குமரித்தந்தை மார்சல் நேசமணி
1900 காலகட்டத்தின் போது உள்நாட்டு சாதிய கொடுமைகளுக்கு ஆளானதோடு அந்நிய வெள்ளை ஆதிக்க கொடூரத்திற்கும் ஆளாகிக் கொண்டிருந்தது நம் இந்திய சமூகம். சீரிய அறிவினாலும் கடும் போராட்ட மனப்பான்மையினாலும் அத்தி பூத்தார் போல சமூகத்தில் ஆங்காங்கே விடுதலைக்கான ஒளி கிளம்பத்தொடங்கி இருந்தது. 1921 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் நுழைந்த அந்த இளைஞனைக் கண்டு வியந்தனர் மக்கள். அவன் உள்ளே நுழைந்ததும் அங்கு போடப்பட்டிருந்த குந்துமனையை (Stool) எட்டி உதைத்துத் தள்ளினான். அவன் உதைத்த அந்த குந்துமனைகள் நாற்காலிகளைத் தள்ளி அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடிநீர் பானைகள் உடைத்து ஓடச்செய்தது.
சாதிய ஒடுக்குமுறைகளாலும் வெள்ளை ஆதிக்க மனப்பான்மையுடனும் இயங்கி கொண்டிருந்த அந்நீதிமன்றம் அவனுக்கு நீதியற்ற மன்றமாய் தோன்றியது. அவன் எட்டி உதைத்தது யாரோ ஒரு ஒடுக்கப்பட்ட மனிதர் உட்காரக்கூடிய குந்துமனையை அல்ல. 2000 வருட சாதிய ஒடுக்குமுறையை. அவன் தள்ளிய அந்த நாற்காலிகள் யாரோ ஒரு ஆங்கிலேய அதிகாரி ஒய்யாரமாய் அமர வேண்டியது அல்ல. ஒட்டுமொத்த வெள்ளை ஆதிக்க சித்தாந்தத்தை. அவன் அடித்து நொறுக்கிய அந்த குடிநீர் பானைகளில் இருந்தது குடிநீர் இல்லை. சாதியாலும் நிறத்தாலும் பாலினத்தாலும் ஆயிரங்காலமாய் தேங்கி கிடந்த அழுகிய விசத்தை. நீதிமன்றமே அவனை விசித்திரமாகப் பார்த்தது. காலங்காலமாய் சொல்லப்பட்டு வந்த விதிகளை மீறிய எல்லோரும் சமகாலத்தவரால் பழிக்கப்பட்டவர்களே. ஆனால் அவர்கள்தான் பின்னாளைக்கான புத்தொளியை தந்த பெருந்தகைகளும் கூட. ஆம். அந்த இளைஞன் ஒரு புத்தொளி. அவன் தான் எல்லை மீட்பு மண் மீட்பு மொழி மீட்பு எனும் மீ செயல்களைச் செய்த மார்சல் நேசமணி அவர்கள்.
தமிழ்நாடு நாள் போட்டி - பிற கட்டுரைகள்
> முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி
சேவைக்கான உழைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் என்னும் சிற்றூர் பகுதியில் 1895 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் மார்சல் நேசமணி அவர்கள். கல்குளம் கேரள உயர்குடி மக்களான நம்பூதிரிகளின் ஆதிக்கத்தில் அடங்கி போய் இருந்தது. நேசமணியின் பிள்ளை பருவமும் சாதிய வன்முறைகளை கண்ணெதிர் நோக்கியே நகர்ந்தது. நாகர்கோவிலில் உள்ள கிறித்தவ உயர்நிலை பள்ளியில் தன்பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு திருநெல்வேலியில் CMS கல்லூரியில் தன் அடுத்தக்கட்ட நகர்வுக்குத் தயாரானார். வாழ்வின் எரிசக்தியாக திகழக்கூடிய அக்கல்வி காலத்திலே நிகழ்கால மனிதர்களின் சிக்கல்களுக்கான தீர்வைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினார். சட்டப்படிப்பின் முக்கியத்துவத்தைத் தெரிந்து திருவனந்தபுரத்தில் சட்டம் படித்துத் தேறினார். இதற்கிடையில் அவருக்கு வாய்த்த ஆசிரியர் பணியும் நிருவாகப் பொறுப்புணர்வைத் தரும் தலைமை ஆசிரியர் பணியும் சமூகத்திற்கான கல்வியின் பங்கை உணர்த்தின. பின் 1921 ஆம் ஆண்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் சட்டப்படி பதிவு செய்து குற்றவியல் வழக்கறிஞர் ஆனார்.
நீதிப்பணி சேவைப்பணி என்பதை உணர்ந்த் ஏழை மக்களுக்கு தன் தேவை இலவசமாக சென்றடைய வேண்டும் என்றே நீதி வேண்டிய மக்களுக்கு இலவசமாக வாதிடினார் மார்சல் நேசமணி. தமிழ், ஆங்கிலம் இருமொழியிலும் நன்கு புலமை பெற்று இருந்ததால் வளாகத்தின் மிகுபெரும் வழக்கறிஞர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டார். நேசமணி தன் கல்லூரி கல்வி நாட்களின் போதே சுதந்திர போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டவர். நாட்டின் மீதும் தேசிய உணர்ச்சியின் மீதும் அயராது கொண்டிருந்த பக்தியின் காரணமாக இயற்கையாகவே எதிர்காலத்திற்கான தற்கால நடக்கைகளைச் செய்யக்கூடிய தொலைநோக்கு சிந்தனையைக் கொண்டிருந்தார்.
மார்சல் நேசமணியின் வெற்றி
திருமூலம் சட்டசபையில் வரி கட்டிக்கொண்டு இருப்போர்களுக்கு மட்டுமே திருவிதாங்கூரில் ஓட்டுரிமை வழங்கப்பட்டுவந்தது. குமரித்தந்தை மார்சல் நேசமணி இவ்வழக்கத்தை காட்டமாக எதிர்த்தார். ஓட்டுரிமை என்பது எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய ஒன்று. அதில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் கூடாது என்று அனைத்து மக்களின் ஓட்டுரிமைக்காகவும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்தார். இயற்கையாகவே நேசமணிக்கு இருந்த பேச்சாற்றல் இப்போராட்டத்தில் வலுவடைந்தது. அவர் ஆகச்சிறந்த பேச்சாளர் ஆனார். பிற்காலத்தில் நேசமணியின் போராட்டத்திற்கு வெற்றி கிட்டியது. திருவிதாங்கூர் திருமூலத்தில் அனைத்து மக்களுக்கும் ஓட்டுரிமை தரப்பட்டது.
தமிழைத் தின்ற மலையாளம்
அப்போது குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைக்கப்பட்டு இருந்தது. இதனால் அங்கு இருக்கிற கல்வி நிலையங்களில் தமிழ் மொழி பயிற்று மொழியாக இல்லை. மலையாளத்திற்கே முன்னுரிமை தரப்பட்டது. திருவிதாங்கூர் வாழும் மன்னர்களும் மருமக்கள் வழி சட்டத்தைக் கடைப்பிடித்ததால் மலையாளத்திற்கு முக்கியத்துவம் தந்து தமிழை ஆட்சி மொழியில் இருந்து அவிழ்த்தனர். திருவிதாங்கூர் மற்றும் அதன்சுற்றவட்டாரப்பகுதியில் மலையாளம் கட்டாயப்பாடம் ஆக்கப்பட்டு தமிழ் கல்வி நிலையங்களில் இருந்து தவிர்க்கப்பட்டது. அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் சாதி ரீதியாகவும் மொழி ரீதியாகவும் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக வேண்டி இருந்தது.
ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையான தாய்மொழிக் கல்வி அரசாலும் சாதிய அதிகார நிறுவனங்களாலும் ஒற்றை மையத்திற்குள் மலையாளக் கல்வியாய் புகுத்தப்பட்டது. தமிழில் இருந்து கிளைத்த மொழி தமிழையே தின்ன நினைத்தது. திருவிதாங்கூர் மட்டுமல்லாது அங்கு சில தமிழர்கள் வாழும் பகுதியின் முன்னேற்ற நடக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கவனித்து வந்தது. கேரள மகாண கமிட்டி தலைவரான கோலப்பன், இனி தமிழ் பகுதிகளை கேரள காங்கிரஸ் கமிட்டியே கவனிக்கும் என்ற அறிக்கையை வெளியிட்டார். தன் செயல்முறையை இயக்கத்தை நடைமுறை படுத்தவும் முனைந்தார். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வன்மையாக இதை எதிர்த்தனர். குறிப்பாக சென்னை மாகாணத்தை தமிழக எல்லையோடு இணைத்துக் காட்டிய வடவெல்லை காவலர் மா.பொ.சிவஞானம் தன் எதிர்ப்பைக் காத்திரமாக வெளிப்படுத்தினார். போராட்டம் தீயானது. இதன் பின்னர் தான் இவ்வுரிமை போராட்டத்தின் விடிவெள்ளி ஆனார் மார்சல் நேசமணி.
கேரள எல்லைக்குள் குமரி
இந்தியாவில் மொழிவாரி மாகாணமாக அமைக்கப்படுவதற்கான வேலைகள் துரிதமாயின. அப்போது தான் அந்த அறிவிப்பு வந்தது. கேரளாவின் காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றுகூடி காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை உள்ள நிலப்பரப்பை ஐக்கிய கேரளமாக அமைக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டு இருந்தனர். ஆனால் உண்மையில் மொழிவாரி மாகாணம் அடிப்படையில் பார்த்தோமேயானால் கன்னியாகுமரியும் திருவிதாங்கூரின் பல பகுதிகளும் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டியதாகும். அங்கு வாழும் மக்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு கேரள மேட்டுக்குடி மக்களால் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் ஆவர். இந்த தீர்மானத்தில் இருந்து கன்னியாகுமரி நீக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக தமிழ் தலைவர்களால் குரல் கொடுக்கப்பட்டுவந்தது. இருந்தாலும் தீர்மானமானது திருத்தப்படாமலே நிறைவேற்றப்பட்டது.
திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்
மொழியும் அம்மொழி விரவி நிற்கும் மண்ணும் எங்கள் உரிமை என்ற முற்போக்குக் குரலோடும் கேரள சமஸ்தானங்கள் இணைந்து செய்த சதி தீர்மானத்தை எதிர்த்தும் 1945 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்’ மார்சல் நேசமணியால் தொடங்கப்பட்டது. சிவதாணுப்பிள்ளை, சிதம்பரம்பிள்ளை, அப்துல் ராசாக் முதலியோருடன் இணைந்து மார்சல் 1947ல் இவ்வியக்கத்தை பெரும் அரசியல் இயக்கமாக மாற்றினார். தெற்கெல்லையில் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படுவதை உணர்ந்த மார்சல் நேசமணி தமிழக காங்கிரஸ் தலைவர்களை அணுகி தமிழ் எல்லைக்காக குரல் கொடுக்க தம் மீட்டுப்போராட்டத்திற்கு ஆதரவு கேட்டார். ஆனால் இந்திய தேசியத்தில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்ட காமராஜர், பக்தவத்சலம், கரையாளர் போன்ற தலைவர்கள் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இயக்கத்திற்கும் அதன் எல்லை மீட்புப் போராட்டத்திற்கும் ஆதரவு தர மறுத்தனர். மொழிப்பிரிவினை இந்தியாவை பிரித்துவிடுமோ என்ற எண்ணம் அவர்களை நேசமணிக்கு ஆதரவளிக்க தயங்க செய்தது. ஆனால் மொழியும் அம்மொழி நிலமும் நமது உரிமை என்பதில் மிகுந்த பற்றோடு இருந்து தொடர்ந்து போராடினார். 1948ல் நடந்த பொதுத்தேர்தலில் பதினெட்டு இடங்களில் பதினான்கு இடங்களில் வெற்றி பெற்றது திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி.
குமரி உரிமை மீட்புப் போராட்டம்
மங்காட்டில் 1948ல் குமரியை மீட்பதற்கான போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்தது. மொழியாலும் உணர்வாலும் பீடிக்கப்பட்ட தமிழர்கள் அணி அணியாக திரண்டனர். கூட்டத்தின் வலிமை அதிகமாக அதிகமாக அதிகாரத்தின் எண்ணம் துப்பாக்கியைத் தேடியது. கேரள காவலர்கள் கூட்டத்தை துப்பாக்கியால் கலைத்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டினால் தேவசகாயம் மற்றும் செல்லையன் பலியானார்கள். நேசமணி தலைமையில் சென்ற அணி பீர்மேட்டுக்கே சென்று இது எங்கள் நிலம் என்று கோஷமிட்டு போராடினர். பல்வேறு பகுதிகள் தீக்கிரையாயின. உள்ளூர் கலவரம் மூண்டது. அங்கு வாழும் தமிழர்கள் தாக்குதல்களுக்கு உள்ளானார்கள்.
மார்சல் நேசமணி தேர்தல் களம்
1952 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முறை செய்யப்பட்டது. அச்சமயம் சில மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் ஒன்றாக நடக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது. நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி தமிழ் பகுதிகளையும் ஒருங்கிணைத்து அறிவிக்கப்பட்டு இருந்ததால் அதில் போட்டி இட்டார் மார்சல் நேசமணி. அகில இந்திய காங்கிரசும், கேரள காங்கிரசும் நினைத்தே பார்க்கவில்லை. மார்சல் நேசமணி மிகுபெரும் வெற்றியை அடைந்தார். 1954ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை தோற்கடிக்க நேரு வகுத்திருந்த வியூகங்களையும் கடந்து மார்சல் நேசமணியின் கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் மொழிவாரி மாநில கோரிக்கை வலுப்பெற்றது.
போராட்டம்
1954ல் போராட்டம் தீவிரமடைந்தது. மார்சல் நேசமணி, அப்துல் ரசாக், சிதம்பரநாதன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் ஆகஸ்ட் 11ஐ விடுதலை தினமாக பெருமையுடன் அறிவித்தது. மார்த்தாண்டத்தில் சுப்பாக்கி சூடு. புதுக்கோட்டையில் துப்பாக்கி சூடு. 9 பேர் பலி. ஆயிரக்கணக்கானோர் சிறை. எங்கு பார்த்தாலும் வன்முறை. தமிழர்கள் தளரவில்லை. அணி அணியாக திரண்டனர். ஒட்டுமொத்த திருவிதாங்கூர் சமஸ்தானமும் அதிர்ந்தது. மார்சல் நேசமணியை விடுதலை செய்யக்கோரி தமிழ்ப்பகுதிகள் எங்கும் கோஷங்கள் விண்ணை கிழித்தன. போராட்டத்தின் தீவிரத்தை தாங்க முடியாத அரசு மார்சல் நேசமணியை விடுதலை செய்தது.
மொழிவாரி மாகாணம் பிரிப்பு
திருவிதாங்கூரில் நீதி கிடைக்காமல் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார் மார்சல் நேசமணி. இச்சமயம் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்படவேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நிகழ்ந்தன. அழுத்தம் தாங்க முடியாத நேரு தலைமையிலான அரசு மொழிவாரி மாநிலம் அமைக்க குழு ஒன்றை நியமித்தது. அதன் பரிந்துரை அடிப்படையில் 1956 நவம்பர் 1ல் மொழிவாரி மாநிலங்கள் உருவாயின. மார்சல் நேசமணியின் தொடர் போராட்டத்தின் காரணமாக கன்னியாகுமரி தமிழக எல்லையுடன் இணைவிக்கப்பட்டது. இருப்பினும் 9 தாலுக்காக்கள் இணைக்கக்கோரி போராட்டம் நடந்தது. ஒன்று மட்டுமே குமரி எல்லையுடன் இணைவிக்கப்பட்டது. இது திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசாருக்கு பெரும் சோகத்தைத் தந்தது. மார்சல் நேசமணி வெகுண்டெழுந்தார்.
குமரித்தமிழர்
தேவிக்குளம், பீர்மேடு முதலிய பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டது மார்சல் நேசமணிக்கு மிகுந்த கோவத்தை ஊட்டின. தமிழர்கள் அதிகம் வாழும் முல்லை பெரியாறு அணை உள்ள முக்கியமான அவ்விடத்தை கேரளாவிற்கு தருவதில் துளியும் உடன்பாடு இல்லை நேசமணிக்கு. 1955 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நேசமணி ஆற்றிய உரை இந்தியாவையே தமிழகத்தின் பக்கம் திருப்பியது. இடுக்கி நெல்லூர் மாவட்டங்கள் தமிழ்நாட்டுக்கு உரியது என்றது அவர் பேச்சு.
இறந்தார் குமரித்தந்தை
தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழக எல்லை போராட்டங்களிலும் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த நேசமணி மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்று அப்போதைய பிரதமர் நேருவால் பாராட்டப்பட்டார். தொடர் போராட்ட வாழ்க்கையிலே அவர் காலம் கழிந்தது. 1968 ஆம் ஆண்டு தனது 73வது அகவையில் மார்சல் நேசமணி காலமானார். ஆர்க்காடு நவாப் திருவிதாங்கூர் அரசனுக்கு திருவிதாங்கூரைத் தரும் வரையில் அங்கு தமிழே ஆட்சி மொழி. தமிழ் மக்களின் நிலம் அது. சுமார் 200 ஆண்டுகள் கேரள மக்களின் அடிமையாக்கப்பட்டனர் அங்கு சிறுபான்மையினராக ஆக்கப்பட்ட தமிழர்கள். தமிழர்களை ஒன்றுகூட செய்து விடாமல் சதி செய்தனர். அதைத் தகர்த்துக்காட்டியவர் மார்சல் நேசமணி அவர்கள்.
இந்த போராட்ட வாழ்க்கை வெறும் பதினைந்து வருடங்களுக்கானது அல்ல. 1823ல் தோள்சீலை போராட்டத்தில் தொடங்கி 1956ல் மார்சல் நேசமணி வரை தொடர்ந்து இருக்கிறது. 15 லட்சம் தமிழர்களை ஒன்று திரட்டி மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடிய மார்சல் நேசமணி பி.எஸ்.மணி அவர்களால் ‘குமரித்தந்தை’ என்று பட்டம் அளிக்கப்பட்டு பெருமிதப்படுத்தப்பட்டார். இன்று நாம் காணும் தமிழ்நிலம் என்றோ விதைத்த செம்மையின் விளைவு மட்டுமல்ல மார்சல் நேசமணி போன்ற பல லட்ச உண்மை நேசகர்களின் போராட்ட வெம்மையின் விளைச்சல். பல்லாயிர குடும்பத்தின் கண்ணீர்த்துளி.
பார்வை கட்டுரைகள்