{tocify} $title={உள்ளடக்கம்}
முன்னுரை
'ஒத்தார் இருவர் மறையிடம் சென்று தாமே கூடி புணர்ந்து மகிழ்வது களவு'. கற்பில் ஊரறிய கொடுப்போரும் கொள்வோரும் இருப்பர், களவில் கிடையாது. மறையொழுக்கம் ஆதலால் களவு என்றார். இக்களவியலில் தலைவன் தலைவி சந்திக்கும் முறையையும் (காட்சி, ஐயம், தெளிதல், தேறல்) அதன்பின் இயற்கைப் புணர்ச்சி நடைபெறும் விதத்தையும் பின் அடுத்தடுத்த கூடுகையை விளக்கும் பொருட்டு இடந்தலைப்பாடு, பாங்கர் கூட்டம், பாங்கியற் கூட்டம் முதலான செய்திகளையும் கூறி அதனூடே களவுகாலத்தில் நிகழும் புலனெறி வழக்காய் செய்யப்பட்ட கூற்றுகளையும் தெளிவுப்படுத்துகிறார். அதனில் தலைவிக்குரிய கூற்றுகளாக தொல்காப்பியர் தந்திருக்கும் வரையறைகளுக்கு நச்சினார்க்கினியர் சான்றாய் காட்டிய சங்க இலக்கிய பாடல்களின் கூற்றுகள் முற்றிலும் வேறாய் இருப்பதைக் காணமுடிகிறது. குறிப்பாக தலைவிக்குரிய கூற்றுகள் பலவற்றிற்கு நச்சினார்க்கினியரால் எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் பாடல்கள் தோழிக்குரிய கூற்றாகவே ஆளப்பட்டு வந்திருக்கிறது. அதிலும் பல பாடல்கள் வெளிப்படையாக தலைவியின் மொழியைக் காட்டினாலும் கூற்றாசிரியர்களால் பின்னாளில் அவை தோழியினதாய் மாற்றப்பட்டு உள்ளது. தமிழகப்பாட்டு கூற்றுமரபு ஏன் அவ்வாறு அக்கூற்றுகளைத் திரிக்க வேண்டும்? என்றும் தலைவியின் எத்தகைய கூற்றுகள் அவ்வாறு திரிக்கப்பட்டுள்ளது? என்பதையும் தொல்காப்பிய பொருளதிகார களவியலின் தலைவி கூற்றுவழி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
களவும் தலைவியும்
களவு காலத்தில் தலைவிக்கு தலைவன்மேல் தான் கொண்ட உரிமையினாலும் தலைவனிடத்து பரத்தமை யொழுக்கம் ஏற்பட்டிருப்பதை அறியும் போதிலும் கூற்று எழும். தலைவன்மேல் தோன்றும் உரிமை என்பது, 'களவிலே கற்புக் கடம்பூண்டொழுகல்' என்பார் நச்சினார்க்கினியர். 'அவன்கண் பரத்தமை இன்றேனும் காதல் மிகுதியால் அங்ஙனம் கருதுதல் பெண் தன்மை' (நச்சி. கள. பக். ௪௦௮). இதிலிருந்து தலைவி தன்னிடத்து, அவன்மேல் அதிகம் உரிமையிருப்பதையும் தான் கற்புக் கடம்பூண்ட குடும்பப் பெண் என்பதையும் நிறுவி இல்லறத்திற்கு தகுதியானவளாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறாள். (பரத்தையிலிருந்து தன்னை வேறுபடுத்தி நிறுவுவதன் வழியே குடும்பப்பெண்கள் உருவாகின்றனர்) இக்களவு காலம் ஒருவகையில் உறவுநிலைப் புரிதலான மேலை நாட்டு Dating உடன் தொடர்புப் படுத்தலாம் ஆனால் களவு வாழ்வு பிற்காலத்தில் பொய்யையும் வழுவையும் தோற்றுவிப்பதாய் குடும்பக்கட்டமைப்பு எண்ணியிருக்கக்கூடும். அதனாலே அக்களவு வாழ்வு கரணத்தில் முடிந்தாக வேண்டும் என்ற குரலை சங்க இலக்கியம் பதிவுசெய்கிறது. ஆதியூழின் அந்தத்தே இந்நூல் செய்தலின் முதனூலாசிரியர் கூறியவாறே களவு நிகழ்ந்த பின்னர்க் கற்பு நிகழுமாறும் கூறித் தாம் நூல் செய்கின்ற காலத்துப் பொய்யும் வழுவும் பற்றி இருடிகள் கரணம் யாத்தவாறுங் கூறினார் (நச்சி. கற். பக். ௫௪௬)
இதனால் களவு மேற்கொள்ளும் இருவர் கற்பு வாழ்விற்குள் நுழைந்தேயாக வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டது. அந்த கட்டாயமும் பெண்ணின் மீது ஏற்றப்பட்டதேயன்றி ஆணுக்கல்ல. அதனால் களவின் போதே கற்புக் கடம்பூண்டவளாய் காணப்படும் தலைவி தலைவனின் மீது உரிமை கொண்டும் அவன் பரத்தையிற் பிரிவை கூறிக் கலக்கமுறுதல் போலும் கூற்று எழுப்புவாள். தொல்காப்பியர் களவியலில் காட்டும் 36 தலைவி கூற்றினையும் (சூத்.௧௧௧) தலைவிக்கு தலைவன் மீது உரிமை இருப்பதாய் வரும் கூற்று, உரிமை இழப்பதாய் வரும் கூற்று எனப்பிரிக்கலாம்.
நாணு மிகவரினும்
தலைவனை எதிர்ப்பட்ட தலைவி தன் பெரும் நாணுடைமை கூறித் தலைவனை ஏற்றுக்கொள்ளாது நிற்கும் போதும் தலைவிக்கு கூற்று எழும். இதற்கு நச்சினார்க்கினியர் தந்த பாடல்,
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே (நற்றிணை 172)
ஆனால் பின்னத்தூர் அ.நாராயணசாமி, 'இது பகற்குறிவந்த தலைமகனைத் தோழி வரைவுகடாயது' எனத் தோழி கூற்றாய் ஆண்டுள்ளார். 'அம்ம நாணுதும் - எனப் புதிது வந்ததோர் நாணுமிகுதி தோன்ற மறுத்துரைத்தலின் தன்வயினுரிமையும் அவன்வயிற் பரத்தைமையுங் கூறினார்' (நச். கள. பக். ௪௧௨) என்று தலைவி கூற்றென நிறுவுகிறார். பின்னோர் பலருங்கூட இப்பாட்டைத் தோழி கூற்றாகவே கொண்டுள்ளனர்.
இவ்விடம் வேண்டாம், களவே வேண்டாம், விரைவில் திருமணம் செய்க - முதலானக் குரல்கள் இப்பாடலில் இருப்பதை உணரலாம். திறத்தியல் மருங்கின் தெரியுமோர்க்கு இன்னும் உள. 'வலம்புரி வான்கொடு நரலும் இலங்குநீர்த் துறைகெழு கொண்க' என்றதனால் களவில் காலந்தாழ்த்தாமல் விரைந்து மணம் முடிக்க என்பதைக் குறிப்பாயும் 'அம்ம நாணுதும்' என்றது களவு வேண்டாம் என்பதையும் உணர்த்தி நிற்கிறது. ஒருவகையில் இது தலைவனின் குறைச் சுட்டலே. இக்காரணமே இதைத் தோழி கூற்றாய் பின்னோர் கொண்டதற்கு இடமாயும் அமைகிறது.
அச்சம் நீடினும்
தலைவன், 'வருவேன்' என சூள் செய்தும் குறியிடம் வருகை தராத போது தலைவிக்கு ஏற்படும் அச்சத்தால் கூற்று எழும். அவ்வச்சம் சூள் மீறிய அவனை தெய்வம் வருத்துமென்றும் தந்தை அவனை அறிந்துவிட்டாரோ என்றும் ஏற்படலாம். நச்சினார்க்கினியர் காட்டிய பாடல்,
மென்தினை மேய்ந்த சிறுகண் பன்றி
வன்கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன்
எந்தை அறிதல் அஞ்சிக்கொல்
அதுவே மன்ற வாரா மையே (ஐங்குறு. 261)
பின்னோர் இதை தோழி கூற்றாய் ஆண்டுள்ளனர். இருந்தும் பாடவேறுபாடு உண்டு. பின்னோர் காட்டிய பாடம் 'தறுகண் பன்றி'.
தறுகண் பன்றி - எனக்கொண்டால், கடுமையான காவலுக்கு நடுவே விளையும் மென்மையான தினையை தின்னும் பன்றியானது மலைப்பக்கத்து உறங்கும். அத்தகைய அச்சமில்லா பன்றியின் மலையில் வாழும் நாடன் என் தந்தை களவொழுக்கத்தை அறிந்துவிடுவார் என்று அஞ்சித்தான் வராமல் இருக்கிறானா என்ன? (பன்றிக்கு இருக்கும் வீரம் கூட அவனுக்கு இல்லையே) என்ற பொருளும். (தோழி கூற்று)
சிறுகண் பன்றி - எனக்கொண்டால், தினைப்புனம் காத்த காலத்தில் பன்றியானது மென்மையானத் தினையை மேய்ந்தது. தற்போது வேறுவழியின்றி (சிறுகண்) அவ்வன்கல் அடுக்கத்தில் தூங்குகிறது. அத்தகைய மலைநாட்டுத் தலைவன். என் தந்தை அறிந்துவிடுவார் என்றெண்ணி வேறுவழியின்றி வாராமல் இருக்கிறான். (வேறுவழி அவனுக்கு கிட்டவில்லையே! தந்தையிடம் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று தலைவிக்கு அச்சப்பொருளைத் தருவதாயுள்ளது) (தலைவி கூற்று - நச்சினார்க்கினியர்)
தலைவனுக்கு வீரம் இல்லை எனும் அவனது இயலாமையை குத்திக்காட்டும் பாடத்தை தோழி கூற்றாய் கொண்டதைக் கவனிக்க.
மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும்
காப்பு மிகுதியானக் காலத்தில் மனையகப்பட்டுக் கலங்கி, உணர்வு அழிந்தவழித் தலைவி ஆராய்ச்சி உடைத்தாகிய அருமறையினைத் தோழிக்கு கூறுதலும் உள. 'ஆராய்ச்சி என்றது 'இவள் கலங்கற்குக் காரணம் யாதென்று பிறரால் ஆராயப்படுதல், தலைவி தன்னுள் ஆராய்தலுமாம்' - (சி.கணேசையர். பக்.௪௨௧) இதற்கு நச்சினார்க்கினியர்,
கேளாய், எல்ல தோழி! அல்கல்
வேணவா நலிய, வெய்ய உயிரா,
ஏ மான் பிணையின் வருந்தினெனாக,
துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை,
'துஞ்சாயோ, என் குறுமகள்?' என்றலின்,
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்,
'படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின், பரல் அவல்,
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ?' என்றிசின், யானே (நற்றிணை 61)
பின்னத்தூரார் இதை, 'தலைவன் வரவுணர்ந்து தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது' என்று ஆண்டுள்ளார். அது பொருந்தாது.
துஞ்சாயோ என் குறுமகள்? என தாய் வினவியபோது 'சொல் வெளிப்படாமை மெல்லவென் நெஞ்சில், கான்கெழு நாடன் படர்ந்தோர்க்குக் கண்ணும் படுமோ என்றிசின் யான்' தலைவி மனத்திற்குள் ஒலித்துக் கொண்டதாய் பாடல் உள்ளது. இது தலைவி கூற்றே.
இதனுள், 'துஞ்சாயோ' எனத் தாய் கூறியவழி மனைப்பட்டு கலங்கியவாறும் 'படர்ந்தோர்க்கு' என மறையுயிர்த்தவாறுங் கண்படாக் கொடுமை செய்தானென பரத்தைமை கூறியவாறுங் காண்க (நச். கள. பக். ௪௨௧)
அவன் நெஞ்சில் படர்ந்தோர்க்கு கண்ணும் படுமோ என்று நொந்து பன்மையில் கூறியதால் தலைவன் பரத்தைமையில் உள்ளான் என்பதை விளங்கலாம். இது குறிப்பெச்சம். நானும் அதிலொருத்தி என்னையும் தூங்கவிடாமல் கொடுமை செய்கிறானே என்பதே கவிதைக் குரல். இதை தலைவி கூற்றாகவே கொள்ள முடியும்.
தலைவனின் பரத்தைமையினால் ஏற்படும் கொடுமைச் சுட்டலை நச்சினார்க்கினியர் தலைவி கூற்றாய் கொள்ள பின்னோர் தோழி கூற்றாய் கொண்டதைக் கவனிக்க.
உயிர்செல வேற்று வரைவுவரின் அது மாற்றுதற் கண்ணும்
நொதுமலர் வரையக் கருதிய ஞான்று அதனை மாற்றுதற்கண்ணும் தலைவிக்கு கூற்று எழும். இதற்கு தலைவி கூற்றாய் நச்சினார்க்கினியர் காட்டிய சான்று,
அன்னை, வாழி! வேண்டன்னை புன்னைப்
பொன் நிறம் விரியும் பூக்கெழு துறைவனை
'என்ஐ' என்றும் யாமே; இவ்வூர்
பிறிது ஒன்றாகக் கூறும்;
ஆங்கும் ஆக்குமோ, வாழிய பாலே (ஐங்குறுநூறு 110)
தலைவியை அயலான் ஒருவனுக்குத் திருமணம் செய்ய முயற்சி நிகழும்போது தோழி செவிலியிடம் சொன்னதாய் இப்பாடலைப் பின்னைய உரையாசிரியர்கள் காட்டுகின்றனர். 'என் ஐ' என மொழியப்படுவதால் இதனைத் தலைவி கூற்றாயும் தோழி கூற்றாயும் கொள்ள வாய்ப்புண்டு. (அன்னை என்னை யென்றலும் உளவே. சூத். ௨௪௬)
தலைவி தன்னவாவை நேரடியாக அன்னையிடம் தெரிவித்தல் பண்பாட்டிடர் ஆகுமென்பதால் தோழி கூற்றாய் மாற்றுதல் அச்சிக்கலை தவிர்க்கும் என எண்ணியிருப்பரோ?
ஆங்கும் ஆக்குமோ, வாழிய பாலே - என்றது நொந்து கூறியது.
தமர்தற் காத்த காரண மருங்கு
தலைவியின் களவொழுக்கத்தை அறிந்த பெற்றோர் அவளை வெளியில் செல்ல அனுமதிக்காது வீட்டுக்குள்ளே அடைத்து வைப்பர். (இற்செறித்தல்) அவளை இவ்வாறு அடைக்க அவள் சுற்றத்தார் முதலியோரும் காரணம், அச்சமயத்தில் தலைவிக்கு கூற்று எழும்.
பெருநீர் அழுவத்து எந்தை தந்த
கொழு மீன் உணங்கல் படு புள் ஓப்பி,
எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇச்,
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி,
ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடும் கழித்
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கிக்,
கொண்டல் இடு மணல் குரவை முனையின்
வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி,
மணிப் பூம் பைம் தழை தைஇ, அணித் தகப்
பல் பூங் கானல் அல்கினம் வருதல்
கவ்வை நல் அணங்கு உற்ற இவ்ஊர்க்
கொடிது அறி பெண்டிர் சொல் கொண்டு, அன்னை
கடி கொண்டனளே தோழி, பெரும் துறை
எல்லையும் இரவும் என்னாது, கல்லென
வலவன் ஆய்ந்த வண் பரி
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே. (அகநானூறு 20)
இப்பாடலை நச்சினார்க்கினியர் தலைவி கூற்றாய் காட்ட ரா.ராகவையங்கார், 'பகற்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியது' என்றெடுத்துள்ளார்.
அன்னை கடிகொண்டனளே தோழி! பெருந்துறை எல்லையும் இரவும் என்னாது, கல்என வலவன் ஆய்ந்த வண்பரி நிலவுமணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே - கொடிதுஅறி பெண்டீர் சொற்கு ஆளானோம்.
தலைவியை இற்செறிப்பிற்கு உள்ளாக்கியது, அவளின் தோற்றப்பொலிவும் வருத்தமும் அயலார் கூறும் அலருமாம் இவை இரவு என்றும் பார்க்காது தலைவன் தேரைக் கொண்டுவந்ததன் விளைவே என்று தமரை நொந்துரையாது அவனைக் கூறும்.
தன்குறி தள்ளிய தெருளாக் காலை வந்தவன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன்பிழைப்பாகத் தழீஇத் தேறல்
குறியிடத்தில் தலைவன் செய்த அடையாளம் பிற இயற்கை நிகழ்வுகளால் தவறிப்போகும். தான் செய்த குறி கண்டு தலைவி அவ்விடத்திற்கு வந்திருப்பாள் என ஆசையுடன் சென்ற தலைவன் தலைவியைக் காணாமல் ஏமாற்றம் கொண்டு திரும்பிச் செல்வான். தலைவன் வந்து சென்றதற்கான அடையாளங்களைப் பின்னர் அவ்விடத்திற்கு வரும் தலைவி காண்பாள். குறியிடம் வெற்றிடமாய் இருப்பதற்கு தன் தவறே காரணம் எனத் தெளிவுறக் கூறுவாள். (ச.திருஞானசம்பந்தம்)
இதற்கு நச்சினார்க்கினியர் அகநானூறு 38ஆம் பாடலை சான்றாய் காட்டுவார். அப்பாட்டு ரா.ராகவையங்காரால் 'தோழி தலைமகன் குறை கூறியது' எனக்கொள்ளப்பட்டுள்ளது.
ஐதேய் கயவெள் அருவி சூடிய உயர்வரைக் கூஉம்கண் அஃதுஎம் ஊர்என ஆங்குஅதை அறிவுறல் மறந்திசின் யானே - எனத் தலைவியே கூறுவது தலைவிக்கு தலைவன்மீது இருக்கும் காம வேட்கையைக் காட்டும்.
அன்னவும் உள
அவைபோல்வன பிறவும் உள என்றதற்கு தலைவி கூற்றாய் நச்சினார்க்கினியரால் காட்டப்பட்ட குறுந்தொகை 355 வது பாடலும் உ.வே.சாமிநாதரால் தோழி கூற்றாய் கொள்ளப்பட்டுள்ளது. அப்பாட்டு,
பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலையே
நீர்பரந் தொழுகலின் நிலங்கா ணலையே
எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல்
யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப
வேங்கை கமழுமெஞ் சிறுகுடி
யாங்கறிந் தனையோ நோகோ யானே (குறுந்தொகை 355)
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி நொந்து கூறியதாய் கொள்ளப்பட்ட இப்பாடல் தலைவி நொந்து கூறியதே ஆம்.
பலகாலம் குறிக்கு வந்து சென்றுக் கொண்டிருந்த தலைவன் சிலகாலம் வாராமையும் ஒருநாள் காமம் மிக்கதால் தலைவியின் வீட்டிற்கு வந்தபோது தலைவி அவனைப் பார்த்து மிகவும் நொந்து கூறியதாகவுமே இப்பாடல் அமைந்துள்ளது.
யாங்கு வந்தனையோ? ஓங்கல் வெற்ப
வேங்கை கமழுமெஞ் சிறுகுடி
யாங்கு அறிந்தனையோ?
நோகோ யானே
எனும் இவ்வரிகள் சங்க காலப்பெண்கள் எவ்வளவு வருத்தத்திற்குரியோராய் இருந்துள்ளனர் என்பதற்கு சான்று. ஆண்களைப் பொறுத்தவரை அப்பெண்கள் தங்கள் காமத்தினை தீர்த்துக் கொள்ளும் களங்களே ஆவர்.
முடிவுரை
மேற்கண்ட கூற்றுகளின் வழியாக எத்தன்மையுள்ள கூற்றுகள் தலைவியிலிருந்து தோழிக்குரியதாய் மாற்றப்பட்டிருக்கிறது என்பதை அறியலாம்.
- தலைவனின் காம இச்சையை சுட்டி, 'போதும் களவு, காலந்தாழ்த்தாமல் விரைந்து திருமணம் செய்' எனுமிடத்தும்
- தலைவனின் வீரக்குறைவை அல்லது கோழைத்தனத்தைச் சுட்டும் இடத்தும்
- களவு காலத்தில் தலைவனின் பரத்தையிற் பிரிவால் ஏற்படும் கொடுமைகளைப் பொறுக்க முடியாது அவனைப் பழிக்கும் இடத்தும் (கொடுமை - கண்படாமை, தோள் மெலிதல் முதலியன)
- நேரடியாக என் காதலன் இவனே என அன்னையிடம் தலைவி கூறுமிடத்தும்
- தலைவனை மீண்டும் புணர விரும்பியவளாய் தனக்கு இருக்கும் காம வேட்கையை வெளிப்படுத்தும் இடத்தும்
தலைவியனது கூற்றுகள் தோழி கூற்றாய் திரிக்கப்பட்டு உள்ளதைக் காணலாம்.
சொல்லெதிர் மொழிதல் அருமைத்து ஆகலின் அல்ல கூற்றுமொழி அவள் வயினான (கள. 20) காமத் திணையில் கண்நின்று வரூஉம் நாணும் மடனும் பெண்மைய ஆகலின் குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை நெறிப்பட வாரா அவள்வயி னான (கள. 18) அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப (கள. 8) உயிரினும் சிறந்தன்று நாணே; நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று (கள. 23) கிழவோன் அறியா அறிவினள் இவள் (கள. 27) தன்னுறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் எண்ணுங் காலைக் கிழத்திக்கு இல்லைப் பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப் பெய்நீர் போலும் உணர்விற்று என்ப (கள. 28)
முதலான நூற்பாக்கள் தலைவிக்கான எல்லையை வகுப்பதாலே, அவ்வெல்லையை மீறும் கவிதைகளைத் தலைவியின் கூற்றாய் கொள்ள முடியாதுப் போகிறது. அவ்விதிகள் சமூகவியல் நோக்கிலும் பார்க்கத்தக்கது. பாலியல் நடத்தையை ஒழுக்கவியல் பிரச்சனைக்குரியதாக ஆக்கியது சங்க காலத்தில் நிகழவில்லை, சங்க கால இலக்கியத்திற்கு விதிகளை வகுக்க முயன்ற தொல்காப்பிய இலக்கண மரபுதான் பிரச்சனைக்குரியதாகிற்று (ராஜ்கௌதமன்)
ஒருவகையில் ஆண்களின் நடத்தைகளுக்கு வடிவம் கொடுப்பதாகவே தொல்காப்பிய களவியல், கற்பியல் இருப்பதைக் காண முடிகிறது. புலனெறி வழக்கு, உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின் வழக்குவழிப் படுதல் செய்யுட்குக் கடனே (பொருளி. 21) என்றமையால், "உயர்குடிப்பிறந்த கற்புடைய மகளிர் தம் தலைவர் கொடுமைபுரியினும் அதனை மறந்து அன்பு பாராட்டுதல் அக்குடிப்பிறப்பிற்குரிய இயல்பென்பதும்" கூறப்பட்டது. (உ.வே.சா)
இதனால் தலைவனது காம வேட்கையைப் பழித்துக் காட்டல், கோழைத்தனத்தைச் சுட்டல், தலைவனது பரத்தைமையைப் பழித்தல், தலைவி தனது காம வேட்கையை கூச்சமின்றி வெளிப்படுத்துதல் முதலானவை உயர்குடிப்பிறந்த தலைவி கூற்றாய் கொள்கையில் அன்பின் ஐந்திணை ஆகாமை உணர்க. இம்மாதிரியான செய்திகளும் பாடலில் வெளிப்படையாக வாராமல் குறிப்பாகவே நின்று பொருளுணர்த்துவதன் வழி பெண்ணுடல் எவ்வாறு பண்பாட்டுக் கூறுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதையும் விளங்கலாம்.
துணை நூற்பட்டியல்
1.தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) நச்சினார்க்கினியம் (சி.கணேசையரின் உரைவிளக்கக் குறிப்பு 1948)
2.சங்க இலக்கியம் மூலமும் உரையும் (வர்த்தமானன் பதிப்பு வெளியீடு) (2022)
3.நற்றிணை - பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் (1915)
4.அகநானூறு மூலமும் உரையும் - ரா.ராகவையங்கார் (1933)
5.குறுந்தொகை மூலமும் உரையும் - டாக்டர் உ.வே.சாமிநாதையர் (2020)
6.பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும் - NCBH (ராஜ் கௌதமன்)
7.தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் உரையும் 2020 (ச.திருஞானசம்பந்தம்)
8. கட்டுரை: சங்க இலக்கியக் குறுந்தொகைப் பாடல்களின் கூற்றில் இடம்பெற்றுள்ள பண்பாட்டு அரசியல்
சிறப்பு.
பதிலளிநீக்குஎல்லாம் பெண்ணுக்கெதிரானது தான். நீ சரியாக அடிமைப்படுத்த வில்லை. நான் சரியாக அடிமைப்படுத்துகிறேன் பார் என்பது போல் தான்.
பதிலளிநீக்கு