அண்மை

கம்பனும் ஔவையும் - சூரியராஜ்

கம்பனும் ஔவையும்

எத்தனையோ மாமன்னர்கள் இன்பத்தமிழ்நாட்டை நெடுங்காலம் ஆண்டாலும் மூன்றாம் குலோத்துங்கனைப் போல கொடுத்து வைத்த மன்னன் ஒருவன் இருப்பானா என்பது சந்தேகமே!

அவன் காலத்தில் அல்லவா கவிச்சக்கரவர்த்தி கம்பனும், கவிராட்சசன் ஒட்டக்கூத்தனும், வெண்பா வேந்தன் புகழேந்தியும், இடைக்காலத்து ஔவையும், பரணி பாடிய செயங்கொண்டாரும்..  போட்டி போட்டுக்கொண்டு கவிபாடி தமிழைத் "தன் நேர் இல்லாத தமிழ்" ஆக செய்துவிட்டு போயிருக்கிறார்கள்...! 

மிச்சம் என்று ஏதுமின்றி - கவிவானின் உச்சத்தில் சென்று ஏறி, தமிழ் ஒயிலாட்டம் ஆடி நின்ற கால கட்டம்! அல்லவா அது?

'கால இயந்திரம்' மட்டும் கையில் கிடைத்தால் ஓடிச்சென்று காண வேண்டிய முக்கியமான காலகட்டமாகத் தமிழன்பர்களுக்கு அது கட்டாயம் இருக்கும்.

தமிழில் தனிப்பாடல்கள் திரட்டில் உலாவரும் தனிக்கதைகள் எல்லாம்  சுவாரஸ்யமான அம்சங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். அங்கே போய், கால ஆராய்ச்சி, வரலாற்று கூராய்வு, தர்க்க நியாயம் முதலியவற்றை சிந்திக்க முயல்வது வீண் வேலை. அது கோயில் கருவறை முன் நின்றுகொண்டு இறைவனை நினைக்காமல்,  வாசலில் விட்டுவந்த செருப்பின் இருப்பைக்குறித்துச் சிந்திப்பது போலாகிவிடும். 

ஆதலால் ஐயங்களை அப்பால் எறிந்துவிட்டு வாருங்கள், சில மணிநிமிடங்கள் கவிநயங்களில் நீந்திவிட்டு திரும்புவோம்..!

நாடறிந்த மூதாட்டி.. நறுங்கவிதை சீமாட்டி.. 'ஆத்தி'சூடிக்கொடுத்தசுடர்கொடி.. ஈராயிரம் ஆண்டுகளாய் நம் நி(னை/ல)வில் உலவுகிற தொல் கிழவி..

ஔவைபாட்டி, அன்றொரு நாள் அந்த சோழமண்டல வீதி வழி நடந்து போனாள்.

களைப்பினால் ஒரு வீட்டின் திண்ணையில் அமரும் போது அங்கிருந்த சுவரில் அழகிய செய்யுள் வரிகளை கண்டாள். குறள் போல வெறும் ஈரடிகளில் நின்று போயிருந்த அருமையான  அந்தப்பாடலின் எஞ்சிய வரிகளை அறியும் ஆவலில் வீட்டின் உள்ளிருப்பவரை அழைத்தாள். 

'சிலம்பி' எனும் பெயர் கொண்ட பெண் வந்து எட்டிப்பார்த்தாள். அவள் தன் இரு கால்களிலும் பெயருக்குப் பொருத்தமாக அழகிய வேலைபாடு கொண்ட உயர்ரக சிலம்பினை அணிந்திருந்தாள். அவளிடம் ஔவை அந்த நற்றமிழ் வரிகளைப் பற்றி வினவ, அவளும் தனக்கு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லினாள்.

ஒரு முறை கவிச்சக்கரவர்த்தி கம்பர் இவ்வழியே வந்தபோது தாகம் தாளாமல் சிலம்பியின் வீட்டில்  தண்ணீர் கேட்டு குடிக்கும் போது வந்திருப்பவர் கம்பர் என்று அறிந்து கொண்ட இந்த பெண் அவரிடம் தனக்காக ஒரு பாட்டுப்பாடி தருமாறு மன்றாடி கேட்டுள்ளாள். சும்மா வேண்டாம், எவ்வளவு பொற்காசு வேண்டுமானாலும் பரிசாகத் தருவதாக சொல்லி வற்புறுத்தியிருக்கிறாள்.

(புகழ் வந்துவிட்டால் கூடவே வருகிற அசௌகரியங்களில் இதுவும் ஒன்று. எங்கு போனாலும் ஆங்காங்கு தன் திறமையை ‘வித்தை'காட்டி நிரூபிக்க வேண்டி வரும். கம்பர் மட்டும் விதிவிலக்கா என்ன?)

"ஆயிரம் பொன் கொடுத்தாலும் அநாவசியமாக நான் பாடுவதில்லை..!" என சொல்ல வந்தவர், "ஆயிரம் பொன்...." என்று ஆரம்பிக்கும் போதே..

"சரி தருகிறேன்..! பாடுங்கள்!" என்று இடைமறித்து சொல்லிவிட்டாள் சிலம்பி.

வசமாக மாட்டிக்கொண்ட கம்பர், ‘இஃதென்னடா சோழ நாட்டானுக்கு வந்த சோதனை?’ என்றெண்ணி  இவளைப்பற்றி என்ன பாடுவது என யோசனையில் ஆழ்ந்த போது, காலம் அவருக்கு உதவியது.

சிலம்பி செல்வ சீமாட்டிதான். என்றாலும் அச்சமயம் அவளிடத்து ஆயிரம் பொன் இல்லை; ஐநூறு பொன் தான் தேறியது. இருந்த ஐநூறு பொன்னை அவரிடம் தந்துவிட்டு மிச்சத்தை அக்கம்பக்கத்தில் இரவல் வாங்கியாவது தந்து விடலாம் என்று போயிருக்கிறாள். 

இதை நல்வாய்ப்பாக கருதி கம்பரும் கீழே இருந்த ஒரு கரித்துண்டை எடுத்து அவள் வீட்டுச்சுவரில் இரு வரிகளை மட்டும் எழுதி வைத்துவிட்டு சென்றுவிட்டார்! திரும்பி வந்த சிலம்பி படித்து பார்த்தாள்...

"தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவதுஞ் சோழ மண்டலமே! "

பாடல் நல்லாதான் இருக்கு.. ஆனால் அதில் தன்னைப்பற்றி ஏதும் அவர் எழுதவில்லையே..? கொடுத்த பாதி பணத்திற்கு பாதி பாடலை மட்டும் எழுதிவிட்டு போய்விட்டாரே அந்த மனிதர்!! என்று நொந்து கொண்டாள்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதாக நடந்தவற்றை ஏக்கத்தோடு  சொல்லி முடித்தாள் சிலம்பி.

எல்லாவற்றையும் பொறுமையாய் கேட்ட ஔவை புன்முறுவலோடு, "ஓ..! இந்த இனிய எளிய தமிழ் கம்பனின் திருவிளையாடலா? அதனால் தான் இது கருத்தைக் கவர்ந்திருக்கிறது..! இருந்தாலும் புலவன் ஒரு பெண்ணின் மனம் நோகும் வண்ணம் இப்படி அரைகுறை பனுவல் செய்திருக்க கூடாது. 'தன்னை விட்டால் இதை நிறைவு செய்ய யார் உள்ளார்?' என்ற அகந்தையில் இவ்விதம் செய்திருந்தால் அதை இப்போதே நான் நிறைவு செய்கிறேன்" என மனத்திற்குள் எண்ணிக்கொண்டு… சிலம்பியிடம் "வீட்டில் சமையல் ஆயிற்றா?" என்று கேட்டாள்.

"ஐயோ! இனிதான் உலையே இட வேண்டும். இப்படி நேரங்கெட்ட நேரத்தில் வந்திருக்கியே தாயே! பரவாயில்லை; சற்று நாழி பொறு; எதாச்சும் செய்து தருகிறேன்", என்றாள் சிலம்பி.

(ஏழைகள் வீட்டில் எப்போதும் அன்னம் கிடைக்கும். செல்வந்த வீடுகளில் அந்தந்த வேளைக்குதான் கிடைக்கும்)

"அடுப்படியில் ஏதும் இருக்கிறதா??" ஔவை மீண்டும் கேட்டாள்.

"சூடாகத் தனலும் சூடுதணிந்த கரியும் தான் இருக்கிறது.!" சிலம்பி குறும்பாகச் சொல்லி உள்ளே சென்றாள். ஔவையையும் உள்ளே அழைத்தாள். அகத்துக்குள் நுழைந்த ஔவை அடுப்பாங்கறைக்குச் சென்று அடுப்பில் இருந்து ஒரு கரிக்கோலை மட்டும் எடுத்துக்கொண்டு மீண்டும் வெளியே வந்தாள். அந்த அரைகுறை பனுவலை ஒருமுறை வாசித்துவிட்டு தலையை ஆட்டிக்கொண்டே எஞ்சிய வரிகளை எழுதி முழுமைப்படுத்தினாள்.

சிறிது நேரத்தில் கையில் மோர் குவளையுடன் வெளியே வந்த சிலம்பி ஔவையைத் தேடினாள்.. 

கிழவியை காணவில்லை. ஆனால் வீட்டுச்சுவரில் தெய்வத் தமிழ் செய்யுள் வரிகளில் தன் பெயர் சாகாவரம் பெற்று நின்றுவிட்டதை கண்டு விதுர்விதுர்த்துப்போனாள் சிலம்பி..!! தான் இவ்வளவு நேரமும் அளவளாவியது அருந்தமிழ் மூதாட்டி ஔவையோடு என்பது பிறகுதான் அவள் புத்திக்கு எட்டியது.

"தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே மண்ணாவதுஞ் சோழ மண்டலமே! - பெண்ணாவாள் அம்பொற்சிலம்பி அரவிந்தத் தாளணியும் செம்பொற் சிலம்பே சிலம்பு."

இவ்வுலகில் எத்தனை பெரிய வற்றாத ஜீவ நதிகள் இருந்தாலும் குளிர்ந்த காவிரி நீருக்கு ஒப்பாக எதுவும் இணைநிற்க முடியாது!

தண்ணீர்னா அது காவிரி தான்.

முடியுடை வேந்தர் எவராயினும் சோழனுக்கு நிகர் கூற யாருண்டு புவி மீதில்?

வேந்தன் என்றால் முதல் இடம் சோழனுக்குத் தான்.

சோழ மண்டலத்தை விஞ்சிய வளநாடு ஒன்றை ஈரேழு லோகங்களில் எங்கேனும் காண இயலுமா?

மண் ஆவதும் சோழ மண்டலமே..

அவ்வகையில் பெண் என்றால் அதற்கு இலக்கணம், எடுத்துக்காட்டாக அழகுப்பொன்னிற 'சிலம்பி' இருக்கிறாள்.

அவளது தாமரைப் பாதம் போன்ற காலில் அணிந்திருக்கக் கூடிய செம்பொன் சிலம்பே சிலம்பாகும்!!  'அவள்' காலில் இருப்பதாலே அது சிறப்பு பெறுகிறது. (கண்ணகி சிலம்பேகூட இரண்டாவது பட்சம்தான்)

தனி நபர் பற்றி ஒரு தனிப்பாடல். முதலிரு அடி கம்பனும், எஞ்சிய இரண்டு ஔவையும் பாடியுள்ளார்கள்...

ஆஹா..! சிலம்பி எப்பேர்ப்பட்ட பாக்கியசாலி..! குலோத்துங்க சோழனுக்குக் கூட இப்படி ஒரு பெருமை கிடைக்கவில்லையே..!

இன்னொரு சம்பவம் பாருங்கள்,,

ஆணாதிக்க சமூகம் இடைக்காலத்தில் மேலோங்கியிருந்த சமயத்தில் அவர்களுக்கு சரிநிகர் சமனாக (சிலநேரம் அவர்களை விஞ்சியும்) புரட்சி செய்த பெண்களின் புகழ் இன்றளவும் தனித்து ஒளிர்கின்றது. ஔவை, ஆண்டாள், காரைக்கால் அம்மையார் ஆகியோர் அவ்வகையில் குறிப்பிடத்தகுந்தோர்.

ஒருமுறை இலக்கிய புலவர்கள் கூடி விடுகதை போன்றதொரு கவி விளையாட்டு ஆடிவந்தனர்.

ஈற்றடி சொல்லி வெண்பா பாடுவது.. உவமைக்கு ஏற்ற பாடல் புனைவது… சித்திரக் கவி வரைவது.. புதிர் கவிக்கு பதில்கவி கூறுவது... என்றவாறு அறிவுஜீவிகளின் விளையாட்டாக அது அமையும்.

ஒருவர் மாற்றி ஒருவர் வாய்ப்பு வழங்கப்படும். கம்பரின் முறை வந்தது. அவர் ஔவையை பார்த்து கேள்வியைத் தொடுத்தாராம்..

"ஒரு காலடீ... நாலிலைப் பந்தலடீ..!" இதை சொன்னதும் அங்கிருந்த பலர் சிரித்து விட்டனர்.

மேலோட்டமாக அது ஔவையை வாடீ..போடீ.. என அவமதிக்கும் தொனியில் உள்ளது. ஆழ நோக்கினால்தான், "ஒரு காலடியில் நான்கு இலை பந்தல்-ஐ உடைய அமைப்பு எது..?" என்கிற கேள்வி புரியும்.

ஔவை சிறிதும் சங்கடப் படவில்லை. (கம்பரே ஆனாலும் அவருக்கும் பால பாடம் ஔவையின் ஆத்திசூடியில்தானே ஆரம்பித்திருக்கும்...?)

கம்பரது துடுக்குத்தனமான விடுகதையை ஔவையாரும் அதே தொனியில் விடுவித்தார்.

எட்டே கால் லட்சணமே..! 

எமன் ஏறும் பரியே..! 

மட்டில் பெரியம்மை வாகனமே!

முட்டமேற்கூரையில்லா வீடே..!

குல ராமன் தூதுவனே..!

ஆரையடா சொன்னா யடா?

அவ்வளவுதான்...

ஔவையின் சீற்ற கூற்றைக் கேட்ட புலவர் குழாம் "கப் சிப்" என வாயடைத்துப்போய்விட்டது.

கம்பரால் தலைநிமிர முடியவில்லை..

அசடு வழிய தலையை மட்டும் ஆட்டிவிட்டு வெளியேறினார்.

அப்படி என்ன ஆயிற்று இந்த பாட்டால் என்கிறீர்களா..?

தமிழில் சில எழுத்துக்கள் எண்ணுருவை பிரதிபலிக்கும்.

க = 1

உ = 2

ங = 3

,,

அ = 8

மேலும் பின்ன எண்களுக்கும் எழுத்துரு உண்டு.

வ எனும் எழுத்து 1/4 (கால் பகுதி)  என்பதை சுட்டும்.

("குவாட்டர் கட்டிங்" என்ற பெயரில் சினிமா படமெடுத்து தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதால் "வ" என்று பெயர் மாற்றிய கதை உண்டு நம் திரையுலகில்..) முதலடியின் எட்டே கால் என்பது  8 + 1/4 = அ & வ என்பதை குறிக்கும்.

ஆக எட்டே கால் லட்சணமே என்றால்.. "அவலட்சணமே" என்று பொருள்!

எமன் ஏறும் பரி எது?

எருமை..!

மட்டு இல்லா பெரியவளின் (மூதேவி) வாகனம் கழுதை!

கூரையில்லா வீடெனில் அது குட்டிச் சுவர்..!

குல ராமன் தூதுவன் அனுமனாகிய குரங்கு!

இறுதி வரி 

ஆரையடா சொன்னாயடா!

என்பதற்கு இரு பொருள் உண்டு...

மேலோட்டமாக "(டேய்! வாடீ போடீனு) யாரையடா நீ சொன்னாய்??" என்பது போன்றும், ஆழ்ந்து நோக்க, "அட! ஆரைக்கீரையைச் சொன்னாயடா..!" என்கிற பதிலும் இருக்கும்.

ஆரைக்கீரை என்ற தாவர வகை நான்கு கூட்டிலைகளாக ஒற்றை நீண்ட காம்பு தண்டில் பந்தல் போல நிற்கும்! 

பதிலும் சொல்லியாச்சு! பதிலுக்கு பதில் திட்டியும் விட்டாச்சு..! அவள் ஔவை அல்லவா?

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை!

என்கிற குறட்பாவின் பொருளைக் கம்பர் அக்கணம் உணர்ந்திருப்பார்.

இப்படியாக கம்பரும் ஔவையும்,, எலியும் பூனையுமாக மோதி தமிழைச் செழுமைப்படுத்தி இருக்கிறார்கள்..!

சூரியராஜ்

1 கருத்துகள்

  1. ஆசிரியர் பொறியியலை படிக்காமல் தமிழை படித்திருந்தால், தமிழ் இன்னும் அருமையாக தாலாட்டப்பட்டிருக்கும். அதில் எனக்கு கொஞ்சம் வருத்தம்தான்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை