மொழியால் ஆசிரியர் இறந்தார். வாசகர் கொலை செய்யப்பட்டார்.
அதிகாரத்தின் பகுதியாக இயங்குதலை விரும்புவதால் தான் நமக்கு மொழி எனும் பொருள், ‘ஒன்றை விளங்கி கொள்வதற்கான வடிவமாகத்’ தெரிகிறது. அதனாலேதான் அதை நாம் கருத்துப்பரிமாற்ற கருவி என்கிறோம். ஆனால் அது உண்மை அன்று. ஒன்றை விளங்குதல் என்பது தனிநபர் காரியம் என்று உறுதியாகக் கூறிவிடமுடியாது. அது ஒரு சமூகப் பண்பாட்டுக் குழுச் செயல்பாடு. புரிதல் என்பது நிலம், காலம், பண்பாடு இவற்றோடு மூளையில் இதுவரை பதிவேற்றப்பட்ட தரவுகளோடு தொடர்புடையது. அப்பதிவுகள் தான் நம்மை சிந்திக்க வைக்கிறது, உரையாட வைக்கிறது, எழுத வைக்கிறது, விளங்க வைக்கிறது. உடலின் ஒழுக்கம் அல்லது உடலின் அறம் எனும் பகுதியைப் படைக்கிறது. ஒலிமொழி மனத்தின் மொழிவிளையாட்டே சிந்தித்தல். இம்மொழிவிளையாட்டு நிகழ்வு எங்கு எப்போது எதில் நிகழவேண்டும் எனும் பொது சமூகதர்க்கம் நம் பிஞ்சுமூளையிலே பதிய வைக்கப்படுகிறது. நெறிமுறைகளும் விதிகளுமற்ற விளையாட்டுக்கள் உலகின் எப்பகுதியிலும் இல்லாதது போலவே எம்மொழியிலும் விதிகளற்ற மொழிவிளையாட்டு என்பதொன்று இல்லை. எனவே, ஒரு மொழியின் மொழிவிளையாட்டு இயங்கியல் தெரியாதவரை அம்மொழி உங்களை ஏமாற்றும். தன் நில, கால, சமூக, பண்பாட்டு அதிகாரத்தின் சார்பாகவே உங்களைச் சிந்திக்க வைக்கும். அதிகாரத்திற்கு எதிராக இயங்குவதாய் கூறுவோரும் அவர் மொழியின் இயங்கு தர்க்கம் அல்லது சிந்தித்தலுக்கான முறையியலுக்கு எதிராக இல்லாதவரை அதிகாரத்தின் சார்பினரே ஆவர். காரணம், வர்க்க பாலின சாதிய ஏற்றத்தாழ்வுகளுடன் ஆணாதிக்க மொழியினூடாகச் செய்யும் சிந்தனை என்பது அதிகாரத்தின் சிந்தனையே ஆகும். அதுவே இயல்பான பிறழ்வுகளற்ற தூய்மையான பொதுஉளவியலின் சிந்தனையாகத் தமிழ் மொழியில் (யால்) இயங்குகிறது. [ஒருமொழிக்கு இதைவிட கொடும்நோய் வேறில்லை. மொழியின் நோய் ஒட்டுமொத்த மொழிச்சமூகத்தின் மனநோய்.]
அதிகாரம் என்பது தனிமனிதராலும் அல்லது தனிநிறுவனத்தாலும் இயக்கப்படும் வடிவமென்று நம்மை எண்ண வைத்ததுதான் மொழியின் மிகுபெரும் வெற்றியாக நான் கருதுகிறேன். அது எல்லா சொல்லுக்கும் தீர்மானமான மையப்பொருள் உண்டு என்று உறுதியாக நம்பும் பொது சிந்தனையின் வெளிப்பாடு. மனம் குறிப்பானைக் கூறியவுடன் குறிப்பீட்டைத் தருவதுபோல அதிகாரம் என்றவுடன் ஒரு ஆள் அல்லது ஒருநிறுவனத்தைக் கருதவைப்பது மொழியின் மைய பொருளுருவாக்க கருத்தாக்கத்தின் எதிரொலியாகும். மைய பொருளுருவாக்கம் என்பது, ஒரு பொருளை மையத்தில் நிறுத்துதல் அல்லது நிறுத்தி வைக்கப்பட்ட மையப்பொருளை ஏற்றுக் கொள்ளல். இங்கு தான் மொழி ஒவ்வொரு உடலையும் கொலை செய்து அவ்வுடலுக்கும் அதிகாரத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லாத மாயையை உண்டாக்கி ஒவ்வொரு உடலையும் தன் அதிகார பிரச்சார உடலாக அதாவது மொழியுடலாக உருவாக்குகிறது. இதனால் மொழியை ஏற்றுக்கொண்ட அனைத்து உடல்களும் அதிகாரத்தின் உடல்களாகிறது. மொழியால் கடத்தப்படும் அனைத்துக் கருத்துக்களும் அதிகாரத்தின் கருத்துக்களாகிறது.
மனிதர்களின் அதிகார விருப்புறுதியே ஒலி மொழியை உண்டாக்கியது. பின் அந்த ஒலி மொழி எழுத்து மொழி ஆனதும் எழுத்து இலக்கண மொழியானதும் சர்வதிகார போக்கின் நடக்கைகள். இலக்கணங்கள் திரவநிலையிலான மொழியியல்பை ‘மயக்கமற்ற’, ‘தெளிவுகுறைவற்ற’, ‘சரியான’ எனும் விளையாட்டால் திடநிலைக்கு மாற்றுகிறது. இதனால் உண்மை, சரி, தீர்மானிக்கப்பட்டது, மரபு, அறம் முதலான பொருட்கள் உற்பத்தியாகின்றன. ஒரு சொல் விரிந்த பல பொருண்மையியல்பைக் கொண்டிருக்கும்போது அச்சொல்லுக்குச் சொன்மை (இலக்கணம்) கூறுவது என்பது ஒற்றைப் பொருளை நிறுத்துவதற்கான அரசியல் செயல்பாடாகும். ஒற்றைப் பொருள் நிறுவல் அல்லது மையப்பொருளாக்கம் எனும் இலக்கண செயல்பாடே ஓர் நிலத்தின் முற்றதிகார அல்லது பொது கருத்தியல் எனும் அதிகார மனநிலையை உற்பத்தி செய்கிறது. அல்லது நிலம் (அரசு - அதிகாரம்) உற்பத்தி செய்த பொது கருத்தியலை இலக்கணங்கள் நூல் அளவையால் உறுதி செய்கின்றன. பொதுவாக ஒரு மொழியின் சரி×தவறு (அவாய்நிலை - சரியின் வழி தவறு அல்லது தவற்றின் வழி சரி) இயல்பை விளக்கும் அத்தனை இலக்கணப் பிரதிகளும் அம்மொழி நிலத்தின் அரசதிகார ஆதிக்கத்தைக் காக்க வந்த பிரச்சார பனுவல்களே என்பதில் துளியளவும் ஐயமில்லை. ‘மொழியின் சரி’ என்று இலக்கணங்கள் நிறுவுவது ‘அதிகாரத்தின் சரி’யே. இதனால் தொன்மையான இலக்கணங்களைக் கொண்ட மொழிகள் தொடர்ச்சியாக ‘ஒற்றை சரியை’ அம்மொழிநிலத்து மக்களுக்குப் பயிற்சிக்குள்ளாக்குவதால் அவர்களைக் காட்டிலும் முற்றதிகார மனப்பாங்கு கொண்ட மக்கள் உலகின் பிறபகுதிகளில் இருக்கமாட்டர். தொன்மையான இலக்கணமுடைய மொழிகளுக்கு தன்னதிகார கருத்தைக் கூட்டு நனவிலியாக்க கிடைத்திருக்கும் கால வாய்ப்பே இதனைச் சாத்தியப்படுத்துகின்றது.
மொழிச்சமூகத்துப் பொதுஉளவியல் என்பது அம்மக்களின் கூட்டுநனவிலி. கூட்டுநனவிலி என்பது பொருள்கோள் முறை ஒருமை. மொழி தர்க்கம் இவ்வாறு நனவிலி வடித்திலே அனைவரது மனத்திலும் பதியப்பட்டுள்ளது. அதிகார சார்பான மொழியின் இயங்கியல் என்பது அறிமன உணர்வே மறக்கும் அளவிற்கு பயிலப்பட்டு வந்திருப்பதன் விளைவு ஆகும். இதனால் கூட்டுநனவிலி எனும் பொதுஉளவியல் வடிவம் தொடர்ச்சியாக நிறுவப்பட்ட மொழியின் ஒற்றை அதிகார அல்லது முற்றதிகார விளைவின் வெளிப்பாடாகிறது. எனவே மொழிதான் கூட்டுநனவிலி என்றும் மொழியல்லாது கூட்டுநனவிலி என்றயொன்றே இல்லை என்றும் விளங்கி கொள்வதற்கு தனியே ஆராய்ச்சி ஏதும் வேண்டியதில்லை.
மொழி - ஆண், பெண்ணுக்குரிய கடப்பாடு மற்றும் லட்சியம், அதிகாரத்தின் பகுதியாக இயங்குதலால் கிடைக்கும் புகழ், செல்வம், சமூக மதிப்பு, பாலியல் துய்ப்பு முதலியவற்றையே வாழ்க்கை பேறாக மூளையுள் புகுத்தி, குடும்ப நிறுவனத்தின் வழியும் கல்வி நிலையங்கள் வழியும் அரசதிகாரத்திற்கு எதிராகாத கூட்டுநனவிலி மனத்தை நம்மை ஏற்கச் செய்கின்றது. இதனால் மொழி, காலங்காலமாக வரிவடிவால் மாற்றத்திற்குள்ளாகி இருக்கிறதென்றும் அவ்வக்கால சிந்தனை மரபிற்குத் தக்கவாறு தன் இலக்கியங்களைக் (மொழி வளர்ச்சி) கொண்டதென்றும் கூறுவது ஆராய்ச்சி அற்ற மொழிதலாகும். எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆயினும் நாம் பயின்ற வந்த மொழி, அதிகாரத்தின் மொழியே. நாம் பேசி வந்த பேச்சு, அதிகாரத்தின் பேச்சே. நாம் எழுதிய நடையெல்லாம் அதிகாரத்தின் நடையே. (I speak only one language, and it is not my own - Jacques Derrida) இதன்வழி, அதிகாரத்திற்கு எதிராக வாழ்தல் என்பது தனக்கு எதிராக வாழ்தல்தான் என்பதை எவர் உணர்கிறாரோ அவரே மொழியின் திடநிலையை மீண்டும் திரவநிலைக்குக் கொணர்ந்தவர் ஆவார். உங்களை நீங்கள் சுயகொலை செய்து கொள்ளாத வரை அதிகாரத்தைக் கொலை செய்ய இயலாது. மொழியின் வன்முறையைக் கொலை செய்ய இயலாது. இன்னொருவர்மேல் நாம் செலுத்தும் வர்க்க, பாலின, சாதிய ஒடுக்குமுறைகளைக் கொலை செய்ய இயலாது. இவை அனைத்திற்கும் வேராக இருக்கும் தன் மொழியின் இயக்க தர்க்கத்திற்கு எதிராக வாழ்தல் என்பது சொல்லப்பட்ட இலக்கணத்திற்கு எதிராக வாழ்தல் கூட்டுநனவிலிக்கு எதிராக வாழ்தல் பொதுஉளவியலுக்கு எதிராக வாழ்தல் குடும்ப நிறுவனத்திற்கு எதிராக வாழ்தல் நமது நேற்றைக்கு எதிராக வாழ்தலில் இருக்கிறது.
மொழியின் அதிகார வரம்புகளைத் தாண்டி கட்டற்ற எல்லையில்லா விசாரத்திற்கு முதலில் அம்மொழியின் தர்க்கத்தை அடைதல் வேண்டும். பின் அதை மீறுவதன்வழி அத்தர்க்கத்தைச் சிதைத்தல் வேண்டும். விதியை அடைதலும் விதியை மீறுதலுமே சுதந்திர இயக்கத்தைத் தரும் மொழிவிளையாட்டாகும். மொழிச்சமூகம் காரணமறியாது ஏற்றத்தாழ்வு நிறைந்த பண்பாட்டு வடிவத்தைத் தொடர்வதற்கும் மொழியின் நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்குள்ளாகவே கிணற்றுத் தவளை போல சிந்திப்பதற்கும் பெரிய வேறுபாடு ஏதுமில்லை. நாம் எவ்வளவு புதிதாகத் தெரிந்தாலும் நமது மூளையின் சிந்தனை முறைமை மிகப் பழையது. முன்னோரை மதித்தல், பழையதைப் போற்றுதல், வியத்தல், அதை விமர்சனம் செய்யாதிருத்தல், முன்னோர் கருத்தில் பிழை காண்பதைப் பெரும் பாவமாக நினைத்தல் (பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ - வள்ளலார்), ஆசிரியர் கருத்துத் தவறாயினும் அதிகார சமரசத்திற்காக அதை மாறுபட மறுத்தல், ஒரு குழு அல்லது நட்பு வட்டத்தை உருவாக்கினாலும் சட்டென அதிலொரு அதிகார மையத்தை உருவாக்குதல், பெரியோர் சிறியோர் என்ற பேதம் பார்த்தல், தன் வீடு தன் குடும்பம் தன் பிள்ளை என்ற தனியுடைமை புத்தி கொள்ளல், புத்தகத்தை நகலெந்திரம் போல் படித்தல், எதிலும் விசாரமற்று எக்காலமும் துய்ப்பை எண்ணியே இருத்தல், தனக்குக் கீழாக எவரேனும் இருந்தே ஆகவேண்டும் என்ற போட்டி மனப்பான்மையுடனும் சுரண்டல் எண்ணத்துடனுமே வாழ்தல், பெண்களைப் பாலியல் இச்சைக்கான நுகர்வு உடலாகவும் வீட்டுவேலைக்கான அடிமை உடலாகவும் மறுஉற்பத்திக்கான (பிள்ளை பெற்றுத்தருவதற்கான) எந்திர உடலாகவும் பார்க்க சிறுவயதிலிருந்தே பழகுதல், வயது பேதம் பார்த்து பழகுதல், பால்பேதம் பார்த்து பழகுதல், காதல் என்ற பெயரில் முழுமை உடலுக்கான நுகர்வு வெறி கொள்ளல், தன்னிகரில்லா தலைவன் கொள்கையை எல்லா துறையிலும் கொண்டிருத்தல் இன்னும் கூறத்துணிந்தால் நூலளவு பெருகும். இதுதான் நம் மொழி இலக்கியங்கள்வழி நமக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட பாடம். மொழியின் இயங்கு தர்க்கம் இவ்வெல்லைகளை ஒருபோதும் மீறத்துணியாதபடி குடும்ப நிறுவனத்தாலும் கல்வி நிலையங்களாலும் நம் மூளையைப் பயில்வித்துள்ளன. இலக்கணங்கள் இவற்றை மொழியின் தர்க்கமாகவே நன்கு நமக்குள் நிறுவிவிட்டன. எனவே நவீன இலக்கியங்களைப் படித்தாலும் நம் சிந்தனை முறைமை விளக்குதற்கரிய பழைமையைக் கொண்டது. நம் சிந்தனை முறையியலை மாற்றிக்கொள்ளாது, நம் கல்வி முறையியலை மாற்றிக்கொள்ளாது விடுதலை அரசியல் பேசுவதென்பது வீணே. நாம் சமூக அதிகார நிறுவனங்களுக்கு எதிராக இருப்பினும் அவ்வதிகாரத்தின் பகுதியாக இயங்கும் நம் சிந்தனை முறையியலை மாற்றிக்கொள்வதற்கு மீண்டும் மொழியுடனே போரிடவேண்டியுள்ளது. காரணம், மொழிக்கு வெளியே ஏதுமில்லை. வாசகரைத் தவிர. வாசகரின் மூளைக்குள்ளும் அதிகாரத்தின் சிந்தனை முறைமையே கூத்தாடுவதால் மீண்டும் மொழிக்கு வெளியே ஏதுமில்லை.
✍ தீசன்
✉️ writer.deesan@gmail.com