அண்மை

பொது நீரோட்டத்தில் சிலரது எதிர் நீந்தல் - குறள்மகன்

 

பொது நீரோட்டத்தில் சிலரது எதிர் நீந்தல் - குறள்மகன்

காலங்காலமாகக் கண்ணகி என்ற ஒரு பெண் கற்பில் சிறந்தவராக விளங்குகிறார். சிலப்பதிகாரத்தின் திலகமாக விளங்குவதே கண்ணகி என்ற பெண் தானே என்று பேசும் பலரும் அதில் கூறப்பட்டுள்ள கோவலனின் கேவலமான செயல்களை ஆணாதிக்கம் என ஏற்க மறுக்கின்றனர். காரணம், ஆண் தவறிழைத்தால் அதைச் சமுதாயம் ஏற்கிறது. ஆனால் இதே காரியத்தைப் பெண் செய்யக்கூடாது என்று காட்டும் விதமாகவும் சிலப்பதிகாரம் அமைகிறது. 


பெண் இப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்பது கட்டமைக்கப்பட்ட ஒன்றாகிறது. புணர்தல் என்பது உடலியல். இரு மனம் ஒத்து ஆண், எந்த பெண்ணைப் புணர்ந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத இந்தச் சமூகம், மனம் ஒத்து பெண் புணர விரும்பினால் மட்டும் ஏன் தகாதவள் என்ற பட்டத்தைக் கொடுக்கிறது?


இதனால் யார் யாருடன் வேண்டுமானாலும் கட்டுபாடற்று புணரலாம் என்ற கூற்றை ஆதரிக்கவில்லை. உனக்கு வந்தால் ரத்தம், எனக்கு வந்தால் தக்காளி சட்னியா? என்ற நிலை வேண்டாம் என்கிறேன். ஆனால் சிலப்பதிகாரம் அப்படி இல்லையே..


குறுந்தொகையில் பரத்தையுடன் கூடிவிட்டு மீண்டும் தலைவியைப் பார்க்கவரும் தலைவனைத் தலைவி ஏற்றுக்கொள்வதாகப் பல பாடல்கள் உள்ளன. அனைத்துமே ஆண்கள் என்ன தவறிழைத்தாலும் அதைப் பெண்கள் ஏற்க வேண்டும் என்பதை உணர்த்துவதாகவே உள்ளன. இதே ஒரு பெண் தன் தலைவனைத் தவிர வேறு யாருடனாவது கூடி அதை ஆண் ஏற்கும் வண்ணம் உள்ள பாடலை எங்கும் நான் காணவில்லை.  இச்செய்தி ஆணாதிக்கவாதிகளுக்கு, பண்பாட்டுவாதிகளுக்கு வெறுப்பைத் தரலாம். அக்காலம் ஆனால் அப்படித்தான் இருந்திருக்கிறது.


தொல்காப்பிய பொருளதிகாரம், ஆண் தன் மனைவியின் மாதவிடாய் காலத்தில் புணர முடியாது. அன்றைக்குப் பரத்தையின் வீட்டிற்குப் போகலாம். அதாவது நான்கு நாள். மீதி பன்னிரண்டு நாளும் தலைவன் விருப்பம் என்று கூறுகிறது. (பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் என்னும் தொல்காப்பிய நூற்பா, உரை படிக்கவும்) இப்படிப்பட்ட ஆக சிறந்த ஆணாதிக்கப் படைப்பை நான் கண்டது இல்லை.


இப்படிப்பட்ட சமத்துவமற்ற நூல்கள் தாம் தமிழில் உள்ளன. இப்படி இருக்க.. என் கேள்வி என்னவென்றால் இப்படியான சமத்துவமற்ற நூல்களை மாணவர்கள் ஏன் கட்டாயம் படிக்க வேண்டும்? இவற்றை ஏன் பாடத்திட்டத்தில் வைத்துள்ளனர்? இதைப்படித்தால் தான் ‘கல்வித்தகுதி’ என்பதற்கான காரணம் என்ன? இதைப்போன்ற நூல்களை இளம்வயதில் படிப்பதால் அவர்கள் மனதில் ஆணாதிக்கம் என்ற நோய் தானாக விதைக்கப்படாதா? 


தொன்மையான நூல்.. எப்படி பாடத்திட்டத்தில் சேர்க்காமல் தவிர்க்க முடியும்? என்று கேட்கலாம். தமிழ் அழிய வேண்டுமா? என்பார்கள். தொன்மை என்ற காரணத்தால் மட்டும் மாணவர்கள் மனதில் மோசத்தைத் திணிப்பது தவறு. ஏனென்றால் அதையே அவர்கள் வாழ்க்கை இயல்பு என்று நினைப்பார்கள். அவ்வாறு கட்டமைக்கப்படும் என்பதுதான் உண்மை. நானும் அப்படியே. பெண்கள் என்றால் பல கட்டுப்பாடுகள் உள்ளது என்றெண்ணியிருந்தேன். 


ஆசிரியர்களும் இது இக்கால வாழ்வுக்குப் பொருந்தாது என்பதைச் சொல்வதும் இல்லை. பல பெற்றோர்களும் பிற்போக்குத் தனத்தையே சரியானது என்று போதிக்கவும் செய்கின்றனர். 


தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களைத் தடை செய்ய வேண்டும் என்பது என் நோக்கமல்ல. கட்டாயமாக இவற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமா? என்றுதான் கேட்கிறேன்.


நூல்களைத் திறனாய்வு செய்ய வேண்டியாவது இவற்றைப் படிக்க வேண்டும் என்கின்றனர். இதெல்லாம் முக்கியமான நூல்கள். இவற்றைப் படித்து, பின் இவை வாழ்விற்குதவுமா என பகுத்தறிய (திறனாய) வேண்டும் என்கின்றனர். ஆனால் அவ்வாறு எல்லோருக்கும் கற்றுக்கொடுக்கப் படவில்லையே.


ஒருவர் தம் இயல்பை மாற்றிக் கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல. உதாரணமாக ஒருவர் தன் சிறு வயதிலே ஏதோ ஓர் இலக்கியமோ, பக்தி இலக்கியமோ பயில்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இளம் களம் ஆதலால் அவர் அதிலே மூழ்குகிறார். அதை விட்டு அவர் வெளிவருவது என்பது எளிதான காரியம்  அல்ல. 


தற்போது இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழியான இந்தியைத் தமிழ்நாட்டில் கட்டாயக் கல்வியாகக் கொண்டுவர அத்தனை எதிர்ப்பு ஏன்? கட்டாய மொழிக்கல்வி தமிழைச் சிதைக்கும் என்ற பயம். நான் கேட்கிறேன்.. இந்தியைப் கட்டாயக்கல்வியாகப் படித்து பின் பகுத்தறிந்து நம் மொழியைக் காத்துக்கொள்ள முடியும் தானே? ஏன் செய்யவில்லை. காரணம் நோற்பார் சிலர். பலர் நோலாதவர். 


அதே பயம் ஏன் இங்கு இல்லை?   பகுத்தறிந்து புரிந்துகொள்வர்கள் சிலராகவும் புரிந்து கொள்ளாதவர்கள் பலராகவும் இருப்பது தான் வெளிப்படை. 


வேற்று மொழியைத் திணிப்பதால் தமிழ் சிதையலாம் என்ற அச்சம் உள்ளவர்களுக்கு ஏன் சமத்துவமற்ற நூலைத் திணிப்பதால் சமூக சமத்துவம் கெடும் என்ற அச்சமோ உணர்வோ இல்லை..


மேலும் இதுபோன்ற பிற்போக்குத்தனமான நூல்களையே மரபு என்ற பேரில் மீண்டும் மீண்டும் படிப்பதால் நாமும் மரபாகவும், பிற்போக்குத்தனமாகவும் செல்கிறோம் என்று எண்ணுகிறேன். (நூலைப் போல் சீலை) எண்ணிப்பாருங்களேன் முந்தைய தலைமுறையினருக்கும் தற்போது உள்ள தலைமுறையினருக்கும் உள்ள வேறுபாட்டை. இதற்கு முக்கிய பங்காக நவீன இலக்கியம் இருப்பதைக் காணமுடிகிறது.


தற்போதைய தமிழ்த்துறைகள் நீங்கி நவீன தமிழ்த்துறை என்ற ஒன்று வந்தால் பிற்போக்குத் தன்மைகள் நீங்கி மரபு என்ற பல்வேறு ஒடுக்குமுறை கட்டமைப்பைக் கட்டுடைக்க வழி செய்யும் என்று நம்புகிறேன்.


மரபு என்ற கட்டமைப்பு கட்டுடைந்தால் சிந்தனையும் வாழ்வியலும் நவீனமாகும் என்றும் நம்புகிறேன்.


குறள்மகன்

கருத்துரையிடுக

புதியது பழையவை