அண்மை

இரண்டாம் தாரம் - ஜெயலட்சுமி.கே

 

இரண்டாம் தாரம் - கவிதை


பெண்மையை 

போற்றுவாரெனில் 

அவள் மெய்யழகை போற்றுவர்.


வண்ணங்களின் ஒளியில் 

வசிய பட்ட மனிதனின் 

கண்களில் ஒதுக்கப்படும் 

ஒப்பில்லா அழகுடன் பிறந்த 

கறுப்பு நிறத்தழகி நான் !


வாசல் வரை வந்து பெண் 

கறுப்பென்றான் ஒருவன், 

கவலை இல்லை என்றான் 

வேறொருவன் !


பேதம் இல்லை என 

வேதாந்தம் பேசி 

கொள்ளையடிக்க வந்தனரோ !


கண்மூடி திறக்கும் முன்னே 

காட்சிகள் வேறொன்றாய் 

மாறியதுவே !


ஆதரிப்பார் பெண்களை 

இலக்கியங்களில் 

கவிதைகளில் !


தாய் தந்தைக்கு ஒரு 

மருமகனும் 

தமையனுக்கு ஒரு 

மைத்துனரும் 

தமக்கைக்கு 

கொழுந்தனையும் எங்கு

தேடியும் கிடைக்கவில்லை 

அவளை தேடவும் 

அனுமதிக்கவில்லை !


தன் ரேகை தெரியாத 

பொய் ரேகைக் காரரிடம் 

கைரேகை பார்த்துப் பார்த்து 

நாள்காட்டியில் கிழிக்கப்பட்ட 

பக்கங்களில் என் 

நரைமுடியின் அடர்த்தியும் 

கூடுகிறது !


கன்ன சுருக்கங்களுக்குத் 

தெரியும் நான் கண்ட 

கனவுகள் எதுவென்று? 

கொக்காக நான் நிற்க 

கொழுத்து தான் போனது 

கொஞ்சம் இந்த ஊர் பேசும் 

பேச்சும் !


காலம் செல்கிறது 

கட்டளையும் தளர்கிறது. 

வரன் தேடுகிறார் சுலபமாக 

வருகிறது !


இரைத்தேடும் பறவையாய் 

கிடைத்ததை அடையும் பொருட்டு 

விலை பேசி விருப்பமற்று 

விற்கப்படுகிறேன் "இரண்டாம் 

தாரமாய்"


ஜெயலட்சுமி.கே, திருவனந்தபுரம்

1 கருத்துகள்

  1. மனதில் சுமையை ஏற்றி வைக்கிறது இக்கவிதை.
    இவ்வுலகில் இந்நிலை ஒரு நாள் மாறும். இது உறுதி.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை