அண்மை

ஆண்/பெண் குறிமேல் திணிக்கப்படும் பால்நிலை விலகலைப் புரிதல்

ஆண்/பெண் குறிமேல் திணிக்கப்படும் பால்நிலை விலகலைப் புரிதல்


ஒரு ஆணால் கருவைச் சுமந்து பிள்ளை பெற்க முடியுமா? என என்னைக் கேட்டால், “முடியுமென்பேன்”.


இதனால், பால் பற்றியும் பால்நிலைப் பற்றியுமான விவரந்தெரியாதவர்கள் என்மேல் சண்டை கட்டக்கூடும்.


நாம் ஏன் இந்த ஊரில் இந்த நாட்டில் இவர்களுக்குப் பிள்ளையாய் பிறந்தோம் என்றெல்லாம் யோசித்தாகிவிட்டது. இந்தத் தருணத்தை வாழ்வதற்கு இக்கேள்விகள் எனக்கு உதவவில்லை. இனி நாம் ஏன் ஆணாக இருக்கிறோம்? ஏன் பெண்ணாக இருக்கிறோம்? என்பது பற்றியும்


ஆண்கள் - ஏன் நாம் முதற்பாலாக இருக்கிறோம்? 

பெண்கள் - ஏன் நாம் இரண்டாம் பாலாக இருக்கிறோம்?

இத்தகைய நம்நிலை தான் மூன்றாம் பாலை உற்பத்தி செய்திருக்கிறதா? என்பதைப் பற்றியும் கொஞ்சம் புரிவோம்.


அதற்குப் பால் - பால்நிலைப் பற்றியான புரிதலும் தேவை. பால் என்பது உடலியல் காரணத்தால் நான் வேறாய் இருத்தல்; ஆண்குறியோடு இருத்தல், பெண்குறியோடு இருத்தல், திருநராயிருத்தல் இன்னும் அறியாதன முதலியவையும் இவற்றுளடங்கும். பால்நிலை என்பது இச்சமூகத்தால்/ புறச்சூழலால் நம்முடல்மீது ஏற்றப்படும் ஆண் தன்மை, பெண் தன்மை முதலியன. இங்கு உடலின் பாலும் மனத்தின் பால்நிலையும் ஒன்றாக இருக்க வேண்டுமென்றே எல்லோரும் விரும்புகிறார்கள். இந்த மற்றமைகளின் விருப்பத்திற்கும் எனது விருப்பத்திற்குமான முரண்தான் நிகழுலகில் முழுமையற்றோர் எனும் முத்திரையை நமக்குள் பதிக்கிறது. எனக்குள் நானே எழுப்பிக் கொள்ளும் தாழ்வு மனப்பான்மைக்கு மூலமாகிறது. நகைக்கு உள்ளாகிறது. பொதுவெளியில் மட்டமான மொழிகளால் விமர்சிக்கப்பட்டு இயல்பான விலகலையும் பெருங்குற்றமாகக் கருதவைக்கிறது.


ஆனால் பாலுக்கும் பால்நிலைக்குமான விலகல் உண்மையில் ஓர் சாதாரணமான விடயந்தான். அது, சமூக அதிகாரமண்டாத குழந்தை தன் வலக்காலில் இடக்கால் செருப்பை அணிவது போல.


ஆண்குறியோடு பிறக்கும் குழந்தை இச்சமூகத்தால் ஆணாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அதேபோல் பெண்குறியோடு பிறக்குங் குழந்தை பெண்ணாக..


இங்குத் தான் மக்கள் விழிப்புடன் இருத்தல் அவசியமாகிறது. தாயின் வயிற்றிலிருந்து எட்டிப்பார்க்கும் ஆண்குறியும் பெண்குறியும் என் உடலியல் நிலையான பாலைத்தான் (Sex) முடிவுசெய்கிறதேயன்றி என் அகநிலையான பால்நிலையை (Gender) அல்ல.


இங்கு என் பால்நிலையைத் தேர்வு செய்துகொள்ளும் விருப்பதிகாரம் என்னைத் தவிர வேறெவருக்கும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். என்னைப் பெற்றெடுத்தாளுக்கும் அதற்குரிமை இல்லை.


அதும், பிறந்த குழந்தைக்குப் பால்நிலை இல்லையென்பது நம் எண்ணம். பால்நிலை என்பது நம்முடலுக்குக் கற்பிக்கப்படும் ஒருவகைக் கருத்து. மற்றமையால் உடல்மேல் கற்பிக்கப்படும் கற்பு. இதனால் கற்பைப் பால்நிலை என்றும் பால்நிலையைக் கற்பென்றும் கூறுவது பொருந்தும். 


ஆணுக்கும் பெண்ணுக்குமான கற்பொழுக்கம் உடலுக்கான அடிப்படைத் தேவைகளுக்குள் ஏற்றி வைத்த கருத்தேயன்றி வேறில்லை. அக்கருத்துக்கள் யோனியிலிருந்து வெளிவந்த சற்றேறக்குறைய ஒருவினாடியில் இருந்து நம்மீது ஏற்றப்பட்டுவிடுகிறது.


இந்த அதிர்ச்சிக்குரிய நிகழ்வு அதிர்ச்சிக்குரியதாகத் தெரியத்தொடங்கினாலே உடலில் வழிந்தோடிக்கொண்டிருக்கிற பால்நிலைக் கருத்தை நீங்கள் உணரலாம்.


அது (கருத்து) நமக்கான வாழ்வை கல்வியை உடையை உணவை நடையை நடத்தையை பயன்பாட்டு வண்ணத்தை இன்னும் பலவற்றைத் தீர்மானிக்கிறது. இதிலிருந்து விலகியோரை விலக விரும்புவோரை இவ்வுலகம் நிகழுலகிலிருந்து விலகியோராய் மனிதகுலத்திற்கே தீங்கிழைத்தோராய் இயற்கைக்கு ஓர் சாபக்கேடாய்ப் பார்த்தொடுக்குகிறது. 


பெரும்பான்மையோர் தன்னியல்பை முழுமையியல்பாய் பார்ப்பதன் விளைவிது. முழுமையிலிருந்து விலகுவதும் இயல்பென்று உணராத பெரும்பான்மையோர், கட்டமைக்கப்பட்ட பால்-பால்நிலை விலகிய சிறுபான்மை உடல்களை, இயற்கைக்கு எதிரான உடல்களாகக் குறையுடல்களாகக் குற்றவுடல்களாகப் பார்க்கின்றனர். 


உதாரணமாக, பெண்குறியுள்ள ஓருடல் புறநிலையில் இருந்து தான் ஒரு பெண்தான் என்று உணர்வதற்குரிய எல்லாச் சாத்தியங்களையும் பெறுகிறது. இது நம் அகத்தையும் பெண்ணாகப் பாவிப்பதற்குத் தயார் செய்கிறது. இப்படியாகத்தான் உடலியல் பால் (Sex) கருத்தாக்க பால்நிலையோடு (Gender) மற்றமையால் பொருத்தப்படுகிறது. எனில், பாலுக்குரிய இயல்பு என்பதே ஆணாய்/பெண்ணாய் இருத்தலென்னும் கருத்துப் பொய்யானது. ஆண்குறியுள் ஆணை நுழைப்பதும் பெண்குறியுள் பெண்ணை நுழைப்பதும் தான் பிறக்கும் எல்லாக் குழந்தைக்கும் நடக்கும் முதல் வன்முறை சடங்கு என்பேன். 


ஆணாயும் பெண்ணாயும் இருத்தலை உடல் அறியாது. அது பசியையும் காமத்தையும் அறியுமேயன்றி கருத்துநிலை பால்பற்றி ஒருபோதும் அறியாது. கருத்துநிலைப் பால் உலகத்தால் உணர்த்தப்படுவதேயன்றி உடலியல்பல்ல. இதைப் புரிந்தாலே ஓரளவிற்குப் போதுமானது.


இங்குப் பால் ஆணாகவும் பால்நிலை ஆணாகவும் இருந்தால் பிரச்சனையில்லை. அதேபோல் பால் பெண்ணாகவும் பால்நிலை பெண்ணாகவும் இருந்தாலும் பிரச்சனையில்லை. பால் ஆணாகவும் பால்நிலை பெண்ணாகவும் அல்லது பால் பெண்ணாகவும் பால்நிலை ஆணாகவும் இருக்கும் போதுதான் சிக்கலுக்குரிய உடலாக முழுமையற்ற மனிதராக ஆகத்தொடங்குகிறோம்.


குறியால் ஆணாக இருப்பினும் நான் ஆணாக வாழ வேண்டிய அவசியம் இல்லை. ஆணின் பேச்சு, ஆணின் நடை, ஆணின் உடை, ஆணின் பொதுவெளி நடத்தை, ஆணின் தோரணை, ஆணின் குணம், ஆணின் மனம், ஆணின் பை, ஆணின் செருப்பு, ஆணின் கடிகாரம், ஆணின் தொப்பி, ஆணின் வண்டி, ஆணின் சங்கிலி, ஆணின் வகிடு என்று ‘குறி’க்கு மேலாக ஆண் கருத்துச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற தளங்கள் அதிகம். 


ஓராண் ஆண்போல் நடப்பதைத் தான் இவ்வுலகம் இயல்புடல் என்கிறது. பெண்போல் நடக்கும் ஆணுடல் இவ்வுலகத்துப் பார்வையில் குறையுடல். பாலுக்கும் பால்நிலைக்குமான முரணுடல். பாலொழுக்கம் பற்றி அறியாத உடலுக்கு ஆண்போல் நடக்கக் கற்றுதருவது, முன்னமே ஆண்போல் நடக்கக் கற்ற நகலுடல் - அந்நகலுடலால் கட்டமைக்கப்பட்ட பூவுடல். இந்நிகழ்ச்சி ஓர் சுழற்சி போல் இயக்கமாகிறது.


அதனால் இன்று நாம் ஆணாகவும் பெண்ணாகவும் இருப்பதே இச்சமூகத்துடன் நம்முடல் மோதிய விபத்தின் விளைவுதான். ஆண்குறியோடு பிறக்கப்பட்ட காரணத்தால் நாம் ஆணாகவும் பெண்குறியோடு பிறக்கப்பட்ட காரணத்தால் நாம் பெண்ணாகவும் கட்டமைக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  


இவைகள் இருப்பதால் இவைகள் இல்லாததையும் என்னால் உணரமுடிகிறது. பாலுக்குரிய பாலியல் பசி, தூக்கம், காமம். ஆணாய் வாழ்தலிலோ பெண்ணாய் வாழ்தலிலோ பாலியல்பில்லை. உடலில் ஏற்றப்பட்டிருக்கும் ஆண்மை, பெண்மை கருத்துகளின்றி வாழ்தலில் தான் உடலின் உண்மை வாழ்தல் இருக்கிறது.


ஆண்களற்ற உலகம், பெண்களற்ற உலகம் தான் விலகலென்னும் பிறழ்வுகளைப் பெரிதுபடுத்தாத உலகமாகவும் இருக்கும். எனில், நம் உடல்மேல் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் பாலின (ஆண்,பெண்) கருத்துக்களை நீக்குவதில் தான்/ அழித்தொழிப்பதில் தான் பாலின சமத்துவம் இருப்பதாய் உணர்கிறேன்.


ஆண்குறியோடு பிறந்தவர்கள் ஆணாகத்தான் வாழ வேண்டும், பெண்குறியோடு பிறந்தவர்கள் பெண்ணாகத்தான் வாழ வேண்டும் எனும் அதிகார கருத்து/ குறிகளுக்குத் தரப்படும் அர்த்தமதிப்பு/ பால்-பால்நிலை விலகளைக் குறையுடலாகப் பார்க்கின்ற தெளிவின்மை/ புறச்சூழல்களால் குழந்தைக்கு உணர்த்தப்படும் பாலினம் அல்லது குழந்தைத்தனத்தைத் திரித்தல்


முதலியவை தான் மனிதகுலத்தின் இயல்பு எனப்படுகிறது. ஆனால் எனக்கப்படித் தோன்றவில்லை. பால்நிலைக் குறித்தான அர்த்தமிழப்பு தான் ஒன்றுமில்லாத உடலியல்பின் உண்மையைக் காட்டுகிறது. நான் ஆணாக இல்லாதபோதுதான் நான் நானாக இருப்பதை உணர்கிறேன்.


உண்மையில் உடலின் மேல் நாம் திணித்து வைத்திருக்கும் அதிகார எண்ணம் பால்-பால்நிலை விலகலில் தான் கரைந்தோட தொடங்குகிறது. ஆணும் பெண்ணும் கரைந்து ஓடுகையில் அங்குப் பாலற்ற பரிசுத்தமான குழந்தையொன்றே மிஞ்சும். 


எனவே,


குழந்தையாதலில் தான் ஒட்டுமொத்த உடலதிகாரத்தை எதிர்க்கும் துணிச்சல் வருகிறது.


தீசன்

✉️ writer.deesan@gmail.com


தீசன் கட்டுரைகள்

5 கருத்துகள்

  1. ஆண் தன்மை, பெண் தன்மை என்பன போன்ற கருத்துக்கள் தகர்க்கப்பட வேண்டும் என்பதே நம் கனவும் கடமையாகும்.

    இன்னொன்றையும் நாம் வேர் அறுக்க வேண்டியுள்ளது. அவர்போல் ஆகவேண்டும் இவர் போல் ஆக வேண்டும் என்பது..

    மேற்கூறிய இரண்டும் மடமைத்தனம் தான்.

    இம்மடமைத்தனத்தை போற்றும் மக்களிடம் புரிதலை உண்டு பண்ணுவோம்..

    தோழர்களாகிய நாம் அதிலிருந்து விடுபட்டு..

    பாலற்ற பெண்பால்- ராஜ்கெளதமனின் மொழிபெயர்ப்பு நாவல், கழிவறை இருக்கை - லதா இவ்விரு புத்தகங்கள் இது போன்ற கருத்துக்களை செம்மையான முறையில் உணர்த்க வல்லதாக நான் நினைக்கிறேன்.

    பாலற்ற பெண்பால் - புத்தகத்தில் பெண், ஆண் போன்ற கருத்துக்கள் ஏன் தோன்றுகிறது என்பதற்கான விளக்கம் சிறப்பாக எடுத்தாளப்பட்டுள்ளது.

    கழிவறை இருக்கை- புத்தகத்தில் உடலுறவு பற்றிய புரிதலும், பாலியல் சுதந்திரம் பேசும் பெண்ணை இவ்வுகலம் எவ்வாறு பார்க்கிறது என்பது பற்றியும் லதா தனக்கு நடந்தவற்றைக்கூறி தெளிவுப்படுத்தி நம்மைப்போன்றோருக்கு எழும் அச்சம், பிரச்சினைகளையும் கூறுகிறார்.

    பதிலளிநீக்கு
  2. பெண்மை ஆண்மை குணங்களை பூனை நாய் குரங்கு ஆடு மாடு முதலான விலங்கினங்களிலும் வெகுவாக காணமுடிகிறதே... அவையும் கூட கற்பிதம் பண்ணிக்கொண்டனவோ..? என்றாலும் அவை தங்களுள் மாற்றியல்பு கொண்டு திரிகிற தம் சகா-களை கேலி செய்வதில்லை என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொருள்நிலையிலான பால் எல்லா உயிர்களிடத்தும் உண்டு. பாலற்ற கடல்குதிரைக்கும் குறிப்பிட்ட பருவத்தில் உண்டு. ஆனால் கருத்துநிலையில் அமைத்துக் கொண்ட பால்நிலை - இந்தப் பால் இவ்வாறு தான் இருக்கவேண்டும் என்ற அதிகார சமூகவமைப்பு மனிதர்களைத் தவிர வேறெவ்வஃறிணை உயர்களிடத்தும் இருப்பதாய்த் தோன்றவில்லை. அஃறிணை உயிர்ப் பொருட்களை/ உயிரில் பொருட்களைக் கருத்துநிலை பால் பின்புலத்திலிருந்து பார்ப்பதன் விளைவுதான் சங்க இலக்கியமே. இலக்கியங்கள் சமூகத்தின் உற்பத்திப் பொருளாதலால் சமூகத்தின் அடித்தளமும் பொருட்களை/ உயிரினங்களைத் தன்னுணர்வோடு/ தன் பால்நிலையோடு பொருத்திப் பார்க்க விரும்புகிறது. உதாரணமாக, சூரியனுக்கோ சந்திரனுக்கோ பாலுண்டா? கவிதையிலுண்டு. இத்தன்மை பெயர்ச்சூட்டலிலிருந்து பண்புநலனை தீர்மானிப்பது வரை மனிதரிடத்து சமூகத்தினரால் எதிரொலிக்கப்படும். கருத்தாக்கமாயுள்ள பால்நிலை ஆணுக்கான பால்நடத்தையைப் பெண்ணுக்கான பால்நடத்தையைத் தீர்மானிக்கிறது.

      ஆண் காமத்தைப் பொதுவெளியில் சொல்லுதற்கும்/ பெண் காமத்தை பொதுவெளியில் சொல்லுதற்கும் நம் சமூகத்தில் மதிப்புண்டு. முன்னவன் வெளிப்படையானவன்/ உள்ளொன்று புறமொன்றில்லாதவன். பின்னவள் வெளிப்படையானவள்/ யாருடனும் படுக்கத் தயாராக இருப்பவள்/ ஆண்கள் எப்போது அழைப்பார்கள் என ஏங்கித் தவிப்பவள்

      ஒரே கருத்து. வேறுவேறு பால். கருத்தும் வேறுவேறாயானது. பொதுவாக எல்லா உயிரினங்களிடமும் பெண் மைய வாழ்விருக்கும். ஆதிகாலத்தில் நாமும் அப்படித்தான் இருந்தோம். அரசுருவாக்கமும் குடும்ப நிறுவனமும் ஆணை மேலேற்றி பெண்ணுக்குப் பாலியல் குறித்தான ஓர் அறக்கவலையை உண்டாக்கிற்று.

      அதிலிருந்து அல்லது அதற்கு முன்னிலிருந்து உடல் நாடகமேடையாகவும் அதில் நுழையும் பால்நிலை(கருத்து) ஓர் நிகழ்த்துதலாகவுமே (Gender is performative) உள்ளது.

      அதாவது பாலியல் வரலாற்றில் முதன்மையாக்கம் செய்யப்படுவதும் முறைப்படுத்தப்படுவதும் தொடர்ந்து அதைப் பண்பாட்டின் உளவியலாக மூளைகளில் செலுத்துவதுமே இங்கு நடக்கிறது. அப்படியெனில் இங்கு எதிர்ப்பாலியல் என்பது கட்டமைப்பே என்றாகிறது. -

      Sex ல் Genderஐ திணித்த உடல்களாக மனித உடல்களும் பொருள்நிலைப்பாலமைப்பை மட்டும் உடையதாய் மனிதர்களோடு உறவாடாத விலங்குடல்களும் உள்ளது.

      பால்நிலை கருத்தின் நிரம்பலே மனிதர்களுக்கு விலங்கினங்களின் காமச் செயல்பாட்டிற்கும் ஆண், பெண் தன்மையைத் தரச் செய்கிறது. ஆனால் என்னைப் பொருத்தமட்டில் எந்த விலங்கிற்கும் தான் ஆணாக வாழ வேண்டும்/ தான் பெண்ணாக வாழ வேண்டுமென்ற நிபந்தனையில்லை. இனக்கடத்தல் எனும் நிகழ்த்துதலை எல்லாக் கூட்டமும் செய்துகொண்டேதானிருக்கின்றன.
      ஒருவரின் உடைமையுடலாக நுகர்வுடலாக காமந்தீர்க்கும் இச்சையுடலாக எதிர்பாலின வணிகவுடலாக எந்த விலங்குடலும் இல்லை. அதனால் தான் அங்கு ஏற்போ விலகலோ இல்லை. உடலால் ஆணும் ஆணும் புணரும் விலங்கினங்களை நான் பார்த்திருக்கிறேன்.

      அதற்கு இயற்கைக்கு மீறிய நிகழ்வென்றோ தவறொன்றோ காமத்தின் கருத்தேற்றமோ ஏதுமில்லை. காமம் - அதன் வெளிப்பாடு. அவ்வளவு தான்.

      ஆண்/ பெண் இருந்தால் தானே ஆண்மை/ பெண்மை இருக்க முடியும்?

      நீக்கு
  3. ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இறைவனது படைப்பில் ஆண் வேறு. பெண் வேறு. ஆணுக்குள்ள ஹார்மோன்கள் வேறு. பெண்ணுக்குள்ள ஹார்மோன்கள் வேறு. உடலமைப்பால் ஆணுக்குள்ள வேலையையும் பெண்ணுக்குள்ள வேலையையும் பிரித்து கொள்கிறோம். பெண்கள் உடல் அமைப்பால் Weaker section. அதனால் சில எளிய வேலைகள் பெண்களுக்கும் கடின வேலைகள் ஆண்களுக்கும் பிரித்து கொடுக்கப்படுகிறது

    ஆணை ஆண் என்று சொல்லி வளர்காவிட்டால் பெண்களை போல அவர்களுக்கு கூந்தல் வளருமா?
    அதனால் ஆண் பெண் என்ற பிரச்சனை தேவையில்லை. அந்த ஆராய்ச்சியில் பயனும் இல்லை.

    இயற்கையை இயற்கையோடு விட்டுவிட வேண்டும். பாலின சமத்துவத்தை உண்டாக்க வேண்டுமானால் பாடுபடலாம்.

    பெண்கள் கல்வியினால் அதை வருங்காலத்தில் சாதித்துக் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

    அதனால் ஆண் என்பது வேறுதான். பெண் என்பது வேறுதான். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு.

    பெண்ணைப் போல ஆணால் கருவை சுமக்க முடியுமா?

    இல்லை ஒரு ஆண் செய்கின்ற வேலையை செய்யத்தான் முடியுமா?

    ஆணாக பிறந்ததால்தான் அவன் ஆண். ஆணைப் போல வளர்ப்பதால் அவன் ஆண் அல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலத்தைக் காட்டிலும் பொழுதிற்கு வலிமை அதிகம். பொழுது, நிலத்தின் தன்மையையே மாற்றவல்லது. பொழுதின் நிலைதான் நிலத்தின் நிலையை தீர்மானிக்கிறது/ இயக்குகிறது/ உயிர்ப்புடன் நிறுத்துகிறது.

      எனவே நிலமென்பது ஒன்றுமற்ற வெற்றுப் பரப்பு அவ்வளவே. அதனால் தான் எல்லோரும் இந்த நிலத்தில் இந்த பொழுதுதான் இருக்க வேண்டுமென்று கட்டமைக்க நினைக்கிறார்கள்.

      "பொழுது எப்போதும் அதை மீறத்துடிக்கிறது"

      எப்படியென்றால்,

      முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும்படி..

      நீக்கு
புதியது பழையவை