குறவரை நமக்கு ஒன்னும் ஆகாது”

மனசுக்குள்ள தைரியம் சொல்லிகிட்டேன். டீச்சரு ஆனா டிக்டேசனுக்கு உக்கார சொன்னோன ஒடம்பு நடுங்க ஆரம்பிச்சிட்டு. அவுங்க இங்கிலீஷ் வார்த்த சொல்ல சொல்ல எழுதனும். அன்னிக்கி சொன்ன பத்துல ஒன்னுகூட எனக்குத் தெரியல.

திருத்த எல்லாம் வருசேல நின்னோம். ஒரு தப்புக்கு ஒரு அடி அதான் கணக்கு. நாந்தான் உள்ளத்துலே அதிக அடிவாங்க போறேன். பயத்துல ஒடம்பு நடுக்குச்சு.. நெஞ்சோட சிலேட்ட அணச்சி வச்சிக்கிட்டு நகந்தேன். படபடப்புல வியர்வை ஊத்துது.

டீச்சர் என் சிலேட்ட வாங்கி பாத்து சட்டுனு ஒரே வீசா வீசி எறிஞ்சாங்க. நாக்க துருத்திகிட்டு அக்குள் தோல சட்டையோட புடிச்சி நரநரனு கிள்ளிகிட்டே இருந்தாங்க.

வலி பொறுக்காம “ஐயோ டீச்சர். ஆ.. டீச்சர்..”னு நா அங்கயும் இங்கயும் குதிச்சேன். அதுவரை சதையால கிள்ளுனவங்க நல்லா நகத்த வச்சி நறுக்குனு கிள்ளிட்டாங்க

“வேணா டீச்சர். வலிக்குது டீச்சர்”னு கெஞ்சுனேன்.

“ஏன்டா பத்து வார்த்தேல ஒத்த வார்த்தக்கூட ஒனக்குத் தெரியாதா” அப்படினு சொல்லிகிட்டே என்கால இழுத்து கவட்ட தோலு வயண்டு போற அளவுக்கு நகத்தால திருகி எடுத்தாங்க. டக்குனு என்அதுல அவங்க நகத்தால கிள்ளுனப்ப தான் வலிபொறுக்க முடியல. துடிதுடிக்க ஆரம்பிச்சிட்டேன். கண்ணுலேந்து தண்ணியா ஊத்த ஆரமிச்சிட்டு.

“ஐயோ டீச்சர் வேணா டீச்சர்.. வுட்டுடுங்க டீச்சர்.. ஐயோ அம்மா காப்பாத்தும்மா"னு வலி தாங்க முடியாம தரைல அடிச்சிகிட்டு கத்தி அழுதேன். பக்கத்து கிளாஸ் டீச்சர்லாம் எனக்கு வந்து பேசுனாங்க. கொஞ்ச நேரத்துலயே கேவ ஆரம்பிச்சிட்டு.

“ஐயோ டீச்சர்… நடிக்குறான் டீச்சர் இவன்”

ஆனா உண்மையிலே என்னால வலிய தாங்க முடியல. டவுசர்ல லேசா ஒன்னுக்கு வேற உட்டுருந்தேன். நகத்தால கிள்ளுனதால நல்லா கடுக்க ஆரம்பிச்சிட்டு. நாள் பூரா அழுதேன். பாக்கெட்ல வேப்பிலை இருந்தா அடிக்கமாட்டாங்கனு அவ்ளோ நம்புனேன். ஆத்தா நம்மளோட இருக்குறதால அடி உழுந்தாலும் வலி தெரியாதுனு நெனச்சேன். மகமாயிமேல இருந்த நம்பிக்கையே போச்சு. சிலேட்டும் ஒடஞ்சு போச்சு.

புள்ளைக்கு ஒன்னு தெரியலனா டீச்சருங்க ஏன் இப்படி அடிக்குறாங்கனு நா ரொம்ப நாள் யோசிச்சிருக்கேன். சில டீச்சருங்களோட சொந்த புள்ளைங்களும் அதே ஸ்கூல்லதான் படிச்சாங்க. அந்தப் புள்ளிங்க என்ன பண்ணாலும் அதுங்களுக்கு அடியே உழாது. ஊரான் வூட்டு புள்ளமேலதான் சகட்டுமேனிக்கு அடிவிழும்.

மறுநாள் குளிக்கும்போது அக்குள்லயும் கவட்டகிட்டயும் அச்சா பதிஞ்சி போயிருந்துச்சு நகம். அக்குள் சேரும் போதெல்லாம் வின்னுவின்னுனு வலிச்சுது. கவட்டகிட்ட இரத்தம்கட்டுன மாதிரி வீங்கிட்டு.

“அம்மா நா போம்மாட்டேன்மா.. அடிக்குறாங்கம்மா.. நீயும் வாம்மா”
“ஒன்னு ஆகாது”
“கிள்ளுறாங்கம்மா.. கிள்ள வேணானாவது சொல்லிட்டு போம்மா.. வாம்மா என்னோட”
“இன்னொரு நாள் வந்து சொல்றேன். இன்னிக்கி போ”

திரும்பி ரெண்டு வேப்பிலை பாக்கெட்குள்ள வந்துச்சு. ஸ்கூல் போகவே பிடிக்கல. வூட்லயும் புரிஞ்சிக்கல. அண்ணன் இப்பலாம் முன்னாடியே போய்டுறான். ரோடு கிராஸ் பண்ண தெரிஞ்சதுலேந்து நா தனியாதான் போறேன்.

என்னால அழுகைய அடக்க முடியல.. ஈஸ்வரி டீச்சர நெனக்க நெனக்க பயமா வந்துச்சு.. கேவி கேவி அழுதுட்டே ஸ்கூலுக்கு நடந்தேன். கையும் காலும் அப்படி வலிச்சுது. வழியில இருக்குற ஆட்டோ ஸ்டாண்டுகிட்ட ஒரு வீட்டுவாசல்ல உக்காந்துட்டேன். கொஞ்சம் கொஞ்சமா அழுக உட்டுது. ஆனா நேரம் ரொம்ப ஆகிருக்கும். இன்னிக்கும் ப்ரேயருக்கு போவல. போன உடனே டீச்சர் கிள்ளுவாங்களே.. குச்சால அடிப்பாங்களே. அதுதான் என்மனசுல ஓடிட்டே இருந்துச்சு.

அப்பதான் பாஸ்கர் அண்ணன பாத்தேன். எங்க ஸ்கூல்லே வேல பாக்குற ஜோதி டீச்சரோட வூட்டுகார். ஆனா அப்போ அவரை எனக்கு மிட்டாய் அண்ணனாத்தான் தெரியும். எங்க ஸ்கூல்ல அவர் மிட்டாய் கடை போட்டிருப்பார். ஒன்னுக்கு உடும்போதெல்லாம் அவர்கடைக்குப் போயி காருவா முட்டாய் வாங்குவேன்.

நம்ம ஸ்கூல் பையன் ஒருத்தன் இந்த நேரத்துல இங்க ஒக்காந்து இருக்கானேனு என்ட வந்திருப்பார்போல.

“என்னப்பா ஆச்சு.. ஏன் இங்க உக்காந்துருக்க...”

அவ்ளோதான். விம்ம ஆரம்பிச்சிட்டு. ஸ்கூல் வேணாம்னு திரும்பி திரும்பி சொல்லிகிட்டே அழுதேன்.

அவரு என்னய தூக்குனார். சைக்கிள் கம்பி நடுவுல இருக்குற குட்டி சீட்டுல ஏத்திவச்சி ஸ்கூலுக்கு கூட்டிப் போனார். கடைக்கு வாங்கியாந்திருந்த முட்டாய்கள வச்சிட்டு எனக்குத் தண்ணி தந்தார். அப்போ என் விம்மல் தணிஞ்சிருச்சி.

“ஸ்கூல் புடிக்கலயா”
“ம்ம்…”
“எத்தனாது”
“ஒன்னாது”
“ஈஸ்வரி டீச்சர் கிளாஸா”
“ம்..”
“சரி வா”

அவர் என் கையப் புடிச்சார். ஏன்னு தெரியலை அவர் என்னை ரெண்டாம்ப்புக்கு கூட்டிப் போனார். எலிசபத்து டீச்சர்ட்ட ஏதோ சொல்லிட்டு, “இனி நீ ஒன்னாது இல்ல ரெண்டாதுன்னார்”

போகும்போது என்கையில ரெண்டு முட்டாய திணிச்சார். நா அத படக்குனு பாக்கெட்டுல போட்டுகிட்டேன். எலிசபத்து டீச்சர் கிளாஸ்ல போயி உக்காந்தோன்னே பாக்கெட்ட பாத்தேன்.

அது நா அவரு கடையில எப்பவும் வாங்குற எனக்குப் புடிச்ச ஆசைமுட்டாய். வேப்பலையோட சேந்துகிட்டு கெடந்துச்சு.

தீசன்

கருத்துரையிடுக

புதியது பழையவை