எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண் என்கிறார். சரி, மெய்ப்பொருளை எப்படி காண்பது? மெய்ப்பொருள் எத்தன்மைத்து? யாரும் அறியார். அவ்வளவு தான் நம் கல்வி முறைமை. மனப்பாடக்கல்வி. எனக்கும் திருக்குறள் தெரியும் என்று பேசிக்காட்டும் பெருமைக்கான கல்வி.
நம் ஆசிரியர் ஒரு அளவுகோலைத்தந்து, ‘இதை அள’ என்று அதட்டினால் ஓடிப்போயி உடனே அதை அளப்போம். ஆனால் அளக்கும் அளவுகோல் சரியா இருக்கா என்று ஒருநாளேனும் நாம் அளவுகோலை அளந்தோமா? அளவுகோல் சரியாத் தான் இருக்கும் என்ற திட்டமான நம்பிக்கை. இந்தக் கூற்றின் கருத்து யாதெனில், கல்வி முறைமையை நாம் அளவிடுவது இல்லை. பாடத்திட்டத்தை அளவிடுவது இல்லை. ஆசிரியரையும் அளவிடுவது இல்லை.
ஆசிரியர் புத்தகத்தில் இருப்பதை வகுப்பில் ஒர்முறை படித்துக் காட்டுகிறார். படித்து முடித்தவுடன் மாணவர்கள் பாடத்தின்பின் இருக்கும் கேள்விக்கான பதிலைக் குறித்துத்தரக்கூறி அடம்பிடிக்குறார்கள். ஆசிரியர் பதில்களைக் குறித்துத் தருகிறார். பாடம் முடிந்தது. அடுத்தப்பாடம்.
இதனால் மாணவர்களுக்குப் படித்தல் என்றால் என்னவென்றே தெரியாமல் போகிறது. கலந்துரையாடல் என்றால் என்ன? பிரதியாக்கம் என்றால் என்ன? பாடம் சொல்வதை வளர்த்தெடுப்பது எப்படி? நடைமுறைப்படுத்துவது எப்படி? நடைமுறைப்படுத்துவதின் நிகழ்காலச்சிக்கல் என்ன? அதைத் தீர்ப்பது எப்படி?
எதுவுமே இல்லை.
ஆசிரியர் பாடம் நடத்தி முடித்துவிட்டு பொதுவாகப் புரிந்ததா என்று ஒருமுறை கேட்பார். அவரும் ஒரே ஒரு மாணவரைப் பார்த்து தான் அந்த ஒட்டுமொத்த பாடத்தையும் நடத்தி இருப்பார். அந்த ஒரு மாணவரும் நல்லா புரிந்தது என்று தலையாட்டுவார்.
ஏனையோர் நாம் தான் சரியா கவனிக்கலைப்போலும். நமக்குத்தான் புத்தி இல்லை போலும் என்ற தாழ்வு மனப்பான்மையிலே அமைதியாய் இருப்பர். அவ்வளவு தான். அதான் அடிமைக்கல்வி.
நான் சொல்வதைக் கேட்டு பணிந்து நட. இதான் நம் கல்வி முறையின் பொன்மொழி. பாடம் சொல்வதைக் காட்டிலும் அதிகமாக யோசித்தால் நீங்கள் தான் ஆகச்சிறந்த முட்டாள்.
அதிலும் கணக்கு வாத்தியார் தான் நம்மை முட்டாளாக்குவதில் முதலிடம் பிடிக்குறார். ப்ளஸ் இங்கிட்டு போனா மைனஸ் ஆகும் என்பார். எப்படினு கேட்டாலும் சொல்லமாட்டார். அப்படி கேட்க ஆளும் கிடையாது. இந்த பார்முலாவ போட்டா விடை வந்திடும் என்பார். இந்த பார்முலாவ ஏன் போடுறோம்? பார்முலா எப்டி வந்துச்சு? என்று கேட்டால் ‘அதெல்லாம் உனக்கெதுக்கு மார்க் வேணுனா இதத்தான் நீ போடனும்’ என்பார்.
இதில் கேட்டால் கணக்குத்தான் மனப்பாடமே பண்ணாம புரிந்து கொண்டு படிக்கும் பாடம் என்று உருட்டுவார்கள்.
இங்கு ஆசிரியர் சொன்னதை அப்படியே நகல் எடுத்துக்காட்டினால், அதீக மதிப்பெண், பள்ளி முதல் மாணவர் என்ற பட்டம்.
இதெல்லாம் எதற்கு? என்னறிவை மழுங்கடித்ததற்குத் தரும் விலைதானே இவை. இந்தியாவில் பெரும்பாலான குழந்தைகளின் பன்னிரண்டு வருட கல்வி தண்டம் தான். நம்மை சிந்திக்க விடாமல் செய்தது தான் இவர்களின் ஒட்டுமொத்த வெற்றி..
ஒன்றே ஒன்று சொல்கிறேன். குழந்தைகளைக் கேள்வி கேட்க அனுமதியுங்கள். வாயமூடு என்று அதட்டாதீர்கள். பேசவிடுங்கள். பேசுதல்தான் சிந்திக்கத்தூண்டுகிறது.
பள்ளிகளில் உதட்டில் விரல் வைத்து உக்காரச்சொல்வார்கள். அமைதியாக இருக்க வேண்டும். ஆசிரியர் நிம்மதியாக இருக்க விரும்புகிறார். ஆனாலும் மாணவர்கள் பேசுகிறார்கள். வகுப்புத்தலைவரை உருவாக்கு. அவருக்கு அதிகார போதை ஏறும். தனிமதிப்புக்கிடைக்கும். அவர் பேசுபவரைக் காட்டிக்கொடுப்பார். தனக்குப் பிடிக்காதோரையும் சேர்த்து மாட்டி விடுவார். நாளையத்தேர்வுக்கான கேள்வி இன்றே அவருக்குத் தெரிய வரும். தாள் திருத்தம் மதிப்பெண் இடுவதிலும் அவருக்குப் பங்கு உண்டு. பகுதி அதிகாரத்தின் மமதை எப்போதுமே இருக்கும். வருகைப்பதிவேட்டில் கூட கை வைக்கும் உரிமை இருக்கும்.
இந்திய அதிகார வன்முறை இயங்கியலின் சிறுவடிவம் இது.
மாணவர் ஆசிரியர் உறவு தோழமையுடன் அமைய வேண்டும் என்று சொல்கிறார்களே ஒழிய நடைமுறையில் சொட்டளவும் இல்லை என்பது தான் உண்மை. ஆசிரியர் உள்ளே வந்தவடன் எழுந்து நிற்க வேண்டும். கைக்கூப்பி வணங்க வேண்டும். இதெல்லாம் மரபு. ஆசிரியருக்கு மாணவர் தரும் மரியாதை. மாணவர் ஆசிரியரை எங்கு பார்த்தாலும் கைக்கூப்பி வணக்குகிறார். காலை வணக்கம் ஐயா, குட் மார்னிங் டீச்சர், குட் ஈவ்னிங் டீச்சர் என்று பணிவு பொங்க பொங்க சொல்கிறார். பார்க்கவே அவ்வளவு அழகாக உள்ளது. தமிழ்ப் பண்பாட்டின் ஆசிரிய மாணவ உறவை எண்ணி அகம் மகிழ்கின்றேன்.
வணக்கம் தேவி..
வணக்கம் கார்த்திகா..
வணக்கம் நல்லக்கண்ணு..
வணக்கம் சுப்பைய்யா..
இப்படி எந்த ஆசிரியராவது மாணவருக்கு வணக்கம் வைத்தது உண்டா?
தமிழின் மேன்மைமிகு முகமுன் பெரியோருக்குச் சிறியோரால் சொல்லப்பட வேண்டும் என்ற சட்டத்துடன் கூறப்பட்டுள்ளதா என்ன? ஏன் மாணவர் சொன்னால் தான் ஆசிரியர் பதிலுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமா?
வணக்கத்தை அடிமையின் குறியீடாய் மாற்றியதே இந்த ஆசிரியர்கள் தான். நீங்கள் மாணவர்களுக்கு வணக்கம் சொல்வதில் என்ன குடிமூழ்கிவிடப் போகிறது. நான் மாணவரைக் காட்டிலும் உயர்ந்தவர் என்ற எண்ணம் தானே உங்களைக் காட்டிலும் வயதில் சிறியோருக்கும் வணக்கம் வைக்க தடுக்கிறது?
பெரியோருக்குச் சிறியோர் சொல்வது தான் முகமன் எனில் அது எனக்கு வேண்டாம். அந்த பண்பாடு தேவையில்லை.
பெரியோர் சிறியோர் என்று பேதம் பார்க்கக்கூடாத எண்ணம் தான் எனக்கு வேண்டுமே ஒழிய இத்தகைய ஒடுக்குமுறை கல்வி எனக்கு வேண்டாம்.
மாணவர்கள் இவ்வாறு கொஞ்சம் சிந்திக்கனும். ஆசிரியர் நம்மை சமத்துவத்துடன் நடத்துகிறாரா? என் சுயமரியாதையைக் குலைக்காத வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறாரா?
என் பள்ளி வாழ்க்கையில் நான் பல கேடுகெட்ட அயோக்கிய வாத்தியார்களைப் பார்த்து இருக்கிறேன். உடன்பயிலும் மாணவர்களுக்கு அவரை அவ்ளோ பிடிக்கும். ஏன்?
அவர் பாடம் நடத்த மாட்டார். கெட்ட கெட்ட வார்த்தையில் பிற வாத்தியார்களை வகுப்புநேரத்திலே திட்டுவார். பெண்களைப் பற்றி ஆபாச கதைச் சொல்வார். லீவு போட்டாலும் வருகைப்பதிவு தருவார். சாதிபேர் சொல்லி கூப்பிடுவார். மொத்தத்தில் சந்தோசமாக இருக்கவிடுவார்.
எனக்கு சந்தோசமே படிப்பதில் தான். அதனால் அவரை எனக்குத் துளியும் பிடிக்காது. அவரின் அல்லது பிறரின் சந்தோசம் என்பது வேறு. எனக்கும் படிக்க நினைக்கும் பலருக்கும் வேறு.
இப்படி வாத்தியார்கள் கொஞ்சநஞ்சம் இல்லை. எல்லா பள்ளிகளிலும் இருக்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் இப்படிப்பட்ட வாத்தியார் கதை உண்டு. இந்திய கல்விச்சூழலை நினைத்தால் உண்மையிலே எனக்குக் கவலையாக உள்ளது.
நான் பிறநாட்டு ஆய்வுகளைப் படிக்குறேன். அவர்களின் சிந்தனை முறையியலைப் பார்க்கிறேன். நாம் மிகவும் தாழ்ந்துவிட்டோம். இப்படியே போனால் சமூக முன்னேற்றம் என்பதே இருக்காது.
மாணவர்களே. கேள்வி கேளுங்கள். எதன்மீதும் விமர்சனம் வையுங்கள். பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளின் விமர்சன பார்வையை ஊக்குவிக்க முயலுங்கள். அதிக பிரசங்கியும் குதர்க்கியும் தான் அம்பேத்கராகவும் பெரியாராகவும் வந்தார்கள்.
அம்பேத்கர் மட்டும் ஒரு தலித்தாக இல்லையென்றால் அவரைத்தான் இந்தியா தன்னுடைய பெருமிதமாகத் தூக்கிச் சுமக்கும் தெரியுமா? அவ்வளவு பெரிய கல்வியாளர்.
நாம் மெய்ப்பொருள் காணும் தருணம் வந்துவிட்டது. வள்ளலார் சொன்ன மாதிரி இதுதான் நல்ல தருணம். அனைவரும் விசாரத்துடன் இருக்க வேண்டியத்தருணம்.
ஒன்றை விமர்சன ரீதியாக அணுக நமக்கு தர்க்க அறிவு அவசியம். தமிழ் கல்வி முறை முன்பு அப்படித்தான் நடந்தது. குரு சீட குருக்குல கல்வியில் பாடத்தைத்தாண்டிய விவாதம் தான் அதிகமாக இருக்கும். (அங்கு ஒடுக்குமுறையும் மலிந்து கிடந்தது அடுத்த விவாதம்)
இதற்கு தகுந்த சான்று சேனாவரையரின் சொல்லதிகார உரை. மாணவரின் கேள்விக்குப் பதிலாக அமைக்கப்பட்ட உரை.
ஏன் அப்டி அமைகிறது?
வகுப்பு என்பது பாடம் நடத்துவதற்கான களம் அன்று. படித்த பாடத்தை விவாதத்திற்கு உட்படுத்துவதற்கான களம். இன்றும் கலந்துரையாடல் தான் வகுப்பில் நடக்க வேண்டும் என்பதே பெரிய பெரிய கல்வி நிறுவனங்களின் (UGC) விதிமுறையும் கூட.
இந்த கலந்துரையாடலுக்கு முன்.. ஒன்றை நாம் எவ்வாறு ஏற்கிறோம்? அல்லது உண்மை என்றோ பொய் என்றோ நல்லது என்றோ தீயது என்றோ எவ்வாறு விளங்குகிறோம் என்ற அடிப்படை அறிவு வேண்டும்.
அதாவது அளப்பதற்கு முன் நாம் அளவுகோலை அளக்க வேண்டும். அப்போது தான் சரியான அளவீடு கிடைக்கும்.
நம்மை நாம் விமர்சனத்திற்கு உள்ளாக்கும் போதுதான் பிறிதொன்றை விமர்சனம் செய்வதற்குத் தயாராவோம். அதற்கு அளவை பற்றிய அறிவு வேண்டும்.
அளவை என்றால் என்ன?
ஒன்றை உண்டு அல்லது இல்லை என்று நிறுவுவதற்கான கருவி. அளவை பற்றி நமக்குத் தெரியவில்லை என்றாலும் நாம் அளவைகளைப் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.
அளவை இல்லாமல் பிறிதொன்றைக் கற்கக்கூடாது என்பது தான் தொடக்க கால இந்தியக் கல்வி முறை. ஆங்கிலேய கல்வி முறை வந்த பிற்பாடு எச்சங்களாக தர்க்க கல்வி இருந்திருக்கிறது. பிறகு முற்றிலுமாக அழிந்தது.
அதாவது, ஏன் என்ற கேள்வி கேட்பதற்கு முன்பாக அதற்கான பதிலை எவ்வாறு உண்மை என்று அறிவது என்பதற்கான அறிவு.
மெய்ப்பொருள் காணும் அறிவு.
மிகவும் எளிமையாகச் சொல்கிறேன்.
நான் பள்ளிக்குப் போகிறேன். வழக்கம் போல் இல்லாமல் பள்ளிக்குச் செல்லும் வழிக்கு நேர் எதிராக மாணவர்கள் நடந்து வருகிறார்கள். பள்ளி விடுமுறையாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
இதான் அனுமான அளவை. அனுமானமாக ஒன்றை ஏற்றல்.
இருக்கலாம். ஆம் சரியாகத்தான் இருக்கும். இப்படியாக ஒன்றை அனுமானமாக ஏற்பது.
அதே எதிரில் வரும் மாணவரில் ஒருவர் ‘இன்று பள்ளி விடுமுறை’ என்று கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
அப்படியென்றால் அனுமானமாக நினைத்ததைக் காட்டிலும் உரையால் பள்ளி விடுமுறை என்ற செய்தி உறுதியாக்கப்படும்.
இது உரை அளவை அல்லது நூல் அளவை.
பள்ளிக்கே நேரில் சென்று பார்த்துவிட்டால் வெளிப்படையாகத் தெரிந்துவிடும். அங்கே புலனறிவு முதன்மையாக்கப்படுகிறது. இது காட்சி அளவை. எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அதன் உண்மைத்தன்மையைப் புலனறிவால் சோதித்துப் பார்த்து விளங்குதல் (மெய்ப்பொருள் காண்பது) அறிவு.
பொருளின் கருத்தின் உண்மைத்தன்மையை அளவிடுவதுதான் காட்சி அனுமான நூல் அளவைகள்.
இந்த மூன்றுதான் கேள்வி ஞானத்திற்கான மூலம். ஏன் எதற்கு எப்படி என்பதற்கான கருவி. இதை நன்கு விளங்கினால் மாணவர்கள் அட்டகாச கேள்வி ஞானத்தால் ஒளிர்வார்கள்.
அதனால் தான் வள்ளுவர் பொருள்காண் வழியான ஆய்வு முறையுடன் கூடிய மெய்ப்பொருள் காண்பதை அறிவு என்கிறார். (பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்துடனான தேடல்)
ஆனால் பொதுவாக நம் மாணவர்கள் உரை அளவை அதாவது நூல் அளவையை மட்டுமே உண்மை என்று உறுதியாக ஏற்கக்கூடியவர்களாக ஆசிரியர்களால் /நம்கல்வி முறைமையால் உருவாக்கப்படுகிறார்கள்.
அனுமானித்தல் பண்பும் புலனால் அளந்து ஏற்கும் தன்மையும் சிந்திக்கச் சொல்வதால் அந்த மூளை உழைப்பை அவர்கள் தவிர்க்கிறார்கள்.
பொதுவாகவே கல்வி நிறுவனங்கள் நாம் உடல் உழைப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற மனநிலையை நம்மிடமிருந்து நீக்கும்.
‘படிக்கலைனா கஷ்ட படுவீங்க’ ஒவ்வொரு ஆசிரியரும் சொல்கிறார்.
கஷ்டப்படுதல் என்றால் உழைத்தல். உடல் உழைப்பில் இருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொள்ளத்தான் ஒவ்வொரு மாணவரும் படித்து உழைக்கிறார்கள்.
சரி அங்கும் உண்மையாக உழைக்கிறார்களா என்றால், அதான் இல்லை. காரணம் கல்வி போன்ற மூளை உழைப்பு வேலைகளில் உடல் உழைப்பு போல் இல்லாமல் மிகவும் எளிதாக ஏமாற்ற முடியும்.
ஆசிரியர்கள் எல்லோரும் நல்லா படிங்க அப்போ தான் கஷ்டபடாம வாழலாம் என்று கூறுவதைக் கொஞ்சம் மறுவாசிப்பு செய்து பாருங்கள்.
உடலுழைப்பு சிரமமானது. அது படிப்பற்றவர்களுக்கானது. ஆனால் மூளை உழைப்பு அப்படி அல்ல. அதற்கு படிக்க வேண்டும். அது படித்தவர்களுக்கானது. நம் சமூக விதிப்படி கூறினால், அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கானது.
உடல் உழைப்பில் ஏமாற்ற முடியாது. மூளை உழைப்பில் ஏமாற்ற முடியும்.
மூளை உழைப்பு செய்பவர்களால் உடல் உழைப்பு செய்வர்களை அதிகாரம் செய்ய முடியும். மிகக்கடுமையாக வெயிலில் கூலி வேலை செய்பவர் ஏசிக்குள் உட்காந்து இருக்கும் ஆபிசர் முன் அடங்கி ஒடுங்கி நிற்பதைப் பாருங்கள்.
உடல் உழைப்பவருக்கு வெயில்.
உக்காந்து மூளை வேலை செய்பவருக்கு ஏசி.
அவரும் வேலை செய்கிறாரா என்று தெரியவில்லை. உக்காந்து இருப்பது மட்டுமே தெரிகிறது.
இப்போது யோசியுங்கள் இந்த கல்வி உங்களை யாராக மாற்றத்துடிக்கிறது?
மூளை உழைப்பு என்னும் ஏமாற்று வடிவத்தை /சுகமாக வாழும் வடிவத்தை இந்த கல்வி போதிக்கிறது. அதை போதிக்கும் வாத்தியார்களும் அந்த சுகமான வாழ்வை அனுபவிப்பவர்களே. உடல் உழைப்புச் செய்பவர்களைக் கீழாக பார்க்கும் எண்ணத்தைப் போதிக்கிறது. உடல் உழைப்போர்களை மூளை உழைப்பு செய்வர் முன் ஒடுங்கி நிற்க வைக்கிறது. படிக்காதோர் மனத்தில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குகிறது. அவர்களிடம் நீ, காய்கறி கடை வைக்கத்தான் லாயக்கு, மளிகை கடை வைக்கத்தான் லாயக்கு என்று கூறி கூறி மூளை உழைப்பை உயர்த்திப்பிடிக்கிறது. உடல் உழைப்பை மலப்புழுவைப் போல கேவலமாகப் பார்க்க வைக்கிறது.
இது வருணாசிரம தர்மம் இல்லையா?
இது சமூகநீதிக்கு எதிரான வடிவம் இல்லையா?
இது தீண்டாமை இல்லையா?
நாம் ஏற்றத்தாழ்வைக் கற்றுக் கொடுக்கும் படிப்பைத் தான் படிக்கிறோம். இதில் என்ன கொடுமை என்றால் அது தான் சரி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக தனி ஆசிரியர் நமக்கு வந்து பாடம் நடத்த வில்லை. பள்ளிகளில் இதற்கென்று தனிபாடவேளையோ புத்தகமோ இல்லை. ஒட்டுமொத்த தமிழ்க்கல்வி முறையே இதைத்தான் நமக்குப் போதிக்கிறது.
அதேபோல் எல்லோரும் அறிவால் அதிகாரத்திற்கு வரவே விரும்புகிறோம். மூளை உழைப்பு செய்யவே. நிர்வாகப் பொறுப்பிற்குள் புகவே துடிக்கிறோம். இதான் நம் கல்வி முறைமை நமக்குக் கற்றுத் தந்த பாடம். சமத்துவமற்ற நிலையை நியாயப்படுத்தும் கல்வி.
எனது ஆசிரியர் ஒருவர் சொன்னார், ஆசிரியரைக் கேள்வியால் தடுமாறச்செய்யும் மாணவர்தான் மிகச்சிறந்த மாணவர் என்று.
நந்தன் தீக்குள் இறங்கி பாவம் நீங்கினான் என்று ஆசிரியர் கூறினால் அதற்கு என்ன சான்று? ஏன் இறங்கினான்? எதற்கு? எப்படி? எதனால்? அதன் பின்னணி என்ன? என்று மாணவர்கள் சரமாரியாகக் கேள்வி கேட்கனும் அவ்வாறு கேட்டதினால் தான் அயோத்திதாசரை இன்று நாம் படிக்கின்றோம்.
நாம் அதிகார நிறுவனத்தைக் கேள்வி கேட்க துணியவிடாத ஒரு கல்வியைக் கற்றுக்கொண்டுள்ளோம். அதன் தத்துவப்பின்னணி அதுதான். மிக்க பிரக்ஞையுடன் செயல்படவேண்டிய இடம் இது. நாம் எவ்வாறு நம் பாடத்திட்டத்தால் ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்? ஏன் குறிப்பிட்ட இந்த பாடங்கள் வைக்கப்பட்டு இருக்கிறது? குறிப்பிட்ட இவர்களின் முகங்கள் ஏன் மீண்டும் மீண்டும் புத்தகத்தில் வருகிறது? எந்த அரசியல் இந்த புத்தகத்தில் ஓடுகிறது?. எதனால் நம்மூளை சலவை செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறது? சமூகநீதியைப் பேசிக்கொண்டே இருந்தும் ஏன் இத்தனை ஆண்டுகாலம் இந்த ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்படவில்லை?
கொஞ்சம் சிந்தியுங்கள் மாணவர்களே. நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய காலமிது.
தமிழகத்தில் வருணாசிரமம் இல்லை. ஏற்றத்தாழ்வு இல்லை. ஒடுக்குமுறை இல்லை. சமூகநீதிக்கான ஆட்சி என்று நீங்கள் நினைக்கலாம். அது உண்மையன்று. நம் எல்லோரது மனமும் வருணாசிரம தர்மத்தாலே நிரம்பி கிடக்கிறது. நாம் ஒவ்வொரு கணமும் இன்னொருவரை ஒடுக்குகின்றோம். சாதி, பாலினம், வயது, தொழில் என்று இங்கு ஏற்றத்தாழ்வை வரவேற்கும் காரணிகள் மிக மிக அதிகம்.
முன்பு இதையெல்லாம் தெரிந்து வளர்த்தார்கள். இன்று நாம் இவைகளைப் பற்றி தெரியாமலே வளர்ந்து கொண்டுள்ளோம். அத்தனை ஆழ்ந்த மனப்பதிவாக ஒவ்வொருவரின் மூளையுள்ளும் இது பதிந்து விட்டது. இத்தகைய பெரும் அநீதிக்கு நம் கல்வி முறைதான் வழிசெய்து வைத்திருக்கிறது.
இந்த விழிப்புணர்வோடு இருங்கள். கல்வியில் பொருள்முதல் வாதக்கண்ணோட்டம் பெருகுவதாய் எனக்குத் தெரிகிறது.
உழைப்பும் அறிவும் தோழமை உணர்வுமே நம்மை காக்கும் என்றே தோன்றுகிறது. வள்ளலார் சொன்னபடி விசாரத்துடன் இருப்போம். சிந்திப்போம். எல்லோர்க்குமான சமத்துவமான உலகை உண்டாக்க இயங்குவோம். அதான் தேவையும் கூட.
தீசன்
நல்லது. இந்திய கல்வி அமைப்பே அடிமைத்தனத்தின் ஊற்று தான்.
பதிலளிநீக்குஅதிகாரம் இருக்கத்தான் செய்கிறது காலம்காலமாக. ஆனால் எதிர்க்கப் போராளிகளும் இருந்தனர். நாமும் அடிமைப்படுத்தப்படும்போது போராட விரும்புதல் வேண்டும்.
தேவையானதை பெறுவதில் இல்லை சுதந்திரம். தேவையில்லை என இருப்பதையும் ஒதுக்கும் உரிமையும் பெருவதே உண்மையான சுதந்திரம்.
கட்டுரையைப் படிக்கும்போது, வருங்கால சமுதாயம் ஒரு நல்ல ஆசிரியரை பெறப் போகிறது என்பதை எண்ணி பெற்றவன் என்ற முறையில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
பதிலளிநீக்குஇக்காலத்தில் ஆசிரியர்கள், தங்களுக்கு கொடுக்கப்படும் அபரிதமான ஊதியத்தை உணர்ந்தாவது இந்த மாணவர்களுக்கு உழைக்கிறார்களா என்றால், வருத்தம்தான் மிச்சமாகும்.
உயர்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் இருந்தாலும் தரத்தில் முதலிடம் இல்லையே?
இதற்கு காரணம் மாணவர்களா? ஆசிரியர்களா?
காய்கறி விற்பவனும், சுமை தூக்கி பிழைப்பவனும் ஏட்டுக் கல்வி படித்து மணப்பாடம் செய்து பட்டம் வாங்கியவனை விட எவ்விதத்திலும் தாழ்ந்தவன் இல்லை என்ற பொருளில் எழுதியிருக்கும் வார்த்தைகள் என்னையே சிந்திக்க வைத்தது.
பாலினம், சாதி பாகுபாடு போன்றவை இன்னும் இந்த சமுதாயத்தில் இருக்கிறது என்று கருதினால், கல்வி முறையைத்தான் குற்றமாக கருத வேண்டும்.
கெட்டவன் என்பவன் யார் என்றால் நல்ல ஆசிரியரிடம் கல்லாதவன் என்பதுதான் உண்மை.
எல்லா ஆசிரியரையும் குறை காண வரவில்லை என்றாலும் குறைகாண முடியாத ஆசிரியர்கள் வருங்காலத்தில் தோன்ற வேண்டும்.
மதுப்பழக்கமும் போதைப் பொருள் புழக்கமும் கூட நல்ல ஆசிரியர் நினைத்தால் தடுக்கலாம்.
அம்பேத்காரைக் கூட அறிவுக்கு சாட்சியாக பயன்படுத்துவோரை விட அரசியல் பலனுக்காக பயன்படுத்துவோரே அதிகம்.
இனியாவது நல்லது நடக்கட்டும். இதற்கு இக்கட்டுரை பூனைக்கு மாட்டிய மணியாக மாறட்டும்.
ஒரு நல்ல பதிவு படித்த நேரத்தை பயனுள்ளதாக்கும்.
பதிலளிநீக்குஒரு சிறந்த பதிவு படித்தவர் மனத்தில் மாற்றத்தை சுரக்கும்.
அரிதாய் ஓரிரு அற்புத பதிவுகள்.., நியாயம் மறுக்கப்பட்டோரது ஏக்கத்தையும் அதன் தாக்கத்தையும் கூறி அதனை நீக்குவதற்கான ஆக்கங்களையும் அனைவரும் ஏற்கும்படி அழகுற எடுத்தியம்பும்.
இது ஒரு சிறந்த நல்ல அற்புத பதிவு. மூலிகை காட்டை கடந்து வந்து வீசும் இதமான தென்றல் போல இரட்டைப்பலன் தருகிறது.
28 ஆண்டுகளுக்கு மேலாக வகுப்பறை சூழலில் வாழும் என்னுடைய உளவியல் விருப்பங்களும் குழப்பங்களும் பற்றி இக்கட்டுரையில் பத்திக்கு பத்தி அலசப்பட்டுள்ளது ஆச்சரியம் தருகிறது.
கற்பவனாக இருந்தபோது எண்ணியவற்றை கற்பிக்க தொடங்கிய போது கடைபிடித்துதான் வந்தேன். ஆனால் சேரும் இடஞ்சார்ந்து தன்னை தகவமைத்துக் கொள்ளும் சராசரி மானுடமிருகமாக நாலிரு திங்களில் நானும் மாறி போய்விட்டேன்..!
நேர்வழியில் செல்வோர் மருளால் தடம் மாறி போகும் போது இறைவனோ இயற்கையோ தேடிவந்து தடுத்து மீண்டும் நேர்வழிக்கு திருப்புமாம்.
தம்பிரான் தோழர் சுந்தரரை ஈசன் வந்து தடுத்தாட்கொண்டதை போல என்னை தீசனார் கட்டுரை தடுத்தாட்கொண்டது!
Thanks for insightful content. I am a pratent of two kids. How can my children escape from this rat race and from current situation in tamil nadu education system.? . any ideas and info about alternate educational paths will be helpful.
பதிலளிநீக்கு