அண்மை

பெயரதிகாரம் - சூரியராஜ்

பெயரதிகாரம் - சூரியராஜ்


"மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பாக எதை நினைக்கிறீர்கள்..?"


சில விஞ்ஞானிகள்,, 

"சக்கரம்" என்றனர்.


சில விஞ்ஞானிகள்,,

"நெருப்பு" என்றனர்.


ஆகாய விமானத்தையும்...


ஆண்ட்ராய்டு ஃபோனையும்.. கூட சிலர் முன்மொழிந்தனர்.


இவை எல்லாமும் மகத்தானவை என்றாலும் கூட அது எவ்வாறு நிகழ்ந்திருக்கும் என்பதை படிப்படியான வளர்ச்சி நிகழ்வுகளில் விவரித்து விடலாம்...


இனம் காண இயலாத மர்மமான மனிதகுல கண்டுபிடிப்பு ஒன்று இருக்கிறது.. காலம் தோறும் மாற்றங்களோடு பவனி வருகிறது. 


இஸ்ரேலிய மொழியியலாளர் (Guy Deutscher)  சொன்னார்...

"மொழி" தான் மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு..!


நினைத்துப்பாருங்கள் மொழி இல்லாவிடில் மனித இனத்தின் கதி என்ன? 


இன்றுவரை மனிதன் அடைந்திருக்கும் முன்னேற்றம் இரண்டே தத்துவங்களில் அடங்கிவிடும்.


1)பொருள் முதல் வாதம்.

2) கருத்து முதல்வாதம்.


தற்போதைய இவ்வுலகம் நேரடியாகவோ மறைமுகமாகவோ பொருள் முதல் வாதத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது..!


ஏறத்தாழ எல்லா நவீன விஞ்ஞான சாதனங்களும்.. எந்த ஒரு சாதாரண சராசரி மனிதனும் புரிந்துகொள்ளும் படியான அற்பமானதும் நிஜ உலக நிகழ்வுகளால் நிரூபணமானதும் ஆன விதிகளை கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளன. அதனால் தான் படிப்பறிவு இல்லாதவர்களாலும் தொழில்நுட்ப திறமைசாலிகளாக உருக்கொள்ள முடிகிறது. (இருந்தும் அவற்றை, எல்லாரும் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பது வேறு விஷயம்) 


பொருள் முதல் வாதம் புலன்கள் மூலம் புலப்படுவதை மட்டுமே ஏற்கும்.

சோதனைகளாலும், செய்முறை முயற்சிகளாலும் அவை பலமுறை கண்டுணரப்பட்டு எல்லாரும் நிதர்சனமாக அங்கீகரிக்கிற வகையில்  இருக்கும். 


எனினும்...

மனிதன் உணருகிற எல்லா விஷயங்களையும் செயல்முறைகளில்/சோதனைகளில் நிரூபித்துவிட முடியாது.


நுணுக்கமான சிலவற்றை கருத்தியல் ரீதியாக புரிந்துகொள்ள முடியும் அவ்வளவுதான். அதனால் தான் பண்டைய தத்துவ ஞானிகள் கருத்துமுதல் வாதத்தை அதிகமாக கையாண்டுவந்தனர்.


இந்த பிரபஞ்சமே பெயரால் தான் அறியப்படுகிறது. இடத்தை சார்ந்து மொழிகள் வேறுபடலாம். ஆனால், உலகின் உண்மைப்பொருளை அறிய வேணுமாயின், குறைந்தது ஒரு மொழி இல்லாமல் சிந்தைக்குள் எதுவும் நகராது.


ஆறாவது அறிவு என சிறப்பிக்கப்படும் "மனம்" கூட மொழியின் துணையின்றி பூரணமாக இயங்காது...!


கருத்து முதல் வாதம் மொழியை மட்டுமே நூறு சதவீதம் முதலீடாக கொண்டது. 


பெரும்பாலான மொழிகள் 'எண்ணும் எழுத்தும்' கொண்டு குறிக்கப்பட்டாலும் எழுத்து வடிவமே இல்லாத மொழிகள் மிக அதிகம்!


ஆக,


மொழிகள் வேறு எதையோ ஒலிவடிவில் கொண்டு இயங்குகின்றன.

அவைதான்..


பெயரும் (noun)

வினையும் (verb)


இவற்றுள் வினைதான் மொழியின் சாராம்சமும் உயிரும் என்றாலும்.. பெயர் தான் அதன் பூத உடம்பாக விளங்குகிறது.


ஒருநாள் இல்லை ஒருநாள்,, மேனி மாயமாய் போகும் என்றாலும் கூட அதற்குத்தானே "மெய்" என்று பெயரிட்டுள்ளார்கள்.. தமிழர்கள்..!


இந்தந்த வினைக்கு இன்னன்ன பெயர் என்று வினைக்கும் கூட பெயரைத்தானே சூட்டியுள்ளோம்.


அந்த வகையில் "பெயர்" இல்லாமல் மொழிக்கு வினையே(வேலையே) இல்லை என்பது திண்ணம்.


"எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே..." என்கிறது தொல்காப்பியம்.


ஆதிமனிதன் எங்கு தோன்றியவனாய் இருந்தாலும்,, அவன்,  'ஏனோ தானோ' என்று வெறுமனே இடுகுறி பெயராய் எதற்கும் 

பெயரிட்டுருக்க மாட்டான். இடுகுறி பெயர் தமிழில் இருக்கத்தான் செய்கிறது. எனினும் தமிழின் முதலெழுத்து முப்பது மட்டுமல்லாது... ஒட்டுமொத்த (12+18+216+1= 247) எழுத்துக்களுக்கும் பின்னால் ஒரு வரலாறும் தோற்றுவாயும் இயற்கையின் ரகசியமும் மிகமிக வலுவான ஒரு காரணமும் இருக்கும் என்பதே என் அபிப்பிராயம்.


பெயர் சூட்டுவது என்பது ஒரு தனிக்கலை.! அதனால் தானோ என்னவோ பிள்ளைக்கு பெயர் சூட்டுவதை ஒரு விழாவாகவே நம்முன்னோர்கள் கொண்டாடினர்.


தாத்தாவின் பெயரை வைத்ததாலே அவன் 'பெயரன்~பேரன்' ஆனான்.

பெயர்த்தி~பேத்தி யும் அங்ஙனமே.


இந்த மரபுவழி பெயர் சூட்டல்முறை எல்லா தேசங்களிலும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது.


வீடுகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் நம் பெற்றோர்/ முன்னோர்களின் பெயரை சூட்டுவது என்பது அதில் ஒன்று.


பாசம், நட்பு, செய்ந்நன்றி பொருட்டு... மனைவி/பிள்ளை/நண்பன்/உதவியவர் பெயரை சூட்டுவது மற்றொன்று.


கொள்கை, வசீகரம் காரணமாக பிடித்த தலைவர்கள்/ பிரபலங்களின் பெயரை சூட்டுவதும் உண்டு.


மத நம்பிக்கைகள் மனித மனங்களில் வேரூன்றிய காலந்தொட்டு தெய்வ பெயர்களும்.. புராண இதிகாச பாத்திரங்களின் பெயரும் பரவலாக சூட்டப்பட்டது.

அதற்கு முன்புவரை இயற்கை 

 தோற்றங்களான ஆறு, மலை, பூக்கள், தாவர - மிருகம், ஆதவன், நிலவு, விண்மீன், பருவம் போன்ற வற்றின் பெயர்கள் பயன்பாட்டில் இருந்தன.


பெயரிடும் போது

இவ்வாறு வகை தொகை இல்லாமல் எண்ணற்ற நுணுக்கங்களை கருத்தில் கொள்ளும் வழக்கம் ஏறத்தாழ எல்லா தேசத்திலும் இருந்திருக்கிறது.


பெயரிடும் போது கருத்தில் கொள்ளவேண்டிய முக்கிய கூறுகளில் ஒன்று...

பெயருக்கும் அந்த பொருளுக்கும் (படைப்புக்கும்)

ஆன தொடர்பு.


அந்த தொடர்பு பரவலாக எல்லாரும் ஏற்றுக்கொள்கிற வகையில் இருக்கவேண்டும்.


உதாரணமாக,,,


தமிழக அரசின் பால் விற்பனை நிறுவனம் பசுவின் பால் என பொருள்படும் வண்ணம்,,

"ஆவின் பால்" என அழகுத் தமிழில் பெயரிடப்பட்டுள்ளது.


சமீபத்தில் அரசின் உப்பு விற்பனை நிறுவனத்திற்கு

"நெய்தல் உப்பு" என்ற பெயரில் திட்டம் கொண்டு வரப்பட்டது. நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த இடத்தை குறிக்கும்.


கலைஞர் காலத்தில், தமிழ்நாடு அரசு பேருந்து போக்குவரத்து கழகங்களை மண்டலவாரியாக பிரித்தபோது... சோழன், பல்லவன், சேரன், பாண்டியன் என்று மன்னவர் மரபு மிளிர பெயரிட்டார். (ஆட்சி மாறிய பிறகு தலைவர்கள் பெயரும் கூடவே சாதிகள் பெயரும் புகுந்து அரசியல் வன்முறை வெறியாடியதில்... அவ்வழக்கம்

முற்றாக கைவிடப்பட்டது.)


தென்னக ரயில்வேயின் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள்,,


பாண்டியன் Express 

சோழன் Express 

சேரன் Express என மூவேந்தர் பெயரேந்தி இன்றளவும் பயணிக்கிறது.


தொழில்களில் உழவையும், புலவர்களில் கம்பனையும் போற்றும் விதமாக,, 

உழவன் விரைவுவண்டி (தஞ்சாவூர்),

கம்பன் விரைவு வண்டி (நாகை-காரைக்கால்)

தொடர்புடைய பகுதிகளில் 

ஓடிக்கொண்டிருக்கிறது.


சிலநேரம் பெயரானது தொடர்புடைய கருத்தின்

எதிர்மறையாக கூட இருக்கலாம்.


உதாரணமாக


சர்வாதிகாரி ஹிட்லரை பற்றி "தி கிரேட் டிக்டேட்டர்" என்ற படம் வெளியானது. சர்வாதிகாரம் கொடூரம் என்பதற்கு பதிலாக பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிப்பில் ஆழ்த்தி இருப்பார் சார்லி சாப்ளின்!!


தமிழில் நடிகர் கார்த்திக் நடித்து "அரிச்சந்திரா" என்றொரு படம் உண்டு.. படத்தின் நாயகன் பொய்யை தவிர எதுவும் பேசமாட்டான்!


எதிர்மறை தொடர்புடைய பெயர்களும் நயமானவைதான்....! 


ஆனால் பெயர் ஒரு போதும் தொடர்பில்லாமல் இருக்கக்கூடாது..! அதுபோல் தொடர்பு படுத்துகிறேன் பேர்வழி என மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிட்டு கூறுவதும் பிழைதான்.


IRON என்று ஆங்கில பெயரில் படம் எடுத்துவிட்டு பிறகு தமிழ்ப்பெயருக்கு வரிவிலக்கு உண்டு என்பதால்.. 

அயன் (பிரம்மன்) என்று தமிழ் படுத்திவிட்டார்கள். பலர் பலவிதமான அர்த்தம் சொன்னாலும் எதுவும் ஏற்கும்படி இல்லை. பொருத்தமில்லாத தலைப்பு. ஆனால் படம் தரமான படைப்பு. எல்லாரும் கொண்டாடினார்கள்.


பிறகு அதே இயக்குநர் அடுத்தடுத்து கோ, மாற்றான், அனேகன், காப்பான் என நல்ல பெயர்களை பொருத்தமாக சூட்டினார்.


Robo படம் "எந்திரன் " ஆன கதை எல்லாரும் அறிந்ததே.


இந்தியநாட்டின் "பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)" உலகவல்லரசுகளுக்கு சவால் விடும் வகையில் தயாரித்து போட்ட,,

ஏவுகணை படைக்கருவிகளுக்கு


பஞ்ச பூதங்களுள் மூன்றின் பெயர்களை சூட்டினார்கள்..


1)பிருத்வி - நிலம் 

(தரைவழி தாக்குதல் )


2)ஆகாஷ் - ஆகாயம் (வான்வழி தாக்குதல்)


3) அக்னி - நெருப்பு 

(அணு ஆயுத தாக்குதல் )


இதில் அக்னி ஏவுகணை

முழுவதும் உள்நாட்டு தயாரிப்பு என்ற வகையிலும்..


கண்டம் விட்டு கண்டம் பாயும் வல்லமை உடையது என்பதாலும்..


அதை உருவாக்கிய திட்ட இயக்குனர் அப்துல் கலாம் ஐயா என்றாகவும் பல்வேறு சிறப்புடையது.


அதனாலேதான் மேதகு கலாம் அவர்களின் சுயசரிதை நூல்

"அக்னிச் சிறகுகள்" ( Wings of Fire) என ஆகச்சிறந்த பெயர் சூட்டப்பட்டு உலகப்புகழ் பெற்றது.


சில உலகளாவிய முன்னணி நிறுவனங்கள் எவ்வாறு தங்கள் நிறுவனத்துக்கு சுவாரஸ்யமாக பெயர் சூட்டி வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள்.. என்பதை தெரிந்துகொள்ள மேலும் வாசியுங்கள்... 


{tocify} $title={பெயரடைவு}


1) Royal Enfield (ராயல் என்ஃபீல்டு)


இங்கிலாந்தின் லண்டன் மாநகரின் வடக்கு பகுதியில்  என்னா(Enna) என்பவருக்கு சொந்தமான நிலத்தை தான் சுருக்கமாக En field என்று அழைத்தார்கள். பின்னாளில் அங்கு உருவான பல தொழிற்சாலை தயாரிப்புகளுக்கு அப்பெயரே அடையாளமாக நின்றது.


குறிப்பாக படைக்கருவிகள், துப்பாக்கி, சிறிய ரகபீரங்கி தயாரிப்புக்கு பெயர்பெற்றதாயிற்று.

இதனாலேயே அந்த நிறுவனம் தனது இராணுவ மோட்டார் சைக்கிள் வாகனங்களுக்கு Royal Enfield Bullet என பெயரிட்டு.. அதை "பிராண்ட் " ஆக மாற்றியது. 


பெரும்பாலான ஆடவர்கள் தங்களை கம்பீரமாகவும் இராணுவ மிடுக்கோடும் காட்டிக்கொள்ள  இந்த வண்டியை வைத்திருந்தாலே போதும் என்று நினைக்கத் தொடங்கினர். 


இந்திய அரசும் தன் ராணுவசேவைகளுக்கு கரடுமுரடான எல்லையோர ரோந்துபணிக்காக அதை வாங்கி குவித்தது.


முன்னதாக,

சென்னையிலும் அந்நிறுவனம் கிளையை ஊற்றியது.

பிறகு அதன் அசுர வளர்ச்சியை பற்றி நம்மவர்களுக்கு நான் சொல்ல தேவையில்லை. அந்நிறுவன logo -வே அதன் கதையை கூறும்.


2) ஹமாம் (HAMAM)


பிரபல இந்திய சோப்பு கம்பெனி. 

ஹமாம் என்ற அரேபிய/பாரசீக பெயருக்கான பொருள் 'குளியல் அறை' என்பதாகும்.

சாதாரண குளியலறை அல்ல.

ஆடம்பரமான பளிங்கு தொட்டிகள்/குளங்கள் கொண்ட அரண்மனை மகளிர் நீராடுகிற பிரத்யேக அறை.

முகலாய பேரரசு காலத்தில் இது பிரசித்தி பெற்றிருந்தது.  பொருத்தமாகவும் அதே நேரம் 

சந்தையில் தனித்த பெயருடன் புகழ்பெற்று திகழ்கிறது அந்த சோப்பு.


3) Swift (ஸ்விஃப்ட்)


சுசூகி நிறுவனத்தின் பெரும் வரவேற்பைப் பெற்ற மகிழுந்து (கார்) வகை.


தமிழில் விரைவு நோக்கம் கருதி "சிட்டாய் பறந்து விட்டான்.." என்று கூறுவார்கள் அல்லவா..?

இது

சிட்டுக்குருவி போல/அதிவிரைவாக என்று பொருள்படும்.


இதே போல 'Swift' என்றொரு குருவியை குறித்து, சிறிய உருவத்தில் இயங்கும் வேகமான வண்டி என்ற பொருளில் பெயரிட்டிருக்கிறார்கள்!


4) WHIRL POOL (வேர்ல் பூல்)


Pool என்பது நீர்நிலை.. குளமோ குட்டையோ ஏரியோ எதுவானாலும்..  (நீந்தும் குளம் swimming pool)


Whirl என்றால் சுழல்.. நீர்நிலைகளில் திடீரென அபாயகரமான சுழல் தோன்றும்போது அவ்விடத்தில் அதன் அழுத்தமும் வேகமும் ஆற்றலும் மிதமிஞ்சி இருக்கும். 


மொத்தத்தில் 

Whirlpool  நீர் சுழலை குறிக்கிறது. இந்த பெயரில் 

துணி துவைக்கும் தானியங்கி சலவை இயந்திரத்தை தயாரித்து வெளியிட்டது The Nineteen Hundred corporation எனும் நிறுவனம். பின்னர் தன்னுடைய நிறுவன பெயரையே whirlpool என மாற்றிக்கொண்டது.


5) Whisper


கடந்த நூற்றாண்டுவரை.. இந்திய கிழவி மார்கள்..  உரையாடல்களிடையே அவ்வபோது சில முக்கிய ரகசியங்களை பேசும் போது மூன்றாம் நபர் காதில் விழாதவண்ணம் குரலைத் தாழ்த்தி முனுமுனுத்து பேசுவார்கள். 

இவ்விதம் முனுமுனுப்பதை தான் ஆங்கிலத்தில் Whispering என்பர். சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற யானைகள் வளர்ப்பு பற்றிய ஆவணப்படம் "The Elephant whisperer" என்ற பெயரில் வந்தது.. யானைகளின் சங்கேத பாஷைகளை.. அறிந்து அவற்றிடம் பேசுபவர் என்கிற பொருளில் "யானையிடம் முனுமுனுப்பவர்" என சிந்தித்து பெயரிட்டுள்ளனர்.

{இதற்கு மாற்றாக 'கிசு கிசுத்தல்' என்ற சொல் வழக்கில் இருந்தாலும் அதன் அர்த்தம் கொஞ்சம் வேறுமாதிரியும் பொருள் கொள்ளப்படுவதால் தவிர்க்கப்பார்க்கிறேன்.}


பருவகால உதிரப்போக்கு மகளிரின் அன்றாடவாழ்வில் உண்டாக்கும் அசௌகரியங்களை சமாளிக்க வந்த நாகரீக ஆடை நாப்கின். 


ஐரோப்பிய தேசங்களில் மேசைவிரிப்புகளையும் (table cloth) விருந்தின் போது உணவு சிந்தினால்  துடைக்க உபயோகிக்கும் கைக்குட்டை மாதிரியான துணியையும் நாப்கின் என்பர். அதுவே இப்போது பருவ மகளிருக்கான சுகாதார அணியாம் 'சானிட்டரி நாப்கினு'க்கு ஆகுபெயராக ஆகிவந்துவிட்டது.!


இந்தியப் பெண்களுக்கு இயல்பாக இருந்த கூச்ச சுபாவத்தாலும்,, பெரும்பாலான கடைக்காரர்கள் ஆடவராக இருந்ததாலும், ஏதோ அணுஆயுத ரகசியம் போல.. எழுத்தாலோ சங்கேத சைகை மொழியிலோ சுட்டிக்காட்டி... தயங்கி தயங்கி வாங்கப்பட்ட பொருளாக "நாப்கின்" இருந்தது.

பரம ரகசியம் போல காதோடு மெல்லிதாய் முனுமுனுத்தார்கள்.


இதையே அந்த தயாரிப்பு நிறுவனம் 'டிரேட் மார்க்' பெயராக்கி வெற்றி கண்டது!


போதை வஸ்துகளையும், புற்றுநோய் பாக்குகளையும், புகைசுருட்டு(சிகரெட்)-களையும் கேடுதரு மதுபானங்களையும்  பட்டப்பகலில் பலர் முன்னிலையில் வெட்கமே இல்லாமல் அநாயாசமாக வாங்கிப்புழங்குவோர் இருக்கிற இந்த தேசத்தில்தான் ஒரு மருத்துவ சுகாதார பாதுகாப்பு பொருள் மறைத்து மறைத்து விற்கப்பட்டது. தற்போது ஓரளவு விழிப்புணர்வு உண்டாயிற்று.


முக கவசமும் சரி..., 

பெண்களின் இந்த 'அக' கவசமும் சரி.. பயன்படுத்தும்போது இருக்கிற தற்சுகாதார அக்கறை... பிறகு அதை அப்புறப்படுத்தும் போதான பொது சுகாதாரத்தில் இருப்பது இல்லை.

கண்ட இடங்களில்/ நீர்நிலையில்/ குப்பையில் வீசி செல்வது சூழலுக்கு வைக்கிற உலை. சிறிதும் ஜீவகாருண்ய மற்ற கொலை!


6) LAKME 


மிகப்பிரபலமான ஒப்பனை பொருட்கள் நிறுவனம். அழகுசாதன பொருட்களின் அரண்மனை என்று கூட சொல்லலாம்.


அழகே வடிவான சர்வ லட்சணம் பொருந்திய பெண்ணை மகாலட்சுமி மாதிரி இருப்பதாக உவமை சொல்வார்களல்லவா??

ஆக,,

இந்த LAKME ங்கிறது "லட்சுமி" என்ற இந்து தெய்வத்தின் பெயரே...! என்பதறிக...!


தமிழில் லக்ஷ்மி என்பதை 'இலக்குமி' என்று எழுதுவது போல பிரெஞ்சு காரர்களால் "லக்மி" என்று மொழிவழக்கிற்கு ஏற்ப திரிக்கப்பட்டுள்ளது.


இந்நிறுவனத்தை உண்மையில் தொடங்கியது இந்தியாவின் "டாடா (TATA)" குழுமம் தான். அழகுசாதன நவ நாகரீக நகரமாம் பாரீஸ் ஐ குறிவைத்து வணிகம் நிகழவேண்டி அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் நெருக்கமான பெயரை டாடா விரும்பினார் போலும்... அந்நாட்டின் பிரபல இசைநாடகம் (Opera) ஒன்றின் 

பெயர் லக்மி... இந்திய பிராமண பெண் ஒருத்தியை பற்றிய நாடகம் அது...

பெயரிலேயே இருக்கு லக்ஷ்மி கடாக்ஷம்... பிறகென்ன??


பிரான்ஸில் நிறுவனம் நல்லபெயரை சம்பாதித்தது.

சினிமா துறையின் வளர்ச்சி & தாக்கத்தினால் இப்போது இந்திய சந்தையிலும் சக்கைப்போடு போடுகிறது.


ஒரே கல்லில் இரு மாங்காய்..!


7) MARIE GOLD


பிரபல பிஸ்கட் கம்பெனி. 

இது செவ்வந்தி/சாமந்தி பூ மாதிரியான மஞ்சளும் சிவப்பும் கலந்த பொன்னிறத்தில் உள்ள மலர்களை குறிக்கும்.


ஏசுவின் அன்னையான 'மேரியின் தங்கம்' (Mary's gold)

என்பது பொருள்.


ஆனால் உலகின் பல பிஸ்கட் கம்பெனிகள் Marie  என்ற பெயரை பயன்படுத்துவதன் காரணம் வேறு..


இங்கிலாந்து இளவரசர் ஒருவர் மேரி என்ற பெயருடைய ரஷ்ய இளவரசியை மணந்து கொண்டார். புது இளவரசியை வரவேற்க பிரிட்டனின் அன்றைய பேக்கரி ஓனர் ஒருவர் கோதுமை மாவும் எண்ணெய்யும் வெண்ணெயும் உப்பும் கலந்து இருமுறை சுட்டு சமைத்து தயாரித்த 'ஸ்பெஷல் ஐட்டம்'-தான் இந்த பிஸ்கட். (Bis - இருமுறை ; cuit ~cooked~ சுடப்பட்டது) வட்டவடிவில் நடுவில் மேரி என பெயர் அச்சிட்டு அட்டகாசம் செய்தார்.

(நாம் birthday cake ல பெயர் எழுதுவது மாதிரி..) 

பிரிட்டனிலும், ரஷ்யாவிலும் பெரும் வரவேற்பை பெற்று இன்று உலகம் முழுவதும் டீ பிஸ்கட் 'டாக  உலா வருகிறது!


இவ்வாறு பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம்..., 


உலக ஜாம்பவான்கள் பலரும் பெயர்சூட்டலில் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார்கள்..!


Microsoft, Windows, Apple, Google, Facebook, அலிபாபா, அமேசான், Space X

என ஒவ்வொரு நிறுவனமும் சகாப்தமானதில்..  அதன் பெயருக்கு பின்னால் இருக்கும் ஆழமான பொருளை ஒப்புநோக்குக.


முற்கால தமிழர்கள் பெயரிடும் முறையில் அசகாய சூரர்கள்.

ஒரேநாளில் பூத்துக்கொட்டும் பூவுக்கு கூட அரும்பு, மொட்டு முகை, மலர், அலர், வீ, செம்மல் என பலவித பெயரிட்டார்கள்.


தாவரத்தின் இலைக்கு எத்தனை பெயர்கள்...?

 நெல் தாள்

கமுகு கூந்தல்

தாழை மடல்

வாழை இலை

வேப்பந் தழை

தென்னங் கீற்று

பனை ஓலை


கடலுக்கும் கப்பலுக்கும் தமிழில் உள்ள பெயர்களின் எண்ணிக்கை

π -இன் கணித மதிப்பு போல இன்னும் முடிவின்றி போய்க்கொண்டே இருக்கிறது.


ஐவகை நிலங்களுக்கும் அந்நிலத்தோடு தொடர்புடைய 5 மலர்களின் பெயரே சூட்டினர்.


ஐம்பெருங்காப்பிய பெயர்களில் அணிகலன்களை அழகுற புனைந்தார்கள். (சிலம்பு,மேகலை, சிந்தாமணி,வளை,குண்டலம்)


திணை மொழி 50

திணைமாலை150

இன்னா/இனியவை/கார்/களவழி-40

நாலடி 400

பழமொழி 400

முப்பால்.... என்றாக,,

எண்ணுப்பெயர்களையும் விட்டுவைக்காமல் சூட்டி அழகுப் பார்த்துள்ளனர்.


96 சிற்றிலக்கியங்களின் பெயரை விளக்கி தனி நூலே படைக்கலாம்.


முற்கால தமிழின் சொல்வள செழுமையினை என்னவென்று சொல்லி புகழ்வது??


தற்கால தமிழர்கள் பெயர் விஷயத்தில் அலட்சியம் காட்ட கூடாது. எத்தனை பெயர்கள்/ எவ்வளவு சொற்களை கையாளுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஞாலம் குறித்த ஞானம் விசாலப்படும்.


இறுதியாக மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன். மனிதன் இவ்வுலகை புலன்களால் அறிவதைக்காட்டிலும் மிகஅதிகமாக சொற்களால் அறிகிறான். சொற்கள் யாவும் பெயர்களை கொண்டுள்ளன. ஒவ்வொரு பெயருமே தன்னளவில் தனித்துவ அடையாளமும் ஆற்றலும் விதவிதமான வரலாறும் கொண்டுள்ளது. ஆக, பெயர்களை சரியாக பிரயோகிக்க தெரிந்தாலே பிரபஞ்சத்தை கையாளும் வித்தையை கற்றதற்கு சமம்.

"விரைந்து தொழில் கேட்கும் ஞாலம்.." என்கிற மாதானுபங்கி வாக்கும் சுற்றிவளைத்து இதைத்தான் இயம்புகிறது.


இறைவனின் பெயர்களுக்கு மட்டுமல்ல... தமிழில்,, எல்லா பெயர்களுக்குமே மகத்துவம் உண்டு..! அதை உரியநோக்கில் இடம் பொருள் ஏவல் பார்த்து இடுவீர்களேயானால்  

சிறப்பான அதிகாரம் உங்கள் வசமாகும். பிரபஞ்சத்தை இயக்குகிற அதிகாரம்... பெயரதிகாரம்!


சூரியராஜ்


இதைக் காண்க


1. சோலிப்சிசம் (Solipsism)

2. ரவீந்திரநாத் தாகூரின் கடிதம்

3. மிருகங்களும் பறவைகளும்

கருத்துரையிடுக

புதியது பழையவை