ஆன்மீக வாதத்தைப் பற்றி அதிகம் சிந்தித்தபோது மிகவும் மோசமானதொரு உண்மையைப் படித்தறிந்தேன். ஆன்மீக வாதத்தின் முடிவு அதுவாதலால் அஃதை இங்கு உண்மையெனக் கூறுதல் தகுமே.
ஆன்மீக வாதத்தின் அதிதீவிரமான கடைசி கட்ட வடிவம் சோலிப்சிசம் எனும் 'நான் மட்டுமே இருக்கிறேன்' என்ற வாதம்தான். ஒரு கட்டத்தில் கருத்தை நிறுவத் துடிக்கும் ஆன்மீகவாதம், 'எல்லாம் மாயை, நான் மட்டுமே நிஜம்' என்ற போக்கில் நின்று கொண்டு அனைத்தையும் துறக்கும் பக்குவத்திற்கு வந்ததாய் நினைத்துக் கொள்ளும். இனி சார்பற்று வாழ்வதாய் எண்ணும் ஆனால் அது பொய்யே. ஒரு வகையில் ஆன்மீகவாதம் என்பது பிற மனிதர்களைப் பற்றியும் அவர்களது கஷ்டத்தைப் பற்றியும் எண்ணி உருகுவதாய் நடிக்கும் தன் மைய வாதமே ஆகும்.
எல்லா மதத்தின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது என்பதை அறிய விஷேச அறிவு வேண்டியதில்லை. பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிஷப் பெர்க்லி என்பாரே ஆன்மீக வாதத்தை தூக்கி முட்டுக் கொடுத்தார். ஆன்மீகம் என்றால் இதுதான் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தினார். இன்று உலகம் அவரை ஆன்மீகவாதத்தின் தந்தை என்று கூறும் அளவிற்கு வேலை செய்துள்ளார்! ஆன்மீக வாதத்தின் பெருமையை விளக்குகிறேன் எனத் துணிந்த பெர்க்லி ஆன்மீக வாதத்தின் கொடூரமான வக்ரம் நிறைந்த இன்னொரு பக்கத்தையும் தெரியாமலே காட்டிவிட்டார். தத்துவத்தால் முதல், பொருளா? கருத்தா? என்பதை நிறுவுவதில் தான் மதங்கள் தனக்கான வழியை ஏற்படுத்திக் கொள்கிறது. பொருள்தான் முதல் என்பதை பெர்க்லி தீவிரமாக மறுத்ததன் வழியாகத்தான் நமக்கு ஆன்மீகத்தின் ஆழ்மன வடிவம் வெளிப்பட்டது. இந்த கருத்தை அவர் முன்வைத்ததன் வழியாக, ஆன்மீகவாதத்தின் கடைசி எல்லை வரை அவர் சென்று விட்டார்.
லோகாயதவாதமும் அனுபவ ஞான விமர்சனமும் என்ற நூலை எழுதிய லெனின், பெர்க்லியின் தத்துவத்தைப் பற்றி பல பக்கங்கள் எழுதினார். "ஆன்மீகவாதத்தின் கடைசி கொழுந்துகள் என்று சொல்லப்படுகிற மெய்ஞ்ஞானிகள் லோகாயதவாதத்தை எதிர்த்து எவ்வளவோ சொல்லி இருக்கிறார்கள் என்றாலும் பெர்க்லி பாதிரியார் கிளப்பிய வாதங்களுக்கு மேல் அவர்கள் புதிதாக ஒன்றும் சொல்லி விடவில்லை" என்று லெனின் கூறுகிறார்.
பொருள் முதல் வாதத்தை முன் வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை முற்றிலுமாய் நிர்மூலமாக்குவது தான் பெர்க்லியின் எண்ணம். அதாவது, பொருள் என்ற ஒன்றே இல்லை என்பது தான் அவரது கோட்பாடு.
அவர் கூறுகிறார், 'இந்தக் கோட்பாடுகளை சரி என்று ஏற்றுக்கொள்வீர்களே ஆனால் நாத்திகமும் சந்தேகவாதமும் ஒரே அடியில் அடிபட்டு போய் விட்டன என்றும் விடை காணாத கேள்விகளுக்கு விடை கிடைத்து விட்டது என்றும் புதிர் போடுவதில் ஆனந்தம் கொள்ளும் ஆசாமிகளுக்கு புத்தி புகட்டியாகிவிட்டது என்றும் கொள்ளலாம்' என்கிறார்.
பெர்க்லி முன் வைத்ததின் மைய விஷயம், 'மனதுக்கு அப்பால் ஒன்றுமே இல்லை. மனது தான் பொருட்களுக்கு அடிப்படை காரணமேயன்றி பொருள் அல்ல. பொருட்கள் உண்டு என்று நாம் நினைப்பதற்கு காரணம் நாம் அவற்றைக் கண்ணால் பார்க்கிறோம் கையால் தொடுகிறோம் என்பது தான். இப்படிப்பட்ட உணர்ச்சிகளை நமது புலன்களுக்கு அவை கொடுப்பதால் தான் பொருட்கள் உண்டு என்று நாம் நம்புகிறோம். ஆனால் புலன் உணர்ச்சிகள் என்பவை மட்டும் என்ன? அவையும் நம் மனதில் எழும் எண்ணங்கள் தானே. ஆகவே நாம் புலன்களின் வாயிலாக கண்டறியும் பொருட்களெல்லாம் நம்முடைய எண்ணங்கள் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. மேலும் இந்த எண்ணங்கள் நமது மனத்துக்கு வெளியே நிலைபெற்று இருக்க முடியாது'
பொதுவாக எல்லா பொருட்களும் வெளியே இருப்பதாய் நாம் நினைக்கின்றோம். அவ்வாறு எண்ணுவது நம் மயக்கமே. ஏனென்றால் இவையெல்லாம் நம் மனத்தினுள்ளே தான் உள்ளது. உதாரணமாக, ஒரு சிவப்புத் துணி உள்ளது. உண்மையில் அது சிவப்புத் தானா? அந்த சிவப்பு அந்த துணியில் உள்ளதா? நம் புலனில் உள்ளதா? அல்லது, மனத்தில் உள்ளதா?
மனிதர்களது கண்கள் போல் அல்லாத வேறு மாதிரிக் கண்கள் கொண்ட மிருகங்கள் உண்டு. அவற்றிற்கு அதே துணி வேறு வடிவத்திலும் வேறு நிறத்திலும் தெரியும். எனில் எது உண்மை? துணியின் நிறம் சிவப்பு என்ற கூற்று உண்மை தானா? மஞ்சள் காமாலை பிடித்தவருக்கு அதே துணி மஞ்சளாகத்தெரியுமே. அப்படியானால் சிவப்பு என்பது அந்தத் துணியில் இல்லை. நம் கண்ணில், நம் மனத்தில் தான் இருக்கிறது.
பெர்க்லி சொல்ல வருவதைப் புரிந்து கொள்ள இது ஒரு உதாரணமே. துணியின் நிறத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டீர்களேயானால் உங்களுக்கு கருத்துப் புரியாது.
நாம் இந்த உலகத்தில் காணும் புற வடிவங்கள் எல்லாம் அதன் உண்மையான வடிவங்கள் தானா? அல்லது மனிதர்களுக்கு அப்படித் தெரிகிறதா? எனில் பொருட்களைப்பற்றி நம் புரிதல் பொருளில் இருந்தே பெறப்படுகிறதா அல்லது புலனின் வழியாக கடத்தப்பட்டு எண்ணக் குவியலின் வழியாகத்தான் தெரிகிறதா?
எதற்குமே தீர்க்கமான முடிவுக்கு வரமுடியவில்லை. திறமையாக வாதம் செய்வோர் நம்மை பொருள் பக்கமோ கருத்துப் பக்கமோ கொண்டு செல்வதற்கான தேர்ந்த விவாதம் தான் இது.
பெரும்பாலும் ஆன்மீகமும் மதங்களும் பெர்க்லியின் இந்த கருத்தை ஆழ்நிலையில் கொண்டு தான் இயங்கிக்கொண்டுள்ளது. உதாரணமாக, பருப்பொருளின் வடிவத்தை மனம் தீர்மானிக்கிறது என்றும் மனது சுயமாக இவற்றை செய்யவில்லை என்றும் மனதை சிருஷ்டிப்பது நமக்கு மேலிருக்கும் ஏதோ ஒரு சக்தி என்றும் கொள்வதே பெர்க்லியின் முடிவு. வேறுவழியும் இல்லை, அப்படியொரு முடிவுக்குத்தான் நாம் வந்தாக வேண்டியுள்ளது. ஆன்மீக வாதமும் சூன்யவாதம் போன்றே கடவுளிடத்தில் தான் போய் முடியும்.
இன்னும் விளக்க வேண்டுமாயின், ஒளியின் வேகம் 3×10⁸ m/s என்பர். இந்த எண்களும் அளவீடுகளும் தான் கருத்தேயன்றி ஒளியின் வேகம் எப்போதும் ஒன்றுதான். அதில் மாற்றமில்லை. சுலபமாக சொல்ல வேண்டுமாயின், ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றாலும் 60 நாழிகை என்றாலும் 6 பொழுது என்றாலும் ஒருநாள் என்பது ஒருநாள் தான். இந்த அளவீடு எல்லாம் அவற்றை துல்லியமாகப் புரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட 'கருத்தே' (Ideas). அதேப்போலத்தான் பெர்க்லி மனதைப் பார்க்கிறார். மனம் தான் மூலம். அதற்கு வெளியே ஒன்றுமில்லை. அதன்வழியாகத் தான் இந்த உலகம் நமக்கு புலப்படுகிறது. உலகம் நம் புலன்களின் வழியாக மனத்தில் எதிரொலிக்கப்பட்டு எண்ணக் குவியலாக்கப்படுகிறது. அந்த எண்ணக்குவியல் தான் இந்த உலகத்தை ஒரு பொருள் போல காட்டுகிறதேயன்றி பொருளென்று ஏதும் இல்லை. மனம் தான் உலகத்தையே நமக்கு காட்டுகிறதெனில், உலகம் என்ற பொருளை நமக்குத் தெரியப்படுத்துவதே மனம் தான். எனில் எவ்வாறு பொருள் முதலாக இருக்க முடியும்? கருத்தே காரணியாகவும் பொருள் ஒரு உபகாரணியாகவும் தான் இருக்க முடியும் என்பது பெர்க்லியின் வாதம்.
யோசித்துப்பார்த்தால், பொருட்கள் உண்டு என்பதை பெர்க்லி விசித்திரமாக மறுக்கிறார். அவற்றின் தன்மையையும் அவை இருப்பதையும் அவர் மறுக்கவில்லை ஆனால் அவையெல்லாம் நமது புலன் உணர்ச்சியின் வடிவத்தில் மட்டுமே உள்ளன. இந்த புலன் உணர்ச்சிகள் தான் அவற்றை நாம் அறியும்படி செய்கின்றன என்ற அடித்து பேசுகிறார். அதன்மூலம் பொருளை பொருளாளே காலி செய்து பொருளே இல்லை என்கிறார். பிறகு அதிலிருந்து ஒரு முடிவுக்கும் வருகிறார். அது என்னவெனில், அந்த பொருட்களும் அவற்றைப் பற்றி நமது புலன் உணர்ச்சிகளும் ஒன்றே தான் வேறு வேறானவை அல்ல என்று தீர்மானிக்கிறார்
பெர்க்லியின் இந்த சாதுர்யமான கோட்பாடு, பொருளென்ற ஒன்றே இல்லையென்றும் மனம் தான் முதலாகி பொருளையே விளக்குகிறது என்றும் கூறி பொருள் முதல் வாதிகளை நகங்கடிக்கச் செய்துவிட்டது என்பது உண்மை தான். இருந்தும் தர்க்கவியல் அடிப்படையில் அவரது கோட்பாட்டில் பல தவறு உள்ளது என்கிறார் ஜார்ஜ் பொலிட்ஸர். அதைப்பற்றி பின்னே விரியக்காண்போம்
இப்போது இந்த தர்க்கத்தை அதன் முடிவு வரைக்கும் கொண்டு போய் பார்த்தால் என்ன ஆகும்? என்றால், 'எல்லாம் நம் மனத்தின் உள்ளே தான் இருக்கின்றன' என்பதுவே கருத்துரையானால் புற உலகு என்பது கிடையாது என்ற முடிவுக்கே வந்தாக வேண்டும். அதாவது, 'நான் ஒருவன் தான் இருக்கிறேன் மற்றவர்கள் யாரும் இல்லை, ஏனென்றால் என்னுடைய எண்ணங்களைக் கொண்டுதான் நான் மற்ற மனிதர்களை அறிகிறேன் பிறப் பொருட்களைப் போலவே மற்ற மனிதர்களும் எனக்கு எண்ணக் குவியல்களே' என்று கூற வேண்டிய நிலைமைக்கு வந்து விடுகிறோம். இதைத்தான் மெய்ஞானத்தில் நான் ஒருவனே இருக்கிறேன் என்று கூறுகிற தத்துவமாக குறிப்பிடுகிறார்கள். இதைத்தான் ஆங்கிலத்தில் சோலிப்சிசம் என்பார்கள்
நான் தான் இருக்கிறேன் மற்ற எல்லாம் பொய் என்று நினைப்பது எவ்வகையில் சரி என்பதெனக்குத் தெரியவில்லை. அவ்வாறு சுயநலமுடன் இருப்பதை தவறென்றே அறிவுடையோர் கூறுவர். ஆன்மீகத்தின் அதிதீவிரமான வடிவம் என்று சோலிப்சிசத்தை முன்பு நான் குறிப்பிட்டதை இங்கு சிந்தித்துப்பார்க்க. ஆன்மீக போதை தலைக்கேறியோர் தான் 'எல்லாம் மாயை' எனும் கருத்திற்குள் நுழைவார்கள். இருந்தும், தங்களையும் அவர்கள் மாயையாக எண்ணுகிறார்களா என்பது தான் கேள்வியே?
ஆன்மீகம் ஒருபோதும் பன்மைத்துவத்தை விரும்பாது. ஆன்மீகம் மட்டுமல்ல பெரும்பாலான கூட்டம் தங்களுக்கான உலகத்தை உருவாக்க முயலுமேயொழிய பன்மைத்துவ விருப்பங்களை அவை பரிசீலனை செய்வதில்லை. நீங்கள் ஒரு பின் நவீனத்துவவாதியாக இருக்கும் பட்சத்தில் தான் சோலிப்சிச கருத்திலிருந்து வெளிவர முடியும். அதுவரையில் உங்கள் உலகமும் உங்களைச் சுற்றி மட்டுந்தான் இருக்கும்.
தீசன்
உதவிய நூல் - மார்க்ஸீய மெய்ஞ்ஞானம் - ஜார்ஜ் பொலிட்ஸர் (NCBH)
மேலும் நல்தகவல்களுக்கு கீழுள்ள கட்டுரைகளைக் காண்க
2. ரவீந்திரநாத் தாகூரின் கடிதம்
சோலிப்சிசம் என்பது முழுமையாக ஆன்மீகத்தை மட்டும் சார்ந்தது அல்ல. குடும்ப அமைப்பிலும் ,தனி மனிதனிடமும் உள்ளது . அதை விளக்குவதற்கு ஆன்மீகத்தை கருவியாக கொண்டுள்ளது தவறு என நான் நினைக்கிறேன் .அதற்காக நான் ஆன்மீகவாதியும் அல்ல .
பதிலளிநீக்குநான் மட்டுமே உண்மை என்பதை எல்லோரும் ஒரு கட்டத்தில் செய்து தான் இருக்கிறார்கள். (சான்றாக)உரையாசிரியர்களிடமும் அதை காணலாம் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றிற்கும் உறை எழுதும் போதும் தன்னுடைய கருத்தை முன்னிலை நிறுத்தி எழுதுவது கூட ஒரு வகையில் சோலிப்சிசம் தான் .பொதுவான கருத்து ஒன்று இருக்க தன்கருத்தை நிலை நிறுத்துவதும் அதனுலடங்கும்.இப்படி அதிகாரம் அனைத்திலும் உண்டு .
அதிகாரமே சோலிப்சிசம்
மொழியே அதிகாரம் தான். பன்மைத்துவ பார்வை வரும் வரை எல்லோரிடமும் சோலிப்சிசம் இருக்கும். ஆன்மீகம் தன் உள் வடிவமாக (நனவிலியாய்) சோலிப்சிசத்தைக் கொண்டுள்ளது என்பது உண்மை தான். ஆன்மீகம் பொருளை மையமிட்டு இயங்கும் போது அந்த பொதுபுத்தியான்மீகம் தகர்ந்து போகலாம். ஆனால் அப்போது தான் கருத்தான்மீகம் பலமாக அந்த மெய்யான்மீகத்தை எதிர்க்கும். வள்ளலாரை ஆறுமுக நாஅலர் எதிர்த்த மாதிரி
நீக்குசோலிப்சிசம் பற்றிய கருத்துக்கள் எனக்கு புதுமையானவை.அதைப்பற்றி அறிந்து கொள்ள கூடுதல் கட்டுரைகள் வழங்கியமைக்கு நன்றி !
பதிலளிநீக்குசோலிப்சத்தால் மிக கடுமையாக நான் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறேன் என்பது இக்கட்டுரை வழி உணரமுடிகிறது.
பதிலளிநீக்குஅப்படி பாதிக்கப்பட்டவன் நான் ஒருவன்மட்டுமல்ல என்று நினைக்கும்போது சோலிப்சம் கொஞ்சம் Coolipsm ஆகிறது.