அண்மை

தூப்புக்காரி: விளைவுரை - தீசன்

தூப்புக்காரி

பொது இடங்களில் இருக்கக்கூடிய கழிப்பிடங்களைப் பயன்படுத்தும் தருவாயில் நீங்கள் பார்த்திருக்கலாம். நீண்ட நாள் கழுவாமல் விரட்டும் சிறுநீர் நெடி, காய்ந்து இறுகிப் போய் ஒட்டிக் கிடக்கும் அவசர மலங்கள், உடைந்த சரக்கு பாட்டில்கள், கருகிய சிகரெட் துண்டம், புகையிலை எச்சில், மண்ணோடு ஒட்டாமல் புரண்டு நெளியும் கார சளி, ஹான்ஸ், கூல்லிப் தாள்கள், தேங்கிய காண்டம் உறையின் புளிச்ச நாற்றம் இதற்கு இடையில் பொறுக்கமுடியாத அவசரத்தில் போய் அமர்ந்தால் அங்கு ஏற்கனவே இருந்தவரின் ஆய் கக்கூஸ் ஓட்டைக்குள் மிதந்து கொண்டிருக்கும். இனிவருவோரும் ஒரு கணம் முன்னோர்மீது எரிச்சலாய் எரிந்துவிட்டு மூக்கைப் பொத்திக் கொண்டே தன்பங்கிற்கு ஓட்டைக்கு மேலும் ஆயைக் கொட்டிச் செல்வார். இத்தகையவர்கள் எல்லாம் என்றைக்காவது சிந்தித்தது உண்டா? இதைத் தூய்மை செய்பவரும் மூக்குள்ள மனிதர் தான் என்று. கொஞ்சம் நாமாவது இதைச் சிந்தித்துப் பார்ப்போம். குப்பையைச் சரியாகக் குப்பை தொட்டியில் போடுவதாலும் ஆய் இருந்துவிட்டு தண்ணீர் ஊற்றி வந்தாலும் இந்த கொடுமை நிலைக்குமா? ஏன் இந்த அடிப்படை குணம்கூட நம் மக்களுக்கு வரக்காணோம். அனுமானமாக சில காரணங்கள்வழி தீர்வு காண முயல்வோம்.


1.பயண/வேலை அவசரத்தில் வயிற்றின் அவசரம் நேரத்தை விழுங்கிவிடுமோ என்ற பயம் தூய்மை பற்றியோ அடுத்து வருவோரைப் பற்றியோ சிந்திக்கவிடாமல் செய்யலாம்; நேரமின்மை


2.இன்னும் சரியாக கழிப்பிடத்தைப் பயன்படுத்தத்தெரியாத பொதுவெளி மனிதர்கள், அப்படியே இருந்து செல்லும் வழக்கத்தை இங்கும் காட்டலாம்; விழிப்புணர்வின்மை


3.அள்ளி போடத்தான் ஆட்கள் இருக்கிறார்களே என்ற மதைப்பில் ஆய் இருக்கும் இடத்திலே கண்ட குப்பைகளையும் போடுகிறார்கள்; மனிதமின்மை


4.தண்ணீர் ஊற்றிக் கழுவி காய வைக்க இது என்ன என் வீட்டு கழிவறையா? என்று தன்னுடைமையை மட்டும் பொட்டுபோல காப்பது; பொறுப்பின்மை


என்னதான் முதலிரண்டு அனுமானங்களும் வழக்கில் இருக்கலாம் என்று ஊகித்தாலும் மூன்று மற்றும் நான்காம் அனுமானங்களே பெரும்பான்மையாக இருக்கும். பொதுவாக எல்லா தமிழ்நாட்டுப் பேருந்து நிலையங்களுமே சிறுநீருக்கான பொதுக்கழிப்பிடத்தைக் கட்டிடமாக ஒன்றாகவும் திறந்தவெளியில் இன்னொன்றுமாக வைத்திருக்கிறது. உண்மையில் திறந்தவெளிப் பயன்பாடு மக்களுக்குப் பெரும் இடராகவும் பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது என்பதாலும் தான் நான்கு சுவற்றுக்குள் கழிப்பிடம் உருவானது. ஆனால் மக்களின் தொடர் மனிதமின்மையும் தன்உடைமை  வெறியுமே குபீர் நாற்றமாக மாறி மீண்டும் திறந்தவெளி கழிப்பிடத்தை பேருந்து நிலையங்களில் உற்பத்தி செய்கிறது. பொது இடங்களில் கழிப்பறையை பயன்படுத்துவோர் தண்ணீர் வசதி இல்லாததை காரணம்காட்டி தங்களின் பொறுப்பின்மைக்கு வலுசேர்க்கிறார்கள். தண்ணீர் வசதி இருக்கக்கூடிய இடத்திலும் நாற்றம் குடலைப் பிடுங்குகிறதே? நம் வீட்டு கக்கூஸில் ஆய் இருந்துவிட்டு அப்படியே போட்டு செல்வோமா?  ஹான்ஸ், கூல்லிப், சிகரெட் பாக்கெட்டுகளை வீட்டுக் கழிப்பிடத்தில் கரைக்கத்தான் நினைப்போமா? ஏன் பொது கழிப்பிடத்தை உங்கள் வீட்டுக் கழிப்பிடத்தைப் போன்று கவனிப்பதில்லை. ஒன்னுக்கு அடித்துவிட்டு அதுவும் நேரே ஓட்டையில் அடிக்காமல் சுவற்றில் அங்கும் இங்கும் கோலமாய் அடித்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் மஞ்சள் பூக்கச் செய்யும் பக்குவம், ‘இது என்னுடைய கழிப்பிடம் இல்லை’ என்ற மனவோட்டத்தின் எதிரொலி இல்லாமல் வேறென்ன? வீட்டிலும் ஆண்கள் தான்தோன்றி தனமாக அவ்வாறு நடந்து கொள்வதுண்டு. கழுவத்தான் அம்மா, மனைவி, அக்கா, தங்கை இருக்கிறார்களே. ஆண்களுக்கு ஆக்கிப்போடவும் கக்கூஸ் கழுவவும் தானே கலியாணம். வீட்டில் ஒரு கல்லைமிட்டாய் பிரித்துத் தின்னுகிறோம். அம்மா குனிந்து கூட்டி எடுக்கும்வரை அதன் தாள் கட்டிலுக்கு அடியிலோ பீரோவுக்கு அடியிலோ சுழன்று கொண்டிருக்கும். ஏன் பிரிக்கும்போதே அதைக் குப்பை தொட்டியில் போட்டு இருக்கலாமே? கைகண்டவாறுக்குப் பறக்கவிடுதன் காரணம் என்ன? வீட்டுக்குக் கூட்டுவதற்கென ஆள் இருக்கிறாள். அவள் தான் அம்மா/ மனைவி/ அக்கா/ தங்கை. அதானால்தான் எவ்வித கவலையும் இன்றி கைக்கண்டவாறுக்கு வீட்டில் குப்பையைப் போட முடிகிறது. ‘ஏன்னா அத அள்ள போறதுதான் நீங்க இல்லையே’ அவ்வாறு குப்பையைப் போடுவர் தினம் தினம் முதுகு முறிய முறிய கால் கடுக்க நின்று கூட்டினால்தான் தெரிந்திருக்கும் அதன் வலி. ஏன் பெண்களும் கைக்கண்டவாறுக்குக் குப்பைகளை வீசுவதுண்டு. ஆணாதிக்கம் ஆணுடல்களில் மட்டும்தான் நிரம்பியிருக்கிறது என்றே பல பெண்ணியவாதிகளும் நினைக்கிறார்கள். பெண்ணியத்தைப் பற்றியான தெளிவு இல்லாதவரை இங்கு எல்லோருமே ஆணாதிக்கவாதிகளே. பெண்ணியத்தின் லட்சியமே நாம் பெண்ணியர்களாக ஆவதில்தான் இருக்கிறது. உடலில்ஓடும் ஆணாதிக்க சுய உடைப்பில் இருக்கிறது. அதனால் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் ஆணாதிக்கவாதிகளே என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சமூக அழுத்தம் பல பெண்களுக்கு வாழ்க்கையின் வழியாகவே பெண்ணியத்தை உணர்த்துகிறது. இதனால் பெண்களுக்கு அவர்களது உடல்களே விடுதலைக்குரிய ஒரு வாய்ப்பை சமூகத்தின் மூலம் ஏற்படுத்தித் தரும் களனாகின்றது. எல்லா உடல்களுமே அதிகாரம் செய்ய தனக்கென்று சேவகம் செய்யும் அடிமை உடலை உடன்வைத்துக் கொள்ள பெரும்பித்துக் கொண்டு அலைகையில் ஆண் உடல்களுக்கு சமூகம் அந்த வாய்ப்பை/ பாத்திரத்தை எளிதில் தருகிறது. ஆண்களும் குடும்பத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அந்த அதிகார குதிரையில் காலங்காலமாக சவாரி செய்து வருகிறார்கள். இதனால் பெண்களே சேடி வேலைக்கு லாயக்காகக் குடும்பத்தால் தயார் செய்யப்படுகிறாள். அவள் பிறந்த வீட்டிலும் சேடி, புகுந்த வீட்டிலும் சேடி, வேலை பார்க்கும் இடத்திலும் சேடி தான். கல்வியாலும் கேள்வியாலும் சிந்திக்கும் சில பெண்கள் உத்தியோகத்தின் மூலம் வருவாய் ஈட்டும் சில பெண்கள் மட்டும் லேசாக இந்த சேடித்தன்மையில் இருந்து விலகுவதுண்டு. ஆனால் அவர்களும் கலியாணம் குடும்பம் என்று போகையில் முழுமையாக சேடிமையை விட்டுவிடமுடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இப்போதும் பராமரிப்பு, பேணுதல், சுகாதாரம், அன்பு, இரக்கம் முதலிய சொற்கள் பெண்களோடு இணைக்கப்பட்டுச் சொல்லப்படுவதை யோசித்துப் பார்க்கவும். குடும்பம் தான் இந்த சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கான ஒரு திறப்பைத் தருகிறது. ஆண்களோ அல்லது ஆணாதிக்க மனோநிலையோ வீட்டில் எவ்வாறு பெண்களை நடத்துகிறதோ அவ்வாறே பொதுவெளியில் துப்புரவு பணியாளர்களையும் நடத்துகிறது. இந்த இரண்டு வடிவங்களுமே அடிப்படையில் சேவகத்தன்மையில் இணைகின்றன. பொதுவெளியில் துப்புரவு, சாதியோடு பிணைந்து மிகவும் உக்கிரமான வடிவத்தை அடைகிறது.


“எத்தனை எத்தனை வசதிகளில் நவீன கழிப்பறைகள் என்ற விளம்பரத்தோடு கழிவறைகளை வச்சாலும் நீசங்கெட்ட மனுசங்கள் அதில் ஒரு சின்ன ஒழுக்கம் கூட காட்டுறதேயில்ல. மோளுக்குள்ள வடிவமைப்பில் கிடக்கும் பாத்திகளில் தூறி போட்டு விடுகிறார்கள். கக்கூஸ் குண்டின் கரையில் கூட சளுக்கி வைக்கிறார்கள். கக்கூஸ் குண்டின் வாயுக்கும் மேல் வரைக்கும் இறக்கிப் போட்டு விட்டு வெகு சாதாரணமாக கடந்து போகிறார்கள். எப்படி தான் கழிவு வாளிகள் வைத்தாலும் அதில் நாப்கின்களை போடாமல் இரத்தம் படிந்த பஞ்சுகளை சுவரு ஓரங்களில், கக்கூஸ் குண்டு பீக்களின் மேல் போட்டு விட்டு போகிறார்கள். இதெல்லாம் மாற்றிவிட மனுச சீவிகளை படைத்து விட்டிருக்கிறார்களே அந்த கொழுப்பு தானே இதெல்லாம்” (தூப்புக்காரி, பக்.72-73)


“துப்பவோ, தூறவோ, மோளவோ என்ன வேணுமங்கிலும் செய். அழுக்கு வார நாங்க இருக்கோமுண்ணு அழுக்காக்கிட்டே இருங்க” (தூப்புக்காரி, ப.14)


பள்ளியில் படிக்கும்போது யாரேனும் வாந்தி எடுத்துவிட்டால் குறிப்பிட்ட ஒரு பெண்ணையே தலைமை ஆசிரியர் மண்ணுபோட அழைப்பார். படிப்பில் ஆர்வங்காட்டாத அப்பெண்ணை அவர் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வார். மதியம் எல்லோரும் சாப்பிட்டு முடித்து கைகழுவும் வேளையில் அவள் சத்துணவு பாத்திரத்தைக் கழுவிக் கொண்டிருப்பாள். பினாயில் பாட்டிலையும் வெளக்கமாறையும் தூக்கிக் கொண்டு ஆண்கள் கழிப்பிடத்துக்கும் பெண்கள் கழிப்பிடத்துக்கும் ஓடோ ஓடோவென்று ஓடித்திரிவாள். அப்போதெல்லாம் இப்படி நான் யோசித்ததே இல்லை. இவளும் நம்வகுப்பு தானே, நம்மோடு படிப்பவள் தானே, நமக்கு பாடம் மட்டும் நடத்தும் ஆசிரியர் இவளுக்கு ஏன் கழுவித்துடைக்கும் வேலையை மட்டும் தந்துகொண்டே இருக்கிறார்? என்று. இப்போதுதான் புரிகிறது. அவள் பெண் என்பது முதலாவது. தலித்-பெண் என்பது இரண்டாவது. தந்தை இல்லாமல் வளர்பவள் என்பது மூன்றாவது. அவள் தாயும் வீட்டு வேலை செய்யும் தொழிலாளி என்பது நான்காவது. இன்னும் காரணங்களும் இருக்கலாம். 


சுத்தத்தை விரும்பும் பெரும்பாலான மனிதர்கள் சுத்தம் செய்ய விரும்புவதில்லை. சுத்தம் செய்ய முனைந்தால் அசுத்தமாகி விடுகிறோம். இதனால் சமூகத்தால் அசுத்தமாகப் பார்க்கப்படுவோரே சுத்தம் செய்ய லாயக்கு என்று நினைக்கிறார்கள். யாரோ ஒருவர் எடுத்த வாந்திக்குக் கூட அவள் தான் வந்து மண்ணு போடுவாள். அவள் எப்போதும் மூக்கொழுவியாக அழுக்காக இருப்பதால் வகுப்பிலும் குப்பை தொட்டிக்கருகில் தான் அவள் இடம். நண்பர்களும் கிடையாது. அவளே அருகில் வந்தாலும் மூக்கைப் பொத்திக் கொண்டு ச்சீ ச்சீ என்று ஓட்டமாய் ஓடிவிடுவார்கள். இதெல்லாம் யாருடைய பிழை? ‘Sweet Memories’ என்ற பெயரில் எல்லோரும் தங்கள் பள்ளி கால நினைவலைகளை ஓட்டிப்பார்க்கிறார்கள். அப்படி சொல்லிக்கொள்ள அவளிடம் ஏதும் தருணங்கள் இருக்கின்றனவா? என்று நான் தேடுகிறேன். பாவம் அவள். பிறப்பதற்கு முன்பாகவே சாதியால் வஞ்சிக்கப்பட்டவள். மாணவியாக இன்றி அடிமையாகப் பார்க்கப்பட்டு ஆசிரியர்களாலும் வஞ்சிக்கப்பட்டாள். சமூகத்தால் வஞ்சிக்கப்படாமலா இருப்பாள்?


மனிதர்கள் பொதுவாகவே தனக்கு சமைத்துப் போட ஒரு ஆளையும், தான் தின்னு போடும் கழிவைத் தூக்கி அள்ளி தூய்மை படுத்துவதற்கு ஒருஆளையும் எதிர்பார்க்கிறார்கள். இதற்குத் தான் உதாரணமாக வீட்டில் குப்பை போடுவதைக் காட்டினேன். இந்த அடிமன ஆதிக்கக் கருத்தியல் தான் சமூகத்தில் துப்புரவு பணியாளர்களை உருவாக்குகிறது. அவர்களை அடிமைகளை விடவும் மோசமாக நடத்த விழைகிறது. நுணுகி பார்க்கும் போது வீட்டில் பெண்களின் நிலையும் சமூகத்தில் துப்புரவு பணியாளர்களின் நிலையும் ஒன்றுபோல் இணைகின்றது. அதன்காரணம் நாம் போடும் குப்பைகளை அகற்ற யாரோ ஒருவர் இருக்கிறார் எனும் ஆணாதிக்க மனோநிலை தான். பொது இடத்தில் இருக்கக்கூடிய எந்த ஒரு கழிப்பிடமும் தூய்மையாக இருப்பதில்லை. அதன் உறுதியான காரணம், ஒன்று இது என்னுடைய இடம் அல்ல என்பது இரண்டாவது சுத்தம் செய்ய ஆள் இருக்கிறார்கள் என்பது. 


சாலை ஓர குப்பை தொட்டிகளில் சேரும் மக்கும் மக்கா குப்பைகளை அள்ளிச் செல்ல வேண்டிய துப்புரவு பணியாளர். மண்ணோடு ஒட்டாமல் உருண்டு கொண்டிருக்கும் பச்சை சளியையும் புகையிலை எச்சிலையும் ரோட்டோரத்தில் ஊற்றி வைத்த குழம்பையும் மாட்டுச் சாணியையும் நாய் பீயையும் கூட்டி அள்ள வேண்டியதாய் இருக்கிறது. வண்டியில் செல்வோர்கள் பின்னே வருவோரைக் கூட பொருட்படுத்தாமல் சகட்டுமேனிக்குக் காரித் துப்பிவிட்டு செல்கிறார்கள். இவ்வாறு நடுரோட்டில் சளியோடு எச்சிலை உமிழ்பவர் தன் நடுவீட்டில் அப்படி காரி உமிழ்வாரா?


இவ்வாறே பொது கழிப்பிடத்தை அலசி சுத்தம் செய்ய வரும் பணியாளர் தண்ணீர் ஊற்றிக் கழுவுவதோடு மட்டுமல்லாமல், மக்களின் பொறுப்பின்மையாலும் உடைமை கருத்தாக்க ஆணாதிக்க வெறியினாலும் அவர்கள் அப்படியே போட்டு வைத்துச் செல்லும் ஆய் குவியலையும் அள்ள வேண்டி இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மனித உணர்வு இருந்தால் நம் மக்களுக்கு இத்தகைய பொறுப்பின்மை வருமா? தன் புது மலத்திற்கே மூக்கைப் பிடிக்கும் இவர்கள், நீண்ட நாளாக மேலே காய்ந்து கறுத்துபோயும் உள்ளே மஞ்சள் குழைவோடும் நாற்றம் புடுங்கி கிடக்கும் மலக்குவியலை, பொறுக்கமுடியாத வாந்தி குமட்டலோடு கூட்டி அள்ளி தூய்மை படுத்தும் துப்புரவாளர்களை மனிதர்களாய் எண்ணி இருந்தால் இப்படி ஆய் இருந்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் வருவார்களா? வெளிநாட்டு மனிதர்களைப் போல தாள் பயன்படுத்த இந்தியர்கள் பழகி இருந்தால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். 


தூய்மையைப் பற்றி ஆண்கள் கவலை கொள்வது இல்லை. அது பெண்களுக்கானது பெண்களால் நிகழ்த்தப்பட வேண்டியது என்று உறுதியாக நம்புகிறார்கள். சளியை காரி துப்பிவிட்டு தண்ணீர் ஊற்றாமல் வருவதும் ஆய் இருந்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் வருவதும் சரக்குப் பாட்டிலை நடுரோட்டில் உடைப்பதும் சிகரெட்டை இழுத்து கண்டவாறே வாயாலே துப்பி வீசுவதும் எந்த இடமாகினும் கவலையின்றி ஒன்னுக்கு அடித்து வைப்பதும் குடித்து குடித்து வாந்தி எடுத்து வைப்பதும் ஆணாதிக்க உளவியலாகவும் எத்தகைய கழிவுகளை அள்ளவும் ஆட்களை உருவாக்க விரும்பும் கொடிய உளவியல் வடிவமுமாகவே இருக்கிறது.


மனிதர்களை மனிதர்களாகப் பார்க்காதவரை விடிவேது? கனகம் போல் பூவரசி போல் மாரி போல் எத்தனை தூப்புக்காரர்களை நாம் உற்பத்தி செய்திருக்கிறோம். குலதர்மம், சாதிதர்மம், தலையெழுத்து என்ற பேரில் இனியும் எத்தனை வன்முறைகளை நாம் செய்ய போகிறோம்? தூப்புக்காரியைப் படித்து வருந்துவதில் கடப்பதில் அல்ல பெண்களின் முன்னேற்றமும் தலித் விடுதலையும். தனிநபரின் உணர்தலிலும் நடைமுறை படுத்துவதிலும் உள்ளது. 


மலர்வதியின் தூப்புக்காரி - விடுதலை நோக்கியான சமூக அலை. விளிம்பின் வலிகளை வெகுஜன பரப்புக்கும் கடத்தத்துடிக்கும் ஓர் யதார்த்த நாவல். அது குமரி மக்களின் கண்ணீர். மேலாண்மை.பொன்னுசாமி சொன்னதுபோல் ‘தமிழ் இந்த நாவலைத் தனக்கான ஆபரணமாக அணிந்து மகிழும்’. அதில் பீயின் நாற்றமும் கடுப்பு ஏறிய தூமை இரத்தத்தின் நெடியும் தான் அதன் சிறப்பாக நினைக்கின்றேன். படிக்கையில் என்னை தூப்புக்காரியாகவே உணர்ந்தேன். அழுதேன். மாரி தூக்கி சுமந்த மலக்கூடையில் இருந்து ஒழுகிய மலவெள்ளம் என் முகத்திலும் வழிந்தோடியது. என் வாயிலும் நுழைந்தது. துப்பித்தள்ளவா முடியும்? அதான் எழுதிவிட்டேன்


தீசன்

✉️ writer.deesan@gmail.com


தீசன் கட்டுரைகள்

1 கருத்துகள்

  1. மனித உடலென்னும் இந்த கூட்டுக்குள் இருக்கும் இந்த நாசக்காரர்களை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவதென தெரியவில்லை.

    இந்த கழிவறைப்பிரச்சினை எல்லா அரசு கட்டிடங்களிலும் காணப்படுகிறது. காரணம் பொதுவானது. நமக்கென்ன என்பார்கள். இதுவே ஆட்சியாளர்களின் கையில் பெரிய சங்கு சக்கரமாக மாட்டிக்கொள்கிறது. அவர்களது பொருப்பற்ற தன்னைமையைக் கூறினாள் கூட பொதுமக்கள் அதனை சரியாகப் பயன்படுத்த வில்லை என்று கூறிவிடுகிறார்கள்.

    நாம் திருந்தும்வரை இவ்வுலத்தை மாற்ற இயலாது.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை