அண்மை

தமிழ்ப் பாலின விளையாட்டின் (Gender Role Play) மீதான எதிர்பிரதியாக்கம் - சம்பாபதி


சிறுமியாக இருக்கிறவரை பாவாடை சட்டை, பூப்பெய்திய பிறகு தாவணி, திருமணத்திற்குப் பிறகு புடவை.


இதெல்லாம் ஏன் தெரியுமா...!?


பெண்களின் வயிற்றுப்பகுதிக்கு அப்போது தான் நன்றாகக் காற்றுப்போகும், கர்பப்பை வளமாக இருக்கும். குழந்தை பிறப்பில் எந்த சிக்கலும் இருக்காது.


இப்போது ஆண்களை போல பெண்களும் பேன்ட், சட்டை, ஜீன்ஸ்,.. அது இதுவென்று போட்டுக்கொள்வதினால் தான் கர்பப்பை சார்ந்த கோளாறுகள் வருகின்றது. தாவணி பாவடை, புடவை கட்டிய வரையில் எல்லாம் நன்றாக இருந்தது" என்று பல ஆண்கள்  சொல்லக்கேட்டிருக்கிறோம்.


ஆண்கள் மட்டும் பண்பாட்டை வளர்த்தால் போதாது. பெண்களும் அவர்களோடு இணைந்து பண்பாட்டை வளர்த்தால்தான் உலக அரங்கில் தமிழ்நாடு தலைசிறந்து விளங்கும். வம்சத்தை தழைக்கச் செய்வதில் ஆண்களுக்கு மட்டும் அக்கறை இருந்தால் போதாது. புதிய உயிரை உருவாக்குவதில் சம பங்கு பெண்களுக்கும் உண்டென்பதால், ஆண்கள் எவ்வாறு கண்ணும் கருத்துமாகப் பெண்களைப் பேணிக்காக்கிறார்களோ, அதைபோல பெண்களும் ஆண்கள் மீது அக்கறை கொள்ள வேண்டும்.


இத்தனை காலமாகப் பெண்கள் ஆண்கள்மீது அக்கறையாக இல்லாமல் இருந்ததற்காக, மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.


எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும் பாவாடை சட்டை சீருடையாகவும் எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தாவணி பாவாடை சீருடையாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் வயிற்றுக்கும் பிறப்புறுப்புக்கும் காற்று நன்றாகப் போகும்.


காலனியத்துவ ஆடையான பேண்ட் சண்டையினாலும் பெல்ட்டினாலும்  இறுக்கமாக அணியும் உள்ளாடையினாலும் உண்டாகும் சூட்டினால் உங்களின் விந்துக்கள் வெந்துப்போகிறது. 


புடவைக்கட்டிக்கொள்ளுங்கள் ஆண்களே! நல்ல காற்றோட்டம் உங்கள் விந்துகளை அழிவிலிருந்து பாதுக்காக்கும்.


உங்கள் உறுப்பை நினைத்து நீங்கள் இனி கவலைக்கொள்ள வேண்டாம். தலகாணியை வைத்து மறைக்கவும் வேண்டாம், நீங்கள் தூக்கு மாட்டிக்கொண்டு தொங்கினாலும் உங்கள் உறுப்பு வெளியே தலைக்காட்டாது. ஆண்களே புடவைக் கட்டிக்கொள்ளுங்கள். நான்கு முதல் ஏழெட்டு மடிப்புகள்வரை மடித்து சொருகப்படும் முன்கொசுவமானது பாதுகாப்பு கவசமாக நூறு சதவீதம் இருக்கும். உங்கள் கட்டுப்பாட்டிற்குள் அடங்காத உங்களின் உறுப்பின்மீதான பயத்தை விரட்டிட புடவை கட்டிக்கொள்ளுங்கள். புடவைக் கட்ட முடியாது, தாவணியணிய முடியாது, எனக்கு ஏற்ற வசதியான உடைகளைத்தான் உடுத்துவேன் என அடங்காபிடாரனாக இருக்காதீர்கள். பண்பாட்டை பேணுங்கள்.


பணம் வைப்பதற்கு தனியாக பர்ஸ் எல்லாம் தேவையில்லை. பண்பாட்டை பேணிக்காக்கும் உங்கள் பரந்த மார்பில் அணியும் மேலாடைக்குள் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். கூடவே, மொபைல் ஃபோனையும் வைத்துக்கொள்ளலாம். என்ன வசதி இல்லை இந்த புடவையில்...


ஆறு மீட்டர் நீளமுள்ள புடைவையைத் துவைப்பதற்கு நிறைய தண்ணீர் செலவாகும். ஆகட்டும்  அதனாலென்ன நமக்கு பண்பாடு தான் முக்கியம். புடவை கட்டுவதற்கு நிறைய நேரம் செலவாகும். ஆகட்டுமே! அதனாலென்ன நமக்கு பண்பாடு தான் முக்கியம்.


ஆண்கள் மங்களகரமாக புடவை அணிந்துக்கொண்டு மொட்டையாக நின்றால் எப்படி? கழுத்து, காது, கைகள் நிறைய நகைகளை போட்டுக்கொள்ளுங்கள். உங்கள் செல்வ வளத்தைக் காட்டிக்கொள்ளுங்கள். 

திருமணமானவர்களாயின் தாலியையும் சேர்த்து தொங்கவிடுங்கள். கால்களுக்குச் சிலம்போ கழலோ கொலுசோ உங்கள் விருப்பம் போல அணிந்துக்கொள்ளுங்கள். பெரிய பொட்டும் வைத்துக்கொள்ளுங்கள். இவையெல்லாம் அடிமைப்படுத்துவதற்காக என்று உங்கள் மூளையை சலவை செய்ய பண்பாட்டு துரோகிகள் காத்துக்கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் காதிலே போட்டுக்கொள்ளாதீர்கள். எல்லாமே நம் முன்னோர்கள் அன்றே கண்டுபிடித்த அக்குபஞ்சர் மருத்துவம்.


மஞ்சள் பூசிக்கொள்ளுங்கள் முகம் லட்சனமாக இருக்கும்.

அடடா ஏதோவொன்று குறைகிறதே! ம்ம்ம்..  மல்லிகைப்பூ.

முற்போக்குவாதிகள் சொல்லுவதையெல்லாம் கேட்டால் பண்பாட்டை வளர்க்க முடியாது. மயிரில் ஆணென்ன பெண்ணென்ன!? மயிருக்கு மணம் இல்லையென்பார்கள். பொய்.

மயிருக்கு மணம் உண்டு. ஆண்களே! நீளமாக முடி வளர்த்துக்கொள்ளுங்கள். தலைநிறைய மணக்க மணக்க பூச்சூடிக்கொள்ளுங்கள். விதவனாக இருந்தாலும் சூட்டிக்கொள்ளுங்கள்.


பாவாடையை இறுக்கி கட்டுவதன்மூலமும் இழுத்து பிடித்து மேல்சட்டை அணிவதன் மூலமும் உங்கள் அழகான இடுப்பையும் மார்பையும் சுற்றி அசிங்கமாக கருப்புக்கோடு உருவாகும். பரவாயில்லை.. நாட்டிற்காக மார்பில் அம்பு வாங்கிய முன்னோர்களின் வாரிசு நீங்கள். பண்பாட்டிற்காக கருப்பு வளையத்தை பொறுத்துக்கொள்ள மாட்டீரா என்ன!?


புடவைக் கட்டிய உங்கள் அழகில் மயங்கி ஆண்களாலேயே நீங்கள் கற்பழிக்கப்படக்கூடும். இதன்மூலம் பெண்களின் கற்பு பாதுக்காக்கப்படும்.

பெண்களுக்காக எதையும் தாங்கும் பண்பாட்டு காவலர்கள் அல்லவா நீங்கள்.


'வீட்டிற்கு வந்த உடனேயே அந்த மெல்லிசான சட்டையை கழற்றி வீசிவிட்டு மேல் ஆடையில்லாமல் உங்கள் முலைகளைக்காட்டிக்கொண்டு  எவ்வளவு ஆபாசமாக திரிகிறீர்கள். உங்களால் தான் பெண்கள் கெட்டுப்போகிறார்கள். ஆபாசமாக உள்ளாடையோடு அலைகிறீர்கள். கால்சட்டையும் வர வர முட்டிக்கு மிகவும் மேலே ஏறிக்கொண்டே வேறு போகிறது.


நீங்கள் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு தொடையழகை காட்டி பெண்களை வசீகரிக்கிறீர்கள். அரிதினும் அரிதாக வேட்டிக்கட்டினாலும் கூட  உங்கள் கால்கள் அப்படியே தெரிகிறது. உள்பாவாடைப்போட்டு வேட்டிக்கட்டுங்கள் டோலர்' என பற்பல குற்றச்சாட்டுகளைப் பெண்ணியவாதிகள் முன்வைக்கின்றனர். ஆண்களே!  அவர்களின் வாயை அடைக்க வேண்டும். அதற்கான ஒரே வழி நீங்கள் வீட்டிலும் புடவைக் கட்டிக்கொள்வது தான்.


ஆனால், சட்டை இல்லாமல் படுத்து காற்றோட்டமாக உறங்கும்போதே, இருதயம் வெடித்து இறந்துவிடுகிறீர்களே!! புடவைக் கட்டிக் கொண்டால் வயிற்றுக்கு மட்டும் தானே காற்றுப்போகும். தோலோடு தோலாக ஒட்டி இருபத்து நான்கு மணிநேரமும் இறுக்கிக்கொண்டு இருக்கும் ஜாக்கெட்டை தாண்டி இரத்தம்கூட போகாதே!! 

பரவாயில்லை பண்பாட்டை பாதுக்காக்க வேண்டிதானே இறக்கப்போகிறீர்கள். பண்பாட்டு உடையில் புண்ணியவதனாகவே உயிர்த்துறப்பது நம் பண்பாட்டுக்குப் பெருமைதானே.


இறந்த பின்னும்கூட பண்பாட்டை விட்டுவிடாதீர்கள் ஆண்பாலின பேய்களே! மங்களகரமான பேயாக அப்போதும் புடவையும் பூவும் வைத்துக்கொள்ளுங்கள்.


எல்லா விதத்திலும் பெண்களைக் காட்டிலும் புடவை ஆண்களுக்கு தான் சிறந்தது.


ஆனா, ஒன்னே ஒன்னு மட்டும் தான் குறை. ஒய்யாரமாக நின்றுக்கொண்டு உங்களால் ஒன்னுக்கு மட்டும் தான் போகமுடியாது. மத்தபடி எல்லாவிதத்துலையும் புடவை வசதிதான். சுற்றிக்கொள்ளுங்கள்.


நீங்கள் ஆண்பாலினத்தவராக  இருப்பின் எதிர் விமர்சனம் எழுதுவதற்கு முன், குறைந்தது ஒரு மாதமாவது புடவைக்கட்டி, அன்றாட வாழ்க்கையை அனுபவித்துவிட்டு எழுதுங்கள். எது வசதியான உடையென்று.


சம்பாபதி

2 கருத்துகள்

  1. சிறப்பு.

    எந்த ஒன்றும் ஓர் உயிர் மீது திணிக்கப்படுமாயின் அவ்வுயிரின் ஆவேசக்குறள் போல இக்கட்டுரை அமைந்துள்ளது.


    ஆடைப்பண்பாடு என்பதெல்லாம் அதிகாரத்தின் தோள்துண்டு. அத்துண்டு யாரின் தோள்மீது அணிவிக்கப்பட்டிருக்கிறதோ? அவர்களே இங்கு நீதிபதி ஆகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. பொருளுற்பத்தியையும் கருத்துற்பத்தியையும் அதிகாரம் எப்போதும் தன் எல்லைக்குள்ளே வைத்திருக்கும் - மார்க்ஸ்

    பதிலளிநீக்கு
புதியது பழையவை