அண்மை

எழுத்தாளர் குறும்பனை சி.பெர்லின் உடனான நேர்காணல்

 

எழுத்தாளர் குறும்பனை சி.பெர்லின் உடனான நேர்காணல்

திருவாரூர், தமிழ்நாடு மத்தியப்பல்கலைக் கழகம் தமிழ்த்துறையில் ஏப்ரல் மாதம் 28ஆம் நாள் நவீன நெய்தல் இலக்கியங்கள் என்றத் தலைப்பில் நெய்தல் எழுத்தாளர் குறும்பனை சி.பெர்லின் அவர்களால் சிறப்புரை ஆற்றப்பட்டது. உரை நிகழ்விற்குப் பின்னர் அவரை நேர்காணல் செய்ய எனக்கும் (தீசன்) முனைவர் பட்ட ஆய்வாளர் பிருந்தா அவர்களுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரோடு நிகழ்த்திய நெய்தல் பற்றிய உரையாடல் தொகுப்பே இக்கட்டுரை. வாய்ப்பளித்த தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ச.இரவி அய்யா அவர்களுக்கும் பேராசிரியர் முனைவர் ப.குமார் அய்யா அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


{tocify} $title={🔴 வினவப்பட்ட வினாக்கள்}


தீசன் - நெய்தல் இலக்கியம் என்பது ஒரு மிகப்பெரிய பரப்பு 'கடல் போல' என்று கூட சொல்லலாம். நீங்களும் அத்துறைக்கானப் பங்களிப்பினை அதிகம் கொடுத்து வருகின்றீர்கள் உங்களது நெய்தல் இலக்கிய பணி சார்ந்த அறிமுகத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்த முடியுமா?


மீன் பிடிப்பதற்கெல்லாம் என் அப்பா என்னை அழைத்துச் சென்றதில்லை. அதற்கு என்ன சொல்வார்கள் என்றால், "மக்களே! இது உங்களுக்கான எடமில்ல நாங்க பட்ட கஷ்டம் எங்களோட போகட்டும் நீங்களாம் இங்க வரக்கூடாது படிச்சி அரசு சார்ந்த சர்கார் உத்தியோகத்திற்கு தான் போகணும்" என்பார்கள். இருந்தாலும் விடுமுறை நாட்களில் அழுது அடம்பிடித்து அவர்களுடன் கடலுக்குச் செல்வேன். அந்த வகையில் தான் எனக்கு நெய்தல் அறிமுகம். அது மட்டும் இல்லாமல் சிறு வயதில் நான் கடற்கரை மணலில் தான் தூங்குவேன் கடற்கரை மணற்பரப்பு மிகப்பெரியது. இப்போதெல்லாம் அத்தகைய பரப்பு இல்லை. கடலுக்கும் கடற்கரைக்கும் இடையில் இருக்கக்கூடிய வீடுகளைப் பாதுகாப்பதற்கு தடுப்புச்சுவர் என்று கற்களை கொட்டி குவித்து கடற்கரையை மொத்தமாக அழித்து விட்டார்கள். அவ்வாறு மணற்பரப்பு இருந்த காலத்தில் கடற்கரை மணலை படுக்கை போல் விரித்து அதற்கொரு தலையணையாய் மணலை குவித்து அம்மாவின் புடவையை அதில் விரித்துப் போட்டு படுத்திருப்போம். வயதான பெரியவர்கள் எல்லாம் கடலைப் பற்றியும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றதைப் பற்றியும் நிறைய கதை சொல்வார்கள். அவர்களிடம் கதையை கேட்க வேண்டுமெனில் அவர்களுக்கு வெற்றிலைப் பாக்கு, மூக்குப் பொடி, சுருட்டு எல்லாம் வாங்கித் தர வேண்டும். இதுபோன்று ஏதும் வாங்கி கொடுத்தால் அவர்கள் கதை கதையாய்ச் சொல்வார்கள். அப்போது நாங்கள் அவர்களுக்கு கொடுக்கும் மாமுல் என்பது வெற்றிலைப் பாக்கு, மூக்குப் பொடி தான் அதுவும் எங்களில் யாராவது ஒருவரின் அம்மா, அப்பா ஜவ்வு மிட்டாய், உருண்டை மிட்டாய் வாங்க காசு கொடுத்து இருப்பார்கள். அவர்கள் தரும் பணத்தை சேர்த்து வைத்து தாத்தாக்களுக்கு வெற்றிலைப் பாக்கு, மூக்குப் பொடி வாங்கி கொடுத்தால் அவர்கள் கடல் கதைகளை எங்களுக்கு சொல்வார்கள். இப்படியே நிறைய கதைகள் அவர்களிடமிருந்து நான் கேட்டிருக்கிறேன். எங்களுக்கு சமவெளி பகுதியின் அரசியல் விதமாக எந்த காரியமுமே தெரியாது. முழுக்க முழுக்க கடலைப்பற்றி மட்டுமே எங்களுக்கு கதைச் சொல்லப்பட்டது. பாட்டிக்கு சாப்பாடு கொடுக்கும் போது கூட, போத்தி (தாத்தா) தொழிலுக்கு சென்ற போது அவர்களுக்கு என்ன நடந்தது? எப்படி காணாமல் போனார்கள்? எப்படி திரும்பி வந்தார்கள்? எத்தனை நாட்களுக்குப் பின் வந்தார்கள்? கடலில் என்னென்ன மாதிரியான காற்று இருக்கும்? அந்த காற்றின் வேகம் எப்படி இருக்கும்? 'நீவாடு' என்பார்கள். கடலுக்குள் இருக்கும் நீரோட்டம் அது. கடலுக்கு மேல், கிழக்கில் இருந்து மேற்கு பார்த்த நீரோட்டமாக போகும். அடி கடலில் அதற்கு எதிராக போகும். நடு கடலில் இது இரண்டும் இல்லாமல் சுற்றி வரும். இப்படி எல்லாம் நீரோட்டத்தைப் பற்றியும் எங்களுக்குச் சொல்லி இருக்கிறார்கள். இப்படித்தான் நெய்தல் பற்றி நான் படித்தது. கடலுக்குள் சென்று தொழில் செய்ததெல்லாம் கொஞ்ச நாள்தான். அதிலும் கரையில் இருந்து மடி இழுக்க கூடிய வேலையும் செய்து இருக்கிறேன். மற்ற மாதிரி நான் கேட்டது, கண்டது அனுபவித்தது எல்லாம் கதைத் தாத்தா வழி தான். கதைத் தாத்தா கதாபாத்திரம், சேலாளி கதாபாத்திரம் இவை எல்லாம் என் சிறுகதையிலும் வரும். இப்படி உள்ள ஆட்களின் வழி, நான் புரிந்து கொண்ட விஷயங்களே எனக்கு நெய்தலுக்கான அறிமுகம்.


தீசன் - கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குப் பக்கம் இருக்கின்றதொரு சிறிய கிராமம் தான் குறும்பனை. சிலப்பதிகாரத்தில் கூட, "பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்னும் வரிகளுக்கு அடியார்க்கு நல்லார் தரும் உரையில் ஏழ் குறும்பனை நாட்டினை குறிப்பிடுகின்றார். அதனின் எச்சம் தான் குறும்பனை என நாம் கொள்ளலாமா?


ஆமாம். இப்போது கூட நான், 'ஏழ் குறும்பனை நாடும் புனித இஞ்ஞாசியாரும்' என்றொரு நூல் எழுதி இருக்கிறேன். அடியார்க்கு நல்லார் கூறிய அடிப்படையில் தான். குமரிக்கண்டம் கடல் கொண்டது. அது கிமு. 4ஆம் நூற்றாண்டு என்பது என் புரிதல். அந்த லெமூரியா என்று கூறப்படக்கூடிய குமரிக்கண்டத்தில் ஏழு நாடுகள் இருந்திருக்கிறது. அவ்வேழு நாடுகளுக்குள்ளும் ஏழு ஊர் இருந்திருப்பதாக சொல்கிறார்கள். அந்த ஏழு ஊர்கள் தான் தாலுகா. இன்றைய வழக்கில் வட்டம். அந்த ஏழு நாடு எவை என்றால், ஏழ் மதுர நாடு, ஏழ் தெங்கநாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் குன்ற நாடு, ஏழ் குணக்கரை நாடு, ஏழ் குறும்பனை நாடு கடற்கோளில் இருந்து தப்பி பிழைத்த ஏழ் மதுரை நாட்டினர் புலம் பெயர்ந்து குடியேறி உருவாக்கிய ஊரே மதுரை. ஏழ் தெங்க நாட்டில் இருந்து வந்தவர்கள் தான் 'தேங்காய் பட்டணம்' என்று ஊருக்கு பெயர் சூட்டி இருக்க வேண்டும். அதுபோல தான் ஏழ் குறும்பனை நாட்டிலிருந்து வந்தவர்கள் குறும்பனை என்ற பெயரை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு சங்க இலக்கியத்தோடு தொடர்புடைய சங்க காலத்தோடு தொடர்புடைய பெயர்தான் 'குறும்பனை'. நாங்கள் இதனை ஆய்வு செய்து கொண்டுள்ளோம். அந்த ஆய்வினை முன்னெடுத்து செல்வோம்.


தீசன் - 'குறும்பனை' என்பதற்கான சரியான பெயர் காரணம் என்னவாக இருக்கும்?


குட்டை குட்டையான பனை மரங்கள் இன்னும் குறும்பனையில் நிறைய இருக்கிறது. குறுகிய பனை குறும்பனை என்ற காரணத்தினால் கூட அப்பயர் பெற்றிருக்கலாம்.


தீசன் - அங்கு பனை வளரும் விதமே அப்படித்தானா?


ஆமாம்


தீசன் - 'காலியாகும் கடலோர பள்ளிகள்' என்ற தீக்கதிரில் வெளிவந்த உங்களது கட்டுரையைப் படித்தேன்.
"நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்டங்களில் 150 கிலோ மீட்டர் நீள கடற்கரைப் பகுதியில் நூற்றுக்கும் அதிகமான கடலோர கிராமங்களும் 10 லட்சம் மீனவ மக்களும் வசிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு கல்வி வழங்க ஓர் அரசு பள்ளிக் கூட இல்லை"
என்று எழுதியுள்ளீர்கள். இந்நிலை இன்னும் நீடிக்கிறதா?


கல்விக்கான தேவை அங்கு அதிகமாகவே உள்ளது. முன்பெல்லாம் ஒரு ஊரில் நடுநிலைப்பள்ளி என்ற ஒன்று இருந்தால் அவ்வூரின் ஆண்களும் பெண்களும் எட்டாம் வகுப்பு வரை படித்திருப்பர். அதுக்கு பிறகு மேல்படிப்புக்கு போக வேண்டும் என்றால் அளவு பாதியாகிவிடும். அந்த ஊரிலே பன்னிரெண்டாம் வகுப்பு வரை இருந்ததென்றால் பன்னிரெண்டாம் வகுப்பு வரை எல்லோரும் படித்து விடுவார்கள். அடுத்துக் கல்லூரி படிப்பிற்காகத்தான் வெளியூர் செல்ல வேண்டி வரும். அப்போது அளவு பாதியாவது சாதாரணம். ஒரு ஊரிலே கல்லூரி இருக்கிறது என்றால், அவ்வூரிலே எல்லோரும் கல்லூரிக்குச் சென்று விடுவார்கள். எனில் ஊரில் கல்வி நிறுவனம் என்ற ஒன்று இருந்தால் எல்லோரும் படித்து விடுவார்கள். என்னைப் போன்று 5 கிலோமீட்டர் நடந்து சென்று தான் படிக்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால், யாரும் படிக்கச் செல்ல மாட்டார்கள். எந்த ஊரில் அதிகமான கல்வி நிறுவனங்கள் இருக்கிறதோ, அந்த ஊர் மக்களே அதிகம் படிப்பார்கள். அரசு கடலோரங்களில் இருக்கும் கல்வி நிலையங்களை ஒரு கரிசனையோடு பார்க்கவில்லை. மெட்ரிகுலேஷன், ஆங்கிலப் பள்ளிக்கூடம், கின்டர் கார்டன் இவை எல்லாம் வந்த பிறகு தமிழ் வழி கல்விக்கூடங்கள் இன்றைக்கு அழிந்து கொண்டே வருகிறது. இன்னும் ஐந்து - பத்து வருடங்களில் கடற்கரையில் இருக்கக்கூடிய கடற்கரை மக்களாலே உண்டாக்கப்பட்ட பள்ளிக்கூடங்களே இனி இருக்காது என்ற சூழ்நிலையில் அரசு பள்ளிகளுமே அங்கு இல்லை. முழுக்க முழுக்க இந்த மக்கள் தங்களுடைய படிப்புகளை வேற்றுப் பகுதியில் சென்று தான் படிக்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. ஆரம்பக் கல்வியை கூட சொந்த ஊரில் படிக்க முடியாத ஒரு நிலைமை உருவாகிறதென்றால் அது இந்த அரசுக்கான மிகப்பெரியதானதொரு தோல்வி. நாங்கள் எங்களால் முடிந்த அளவில் கல்விக்கான உதவியை செய்கின்றோம். எங்கள் ஊரில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் இருக்கிறது. அங்கு சுயநிதி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க மாதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அவ்வூர் மக்கள் செலவழிக்கின்றார்கள். எத்தனை காலத்திற்கு இச்சுமையை அவர்களால் தாங்க முடியும். இதற்கான வருமானமும் வரவேண்டும். இவர்கள் கடலுக்கு சென்று உண்டாக்கக்கூடிய வருமானத்தில் ஒரு பங்கை ஊருக்கு கொடுத்து ஊர் சுயநிதி ஆசிரியர்களுக்கு சம்பளமாய் தருகிறது. இப்படி இருக்கும்போது நாளை இந்த கல்வி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு இல்லை ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியவில்லை என்ற நிலை வரும்போது இந்த கல்வி நிறுவனங்கள் எந்த அளவிற்கு நிற்கும்? அடுத்து வரக்கூடிய நிர்வாகம் எந்த அளவிற்கு செயல்படும்? அடுத்த வருடத்தில் இருந்து மாதம் இரண்டு லட்சம் ஆகிவிடும். இவ்வாறு அதிகரிக்கும் போது இச்சுமையை யார் சுமப்பார்? என்ற கேள்வி எழும்.


தீசன் - 'கஜா புயல் மறைக்கப்பட்ட சுனாமி' என்னும் உங்களது நூலில் வானிலை ஆய்வு மையம் என்பதைவிட கணிப்பு மையம் என்று கூறுவதே சிறப்பு என்று கூறியதன் காரணம் என்ன?


வானிலை ஆய்வு மையம் பற்றி நமக்கு அதிகம் தெரிய வந்தது ரமணன் கணினி முன் உட்கார்ந்து கொண்டு தந்த அறிக்கையில் இருந்துதான். இந்த இடங்களில் வறண்ட வானிலை நிலவும். இங்கு கனமழை வரலாம் அல்லது மிதமான மழை வரலாம். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை வரலாம் வராமலும் போகலாம் என்று இப்படி சொல்வதற்கெல்லாம் ஒரு கணிப்பு தேவையா? சரியான கணிப்பை சொல்ல வேண்டும். கணிப்பில் அரசு தோல்வி அடைகிறது 45 லிருந்து 55 கிலோமீட்டர் வேகத்துக்கு காற்றடிக்கும் என்று சொல்கிறார்கள் ஆனால் அடித்தது என்னமோ 110 கிலோமீட்டரிலிருந்து 180 கிலோமீட்டர் வேக காற்று அப்படி என்றால் கணித்தது எவ்வளவு பெரிய தவறு? இத்தனை கணினிகளையும் செயற்கைக்கோள்களையும் வைத்துக்கொண்டு இதைத்தான் உங்களால் செய்ய முடியும் என்றால் எங்களது சேலாளிமார்கள் கரையில் இருந்து கொண்டே இப்படி காற்று வரும் இப்படி புயல் வரும் என்று சொல்வது எப்படி சரியாக இருக்கிறது!


தீசன் - ஆனால் இயற்கை என்பதே கணிப்புக்கு அப்பாற்பட்டது தானே? அதை எப்படி துல்லியமாக கணிக்க முடியும்? அது எளிமை அல்லவே!


நியாயம்தான். இயற்கை கணிப்புக்கு அப்பாற்பட்டது தான். சுனாமி வந்தது அவ்வளவு பெரிய அழிவு வந்தது உயிரிழப்பு வந்தது அப்போது என்ன சொன்னார்கள் எனில், 'இது போன்ற அனுபவங்கள் இல்லை அதனால் இதை கணிக்க முடியவில்லை' என்றார்கள். சுனாமி வந்ததற்கு பிற்பாடு ஒவ்வொரு இடத்திலும் பேரிடர் கணிப்பு மையம் அமைத்தார்கள். அதற்கு 13 வருடங்களுக்குப் பிறகு தான் ஒக்கிப் புயல் வருகிறது. அப்போதும் என்ன சொன்னார்கள் என்றால், 'எங்களுக்கு முன் அனுபவமே இல்லை'. பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு இங்கு உட்கார்ந்து கொண்டு கணிப்பு மையம் என்று எதையோ வைத்து எங்களை ஏமாற்ற வேண்டும்? சுனாமி வந்த நேரத்தில் உனக்கு முன் அனுபவம் இல்லை சரி. ஒக்கிப் புயல் வந்த போதும் அதே சொன்னால் என்ன செய்வது? அடுத்து கஜாப் புயல் வந்த போதும் இதையேதான் சொன்னார்கள். எனில் 'எதற்கு கணிப்பு மையம் வைத்திருக்கிறீர்?' என்ற கேள்வி பாமர மக்கள் உள்ளும் ஏற்படும். பாரம்பரியமாக எங்களால் கணிக்க முடிந்ததை இத்தனை அறிவியல் தொழில்நுட்பம் கொண்டும் உங்களால் கணிக்க முடியவில்லை என்றால் மூடிக்கொண்டு போய் விடுங்கள். எதற்கு மக்களை ஏமாற்ற வேண்டும். கொரோனாவுக்கு முன் ஆகஸ்ட் மாதத்தில் 45 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 55 கிலோமீட்டர் வேகத்தில் 12 முறை காற்று அடிக்கும் கடலுக்கு செல்லாதீர்கள் என்று சொன்னார்கள். ஆனால் அவர்கள் சொன்னது போல் காற்று அடித்தது இரண்டு முறை மட்டும்தான். இது மாதிரியான தவறான கணிப்புகளால் மக்களை கடலுக்குள் செல்ல விடாமல் கரையிலேயே உட்கார வைக்கிறார்கள். கரையில் உட்கார வைத்த மக்களுக்கு நிவாரணமும் கொடுக்கவில்லை. மாதம் முழுக்க மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கூறிக்கொண்டே இருந்தால் அவனால் குடும்பத்தை எப்படி காக்க முடியும்? எனில் கணிப்பில் தோல்விதானே வருகிறது. இதை மாற்ற வேண்டும். அறிவியல் தொழில்நுட்பத்தை இத்துறை ரீதியாக வளர்க்க வேண்டும். இதுதான் எங்களது கருத்து.


பிருந்தா - நிலவுடைமை சமுதாயம் வரும்போது நெய்தல் நில மக்கள் மட்டும் ஒதுக்கப்பட்டதற்கான காரணம், பக்தி இலக்கிய காலங்கள் வரும்போது புலால் உண்ணாமை, உயிர்களைக் கொல்லாமை என்பதற்கு எதிராக இருப்பது, நெய்தல் நில மக்களுடைய தொழிலாக அமைந்ததே நெய்தல் நில மக்களை ஒதுக்கப்பட்டதாய் ஆக்கியதா? அப்படி கருதினாலும் மீதியுள்ள எல்லா நிலங்களிலும் சங்க இலக்கியம்படி வேட்டைத் தொழில் நடக்கிறது. ஆனால் நெய்தல் நில மக்களை ஒதுக்கிய அளவில் மற்றைய நில மக்களுக்கு நடக்கவில்லை என்றெனக்குத் தோன்றுகிறது இவ்வாறு நெய்தல் நிலம் ஒதுக்கப்பட்டதற்கு காரணம் நீங்கள் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?


முழுக்க முழுக்க தீண்டாமையின் வெளிப்பாடு. நாற்றம் அடிக்கக்கூடிய விஷயங்கள் எல்லாமே ஒரு தீண்டாமை. அன்றைக்கு இருந்த ஆரிய சமூகம், வைணவ அந்தணர்கள் இவர்களுடைய பார்வை என்னவென்றால் கடல் கடந்து செல்வதே ஒரு தீண்டாமை. அது ஒரு பாவமான செயல். கடலில் மீன் பிடிக்கச் செல்வது என்பதே அவர்களது சிந்தனைக்கு ஒரு தீண்டாமை. அப்படி ஒரு தீண்டாமையின் அடிப்படையில் தான் கடற்கரை மக்கள் ஒதுக்கப்பட்டார்கள். ஆரம்பகாலத்தில் கடலை ஒட்டி தான் வணிகமும் வர்த்தகமும் இருந்தது. முன்பு வேட்டைச் சமூகம், அவர்களே வேட்டையாடி அவர்களே உண்டார்கள். அது வர்த்தகமாகும் போது தான் தீண்டாமை ஆனது. நீரை சார்ந்த சமூகத்தின் கையில் தான் கடல் கடந்து செல்வதும், கடல் வாணிகமும், முத்து எடுப்பதும், கடல் சார்ந்த அனைத்தும் இருந்தது அதை மடைமாற்றம் செய்யவே கடல் மக்களை கடலோடு தள்ளி அவர்களை ஓர் அடக்குமுறைக்கு உட்பட்ட சமூகமாய் மாற்றிவிட்டார்கள். இப்போது கூட கடல் மக்கள் சுத்த போஜனம் என்று தவக்காலத்தில் 30 நாள் மீன் (அசைவம்) சாப்பிடாது இருப்பர். இது சுத்த போஜனம் என்றால், மீன் அசுத்த போஜனம் என்று மூளையில் ஆக்கி விடுகின்றார்கள். சுனாமி வந்ததற்குப் பிறகு கூட பிராய்லர் கடைக்காரர்கள் மீனை சாப்பிடக்கூடாது என்று போராட்டம் செய்தார்கள். மீனின் வயிற்றில் இறந்தவர்களின் மோதிரம் இருக்கும். மீன் இறந்தவர்களை கடித்து தின்றதனால் அவர்களது உடைமை அதன் வயிற்றில் இருக்கும் என்றெல்லாம் சொன்னார்கள். இவ்வாறு புதிது புதிதாக இந்த மக்களுக்கு எதிராக இவர்களிடையே தங்கள் குரலை வெளிப்படுத்தவோ அதிகாரத்தை காட்டவோ எந்த தளமும் இல்லை என்பதனாலேயே வெளியில் இருந்து கூறப்படக்கூடிய எல்லா விஷயங்களையும் உண்மையாக எடுத்துக் கொண்டு இந்த மக்களை புறக்கணிக்கின்றார்கள். இதுதான் உண்மை. திட்டமிட்ட ஒரு சதியின் வெளிப்பாடுதான் இதற்குள்ளாக இருக்கிறது. இதைத்தான் சமவெளி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


பிருந்தா - கனிமொழி அவர்கள் நெய்தல் நில மக்களுக்கான சுய உதவிக் குழு முதலியவற்றை செய்தார்கள். அதன் மூலம் இந்த நெய்தல் நில மக்களுக்கு ஏதும் பயன் விளைகிறதா?


கடந்த இரண்டு வருடமாக நெய்தல் திருவிழா நடத்துகிறார்கள். உண்மையில் அதில் நெய்தல் படைப்பாளர்களுக்கு நெய்தல் சமகால இலக்கியவாதிகளுக்கு இடமில்லை. அது முழுக்க முழுக்க அவர்களது தரப்பு இலக்கியங்களை கொணர்ந்து அதனை நெய்தல் இலக்கியங்கள் என்கிறார்களே ஒழிய நெய்தல் இலக்கியங்களுக்கு அங்கு இடம் இல்லை.


பிருந்தா - நெய்தல் திருவிழாவும் நெய்தல் புத்தகத் திருவிழாவும் நெய்தல் நில மக்களுக்குப் பயன்படுகிறதா?


இந்த நெய்தல் திருவிழாவிற்கும் நெய்தல் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மீனவர் பற்றி பேசுவதே இப்போது அரசியல் ஆகிவிட்டது. இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்கள் என்று எல்லை பிரச்சனையைப் பேசுவது இப்போது பெரும் அரசியலாகிவிட்டது. இப்போது முதல்வர் கூட எங்களின் ஆட்சி மீனவர்களின் ஆட்சி மீனவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஆட்சி என்றுதான் சொன்னார். அதே மாதிரி தான் கனிமொழி அம்மாவும் சொல்கிறார்கள். ஆனால் அவரின் நோக்கம் நியாயமாக இருந்தும் அதை நடைமுறைப்படுத்த வேண்டிய இடத்தில் இருப்போர் அதனை வேறு மாதிரி திசை திருப்புகின்றார்கள். இதனால் நெய்தல் சமூகத்திற்கும் நெய்தல் இலக்கியவாதிகளுக்கும் ஒரு சிறு துரும்பு கூட நன்மை இல்லை.


பிருந்தா - வானிலை ஆய்வு மையங்கள் நிறைய செயற்கைக்கோள்களை பயன்படுத்தி வானிலையைக் கணிக்கின்றோம் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த கணிப்பு சூழலையே பாரம்பரியமாக செய்து வாழ்ந்த மக்களும் இருக்கிறார்கள். 80 வயது தாத்தா பாட்டியால் அப்பருவக்கால காற்றை கணித்தே சூழலையும் கணிக்க முடியும் தானே? ஒக்கிப் புயல் 45 லிருந்து 55 கிலோமீட்டர் வேகம் என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் காற்று 110 கிலோமீட்டர் வேகத்தில் அடித்திருக்கிறது. இதனை நெய்தல் நிலத்திலே வாழும் மக்களால் கணிக்க முடியாதா?


தினசரி தொழிலுக்கு சென்று கொண்டிருப்பார்கள். முன்பு கட்டுமரத்தில் சென்றார்கள். அவர்களுக்கு அந்த அறிவு தான். இப்போது இருக்கக்கூடிய தொழில் எல்லாம் ஆழ்கடலில் நடக்கக்கூடியது. அதிலும் 200 நாட்டிகல் 250 நாட்டிகலில் நடக்க கூடியது. அங்கு இருக்கக்கூடிய தட்பவெப்பநிலையோ வானிலை விஷயமோ கரையில் இருக்கக்கூடிய மீனவர்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை. ஐந்து நாட்டிகலில் உள்ள விஷயம்தான் வானிலை ஆய்வு மையக் கணிப்பில் வரும். ஆழ் கடலுக்குள் சர்வதேச கடலுக்குள் நடக்கும் வானிலை எல்லாம் இவர்களால் கணிக்க முடியாது. ஆனாலும் அது மாதிரி இடத்தில் ஒரு மீனவன் காணாமல் போய்விட்டான், பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறான் எனில் அவனைத் தேடி கண்டுபிடிக்கும் திறமையெல்லாம் மீனவர்களுக்கு உண்டு. ஒக்கிப் புயல் நேரத்தில் கூட தொலைந்து போன மீனவர்களை கண்டுபிடிக்க கரை மீனவர்கள் புறப்பட்டார்கள். அப்போது கூட அரசு அவர்களை தடுத்து விட்டது. 'அடுத்து சாகர் என்ற புயல் வருகிறது. அது ஒக்கிப் புயலை விட மூன்று மடங்கு அதிகமான பாதிப்புகளை உருவாக்கும். அதனால் யாரையும் கடலுக்குள் இறங்க அனுமதிக்க மாட்டோம்' என்று கூறி இந்த மக்களை தடுத்தார்கள். ஆனாலும் ஐந்து நாட்களுக்குப் பிறகு மீனவர்கள் கடலுக்குள் சென்று ஐந்து படகுகளையும் 55 மீனவர்களையும் உயிரோடு மீட்டு வந்தார்கள். இவர்களை 5 நாள் முன்னமே அனுப்பி இருந்தால் இறந்த 205 நபர்களில் 100 பேரையாவது காப்பாற்றி இருக்க முடியும். நாங்களே சென்று கொண்டு வருகிறோம், எங்களுக்கு எந்த இடத்தில் அவர்கள் மீன் பிடிப்பார்கள் என்பது தெரியும் என்று கூறியும் இவர்களை அனுமதிக்கவில்லை. நேவி கப்பலில் மீனவர்களை ஏற்றிக்கொண்டு போனார்கள். ஏற்றிக்கொண்டு 60 நாட்டிகல் உள்ளாக சுற்றி விட்டு மீண்டும் அழைத்துப்போன மீனவர்களை கரையில் வந்து விட்டு விட்டார்கள். போய் வந்தவர்கள் தான் சொல்கிறார்கள், '60 நாட்டிகல் மேலே செல்லுங்கள்' என்று கூறினால், 'எங்களுக்கு இதற்கு மேல் அனுமதி கிடையாது' என்கிறார்களாம். அதாவது மீனவ மக்களைப் பற்றி எந்த உணர்வும் இல்லாத வானிலை ஆய்வுகள் பற்றி எந்த நாட்டமும் இல்லாத கடலைப் பற்றியோ புயலைப் பற்றியோ காற்றைப் பற்றியோ எந்த புரிதலும் இல்லாத இந்த மாதிரி ஆட்களால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் இந்த மக்களுக்கு தன்னெழுச்சியாக இதைப் பற்றிய எல்லா அறிவும் இருக்கிறது. 250 நாட்டிகல் ஒரு விசைப்படகை கொண்டு சென்றே 55 மீனவர்களையும் ஐந்து படகுகளையும் மீட்க முடிகிறதென்றால் நீங்கள் ஏன் இந்தக் கப்பலை கொண்டு போயிருக்க முடியாது? முடிவது தானே! பிறகு ஏன் முடியும் காரியத்தை செய்யவில்லை? நீ செய்யவில்லை எனில் எங்களையாவது போக விடலாமே! எங்களையும் போகவிடாமல் தடுப்பதுதான் மக்களுடைய கோபமாக இருக்கிறது.


பிருந்தா - இப்போது சாதாரணமாக மீன் பிடிக்க வைத்திருக்கும் விசைப்படகுகளில் கூட ஜிபிஎஸ் இருக்கிறது இந்த ஜிபிஎஸ் கருவி வழியாகவே எந்த இடத்தில் எவ்வளவு ஆழம் இருக்கிறது என்பதை கணிக்க முடியும். இந்த இடத்தில் எவ்வளவு நீரோட்டம் இருக்கும் நாம் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்பதை மீனவர்கள் கணித்து முறையாக செய்யலாம் இல்லையா?


அதில் ஒரு பெரிய சிக்கல் உள்ளது. சுனாமிக்குப் பிறகு அந்த நில அடுக்கின் அமைப்பு இன்னும் சரியாக சேரவில்லை. அந்த நில அடுக்கு எந்த பக்கம் ஆடுகிறது, எந்த பக்கம் அசைகிறது என்பது தெரியாததனால் நீரோட்டங்கள் மாறி மாறி இருக்கிறது. மீனவர்களால் கணிக்க முடிவதில்லை. பருவ காலமும் கூட மாறி இருக்கிறது. மழை வரக்கூடிய நேரத்தில் வெப்ப காற்று அடிக்கிறது. காற்று வர வேண்டிய நேரத்தில் ஒன்றும் இல்லாமல் கிடக்கிறது. அலை இருக்க வேண்டிய நேரத்திலும் ஒன்றும் இல்லாமல் கிடக்கும். இவ்வாறாக தட்பவெப்ப நிலையே மாறி இருக்கும். அப்படி இருக்கும்போது எதையும் நாம் துல்லியமாக கணிக்க முடியாது. இராமேஸ்வரத்தில் இருந்து ஐந்து படகு போனது மூன்று படகு வந்தது என்றால் இரண்டு படகு எல்லையை தாண்டி இருக்கும். ஒக்கிப் புயலில் ஒரு சம்பவம் நடந்தது. ஒருவர் 250 நாட்டிகல்லுக்கு அந்தப் பக்கம் இருந்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தார். அவரை அங்கு இருந்த நேவி கப்பல் காரர்கள் விரட்டி கரைக்கு அனுப்பி விட்டனர். அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் எனில், அவரது படகை இவர்களது படகோடு இணைத்திருக்க வேண்டும். அல்லது அருகில் இருக்கும் துறைமுகத்திற்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரைக்கு விரட்டியதால் அந்த மீனவர் சரியாக அந்த புயலின் நடுவில் மாட்டிக் கொண்டார். சும்மா விட்டிருந்தாலோ கப்பலோடு அணைத்து போட்டிருந்தாலோ அந்த மீனவர் பாதுகாக்கப்பட்டு இருப்பார். விரட்டி விட்டதனாலே அவர் புயலினில் மாட்டினார். இப்படிப்பட்ட நிலையும் இருக்கிறது. இந்த மக்களுக்கு தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த மக்களுக்கும் அனுபவம் இருக்கிறது, இவர்கள் சொல்வதையும் கவனிக்க வேண்டும். ஒரு மீனவரின் உயிரை காத்துதான் அடுத்த பணியை செய்ய வேண்டும் என்று நேவிகாரர்களுக்கு கடல் சட்டம் கூறுகிறது. ஆனாலும் சாக்குபோக்குச் சொல்லி மீனவர்களை விரட்டி அடிக்கும் நிலைதான் நேவி கப்பல் காரரிடத்தில் இருக்கிறது. ஜிபிஎஸ் என்பதை வைத்துக்கொண்டு வானிலையையோ நீரோட்ட வேகத்தையோ காற்று திசை மாறுதலையோ பார்க்க முடியாது. எந்த பாறை கூட்டத்தினிடையே நேற்று மீனை பிடித்தோம் என்று குறித்து வைத்துக் கொண்டு மறுநாள் அங்கு செல்வதற்கே இந்த ஜிபிஎஸ் பயன்படுமே தவிர வானிலை பற்றி எல்லாம் ஜிபிஎஸ் சொல்லாது.


தீசன் - அய்யா! உரை நடுவே ஒன்றை நீங்கள் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளீர்கள். அது 'மீன்வள தினம் அல்ல மீனவர் தினம்' என்பது அதன் நோக்கம் என்ன?


1987-ல் 153 நாடுகளை சேர்ந்த 150 மீனவர்களை ஒருங்கிணைத்து டெல்லியில் மீனவர்களுடைய பாதுகாப்பு, மீனவர்களுடைய சட்டங்கள், தொழில், வருமானம், வாழ்வாதாரம் இப்படிப்பட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு கூட்டம் செய்தார்கள். அப்போது அவர்கள் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்கள். உலகளாவிய மீன்வளத்தை பற்றிய பிரகடனம் அது. நவம்பர் 17ல் தொடங்கி நவம்பர் 21ல் அந்த மாநாடு முடிந்தது. 21ல் தான் பிரகடனமும் வெளிவந்தது. அந்தப் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ஐக்கிய நாடுகள் சபை இதை உலக மீனவர் தினம் என்று அறிவித்தது. ஆனால் இங்கு இருக்கக்கூடிய அரசும் அரசு அதிகாரிகளும் World Fisherman Day (உலக மீனவர் தினம்) என்பதை World Fisheries Day (உலக மீன்வள தினம்) என்று மாற்றி விட்டார்கள். இப்போது உலகத் தொழிலாளர்கள் தினம் - World Labour's Day என்பதை World Industrial Day என்று கூறுவது எத்தனை முட்டாத்தனமோ அது மாதிரி உலக மீனவர் தினத்தை உலக மீன்வள தினம் என்பது எப்படி பொருந்தும்? மீன்வள தினம் என்றால் கடல், மீன்கள் அதன் சுற்றுச்சூழல் பற்றி பேசுமே தவிர மீனவர்களை பற்றி பேசாது. உலகம் மீனவர் தினம் என்று அங்கீகரித்ததை நீங்கள் ஏன் மாற்ற வேண்டும்? இவ்வளவுதான் நமது கேள்வி.


தீசன் - இதழ் பணியைக் காட்டிலும் சமூகப்பணி குறிப்பிடத்தக்கது. அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்திலும் நீங்கள் பணியாற்றி உள்ளீர்கள். இவ்வியக்கம் தரும் விழிப்புணர்வு என்ன? இதை நான் கேட்கக் காரணம் இங்கு வாழும் டெல்டா மக்களுக்கும் இவ்விழிப்புணர்வு மிக அவசியம். அணு உலை எது மாதிரியான பாதிப்பைத் தருகிறது?


அணு உலை விஷயத்தில் 1989இல் இருந்தே அதாவது சிறுவயதிலிருந்தே அந்தப் போராட்டத்தில் இருந்திருக்கிறேன். 'நீரை காப்போம்! உயிரை காப்போம்!' என்று கல்கத்தாவில் இருந்து ஒரு பேரணி இங்கு வந்தது. குஜராத்தில் இருந்து ஒரு பேரணியும் வந்தது. கன்னியாகுமரியில் அப்பேரணி நிறைவு பெறக்கூடிய நேரம். அங்கு இவை சேர்ந்து ஒரு பெரிய பேரணி நடந்தது. அந்த சமயத்தில் ஒரு மீனவர் பெண் போலீஸ் மீது கைவைத்து விட்டார் என்று கூறி திசைத்திருப்பி போராட்டத்தை பிசுபிசுக்க வைத்தனர். எப்படி மெரினா போராட்டத்தில் மீனவர்கள் சமூக விரோத செயல்கள் செய்ததாக கூறி திசைத் திருப்பினார்களோ அதே மாதிரி இங்கும் ஒரு மீனவர் பெண் போலீஸ் மேல் கைவைத்து விட்டார் என்று கூறி துப்பாக்கி சூடு நடத்தி அக்கூட்டத்தை கலைத்தார்கள். ஆரம்பகட்டத்தில் கூடங்குளம், செட்டிக்குளம், இடிந்தங் கரை இப்பகுதி மக்கள் எல்லாம் எங்களுக்கு மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி வரப்போகிறது எங்கள் ஊரெல்லாம் சிங்கப்பூராக மாறப்போகிறது. இவர்கள் வெளியில் இருந்து வந்து கொண்டு எங்கள் வளர்ச்சி பொறுக்காமல் போராட்டம் செய்கிறார்கள் என்று எங்களையெல்லாம் விரட்டி அடித்தார்கள். பிறகு புக்குசிமாவில் ஏற்பட்ட அணு உலை வெடிப்புக்குப் பிறகுதான் இப்படிப்பட்ட ஆபத்துதான் நமக்கும் வரும் என்ற விழிப்புணர்விற்கு வந்தார்கள். அப்போதும் அரசு ஆரம்பத்திலே தடுக்காமல் மக்களுக்கு எதிராக ஒரு விஷயத்தை கொண்டு வந்து விட்டு எங்கள் போராட்டத்தையும் தோல்வியடையச் செய்தார்கள். இந்த விழிப்புணர்வு செய்தியை கிராமம் கிராமமாக கடற்கரை கடற்கரையாக கொண்டு சென்றதில் எங்களுக்கு பங்கு உண்டு. இதனை சமவெளி சமூகத்தினர் இடையேயும் நாங்கள் கொண்டு வந்து சேர்த்தோம். நன்றாகவே சென்று கொண்டிருந்த போராட்டம், அரசு கடைசி நேரத்தில் ஏமாற்றியதின் விளைவால் தோல்வியில் முடிந்தது ஆனால் அதை சுதாரித்துக் கொண்டுதான் இனயம் சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையப் போராட்டத்தில் மிகவும் துணிச்சலோடு நின்று இரண்டு வருடம் மிகவும் காத்திரமாக போராடி அதை விரட்டி அடித்தோம் மத்திய அரசினுடைய எல்லா எதிர்ப்புகளையும் இராணுவத்தையும் போலீசையும் மீறி எதிர்த்து நின்று மக்கள் சக்தி வென்றது என்ற போராட்டமாக இனயம் போராட்டம் இருந்தது. அதையும் நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.


தீசன் - 'காலியாகும் கடலோர பள்ளிகள்' கட்டுரையில் இவ்வரிகளை குறிப்பிட்டிருப்பீர்கள்,
"மொழியையும் பண்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டதுதான் கல்வி. அவற்றை அழிப்பதன் மூலம் ஒரு இனத்தையே அழித்து விடலாம்"
மிகவும் முக்கியமான கருத்து இது. இதன் வாயிலாக எனது கடைசி கேள்வி, நெய்தல் சமூகத்தின் வெற்றி எதன் மூலமாக விளையும் என்று கருதிக் கொள்ளலாம்? கல்வி வழியாகவா? அல்லது போராட்டங்களின் வாயிலாகவா? நெய்தலின் வெற்றி தீர்வு என்ன?


அதில் கல்வியும் இருக்கிறது. போராட்டமும் இருக்கிறது. அதைவிட கடமை உணர்வும் முக்கியமானது. நெய்தல் சமூகத்தை பொறுத்த அளவில் பொறுமை என்பது இல்லை. இவர்கள் கடலுக்குள் சென்றால் உடனே மீன் கிடைக்கும். முதல் போட்டு காத்திருந்து பலனடையும் சமூகத்திற்கு மத்தியில் கடற்கரை சமூகம் உடனடியாக பலனை அடைவதால் இவர்களுக்கு பொறுமை என்பது இல்லை. நாளைய வேலை வாய்ப்பு கல்வியில் கூட எதைத் தேர்வு செய்கிறார்கள் எனில், பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கிறார்கள். படித்து முடித்த உடனே வேலை பார்க்கலாம் என்ற எண்ணத்தில் இவற்றை தேர்வு செய்கின்றனர். அரசு பணிகளையோ அரசு சார்ந்த பணிகளையோ பார்ப்பதற்கு படிப்போ பயிற்சியோ நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதோ டிஎன்பிஎஸ்சி தேர்வு யுபிஎஸ்சி தேர்வு முதலியவற்றில் கலந்து கொள்வதோ இவைகளில் எதிலுமே மீனவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. பொறுமை இல்லாததுனாலேயே உடனடி தேவையை எண்ணும் கடல் தந்த அறிவு மட்டும் இருப்பதுனாலேயே அரசு துறைகளிலும் அரசு சார்ந்த பணிகளிலும் நெய்தல் இல்லை அதில் தான் வெற்றி இருக்கிறது. அதிகாரத்தில் இவர்களுக்கு பங்கு கிடைப்பதில் தான் வெற்றி இருக்கிறது. அதிகாரத்தில் பங்கு பெறவும் வைக்க வேண்டும். அதற்கு சட்டமன்ற, நாடாளுமன்ற, தொகுதி சீரமைப்பு, உள்ளாட்சி அமைப்பில் இவர்களுக்கான தலைமைகள் உருவாவது, ஊர்களில் இவர்களுக்கான தலைமை உருவாவது, தேவாலய கைகளில் இருந்து விடுபட்டு தலைமைகள் தன்னெழுச்சியாக உருவாக வாய்ப்புகளை உருவாக்குவது, அதே சமயத்தில் கல்வி அறிவை வளர்ப்பது, அரசு துறைகளில் இவர்களை சேர்ப்பது இது எல்லாமும் ஒருங்கே வரும்போதுதான் அச்சமுகத்தின் வெற்றி இருக்கிறது.


தீசன் - மிக்க நன்றி ஐயா, எப்போதும் சமவெளி சமூகத்தினருக்கு நெய்தல் சமூகத்தின் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. நாங்களும் இந்த தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத் தமிழ்த் துறையும் நெய்தல் சமூகத்தின் பக்கம் துணையாய் இருந்து கொண்டே இருப்போம்.


வெறுமனே படிப்பிற்காக ஆய்வுக்காக மார்க்கிற்காக என்று இல்லாமல் உண்மையான கரிசனையோடு சமூகத்தினுடைய உண்மையான அறிவோடு நீங்கள் இது மாதிரியான ஆய்வு செய்தல் அச்சமூகத்திற்கு ஆற்றும் நன்றி கடனாகவே நாங்கள் பார்க்கின்றோம். நெய்தல் சமூகம் சார்பாக உங்களுக்கும் தமிழ்நாடு மத்தியப்பல்கலைக் கழகத் தமிழ்த்துறைக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி

ஆக்கம் - தீசன்

கருத்துரையிடுக

புதியது பழையவை