இந்தக் கட்டுரை பேச்சுப்போட்டிக்கு ஏற்ற வகையில் செய்யப்பட்டுள்ளது. கட்டுரை வடிவில் தலைப்பு தந்து பத்தி பிரிக்கப்பட்டிருப்பது கட்டுரையின் பொருள் விளக்கத்திற்காகவே
அன்பு நிறைந்தோரே வணக்கம். அருள் நிறைந்தோரே வணக்கம். வள்ளலாரின் ஜீவகாருண்யத்தைப் பற்றியே பேச வந்துள்ளேன். (வணக்கப்பகுதியை வேண்டிய வண்ணம் மாற்றிக் கொள்க)
ஜீவகாருண்யம் என்றால் என்ன?
சரியாக சொல்லவேண்டுமென்றால், இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1823ல் தமிழகத்தில் இராமலிங்க அடிகளார் எனும் திருநாமம் கொண்ட திருவருட்பிரகாச வள்ளலார் ராமையா பிள்ளை சின்னம்மை இணையருக்கு ஐந்தாவது மகனாய் தோன்றியவர்.
ஓதாமல் உணர்ந்தே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர். அவர் எழுதிய முதல் நூலே ஜீவகாருண்ய ஒழுக்கம் எனும் அருள்நெறி விளக்க சன்மார்க்க கோட்பாட்டு நூலாகும். அன்பர்களே கட்டாயம் அந்த நூலைப் படியுங்கள். அந்த நூலே சன்மார்க்க திறவுகோல். உலகம் உய்ய ஒரே வழி. ஜீவகாருண்யம் எனும் உயர்நெறியை உடலுக்குள் புத்தாக்கும் புத்தகம்.
ஜீவகாருண்யம் என்றால் புலால் உண்ணாமையோடு நின்றுவிடுவதில்லை என்பதை ஜீவகாருண்ய ஒழுக்கம் தீர்க்கமாய் உரைக்கின்றது.
வள்ளலார் கண்ட ஜீவகாருண்யம் என்பது என்னை எனின்,
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார்
யாவர்? அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம் பெருமான் நடம்புரியும்
இடம் என நான் தெரிந்தேன்
அதாவது, எந்த உயிர் பிற உயிரை பார்க்கும் போதெல்லாம் மகிழ்ச்சி அடைகின்றதோ! எந்த உயிர் பிற உயிரின் துன்பத்தை கண்டு துடித்து வெதும்பி அழுகிறதோ! எந்த உயிர் அனைத்து மனிதரும் சமம் என்ற நிலையை கடந்து அனைத்து உயிர்களும் சமம் என்ற நிலைக்கு வருகின்றதோ!
அவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம் பெருமான் நடம்புரியும் இடம் என நான் தெரிந்தேன் என வள்ளலார் உறுதிபட உரைப்பதுவே ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்.
பசிப்பிணியும் ஜீவகாருண்யமும்
இறைவனால் படைக்கப்பட்ட உயிர்கள் எந்த தேசத்தில் இருந்தாலும், எந்த மதத்தில் இருந்தாலும், மனிதராயினும் மிருகமாயினும் செடியாயினும் கொடியாயினும் புள்ளாயினும் பூச்சாயினும் அன்பு செலுத்துதல் வேண்டும்.
நீரின்றி வாடும் ஒரு செடிக்கு ஒரு குவளை தண்ணீர் ஊற்றினால் கூட, அதுவும் ஒரு வகையில் ஜீவகாருண்யம்தான். இருந்தும் அந்த ஜீவகாருண்யம் பொறுமையுடனும் பணிவுடனும் இதமாக பதமாக தண்ணீர் விடும் திறத்திலே வெளிப்படுகிறது.
உடல்பிணி என்பது ஐம்பது வயதில் தோன்றலாம், அறுபது வயதில் தோன்றலாம். ஆனால் பசிப்பிணி என்பது பிறப்பு முதல் இறப்பு வரை நித்தியமாய் நீட்டித்திருப்பதாகும்.
சங்கம் மருவிய காலந்தொட்டு சமணமும் பௌத்தமும் இந்த பசிப்பிணியை ஒழித்தாக வேண்டுமென்று தீர்க்கமாய் இருந்தும், இலக்கிய ரீதியாய் அவை எடுத்த முயற்சிகளில் பலனில்லை. அவை லட்சிய வாதமாய் கனவுலகத்தில் ஆழ்ந்ததேயன்றி களத்தில் நின்றதாய் தெரியவில்லை. சுமார் 2000 ஆண்டுகளுக்குப் பின்பு வள்ளல் பெருமானே அப்பசிப்பிணிக்கு தீர்வளித்தார்.
அதுவே சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கமும் சத்திய தரும சாலையும் ஆகும். அவ்வன்பர்கள் காத்துவரும் ஜீவகாருண்ய ஒழுக்கமே தேகத்தை ஆலயமாய் கண்டும் எதிர்வரும் உயிர்களையே கடவுளாய் கொண்டும் பசிப்பிணி ஆற்றி அன்பூற்றி வருகிறது. ஜீவகாருண்யத்தின் தாத்பர்யமும் அதுவே.
அன்பும் சிவமும் வேறென்பார் அறிவிலர். அன்பே சிவம் என்பார் திருமூலர். திருமூலரும் மாணிக்கவாசகரும் ஜீவகாருண்யத்தைப் பற்றி பேசிய முன்னையோர். அதிகம் பேசாது அதனை நிகழ்த்திக்காட்டிய சித்தியோர் சன்மார்க்கர்.
சிவபெருமானுக்கு உணவளிப்பதையே பக்தி காலத்துக்கு முன்னையோர் சிறப்பாய் கொண்டனர். பக்தி காலம் சேக்கிழார் எனும் உத்தம மனிதரைத் தந்தது. ஆண்டவனைத் தொழுவதைக் காட்டிலும் அடியோரை தொழுவதே ஆகச்சிறந்தது எனும் குரலும் எழுந்தது. பக்தி காலத்தின் புரட்சி அது. சைவத்தின் எழுச்சி. சன்மார்க்க வேரின் துவக்கம். அடியார்கள் உண்டனர் அதனால் ஆண்டவனும் உண்டான்.
யாவர்க்குமாம் இறைவற்கு
ஒரு பச்சிலை;
யாவர்க்குமாம் பசுவுக்கு
ஒரு வாயுறை;
யாவர்க்குமாம் உண்ணும்போது
ஒரு கைப்பிடி;
யாவர்க்குமாம் பிறர்க்கு
இன்னுரை தானே.
என்று கருத்து வேரூன்றி இருந்தும் எளிய மக்களின் பசிப்பிணியை மனிதரல்லாத பிற உயிர்களின் பசியைத் தீர்ப்பார் யார்?
வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்றார் பாரதி, அவர் வள்ளலாரைப் படித்தவரே. பாரதிக்கு முன்பே வள்ளலார், பாரதிக்கும் ஒருபடி மேலாக,
வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் இங்கு வாழும் உயிர்களுக்கெல்லாம் - என்பதை நிகழ்த்திக் காட்டினார். அதோடு உணவு விஷயத்தோடு மட்டும் ஜீவகாருண்ய ஒழுக்கம் நின்று போய்விடுவதில்லை.
ஏழைகளின் வயிற்றுப் பெட்டி
யாகங்கள் என்றும், வேள்விகள் என்றும் அந்தணர் சொல் கேட்டு, பட்டுப்புடவைகளை எரித்தும், தங்க அணிகலன்களை தணலில் போட்டும் புண்ணியம் தேடுவோர் அவற்றை விடுத்து ஒரு வாய் உணவைப் பசித்தவனுக்கு அளிப்பதே உண்மையான புண்ணியம் என்றார் வள்ளலார்.
லட்சங்களை செலவழித்து, ஊரைக் கூட்டி திருமணம் செய்து, ஆறு சுவை கொண்ட பத்து வகை உணவுகளை உண்ண முடியாத அளவுக்கு உறவுக்கு அளிக்கும் செல்வந்தர்கள், மணப்பந்தலுக்கு வெளியே எச்சில் இலைகளுக்காக காத்திருக்கும் ஏழைகளை ஒருகணம் பாருங்கள். வள்ளலார் சொல்கிறார்,
ஆண்டவரை வாயார வாழ்த்துவது தவிர அபிஷேகம், புட்ப அலங்காரம், வாகனங்களில் ஏற்றி வீதி உலா வருதல் இன்னும் இதுபோன்ற மற்ற ஆடம்பரங்கள் கூடாது. கடவுளுக்கு செலவு செய்ய வேண்டுமமென்ற எண்ணமிருந்தால் அப்பணத்தை ஏழைகளின் வயிற்று பெட்டியில் நிரப்புங்கள்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே. தருமத்தினால் வரும் புண்ணியம் உங்களை மட்டுமல்ல, உங்கள் தலைமுறையையே காக்கும்.
உணவின்றி ஒருவன் பசித்திருக்கக் கூடாது என்றுதான் 1867ல் வள்ளலார் வடலூரில் சத்திய தருமச் சாலையை தோற்றுவித்தார். அன்பர்கள் உதவியால், அவர் ஏற்றி வைத்த அடுப்பு இன்று வரை வறியவர்களுக்கு உணவளித்து வருகிறது.
அந்த அடுப்பு அணையும் நாள்தான், மானிடரின் பசி தீர்ந்த நாளாகும்.
சத்திய தரும சாலை
தமிழ்நாட்டின் முக்கிய கோவில் நகரங்களில் எல்லாம் சத்திய தரும சாலையின் நித்திய அன்னதானங்கள் தொடருகின்றன.
நோயினால் வாடும் ஒருவனுக்கு ஆறுதலாய் நல் வார்த்தை கூறுதலும், பிணி தீர்க்க தம்மால் முடிந்த பொருள் கொடுத்து உதவுதலும் கூட ஜீவகாருண்யமே என நண்பர்க்கு எழுதும் கடிதத்தில் குறிப்பிடுகிறார் வள்ளலார். அதையே இன்றைய சத்திய தரும சாலை காத்து வருகிறது. கோவிட் காய்ச்சல் வந்த காலத்தில் கூட சன்மார்க்க அன்பர்கள் செய்த பணிகள் எண்ணி எண்ணி போற்றத்தக்கன.
பசியோடு உள்ளவனுக்கு உபதேசங்கள் எதுவும் காதில் ஏறாது. பசியால் உடல் இளைத்தவனுக்கு உணவே நாம் தரும் மருந்தாகும். இதை உணர்ந்தே கோவில் விழாக்கள், மதச்சடங்குகளில் ஆடம்பரத்தை குறைத்து, அன்னதானங்களை அளித்து ஏழைகள் மனம் குளிர வகை செய்தார் வள்ளலார்.
மூடப்பழக்கம் கூடா
பூஜைகளை முடித்து கோவில்களில் தேங்காய் உடைப்பதற்கு பதில், முன்னரே அந்தத் தேங்காயை உடைத்து வெல்லம் போட்டு கிளறி கொடுத்தால் பசியாவது தீரும் என கூறினார்.
"தேங்காய் உடைக்க உங்களுக்கு விருப்ப மிருந்தால், அதனை முன்னதாகவே உடைத்துத் திருகி, அத்துடன் சர்க்கரை, கற்கண்டு முதலியன கலந்து ஆண்டவருக்கு இனிப்பாக நைவேத்தியம் வைப்பது நலம்."
உயிர்களை உண்டாக்கி பாதுகாக்கும் கடவுளர்கள், தான் படைத்த உயிர்களையே, தான் படைத்த மனிதனிடம் பலியாக கேட்பார்களா? மதுரை வீரனாகட்டும், கருப்பண்ண சாமியாகட்டும், முனீஸ்வரனாகட்டும், காளி தேவியாகட்டும், பெரியாட்சியாக இருக்கட்டும் தங்கள் கண்முன்பே, வேண்டுதல் என்ற பெயரில் ஆடுகளையும் கோழிகளையும் நாக்கு ருசிக்காக இரத்தம் சொட்ட, சொட்ட பலியிடும் மூட மனிதர்களை, தங்கள் பக்தர்களாக ஏற்பார்களா?
இப்படிப்பட்ட அநியாயங்கள் கண் முன்னே நடந்தும் அதைத் தடுக்க முடியாத அந்தச் சிலை வடிவங்கள் கடவுளாக இருக்க முடியாது. சிறுதெய்வ வழிபாட்டை ஏற்பது ஜீவகாருண்யத்திற்கு எதிரானது. ஜீவகாருண்ய ஒழுக்கம் அருட்பெருஞ்சோதியான ஆண்டவனையே தெய்வமாகக் கொள்ளுமே ஒழிய உயிர்களை கொன்று உண்ணும் தெய்வங்களை ஒருபோதும் கடவுளாய் கொள்ளாது.
நம்மை வழிநடத்தும் சக்தியான கடவுள் என்பது மனித ரூபத்தில் இருக்க முடியாது. ஒளியாம் இறைவன் உருவற்றவன். வேதமும் ஒளியே இறைவன் என்கிறது. பெரியபுராணமும் சிவபெருமானை,
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
என்றே கூறுகிறது. எனில் சோதியே இறைவன் என்கிறது ஜீவகாருண்யம்.
ஜீவன்கள் ஆன்ம விளக்கமும், அருள் விளக்கமும் பெற உடம்பு அவசியமாகும். உடம்புக்கு அபாயம் பசிப்பிணியே ஆகும்.
"பசியால் ஒருவனுக்கு அறிவு மங்கும், ஆற்றல் குறையும், நினைவு மறையும், நாடி குறையும், தேகம் மெலியும், வாழ்வின் மீதான நம்பிக்கை குறையும், கோபமும் தாபமும் கூடும்" என்றெல்லாம் கூறும் வள்ளலார் "ஒருவனின் பசி தீர்ப்பதால் கிடைக்கும் இன்பமே, கடவுளை அடையும் பேரின்பத்தை காட்டிலும் உயரிய இன்பமாகும்" என போதிக்கிறார்.
"அதற்காக ஒரு ஜீவனை கொன்று, மற்ற உயிருக்கு ஜீவனமாக கொடுப்பது கடவுளுக்கும் சம்மதமன்று, ஜீவகாருண்ய ஒழுக்கமுமன்று" என்று வள்ளலார் தன் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் நூலில் மிகுந்த கண்டிப்போடு குறிப்பிடுகிறார்.
அன்பும் ஜீவகாருண்யமும்
ஜீவகாருண்யத்திற்கு அடிப்படை தேவை அன்பு, தயை, கருணை கொண்ட உள்ளங்கள்தான் என உணர வேண்டும். நாம் உயிர்கள் மீது காட்டும் அன்பே, நம் மீது கடவுள் காட்டும் கருணைக்கு காரணமாக அமையும். கடவுளை அடைய ஜீவகாருண்யமே வழி. மோட்சத்துக்கு திறவுகோல் ஜீவகாருண்யமே.
"நல்ல வீடு கிடைக்கும் வரை ஒரு சம்சாரி குடி மாறி போவது போல, நல் ஒழுக்கம் வாய்க்கும் உடல் கிடைக்கும் வரை ஆன்மா அலைந்து கொண்டுதான் இருக்கும்" எனப் பிறவா நிலை பற்றி வள்ளலார் கூறுகிறார்.
சகோதரனுக்கு ஒரு தீங்கென்றால் உருக்கம் உண்டாவது போல எவ்வுயிர் மீதும் நமக்கு கருணை ஏற்பட வேண்டும். உலகத்து வாழ் அனைத்து உயிரும் நம் உடன் பிறந்தோரே. நமக்குள் பிரிவினை எதற்கு? சாதி, மத, பால், வருண, வர்க்க வேறுபாடு எதற்கு? இவற்றையெல்லாம் கருதியே வள்ளலார் ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உலகிற்கு வெளிப்படுத்தினார். அதின் தொடக்க கூறாகவே ஜீவகாருண்யம் உள்ளது. ஜீவகாருண்யத்தில் இருந்தே ஆன்ம நேய ஒருமைப்பாட்டை நாம் சென்றடைய முடியும்.
அதாவது சன்மார்க்கத்திற்கு ஆன்ம நேய ஒருமைப்பாடே விருக்ஷம் எனில் ஜீவகாருண்ய ஒழுக்கமே வேராகும்.
ஜீவகாருண்யத்தின் பொதுமை
"காயமே இது பொய்யடா! வெறும் காற்றடைத்த பையடா! மாயனார் குயவன் செய்த மண்பாண்டம் ஓடடா!" என சித்தர்கள் சொன்னாலும்
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்று சொன்ன திருமூலரே "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்று சொன்னாலும்
அவ்விரண்டு குரல்களும் தனிநபரை மையமிட்டதாய் தன்னுடலை தானே நேசிக்கும் அளவினதாயே உள்ளது. சுயநலவாதிகளுக்கு உண்மையான இறைவன் அகப்படுவதில்லை.
இறைவனது சத்திய இருப்பிற்கு சான்றான வள்ளல் பெருமான் சொல்கிறார், அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்; ஆருயிர்க்கு எல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்.
இறை வணக்கம் என்பது இதுதான். கடவுள் வழிபாடு என்பது இதுதான். தன்தேகத்தையும் தன் குடும்பத்தையும் மட்டும் நோக்கி கடவுள் வழிபாடு செய்தல் எத்தனை பொதுமை நோக்கை தந்துவிடப்போகிறது? இந்த பரந்துபட்ட பூமியில் பரந்துபட்ட மனித சமூகத்தில் பரந்துபட்ட எண்ணமே கடவுள் வழிபாடாகும்.
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க - எனுந்தோடரை எந்த வகையிலும் மறந்துவிடாது. ஒவ்வொரு ஜீவகாருண்யவாதியின் இரத்தமும் எல்லா உயிரும் இன்புற்று வாழ்க, எல்லா உயிரும் இன்புற்று வாழ்க என்பதை ஒவ்வொரு கணமும் எண்ணி எண்ணியே ஓடித்திரிய வேண்டும்.
இறுதி உரை
இறுதியாக, வள்ளலாரின் ஜீவகாருண்யம் என்பது வெறும் கொள்கை மட்டுமல்ல. அது ஓர் உயிர் பிற உயிர்களை கடவுளாய் எண்ணி பாவிக்கும் நெறி. அந்நெறியாலே வாழ்கிறது இப்புவி. அந்த புவியின் குரலே ஒற்றுமையின் குரல். அந்த குரலே உலகை உய்ய வைக்கும் வழி. அன்பர்களே! உறுதியாக சொல்கிறேன் வள்ளலாரின் ஜீவகாருண்யம் என்பது யாதெனின்
ஜீவகாருண்யம் என்பது கொல்லாமை
ஜீவகாருண்யம் என்பது புலால் உண்ணாமை
ஜீவகாருண்யம் என்பது உண்மை
ஜீவகாருண்யம் என்பது நேர்மை
ஜீவகாருண்யம் என்பது ஒற்றுமை
ஜீவகாருண்யம் தான் வலிமை
ஜீவகாருண்யம் தான் சமத்துவம், உயிர் இரக்கம், சாதி பேத ஒழிப்பிற்கான ஒரே தீர்வு, ஏற்றத்தாழ்வினை வேரறுக்கும் கூர் வாள்.
அத்தகைய வள்ளலாரின் ஜீவகாருண்யமே நெறிகளின் முழுமையாகவும் உள்ளது. இவற்றை என் தண் நெஞ்சத்து என்றுமுள வள்ளலார் போன்றே சொல்ல வேண்டுமாயின் அந்த ஜீவகாருண்யமே தமிழரின் கடமை கடமை கடமை. இது சத்தியம், சத்தியம், சத்தியம்.. நன்றி வணக்கம்
மேலும் வள்ளலார் பற்றிய தகவல்களுக்கு இவற்றைக் காண்க
1. வள்ளலார் கண்ட தெய்வக் கொள்கை
2. ஞானத்தைத் தேடி 7 - ஜீவகாருண்யம்
5. பாரதியாரின் கற்பனையில் ஜீவகாருண்யம்
ஜீவகாருண்யம் பற்றிய விளக்கத்தை அளித்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குபசித்தோரைக் கண்டு நாம் துன்பம் கொள்ளும் அளவிற்கு, தாவரங்களிடம் இருக்கிறோமா என்பது கேள்விக் குறியே.
தற்போதைய நிலையில் புலால் உண்ணாமை என்னும் கருத்து புலாலுக்கு ஈடாக தாவரங்களை தின்று தீர்க்கும் அளவிலேயே உள்ளது என்பது என் கருத்து.
முழுமையான ஜீவகாருண்யம் என்பது உறுதியான சம தர்மத்திற்கு வழி என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.
ஆனாலும் என் நினைவில் அவ்வப்போது வருவது ஒன்றே.
வேண்டுமென்றே புலால் உண்ணுபவர்க்களுக்கும் வேறு வழியின்றி உண்ணுபவர்க்களுக்கும் நிறையவே வித்தியாசங்களுள்ளன.
உணவு என்பது என்ன என்பதை இம்மனித சமுதாயத்திற்கு உணர்த்த வேண்டும். படிபடியாக நாம் செய்ய வேண்டிய காரியம் என்றே நினைக்கிறேன்.
எல்லாம் இருப்பவர்கள் தனக்கு வேண்டியதை எல்லாம் எடுக்கிறார்கள். எதுவும் இல்லாதவர்கள் கிடைத்ததைத் தான் எடுப்பார்கள் என்பதை நான் உணர்த்திருக்கிறேன். அவர்களிடம் இருந்தே ஜீவகாருண்யம் தொடரட்டும். ....