அண்மை

திருவாரூர் வட்டார வழக்குச் சொற்கள் (புழங்குப் பொருட்கள்)

 

திருவாரூர் வட்டார வழக்குச் சொற்கள்


வட்டார வழக்குச் சொற்களை ஏன் தொகுக்கிறார்கள் என்ற கேள்விக்கு பலர் பல விடைகளைத் தந்தாலும் அதில் கிடைக்குமொரு சொற்பச் சுகம் தான் அவ்வேலையை செய்ய உந்துகிறதென்று நினைக்கிறேன். புதிதாக ஏதோ தெரிந்து கொள்ளப்போகிறோம் என்ற ஆவலே அதைத் தேடித் தேடி ஓடச்செய்தது. வண்டலுக்கான வட்டார வழக்குச் சொற்களை சோலை சுந்தரபெருமாள் அவர்கள் செம்பட புத்தகமாய் தந்துள்ளார். நான் இணையத்தில் தந்திருக்கும் இவை புழங்குப் பொருள் மட்டுமே. அதோடு இவை நூறு சதம் திருவாரூர் தான் என்று என்னால் உறுதியாக கூறிவிட முடியாது. காரணம், இதில் வேதைச் சொற்களும், வடத்தமிழகச் சொற்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தும் அவையும் திருவாரூரில் வழக்கில் உள்ளதென்ற ஒரே காரணத்திற்காக அவைகளை சேர்த்தேன். உண்மையில் வட்டார வழக்குச் சொற்களை அறிவது மிகச்சிரமமான காரியம் தான். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஒலிப்பு நிலையானது பல ஆய்வுகளுக்கு பிறகு முடிவு செய்யப்படுகிறது. அந்த ஆய்வுகளுக்கு மூலம் சொற்களை சேகரிக்கும் தொகுப்பாளரின் வழக்கு அகராதி/ஒலிப்பு முறைக் குறிப்பு. குறிப்பிட்ட ஒரு ஒலியன் மீண்டும் மீண்டும் வருவதன் மூலம் நிச்சயமாக இது இவ்வூர் வழக்கு தான் என்பதை அறிவார்களாம். அதாவது, ஒரு ஊரிலே பலவூர் வழக்கானது தண்ணீரில் பன்னீர் கலந்தது போல் கிடக்கும். அதை அள்ளி அறிவது சிரமம் தான். இருந்தாலும் சுகமான ஒரு வேலை என்று ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இந்த சொல் இவ்வூர் வழக்கு தான் என்பதை எப்படி நான் வைரம் போல் நம்புவது என்று கேட்பீர்களாயின். அதற்கு பதில் எனக்கும் தெரியாது. ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் தொகுத்துவிட்டேன், அவ்வளவு தான். 

{tocify} $title={அகரநிரல்}


அகரம்


அஞ்சார பொட்டி (ஐந்து அரை பெட்டி, மிளகு, கிராம்பு, இலவங்கம், பட்டை போன்றவை வைக்க பயன்படும் வட்டப்பெட்டி) கடுக அஞ்சார பெட்டில போடு

அடுக்கள (ஆரூரில் பிராமண சமூகம் மட்டும் பயன்படுத்தும் சொல், சமையல் கட்டு) அடுக்கள சுத்தமாவே இல்லியே

அடுக்கு (அடுக்கி வைக்கப்பட்ட சாப்பாட்டு பாத்திரம்) அடுக்குல சாப்பாடு இருக்கு பத்திரமா தூக்கிட்டு போ

அட்டிக (கழுத்தில் அணியும் நகை) அட்டிக எவ்ளோடீ

அண்டா (நீளமாக அகண்ட வாய் உடையது) அண்டா எவ்ளோ

அன்னகூட (அன்னம் வைக்கும் கூடை, கல்யாண நிகழ்வுகளில் சில இடங்களில் மட்டும் இதில் அன்னம் வைக்கிறார்கள்) அன்னகூடல பூண்டு இருக்கு

அன்னசட்டி (அன்னம் வைக்கும் உலோகத்தால் ஆன சட்டி, இப்போது அன்னம் வைப்பது இல்லை) அன்னசட்டி மேல இருக்கு எடுத்து கொடு

அன்னவெட்டி (சோற்றுப்பானையில் இருக்கும் கரண்டி) அன்னவெட்டி சுடும்

அம்மிகல்லு (துவையல் செய்யப்பயன்படுவது) அம்மிகல்லு செம கனம்

அரணாகொடி (குழந்தைப் பருவத்திலே இடுப்பில் கட்டும் கயிறு) அரணாகொடி போடலைனா காத்துகருப்பு புடிச்சிடும்

அரமா (வணிக வழக்கு, அழுகிய காய், கனி) அரமாலாம் கை பாரு

அரிக்கன் சட்டி (அரிசியை கழுவ பயன்படுவது) அரிக்கேன் சட்டில அரிசிய போட்டு கழுவு

அரிக்கேன் லைட்டு (தூக்கி செல்வது போன்ற விளக்கு) அரிக்கேன் வெளக்க எடுத்துட்டு போ

அருவா (பெரும்பாலும் தேங்காய் உடைக்க பயன்படுவது, இளநீர் சீவ, ஒருசிலர் மரம் வெட்ட பயன்படுத்துவர்) அருவா தான் இருக்கே அதுல உடைங்க தேங்காவ

அருவாமன (பெரும்பாலும் காய்கறி வெட்ட பயன்படும் ஒரு கருவி) ஏங்க அருவாமன மொன மழுங்கிட்டு

அலக்கு (தொரட்டி - நீண்ட குச்சியின் மேல் கம்பு அல்லது அருவா கொண்டு இருப்பது) அலக்கு பெருசு பாத்து பறி


ஆகாரம்


ஆக்க (பூ, இலை கட்டும் நார்) ஆக்க போட்டு எலைய கட்டு

ஆனம் (இஸ்லாமிய வழக்கு. குழம்பு) உங்க வீட்ல என்ன ஆனோம்?


இகரம்


இஞ்சிகொத்து (சீப்பு வடிவில் இருக்கும் பலகாரம்) தீபாவளிக்கு இஞ்சிகொத்து செஞ்சேன்

இடியாப்ப ஒறை (இடியாப்ப மாவு பிழியும் கருவி) இடியாப்ப ஒறைல மாவப்போடு

இடுக்கி (சமையலறையில் சூடான பாத்திரத்தை தூக்க பயன்படுத்துவது) இடுக்கில டம்ளர தூக்கு

இட்லி குண்டா (இட்டலி சுடும் பாத்திரம்) அம்மாவுக்கு இட்லி குண்டா வேணுமாம்


ஈகாரம்


ஈக்குமாறு (தென்னை ஓலை குச்சி கொண்டு செய்யப்பட்டிருக்கும் துடைப்பம்) ஈக்குமாறு போட்டு அலச வேண்டி தான

ஈர் குத்தி (பேன் பார்க்கும் சீப்பு) ஈர் குத்தில ஒழுங்கா சீவு


உகரம்


உறி (தொங்கும் பானை) உறிய அடி

உழவாரம் (உழவு கருவிகளில் ஒன்று.புற்களை செதுக்கி அகழ்ந்து எடுக்க  உதவுகிறது) புல்லு எடுக்கனும் உழவாரத்த எடுங்க


ஊகாரம்


ஊதாங்குழல் (மண் அடுப்பு தீயை வளர்க்க உதவும் கருவி) ஊதாங்குழல் கறுத்துட்டு

ஊதி (விசில், விசில் மாதிரியான எல்லா விளையாட்டுப் பொருள்) ஊதிய முழுங்கிடாத


ஏகாரம்


ஏன (குழந்தை தூங்கும் தொட்டில்) (தூளி) புள்ளைய ஏனல போட்டு ஆட்டு

ஏனம் (பாத்திரம்) அந்த ஏனத்துல குழம்பு இருக்கு


ஒகரம்


ஒட்டடக்கம்பு (ஒட்டடை சரி செய்ய பயன்படும் நீள் துடைப்பம்) ஒட்டட கம்பு ஒடைய போது 

ஒட்டியாணம் (இடுப்பில் அணியும் தங்க மேகலை) ஒட்டியாணம் இன்னும் பெருசா வாங்கி இருக்கலாம்


ககரம்


கங்கணம் (திருமணமாகும் போது ஆண் பெண் இருவருக்கும் கட்டும் கயிறு) கங்கணம் கட்டியாச்சா

கச்சாத்து (வணிக பொருள் பண்ட மாற்றுக்கான கைசான்று, ஒப்புகை சீட்டு) அண்ணா கச்சாத்து இருக்கா

கடுதாசி (கடிதம்) வேலைக்கு கடுதாசி வந்துட்டா

கட்ட (சப்பாத்தி கட்ட, பூரிக்கட்ட) சப்பாத்திய கட்டலே எண்ண தடவிக்க 

கப்பி (உடைந்த செங்கல்) கப்பிய கொட்டிட்டு போய்ட்டாங்க

கரணை (கொத்தனார் வீடு கட்டும் போது கலவை பூச, மட்டம் செய்ய, செங்கல் உடைக்க பயன்படுத்தும் கருவி) கரணைய கால்ல போட்டுக்காத

கலயம் (குட்டிப்பானை, யாகம், சுப, துக்க நிகழ்வில் வைத்து இருப்பர்) கலயத்துல நூல் கட்டுங்க

கலுங்கு (கிராமங்களில் இருக்கும் ஏரியின் முழுக்கொள்ளளவு நிரம்பிய உடன் உபரி நீரை வெளியேற்ற அமைக்கப்படும் வடிகாலுக்கு "கலுங்கு" என்று பெயர்) அம்மா கலுங்கு வரை போயி வாரேன்

கல்லா (கடையில் பணம் வைக்கும் இடம்) கல்லால யாரு இருக்கா

களகொத்தி (தேவையற்ற புற்களை செதுக்குவது) களகொத்தியால செதிக்கி விடு

களவடை (அடுக்கு பானை அடியில் வைப்பது, ஸ்டீலில் இருப்பது) களவடைய போட்டு பானைய வை

களி (திருவாதிரை களி) திருவாதரைக்கு களி செஞ்சீங்களா

கள்ளிப்பொட்டி (பழம் வைக்க உதவும் மரத்தால் ஆன பெட்டி) கள்ளிப்பொட்டில ரெண்டு கிலோ ஆப்பிள் இருக்கு ஆத்தா

கவனை (மாடு வைக்கோலை வீண் செய்யாமல் உண்ண அமைக்கும் அமைப்பு) கவனேல வைக்கோல போடு

காடாத்துணி (இட்டலி சுடும் போது பயன்படுத்துவது) காடாத்துணிய அலசி போடு

காமாச்சி வெளக்கு (வீட்டில் சாமி மாடத்து நடுவில் வைக்கும் விளக்கு) காமாட்சி வெளக்கு எவ்ளோ வெல வரும்?

காம்பு (வணிக வழக்கு, வாழைத்தார்) - காம்பத்தூக்கு

காராமணி (பயறு வகைகளில் ஒன்று. இதனைத் தட்டைப்பயறு என்றும் கூறுவர்) காராமணிய அவிச்சி சாப்பிட்டா நல்லா இருக்கும்

காளா (செங்கல் தயாரிக்கும் இடம்) (களவாய்) காளால செங்கல் சுடுவாங்க

கிங்கிணி (கொலுசு, குழந்தைகளுக்கு போடுவது) கிங்கிணி கட்டிவிட்டு இருக்கீங்களா

கிடுக்கி (சமையலறையில் சூடான பாத்திரத்தை தூக்க பயன்படுத்துவது) கிடுக்கிய ஒழுங்கா புடி

கிண்டி (குழந்தைகளுக்கு பாலூட்டுவது) பால கிண்டில சூடா கொட்டாதீங்க

கிண்ணம் (மூடி இல்லாதது, உணவு பொருள் வைக்க உதவுவது) கிண்ணத்த அலசிட்டு எடுத்துக்கோ

கிளுகிளுப்ப (குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொருள், ஜல் ஜல் என சத்தம் வரும்) இந்தா கண்ணு கிளுகிளுப்ப

கீல் (இரண்டு திட பொருட்களை இணைக்கும் இயந்திர தாங்கி, ஜன்னல், அலமாரி போன்ற வற்றில் பயன்படும்) கீல் போட்டா நல்லா இருக்கும்

குச்சி (சிலேட்டு குச்சி) பால் குச்சில எழுதனும்

குஞ்சலம் (கூந்தலில் அணியப்படும் அணி) குஞ்சத்த வச்சி பின்னிவிடுங்க

குண்டா (குட்டையாக அகல வாய் உடையது) குண்டா எவ்ளோ

குண்டுமணி (குன்றிமணி) (பத்தர் பட்டறைகளில் தங்கத்தை அளக்க உதவும் ஒருவகை விதை) குண்டுமணி அளவு கூட தங்கம் இல்ல

குண்டூசி (சிறிய ஊசி, தையல் வேலைக்கு பயன்படுவது) குண்டூசில கைய குத்திக்காத

குதிரு (நெல் கொட்டி வைக்கும், மண்ணால் செய்யப்பட்ட கலம்) குதிருல நெல்ல கொட்டுங்க

குல்லா (பிடி இல்லாத தொப்பி) குல்லா போட்டு இருக்கீயா

குழவி (அரைக்க பயன்படும் கல்) கொழவிய கால்ல போட்டுக்காத

கூஜா (ஜக்கு) கூஜாவ தூக்கு தண்ணி மாத்துவோம்

கூண்டு வண்டி (மாட்டு வண்டியிலே அமர்ந்து செல்வோருக்கு கூண்டு உள்ள வண்டி) மாப்பிளையும் பொண்ணும் கூண்டு வண்டில போனாங்க

கூழ்வத்த (வீணாகும் சோற்றை ஊறவைத்து செய்யும் ஒரு பண்டம்) கூழ்வத்த போட்டிருக்கேன். காக்கா வராம பாத்துக்கோ

கொக்கி (மாட்ட பயன்படுத்தும் கருவி) பால் ஏனத்த கொக்கில மாட்டு

கொடகல்லு (இட்லி மாவு அரைக்கும் கல், ஆட்டுக்கல் என்றும் சொல்வர்) இட்டுலிக்கி கொடகல்லுல போட்டீங்களா

கொடக்கம்பு (தாத்தா பாட்டி தாங்கி நடப்பது) கொடக்கம்ப ரூம்ல வச்சிடு கண்ணு

கொடிமரம் (கொடி கம்பம்) கொடிமரத்துகிட்ட வா

கொட்டாங்குச்சி (இரண்டாக உடைக்கப்பட்ட தேங்காயின் பாகம்) பறவக்கி கொட்டாங்குச்சில தண்ணி வை

கொட்டாய் (கொட்டகை) (மாட்டுக் கொட்டாய், திரையரங்கம்) கொட்டாயிக்கு போய்ட்டு வரீங்களா

கொட்டில் (ஆடு நிறுத்தும் இடம்) ஆட்ட கொட்டிலுக்கு கொண்டு போ

கொப்பற (எண்ணெய்க்கு காயவைத்த தேங்காய்) கொப்பறய ஆட்டுனா எண்ணெய்

கொப்பற சட்டி (தீச்சட்டி) கொப்பற எடுத்துட்டு வராரு கை வெந்துடும் பாரு

கொப்பி (பேனா கொப்பி) கொப்பி கீழ விழுந்துட்டு பாரு

கொப்பு (மரக்கிளை) கொப்பு வெட்டி வச்சிருக்கீங்களா

கொவள (நீர் அருந்த பயன்படுவது, டம்ளர்) தண்ணிய கொவளேல கொடு

கோணூசி (பெரிய ஊசி) சாக்கு தைக்கனும் கோணூசி கொண்டா


சகரம்


சகடை (கப்பி) (கிணற்று நீரை இரைக்க உதவுவது) சகடை புதுசா

சங்குசக்கரம் (தரைச்சக்கரம் என்பார்கள்) சங்குசக்கரம் சௌத்துட்டு 

சட்டம் (நாற்காலி மேசை கால்கள் செய்ய பயன்படும் மட்டமுள்ள மரத்துண்டு) சட்டத்த ஒழுங்கா வச்சி செய்யுங்க

சட்டுவம் (தோசைத் திருப்பி) சட்டுவம் சுடும் பாத்துக்கோ

சப்பரம் (சாமியை ஊர்வலம் அழைத்து செல்ல உதவுவது) சப்பரம் வந்துட்டு

சமையக்கட்டு (அடுப்பங்கறை, அடுப்படி, சமையல் செய்யும் இடம்) தம்பி சமைய கட்டுல இருக்கான்

சம்பட்டி (கல்லு உடைக்கு பயன்படுத்துவது) சம்பட்டி எடுத்து அடிச்சிடுவேன்

சரம், சடபுடா (படபடவென வெடிக்கும் வெடி) காலைலே சரத்த வெடிடா

சல்லட (சல்லடை) ரவைய சலிக்கனும் சல்லடய எடு

சாக்குத்துணி (வாயிலில் போடும் மேட்) சாக்குத்துணில கால தொடச்சிட்டு வாங்க

சாந்து (குழம்பு மிளகாய் தூள்) சாந்து பாக்கெட் தாங்க

சாந்து சட்டி (கொத்தனார்கள் கலவை வைத்திருக்கும் சட்டி) சாந்து சட்டில கலவைய எடு

சாமியானா பந்தல் (சுப, துக்க நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் பந்தல்) சாமியானா பந்தல் வாடக எவ்ளோ

சாரட் வண்டி (குதிரை வண்டி) சாரட் வண்டில மாப்பிள பொண்ணும் வராங்க

சாரணி (துளை உள்ள கரண்டி) சாரணில எண்ண கற இருக்கும்

சாரொட்டி (பொரை, வறுக்கி) நாயிக்கு சாரொட்டி போட்டேன்

சால்னா (குழம்பு) சால்னா அதிகமா வையுங்க

சிப்பம் (வணிகர்கள் மட்டும் பயன்படுத்தும் மூட்டை என்பதற்கான சொல்) சிப்பத்த தூக்கியாச்சா

சிமிலி வெளக்கு (மண்ணெண்ணெய் ஊற்றி ஏற்றும் விளக்கு) அந்த சிமிலிய எடு

சீசா (பாட்டில் bottle) சீசாவ தூக்கிட்டு போ

சீராணி சாதம் (முஸ்லீம் வீட்டில் செய்யப்படும் புலவு சோறு) ஆச்சி சீராணி சாதம் கொடுத்தாங்க

சுத்தியல் (சுத்தி) சுத்தியல எடு

சும்மாடு (தலைப்பாகை போல் இருக்கும். பொருட்சுமப்போர் பயன்படுத்துவர்) ஏ பொண்ணு சும்மாட இறக்கு

செரட்ட (கொட்டாங்குச்சி உடைந்த நிலையில்) செரட்ட அடுப்பெரிக்க வொதவும்

சொம்பு (வளைந்து இருக்கும், அகலமான வாய் உடையது, தண்ணீர் பிற திரவ பொருட்களை அருந்த உதவுவது) சொம்ப நெளிச்சிடாத

சௌக்காரம் (துணி சோப்பு) சொளக்காரம் போட்டுமா அழுக்கு போகல

சோட்டிக்குவள (நீளமான அகண்ட குண்டான்) சோட்டிக்குவள சீரா வந்திருக்கு

சோறு (சரியாக வேகாமல், விறைவிறையாக இருப்பதை சோறு என்றும் நன்கு வெந்ததை சாதம் என்றும் சொல்வர்) என்னம்மா ஒரே சோறு சோறா இருக்கு

சோலி (ஜோலி) (தாயக்காய்) ஒரு ஆளுக்கு எட்டு சோலி தான்


ஜகரம்


ஜமுக்காளம் (கல்யாண வீடுகளில் விரிக்கும் பாய்) ஜமுக்காளம் வாடக எவ்ளோ

ஜரிகை (புடவை, வேஷ்டியில் இருக்கும் அழகு பொருள்) ஜரிகை முன்ன வர மாதிரி கட்டு

ஜல்லி (உடைந்த பாறை) ஜல்லி போட்டு கட்டுனீங்களா

ஜிகினா (அழகு பொருள் செய்ய பயன்படும் ஒரு பொருள், பெண்களில் சிலர் முகத்தில் பூசிக்கொள்வர், புடவைகளிலும் இருக்கும்) ஜிகினா புடவ எடுக்காத

ஜௌத்தாள் (கேரிப்பை, பாலிதீன் பை) ஜௌத்தா கொடுங்கண்ணா

ஜோப்பு (சட்டை பை) ஜோப்ப கிழிச்சிடாத


டகரம்


டப்பா (மூடி உள்ளது, பிளாஸ்டிக்) டப்பா கொடுத்தா கழுவிட்டு கொடுக்கனும்

டப்பி (சிறிதாக இருக்கும் டப்பா) குச்சி டப்பி எவ்ளோடா


தகரம்


தடுக்கு (சாப்பிட அமரும் போது விரிக்கும் சிறிய அளவிளான பாய், பெரும்பாலும் விருந்தினர் வரும் போதே விரிப்பர்) மாமா உக்கார அந்த தடுக்க போடு

தட்டி (துணி அல்லாத பலகையில் செய்யப்பட்ட மறைப்பு) வீட்டுக்கு தட்டி போடுவோமா

தட்டி (முள்வேலி கதவு) தட்டி போட்டு மூடுங்க

தண்ட (காப்பு வடிவில் இருக்கும் கொலுசு) தண்ட போட்டு இருக்கீங்களா

தலவாணி (தலையணை) தலவாணி வேண்டாம் சும்மா படுத்துக்குறேன்

தவள (நீர் வைப்பது) தவளேல தண்ணீ இருக்கு

தாப்பா (தாழ்ப்பாள் - கதவடைக்க உதவும் பொருள்) தாப்பா போட்டுட்டு வா

தாம்பாளம் (சுப நிகழ்வுகளில் தேங்காய் வாழைப்பழம் போன்ற பொருள் வைப்பது) தாம்பாளத்துல கற்கண்டு போடுங்க

தாம்பு (ஆட்டைக் கட்டும் கயிறு) தாம்புல கட்டிப்போடு ஆட்ட

தார்குச்சி (மாட்டை எழுப்ப உதவும் குச்சி, மூங்கில் குச்சில் ஆணி அடித்து வைத்திருப்பர்) தார்குச்சால குத்தியும் இது எந்திரிக்கலையா

திமிசு கட்ட (தரையை மட்டம் செய்ய பயன்படுத்தும் கட்டை, அலுமினிய கடைகளில் வைத்திருப்பர்) திமிசு கட்ட கனமா இருக்கும்

திருவாச்சி (தெய்வத்தை சுற்றி உள்ள பீடம்) ஊர் திருவாச்சி திருட்டு போய்ட்டாம்ல

திருவி (தேங்காய் திருகி) திருவிய ஒடச்சிடாத

தீனி (தின் பண்டம்) அம்மா தீனி ஏதும் இருக்கா

தூக்கு (மூடி இட்ட சாப்பாட்டு ஏனம்) தூக்குல சோறு இருக்கு 

தூபக்கால் (சாம்பிராணியை ஏந்தும் ஒரு பொருள்) தூபக்கால சாம்ராணி வை 

தெரட்டிப்பால் (பாலால் செய்யப்படும் ஒரு இனிப்பு வகை) அம்மா தெரட்டிப்பால் செஞ்சி குடு

தொங்கட்டான் (தோடு) தொங்கட்டான் சூப்பரா இருக்கு

தொன்ன (இலையால் செய்யப்பட்ட உணவு கலன்) தொன்னைல கொண்ட கடல கொடுத்தீங்களா?

தொவய (துவையல்) தொவய அரச்சி இருக்கீங்களா


நகரம்


நட (நடை - கோவில் கதவு) நடய சாத்திட போறாங்க

நடவண்டி (குழந்தைகளுக்கு நடக்க பயிற்சி தரும் வண்டி) நடவண்டிய புடிச்சி வா

நாடா (ரிப்பன் என்கிறார்கள்) நாடா இழுத்து கட்டு

நானகத்தான் (வெள்ளை துண்டு பிஸ்கட்) நானகத்தான் இனிப்பா இருக்கு

நீராத் தண்ணி (பழைய சோற்று தண்ணீர்) நீராத்தண்ணி குடிங்க

நெத்திச்சுட்டி (பருவம் வந்த பெண்களும், கல்யாண பெண்கள் மட்டுமே அணியும் அணிகலன்) நெத்திச்சுட்டிய கழட்டு

நெல (நிலைக் கதவு) நெல ரொம்ப வெல அதிகமோ


பகரம்


பஞ்சகச்சம் (வேஷ்டியில் ஒரு வகை) பஞ்சகச்சம் கட்டி இருக்கியா

பஞ்சாரம் (கோழிகளை மூடி வைக்கும் கூடை) சாங்காலத்துக்குள்ள பாஞ்சாரத்துல கோழிய போட்டுடு

படி (தானிய வகையை அளவிடும் கருவி) அஞ்சி படி அரிசி போட்டு இருக்கேன்

பட்டற (பத்தர்கள் தொழில் செய்யும் இடம்) செயின் எடுக்க பட்டறக்கி போனேன்

பட்டுக்குஞ்சம் (வெளக்கமாறு, பட்டு புடவை அடியில் இருப்பது) பட்டுக்குஞ்சத்தாலே உன்ன பொளக்க போறேன் (வசை) பட்டுக்குஞ்சம் இருக்குற புடவ வேணாம்

பத்தாயம் (நெல் கொட்டி வைக்கும் இடம்) பத்தாயத்துல நெல்ல கொட்டுங்க

பந்தக்கால் (கல்யாணம், கோவில் திருவிழாவில் ஊன்றும் கம்பு) கல்யாணத்துக்கு பந்தகால் நட்டாச்சு 

பந்திப்பாய் (நீண்ட தடுக்கு. திருமண நிகழ்வுகளில் பந்தியில் விரிப்பர்) ஒரு மணி நேரத்துக்கு பந்திப்பாய் வாடக எவ்ளோ

பரணி (பரண், வீட்டின் தேவையான தேவையில்லாத பொருட்களை வைக்கும் இடம்) பரணி மேல பாய போடு

பரிச்சட்ட (தேர்வு எழுத பயன்படும் அட்டை) பரிச்சட்டய கொண்டு வந்துடு

பலவாகட்ட (சிறியதாக இருக்கும் பலகை, ஒரு ஆள் அமரும் அளவில் இருக்கும்) பலவாகட்டய தலமாட்டுல வச்சிக்கோ

பாசி பருப்பு (பயித்தம் பருப்பு) பாசி பருப்பு அரைக்கிலோ எவ்ளோ

பாச்சோறு (பால் சோறு) பாச்சோறு குழந்தைக்கா

பாடை (இறுதி ஊர்வலத்தில் பிணம் சுமக்க பயன்படுவது) பாடைல போறவனே

பாத்தி (வயல் வரப்பு நீர் தேங்கி நிற்க செய்த ஏற்பாடு) பாத்திய கட்டு

பானகம் (வெல்லம், எலுமிச்சையால் செய்யப்பட்ட தண்சாறு) தேருல பானகம் வாங்கிக்கோங்க

பாலாட (குழந்தைக்கு பாலூட்டும் சங்கு வடிவில் இருக்கும் ஒரு கருவி) பாலாடேல மருந்த கொடுங்க

பாலாமணி (குழந்தைகள் கழுத்தில் போடும் மணி - வாந்தி எடுக்காது) பாலாமணி எத்தன வயசுல போட்டு உட்டீங்க

பிருமனை (அடுக்கு பானை அடியில் வைப்பது, வைக்கோலால் ஆகி இருப்பது) பிருமனைய போட்டு பானைய எறக்கு

புடுதுணி (சூடான பாத்திரங்களை இறக்கி வைக்க உதவும் துணி) புடுதுணில புடிச்சி எறக்கு

புஸ்வானம் (பூச்சட்டி என்பார்கள். தீபாவளி பட்டாசு) புஸ்வானம் எவ்வளவு

பூத்திரி (கம்பி மத்தாப்பு) பூத்திரி எவ்ளோ

பூவாளி (செடிக்கு தண்ணீர் பாய்ச்சும் வாளி) பூவாளில தண்ணி புடி

பொங்கத்தவள ( பொங்கல் வைப்பது) பொங்க வருது பொங்கத்தவளய எடுங்க

பொட (புடை, முறம்) பொடேல நல்லா பொடச்சிட்டேன்

பொட்டுக்கல்ல (வறு கடலை) அரைகிலோ பொட்டுக்கல்ல தாங்க

பொனல் (தண்ணீர், மண்ணெண்ணெய் போன்றவையை சரியாக உள்ளிட பயன்படும் ஒரு கருவி) பொனல் கொண்டா எண்ணெய் ஊத்தனும்


மகரம்


மச்சிவீடு (தட்டு ஓட்டு வீடுகளின் மேல் கூரைக்கீழ் பொருள் வைக்க இடம் இருக்கும். அவ்வாறான வீடுகளை மச்சி வீடு என்பர்) கட்டுறத மச்சிவீடா கட்டுங்க

மடக்கு (திருநீறு, குங்குமம் வைக்கும் பாத்திரம்) அண்ணி மடக்கு கொடுத்தாங்க

மத்தாப்பு (சிறிய அளவிளான தீக்குத்தி பட்டாசு) மத்தாப்பு ஒரு பாக்ஸ் கொடுத்தாங்க

மம்புட்டி (மண் வெட்டி) மம்புட்டிய ஒழுங்கா புடிச்சி வெட்டு

மரக்கா (நெல்லை அளக்க பயன்படுவது) ஒரு மரக்கா எவ்ளோ

முக்காலி (மூன்று கால் உடைய தாங்கு கருவி) முக்காலி போட்டு ஏறுடா

முடச (குளங்கரையில் மண் அரித்து விழாமல் இருக்க வைக்கும் தடுப்பு வேலி) முடச பக்கம் போய்டாத சரிஞ்சிடும்

மூக்கணாங்கயிறு (மாடுக்கு மூக்கில் கட்டி விடுவது) மூக்கணாங்கயிற புடிச்சி இழுத்துட்டு வா

மெட்டி (திருமணமான பின் ஆண் பெண் இருவரும் அணிவது) மெட்டி மாப்பிள போடலையா

மெத்த (பஞ்சு படுக்கை) மெத்த மாதிரில இருக்கு இட்லி

மொளக்குச்சி (மாட்டை கட்டி வைக்கும் குச்சி) மொளக்குச்சில மாட்ட கட்டு

மோட்டு வளை (உத்திரம்) ஏன் மோட்டு வளையே பாத்துகிட்டு இருக்க


யகரம்


யேந்தரம் (திருவளை எந்திரம், கைகளால் பயிறு உழுந்து போன்றவற்றை அரைக்க உதவுவது) யேந்தரத்த சுத்தேன் செத்த


ரகரம்


ராக்க (கடைகளில் பொருள் வைக்கும் இடம்) ராக்கேல சோப்பு அடுக்கியாச்சா

ரொட்டி (இஸ்லாமிய வழக்கு புரோட்டா) ரெண்டு ரொட்டி பார்சல்

ரேக்ளா வண்டி (பந்தயத்தில் செல்லக்கூடிய குதிரை வண்டி) அம்மா அங்க பாரு ரேக்ளா வண்டி

ரோக்கா (கடைகளில் தரப்படும் ரசீது, வணிக வழக்கு) ரோக்கா போட்டாச்சா?

ரோட்டா (டம்ளரிலே கொஞ்சம் பெரியது, தண்ணீர் வைப்பது மட்டும்) ரோட்டாவ எடு

ரோதை (சக்கரம்) ரோதை கழண்டுட்டு


லகரம்


லுங்கி (கைலி) லுங்கி கட்ட தெரியாது

லோலாக்கு (தோடு வகையிலே தொங்கும் வகை)  லோலாக்கு அழகா இருக்கு


வகரம்


வடிதட்டு (சாதம் வடிக்கும் தட்டு) வடிதட்ட சுத்தமா வச்சிக்கனும்

வராண்டா (திண்ணை) வராண்டால தண்ணி வையுங்க

வளவி (வளையல்) கை வளவி நல்லா இருக்கு

வாகுச்சுட்டி (வகுடு எத்து போட உதவும் அணிகலன்) வாகுச்சுட்டிய சரியா போடுடீ

வானல் (எண்ணெய் சட்டி) வானல்ல எண்ணெய் போடு

வாய்க்கூட (கன்றுக்குட்டி மண் உண்ணாமல் இருக்க அதன் வாய் புறத்தில் கவிழ்ப்பது) கன்னுக்கு வாய் கூட மாட்டியாச்சா

வாருகோல் (பிளாஸ்டிக் பிடி உள்ள செயற்கை துடைப்பம்) வாருகோலால கூட்டுங்க

விடி லைட்டு (இரவு நேரங்களில் வீடுகளில் ஒளிர விடும் விளக்கு) விடி லைட்ட அமத்தி போடு

வெளக்கமாறு (எல்லா வகையான தரை கூட்டும் பொருளும்) வெளக்கமாறு கொண்டுவா

வெளக்கு மாடம் (சுவற்றில் விளக்கு வைப்பதற்கான பொத்தல்) அகல வெளக்கு மாடத்துல வச்சி ஏத்து


தொகுப்பு - தீசன்

2 கருத்துகள்

  1. சோறு உலர்ந்து காய்ந்து விட்டால் அதை 'பருக்க பருக்கையா...' என்பதும் உண்டு

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு வட்டாரமும் தன் வழக்கு சொற்களை பதிந்து வைப்பது அவசியம்.
    சொந்தமாய் ஒரு வரிகூட பிழையின்றி தமிழில் படிக்க தெரியாத தலைமுறை உருவாகிவிட்டது. அவர்கள் என்றாவது தன் நிலைவருந்தி தன் ஆதிதடயத்தை தேடும் போது உதவும் படியாக இதுமாதிரி பனுவல்கள் அமையும். அதே நேரம் எதிர்வரும் தலைமுறை தம் சம உலக தோன்றல் எல்லாருக்கும் தலைமைதாங்கும் நிலையடைய இருப்பதால் அவர்களுக்கு அதிஅவசியமான சொற்களஞ்சிய விதைகள் தத்தமது தாய்மொழியில் இருக்க வேண்டியது கட்டாயம்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை