அண்மை

குறுந்தொகை 1

குறுந்தொகை 1 பாடல் விளக்கம்

{tocify} $title={உள்ளுறை}

கூற்று

  • தோழி கூற்று
  • தோழி கையுறை மறுத்தது

கூற்று விளக்கம்


(கூற்று என்பது பாடல் எழுகின்ற சூழலைக் குறித்து நிற்கிறது) தோழி கையுறை மறுத்தது என்பது, தலைவனால் தலைவிக்கு வழங்கப்படும் பரிசுப் பொருளைத் தோழி மறுத்து நின்றது என்பதாகும். தலைவன் தோழியின் மூலமாகமே தலைவிக்குப் பரிசைத் தந்து அனுப்புவது நாடக வழக்கு. ஆதலாலே தோழி மறுப்பதாய் காட்டப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் முன்னதாகவே ஓரிடத்தில் சந்தித்துப் புணர்ந்து விட்ட பின்னர் (இயற்கைப் புணர்ச்சி), அவ்வின்பத்தை மீண்டும் பெற்றிடப் பெருவிருப்பம் கொண்ட தலைவன் பாங்கியர் கூட்டம் மூலம் அதாவது தோழியின் உதவி மூலம் தலைவியைப் புணர விரும்புவான். அப்புணர்ச்சிக்காகத் தரப்படும் பரிசுப்பொருளே (லஞ்சம்) கையுறை. எனவே, தோழி கையுறையை மறுத்தாள் எனும் கூற்று, அவனது புணர்ச்சி விருப்பத்தை மறுத்தாள் என்ற எச்சப்பொருளையும் தந்தது. 


குறுந்தொகை பாடல் 1


செங்களம் படக்கொன்று, அவுணர்த் தேய்த்த

செங்கோல் அம்பின் செங்கோட்டு யானைக்

கழல்தொடிச் சேஎய் குன்றம்

குருதிப் பூவின் குலைக்காந் தட்டே


சொற்பிரிக்காப் பாடம்


செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த

செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்

கழறொடிச் சேஎய் குன்றம்

குருதிப் பூவின் குலைக்காந் தட்டே


ஒலி வடிவில்



ஆசிரியர்

  • திப்புத்தோளார்

பாடல் விளக்கம்


போர்க்களம் குருதியால் சிவப்பாகும்படி அசுரர்களைத் தேய்த்துக் கொன்ற இரத்தக்கறை படிந்த கூர்மையான அம்புகளையும், தன் வெண் தந்தங்களை வீரர் குருதியால் செந்தந்தமாக்கிய போர்த்தொழில் புரியும் யானையையும், நெகிழக்கூடிய கைவளையைக் (தொடி) கொண்டோனுமாகிய சேயோனின் குன்றம் (இது). (இக்குன்றம்) செங்குருதியே சூழ்ந்திருக்கும் வண்ணம் எங்கும் கொத்துக்கொத்தாகக் காந்தள் பூவைக் கொண்டது.


நிலம் 

  • குறிஞ்சி நிலம்

கழல்தொடிச் சேஎய் குன்றம் - மலை சூழ் பகுதியைக் காட்டி இருப்பதாலும் அம்மலைவளம் மிக்கப் பகுதியின் எழில்மிக்கப் பூவான காந்தளைக் கொண்டும் பாடலின் நிலம் குறிஞ்சியே எனலாம்.


திணை

  • குறிஞ்சித் திணை

பாடலைக் கூற்றின் மூலமாகவே குறிஞ்சித் திணை என்று சுட்ட முடிகிறது. கூற்றின்படி, இயற்கைப் புணர்ச்சி நடந்துவிட்டது. பின்னர்ப் பாங்கியர் கூட்டத்தின் மூலம் புணர்ச்சி நடக்க வேண்டி தலைவன் கையுறைத் தருகிறான். (புணர்ச்சி வேண்டல்) இது புணர்தலுக்கான காரணமாய் அமைகிறது - புணர்தல் நிமித்தம் (குறிஞ்சி) அவ்வெண்ணம் மறுக்கப்பட்டிருப்பினும் புணர்ச்சியை மையமிட்ட செயல்பாடுகளைக் குறிஞ்சித்திணையுள் அடக்குவதே மரபு.


காலம்


பாடலின் வழியே காலத்தை அறிய முடியவில்லை. குறிஞ்சி நிலம் புணர்ச்சிக்குச் சிறந்ததாயும் அப்புணர்ச்சிக்கு யாமப்பொழுதும் கூதிர்க்காலமும் கூடுதல் இன்பப் பயக்க வல்லதாயும் இருப்பதால், குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர். ஆனால் தலைவன் சிறப்பான இப்பொழுதுகளில் தான் தலைவியைப் புணர அழைப்பான் என்பதில்லை. அதனால் புணர்ச்சி என்றாலே யாமம் தான் என்று கூறிவிட முடியாது. பகற்குறியும் உண்டென்பதைக் கொள்க. பாடலில் காலத்தைக் காட்டும் கூறு இருந்தாலொழிய காலத்தைக் காட்ட முடியாது. குறிஞ்சிக் குறியை மட்டுங் கொண்டு, பாட்டின் பொழுது யாமமும் கூதிரும் எனக்கூறுவோர் தமிழ் அக இலக்கிய நுட்பத்தை உணராதோரே ஆவர். சில பாடல்களில் குறிப்பிட்டக் கருப்பொருள் அல்லது கருப்பொருளின் நடக்கைகள் கொண்டு காலத்தை உணரலாம். இப்பாடலில் அச்சாத்தியமும் இல்லை எனப்படுகிறது அல்லது திறங்கொண்டோர்க்குத் தெரியலாம்.


கருப்பொருள்

  • அவுணர்
  • அம்பு
  • யானை
  • கழல்தொடி
  • சேய்
  • காந்தள்
  • போர்த்தொழில்


இதில் குறிஞ்சி நிலத்திற்கே உரிய கருப்பொருள் சேயோன் மட்டுமே. புள்ளையும் பூவையும் ஒருநிலத்திற்கு உரியது என்று கொள்ள முடியாது. 


என்னுரை


நாடக வழக்கில் இயற்கைப் புணர்ச்சியில் ஈடுபட்ட பிற்பாடு அதே எண்ணத்துடன் தூண்டப்படும் தலைவன் தோழியின் மூலமாகத் தலைவியைப் புணர எண்ணுவான். இதைப் பாங்கியர் கூட்டம் என்பர். பாடலில் 'எங்கள் குன்றில் காந்தள் மிக அதிகமாக உள்ளது' என்னும் தோழி குரல் இருப்பதாக முன்னோர் ஆண்டிருப்பதால் தலைவன் கையுறையாகக் காந்தளால் ஆகிய தழையாடையைத் தந்தான் என்பர். தோழி, கொத்துக்கொத்தாக எம்மிடமே இருக்கும் அவற்றை நாங்கள் வேண்டேம் என மறுத்து தலைவனை அவ்விடம் விட்டு அகற்றப்பார்க்கிறாள். பொதுவாகவே, பாங்கியர் கூட்டம் நாடிவரும் தலைவனைத் தோழி நீக்கவே முனைவாள். களவு நீட்டித்தல் (புணர்ச்சி செய்தே காலங் கழித்தல்) தலைவிக்கு நன்மைப் பயக்காது என்பது தோழியின் எண்ணம். (தமிழ்ப் புலவோர் எண்ணமும் கூட) இதை, 'வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை' எனக் குறிப்பிடும் தொல்காப்பியக் களவியல் நூற்பா வழி கண்டு தெளிக. இதனால், புணர்ச்சியை மட்டுமே விரும்பும் தலைவனை நீக்குவதோடு விரைந்து தலைவியை மணந்துக்கொள் எனும் கருத்தையும் தோழி வெளிப்படுத்துவதாய்ப் பல பாடல்கள் உண்டு. 


ஒருவகையில் களவுக் காலமென்பது தாய்வழிச்சமூகத்தின் எச்சமே ஆம். ஆதிக்கப் பாத்திரத்தை அடைந்த ஆண்கள் பெண்ணுடலை உடைமை பொருளாகக் கண்டதன் விளைவு விரும்பியவருடன் புணர்தல், புணர்ந்து பிரிதல் முதலியவற்றைப் பொய்யும் வழுவுமாகக் கண்டனர். இதனால், தன்னுடல் கொள்ளும் காம விருப்பத்தைப் பற்றியான அறக்கவலையைப் பெண்மீது ஏற்படுத்திய சமூகம், புணர்ந்த பின்னர் ஆணுடன் போகுதலையே கற்பு என்றது. வீட்டுக்குள் பெண்ணைக் கொணர்ந்து இருக்கச் செய்தலையே ஆணுக்குப் பெருமை என்றது.


அதன்படி, பாட்டில் அவுணர்த் தேய்த்த செங்கோல் அம்பும் வீரர்களைத் தந்தத்தால் குத்திக் கொன்று நிற்கும் செங்கோட்டு யானையையும் கூறி அத்தகைய கொடும் போர்த்தொழில் செய்யும் முருகனது குன்றம் இது என்று காட்டியிருப்பது தலைவனை அச்சுறுத்தி அவ்விடம்விட்டு நீக்குவதற்கே ஆம். களவை நீக்குவதற்கும் ஆம். இதை 'அஞ்சி அச்சுறுத்துதல்' எனும் துறையுள் அடக்கலாம். இவ்வாறு நீக்குவது தோழியின் செயலே ஆதலால் கூற்றாசிரியர் இதைத் தோழி கூற்றாய் கொண்டனர்.


இரத்தம் படிந்த அம்புகளைக் கொண்ட சேயோன் என்று காட்டிருப்பது, இரத்தம் தோய்ந்த எய்த அம்புகளை மீண்டும் சேகரித்துப் பயன்படுத்தும் பழங்குடி மக்களின் போர்முறையைக் காட்டுகிறது. செங்கோட்டு யானை என்றது முருகனின் ஊர்திகளில் ஒன்றான பிணிமுகம் என்னும் போர் யானை என்பார் உ.வே.சா. போரில் யானையைப் பயன்படுத்துவது அயல்நாட்டோர்க்கு வேண்டுமாயின் ஆச்சரியம் தரலாம். நம் பழங்குடி மக்களால் ஆய்ந்து அறியப்பட்ட அரிய கலையது. அறிவதிகாரத்தால் விலங்கின் மீது செலுத்தப்படும் வன்முறை.


கையுறை மறுத்தது என்னும் கூற்றாலே தோழி தலைவனின் புணர்ச்சி விருப்பதை மறுத்தது என்ற எச்சப்பொருள் நிற்பதால் இதைக் கூற்றெச்சம் என்பர். குலைக்காந்தள் எனும் சொல் மூலம், எங்களிடமே அதிகம் காந்தளுண்டு, ஆதலால் நீ தரும் காந்தளாடை வேண்டாம் என்ற குறிப்பும் விளங்குவதால் இதைச் சொல்லெச்சம் என்பர்.


முன்னோர் பலர் தழையாடைப் பற்றிய குறிப்பைத் தந்துள்ளனர். தலைவன் தழையாடைத் தான் தந்தான் என்ற குறிப்புப் பாடலில் எங்குள்ளது என்று விளங்கவில்லை. அவன் வெறும் காந்தள் பூவை மட்டுங்கூட நீட்டிருக்கலாம் அல்லவா? கையுறை மறுத்தது என ஏன் கொண்டார்கள்? இத்தகைய சிறப்புமிக்கக் கையுறையை ஏற்றது என்றும் கொள்ள இடமுண்டு. 'தோழி தலைவனின் வரவுணர்ந்து தலைவியைப் புணர்ச்சிக்குரிய இடத்தில் நிறுத்தி, நான் சென்று செங்காந்தள் பூவைக் கொய்து வருகிறேன் எனப் பெயர்ந்தது' என்ற கூற்றும் பொருந்தும்.


கழல்தொடி எனக் குறிப்பிட்டது, அத்தகைய குருதிப் பெருக்கத்துப் போர்வெறி விரும்பும் எம் பழங்குடி மக்கள் அருளுக்கும் அன்புக்கும் ஊற்றாகிய நெகிழ்வும் உடையோரே ஆதலால் அச்சம் வேண்டாம் இவளை முறையே வந்து மணப்பாயாக என்றது. இதனால் தோழி, களவு நீட்டிப்பதைத் தவிர்த்து அவர்களது காதலைக் கற்பு நோக்கிச் செலுத்த துணிவதைத் தெளியலாம். நாடக வழக்கில் தோழி பாத்திரம் யார் எனில், அக்கால அறிவு வட்டத்தின் அற உளமே ஆம்.


தீசன்

✉️ writer.deesan@gmail.com


5 கருத்துகள்

  1. களவு தாய்வழி சமுகத்தின் எச்சம் என்பதை எதை வைத்து கூறுகிறீர்கள்? .

    பெண்கள் தான் நினைக்கும் ஆணுடன் உடலுறவு கொள்வதிலா?

    அப்படி இல்லை என நான் நினைக்கிறேன். களவும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு தான். களவில் பெண் முடிவெடுக்கும் நிலையில் முழுமையாக இல்லை.

    ஆணின் கேள்விக்கு/ ஆசைக்கு விருப்பம் தெரிவிப்பவளாக தான் இருக்கிறாள். எங்கே அளவு சிந்தனை ஏதோ ஒன்றை மட்டுமே கொண்டு உள்ளது.

    நீங்கள் தாய்வழி சமூகத்தின் எச்சமாக பரத்தையரை சொல்லலாம்.. அங்கு அவளின் சுதந்திரமான வாழ்வினை பார்க்கலாம். அதும் ஒரு ஒழுக்கம் என்று தானே கூறுகிறது உங்களது இலக்கியங்கள். அதில் காதல் பரத்தையும் வருவாள். அவளும் அவ்வாறான சுதந்திரத்தை நினைவில் நிறுத்துவாள்.

    பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தான் அவர்கள் உள்ளார்கள் என்று நீங்கள் நினைக்க நேர்ந்தால் தலைவியும் கற்பு காலத்தில் அவ்வாறான நிலையில் தான் உள்ளாள். அதாவது பொருளாதாரத்தின் பொருட்டாவது // இச்சமூகம் அவனை எத்தவறு செய்யினும் மன்னித்து ஏற்றுக் கொள்... என்கிறது.




    இக்கூற்றினை தோழியின் கூற்றாக கொண்டது சரி தான். அதன் பொருட்டு பரத்தைக்கும் தோழியுண்டு என்பதை மறவாதீர்கள். அது மட்டும் இல்லை இப்பாடலில் ஒரு பெண் கையுறை மறுத்துள்ளார். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவ்வாறும் பொருள் கொள்ள முயற்சிக்கலாம் என மாணவர்களின்/ வாசகர்களின் சிந்தனையை விரிவு படுத்துக.

    சங்க இலக்கிய பாடலுக்கு கூற்று, திணை இது தான் என கூறுவது சிறிது சிரமம் தான். இருப்பினும் திறம் உள்ளவர்களால் அதனை உணர முடியும் என பல உரையாசிரியர்கள் / பதிப்பாசிரியர்கள் வாசிப்பாளன் போக்கில் விட்டுவிடுவது சரிதான்.


    இக்கூற்றை தலைவியாகவும் கொள்ளலாம். தலைவி ஒரு பேதை போல் உள்ளாள் போன்று தோழி தலைவனிடம் கூறுவதை நாம் பார்க்கலாம்.

    அதனை வைத்து கொண்டு தலைவன் தன்னோடு புணர்வதற்கு தான் வந்திருங்கிறான் என புரியாமல் தலைவியேக் கூட கையுரையை மறுக்கலாம். அதாவது இங்கு நிறைய இச்செங்காந்தாள் வேண்டாம் என கூறலாம் அல்லவா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்பு நோக்கியதாய் நடத்தப்படும் களவு, அதாவது கரணத்தில் முடிய வேண்டும் என்றெண்ணும் களவு ஆணாதிக்கப் பார்வையில் உருவானதே. பெண்ணையும் பிற அஃறிணை உடைமை பொருள் போல கருதியதன் விளைவுவது. ஆனால் ஆதிக்கமில்லாத களவு வாழ்க்கை, ஆதிக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணமில்லாத களவு வாழ்க்கை நிச்சயம் தாய்வழிச்சமூகத்தின் எச்சமே ஆகும். ஆதி ஊழியில் கரணமின்றி வாழ்ந்னரென்றும் பண்டைய இனக்குழு முறைப்பற்றியும் சங்கப்பாட்டிலே விளங்கும். இவ்வாறு கரணமின்றி புணர்ந்து வாழ்தலையும், புணர்ந்து பிரிதலையுமே பின்னாளில் களவு என்றனர். தொல்காப்பியர் போன்றோர் இதைத் தவிர்த்து புணர்ந்து உடன் போதலை, ஆணுக்கு அடங்கி இருத்தலையே மையப்படுத்தினார். அதன் காரணம், அவர் காலம் அதையே அறமென்றது. அது கரணம் நோக்கிய களவே அன்றி தாய்வழிச்சமூகத்துக் களவு அல்ல. தாய்வழிச்சமூகத்துக் களவில் பெண் தன் உடலை யாருக்கும் கீழ்ப்படிந்ததாய்க் கொண்டிருக்கவில்லை. இன்றுவரை பெண்மீது செலுத்தப்படும் அதிகாரம் அவள் உடலை மையமிட்டதாகவே உள்ளது. பெண்ணின் விடுதலை அரசியலும் தன் உடலைச் சுதந்திரமாக்கிக் கொள்வதிலே உள்ளது.

      நீக்கு
  2. எங்கே அளவு சிந்தனை ஏதோ ஒன்றை மட்டுமே கொண்டு உள்ளது.

    இங்கே அவளது சிந்தனைத்திறன் ஒன்றை மட்டுமே கொண்டு உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. விரைந்து மணம் முடிப்பதற்காக ஏதோ ஒன்றை சொல்லி தலைவனை மறுத்து அனுப்பியிருக்கலாம் என்ற கருத்தை ஏற்கலாம். அச்சம் உண்டாக்குவதற்காக கூட இரத்தம் படிந்த அம்புகளை உடைய சேயோன் குன்றத்தை காட்டியிருக்கலாம்.
    இரண்டு வரி குறலுக்கு இருபது வரி உரை எழுதுபவர்களை கண்டிருக்கிறோம். உரை என்பது நிஜம் அல்ல. ஒருவர் மணதில் தோன்றுவதாகவும் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. நீங்க நூலில் உண்மைகளை தேடுகிறீர்கள். நான் இயல்பு என்ன வென்று கூறுகிறேன்


    எங்கெல்ஸ்க்கு பிறகு இச்சமூகம் மாறியிருந்தால்/ குறைந்து இருந்தால் அதை கூறுவது சரி.

    ஆனால் அதைவிட நுணுக்கமான அதிகாரங்கள் வந்து விட்டன தானே

    பதிலளிநீக்கு
புதியது பழையவை