கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது, திரைப்பட நடிகர் கமலஹாசன், தனது அரசியல் கட்சியான "மக்கள் நீதி மைய" தேர்தல் அறிக்கையில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் "மகளிருக்கு உழைப்புக்கான ஊதியம் வழங்கப்படும்" என அறிவித்தார்.
சிலர் இதை ஆச்சரியமாக பார்த்தார்கள். சிலர் இதை கேலி கிண்டல் செய்தார்கள். நாள் முழுவதும் குடும்பத்துக்கு உழைக்கும் பெண்களுக்கு, ஒரு நிதியை கொடுக்க வேண்டும் என்ற கமலஹாசனின் சிந்தனை பரவலாக பெண்களால் வரவேற்கப்பட்டது.
இந்த வரவேற்பை, சரியாக புரிந்து கொண்ட தி.மு.கழகம், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய், அவர்களுக்கான உரிமைத் தொகையாக வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்து, வெற்றியும் பெற்று, ஆட்சிக்கும் வந்துவிட்டது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொரானா போன்ற இடர்பாடுகளாலும், முந்தைய ஆட்சி வைத்துவிட்டு போன 6 லட்சம் கோடி கடனாலும் திணறி போனது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தனது வருமானத்தை பெருக்கி கொண்ட பிறகு, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வரும் 2023 செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் செயல்படுத்த போவதாக அறிவித்தது.
சமூக நல திட்டம்
மகளிர் உரிமைத் திட்டத்துக்காக, மாதம் ஆயிரம் கோடி வீதம் 12000 கோடி ரூபாய் ஒரு நிதியாண்டுக்கு செலவிட அரசு திட்டமிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் மட்டும் ஒன்பது மாதங்களுக்கு 9000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதான் இதுவரை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ள திட்டங்களிலேயே, மிகப்பெரிய சமூக நல திட்டமாகும். இதனால் 100 லட்சம் பெண்கள் அதாவது ஒரு கோடி பெண்கள் பயன் அடைவார்கள்.
முந்தைய திட்டங்கள்
ஏற்கனவே தமிழக அரசு 60 வயது கடந்த சுமார் 35 லட்சம் முதியோருக்கு ரூபாய் ஆயிரத்தை, முதியோர் உதவித் தொகையாக வழங்கி வருகிறது.
கணவனை இழந்தவர்களுக்கு உதவித் தொகையாக ரூ.1000, சுமார் இரண்டு லட்சம் பெண்களுக்கு வழங்கி வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் 4 லட்சம் பேருக்கு ரூ.1500 உதவித் தொகை மாதம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
உதவியாளர் இல்லாமல் செயல்பட முடியாத சுமார் 2 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ.2000 பராமரிப்பு தொகையாக வழங்கப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்து, பட்டப்படிப்பை தொடரும் மாணவிகள் மூன்று லட்சம் பேருக்கு, மாதம் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது.
அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்து 60 வயது முதிர்ந்தவர்கள் சுமார் 3 லட்சம் பேருக்கு, மாதா மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
கலைஞர் பெண்கள் உரிமை திட்டம்
இப்போது நடைமுறைக்கு வர உள்ள இந்த திட்டத்திற்கு கலைஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பெண்களுக்கு சொத்துரிமை, கல்வி வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சிகளில் 30% இட ஒதுக்கீடு, பெண்கள் சுய உதவிக்குழு, விதவைகள் திருமண நிதி உதவி, விதவைகள் பென்ஷன் திட்டம், ஐந்தாம் வகுப்பு வரை பெண்களே ஆசிரியைகள், கர்ப்பிணிகள் மகப்பேறு நிதி, போன்று வாழ்நாள் முழுவதும் பெண்களின் முன்னேற்றத்தை பற்றியே சிந்தித்த கலைஞரின் பெயர், அவரது நூற்றாண்டில் தொடங்கப்படும் ஒரு திட்டத்துக்கு சூட்டப்படுவது பொருத்தமே ஆகும்.
யாருக்கு கிடைக்கும்?
குடும்ப கார்டு அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தபட இருக்கிறது.
குடும்ப கார்டில் குடும்பத் தலைவராக பெண் இருந்தால், அவருக்கு இந்த உதவி கிடைக்கும்.
மாறாக குடும்பத் தலைவராக ஆண் இருந்தால், அவர் மனைவி பயனாளியாக கருதப்படுவார்.
குடும்பத்தலைவிக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது இல்லை.
5 ஏக்கருக்கு மேல் நஞ்சை நிலம் இருக்க கூடாது.
ஆண்டுக்கு 3600 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பமாக இருக்க வேண்டும். அதாவது இரண்டு மாதத்துக்கு ஒரு முறை 2750 வரை மின் கட்டணம் செலுத்தும் குடும்பங்களுக்கு தகுதி உண்டு.
நான்கு சக்கர வாகனங்கள் இருக்கக்கூடாது. அதாவது கார், டிராக்டர், ஜீப் உள்ள குடும்பங்களுக்கு தகுதி இல்லை.
ஆனால் வாடகைக் கார் இருக்கலாம்.
சொந்த வீடு இருக்கலாம். இரு சக்கர வாகனம் இருக்கலாம்.
வியாபாரிகள் ஜி.எஸ்.டி பதிவு பெற்று, ஆண்டுக்கு 50 லட்சம் வரை வியாபாரம் செய்தால், அவர்களுக்கு உதவி பெற தகுதி உண்டு. ஆண்டுக்கு 50 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்பவர்களுக்கு தகுதி இல்லை.
வருமான வரி செலுத்துபவர்களுக்கு, ஆயிரம் உதவித் தொகை பெற தகுதியில்லை.
ஆண்டுக்கு இரண்டரை லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு தகுதி உண்டு. அதாவது மாதம் இருபதாயிரம் வரை சம்பாதிக்கும் மகளிர் விண்ணப்பிக்கலாம். இதற்காக வருமானச் சான்று தேவையில்லை. ஊறுதி மொழி கொடுத்தால் போதும்.
ஆண்டுக்கு இரண்டரை லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுவதால்,
மத்திய மாநில அரசு ஊழியர்கள், ஓய்வு ஊதியதாரர்கள், பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரிவர்கள், வாரியங்கள், கழகங்களில், பணியாற்றுபவர்கள், வங்கிப் பணியாளர்கள், கூட்டுறவு அமைப்புகளில் பணியாற்றுபவர்கள், விண்ணப்பிக்க தகுதி இல்லை.
ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியத் தலைவர்கள், ஒன்றிய உறுப்பினர்கள், நகர மன்றத்தலைவர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், மாநகராட்சித் தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், விண்ணப்பிக்க தகுதி இல்லை.
கிராம வார்டு உறுப்பினர்கள், ஆயிரம் உதவி பெற தகுதி உண்டு.
தனித்து வாழும் பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் குடும்பத் தலைவியாக கருதப்படுவார்கள்.
ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவைகள் உதவி நிதி, நலவாரிய தொழிலாளர் ஓய்வூதியம் போன்ற நிதி உதவி பெறுவர்கள் இத்திட்டத்தில் உதவி பெற வாய்ப்பில்லை.
விதிவிலக்காக, மாதம் ஆயிரம் உதவி பெறும் மேல்படிப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவிகளின் தாயாருக்கு இத்திட்டத்தில் உதவி பெற தகுதி உண்டு.
இது போல மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெற்றாலும் இத்திட்டத்திலும் உதவி பெற தகுதி உண்டு.
விண்ணப்பம் செய்வது எப்படி?
உங்களுக்கான குடும்ப கார்டு உள்ள நியாயவிலைக்கடையில் விண்ணப்பத்தை பெற வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனி எண்ணுடன் கூடிய பிரத்யேக விண்ணப்பம் தருவார்கள். அதில் பெயர், ஆதார் எண், முகவரி, குடும்ப அட்டை எண், திருமண நிலை, மின் இணைப்பு எண், வங்கிக் கணக்கு எண், செல் நெ. போன்ற பதிமூன்று வகையான கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும்.
நீங்கள் குறிப்பிடும் விபரங்கள் உண்மைதான் என பயோமெட்ரிக் மூலம் உறுதி அளிக்க வேண்டும்.
இவ்விண்ணப்பங்களை அளிக்க ரேஷன் கடை அருகிலேயே சிறப்பு முகாம் அமைக்கப்படும்.
விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டிய ஆவணங்கள்; ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், மின் கட்டண ரசீது, வங்கிப் பாஸ் புத்தகம்.
நீங்கள் மேற்படி தகுதிகளை முழுமையாக பெற்றவராக இருந்தால், செப்டம்பர் 15 முதல், மாதா மாதம் ரூபாய் ஆயிரம் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஜெ மாரிமுத்து
இதையும் படிக்க