அண்மை

வைதீக விழுங்கலுக்கு எதிரான சமண பன்மீய மீட்டெடுப்பு - தீசன்

வைதீக விழுங்கலுக்கு எதிரான சமண பன்மீய மீட்டெடுப்பு - தீசன்


தமிழின் சொல், தொடர் வடிவங்கள் உயர்திணை அஃறிணை எனும் மையத்தை அடிப்படையாகக் கொண்டன. தமிழின் இயங்கியலே மக்கள் மற்றும் மக்கள் அல்லாதது எனும் கருத்துநிலை ஓட்டத்தில்தான் உள்ளது. இது ‘அறிசொல்’ அதாவது வினைச்சொல்லில் தன் மேலாண்மையை உறுதியாக இயக்குவதை நுட்பமாக ஆராய வேண்டும். இதையே தொல்காப்பியம் வினையின் தோன்றும் பாலறி கிளவியும் பெயரில் தோன்றும் பாலறி கிளவியும் மயங்கல் கூடா மரபு என்கின்றது. எண் பற்றிய தமிழிலக்கண கருத்திலும் திணை, பால் இயைந்தே இருக்கின்றன. திணை, எண், பால் விகுதி மூன்றுமே அது மக்களா/ மக்கள் அல்லாததா என்பதை விளங்கி கொள்ள ஏதுவாக அமைகின்றது. இதுவும் நுட்பமாக ஆராயத்தக்கன. காரணம், மொழி என்பது சமூகத்தின் உற்பத்தி பொருளேயன்றி சைவ சித்தாந்தங்களில் வருவதுபோல கடவுள் படைப்பன்று. இந்த சமூகம் ஒன்றை மொழியில் வடிவமாக உற்பத்தி செய்வதற்கு முன்பாகவே கருத்து நிலையில் அவை நன்கு புழக்கமாயிருத்தல் (கருத்துற்பத்தி) வேண்டும். உதாரணமாக, ‘அன்’ எனும் உயர்திணை ஆண்பால் ஒருமைக்கான விகுதி, உற்பத்தி ஆவதற்கு முன்பாகவே உயர்வு (மக்கள்) பற்றிய கருத்து, ஒன்று பல எனும் கருத்து, ஆண்-பெண் எனும் கருத்து உருவாகியிருத்தல் வேண்டும். அத்தோடு பெயரில் பாலின வேறுபாடு காட்டல், குறி கொண்டு உடலை விளக்குதல், மக்கள், பாலின பாத்திரத்தை நடைமுறை படுத்துவதற்கான சொல்லாடல்களை (இலக்கியம்) உருவாக்குதல் முதலியவையும் இணைந்தே அரங்கேறி இருக்கும். இவ்வாறு தமிழ்ச் சமூகத்தில் முன்பே உருவான கருத்துக்களைத் தொல்காப்பியம் புரிதலுக்காக/ தன்னாளுகைக்காக ஒரு வடிவத்திற்குள் அடக்குகிறதே ஒழிய தொல்காப்பியம் தான் தமிழையே இயக்குகிறது என்றெண்ணுவது மடமை. 


இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான கருத்துயாதெனில், தமிழ் விளக்கப்படாமல் இருந்த சமயத்திலே (இலக்கண உருவாக்கம் நடைபெறாமல் இருந்த காலத்திலே) பல்வகை மனித நடக்கை கூறுகளை மொழி உற்பத்தி செய்திருப்பினும், அதுயாரால் விளக்கப்படுகிறதோ அவர்களின் தத்துவத் தளத்தையும் அது மறைமுகமாகப் பெறுகிறது. உதாரணமாக,


தொல்காப்பியம் சமணப் பின்னணி கொண்ட நூல் என்பது தமிழை நுட்பமாக ஆராய்ந்த அனைவருக்கும் புலப்படும். இதனால் தமிழ் மொழியை ஒரு சட்டகத்திற்குள் அடக்கத் துணிந்த தொல்காப்பியம் தன் சமண தத்துவத்தையும் அதனூடக இயக்கி இருக்கும் என்பது ஐயுற தகாததல்ல. பயிலாதவற்றை பயின்றவைச் சார்த்தி விளக்குவதுதான் மனித இயல்பு. இதை ஒவ்வொன்றாகக் கழட்டுவதுதான் நம்போன்ற ஆய்வாளர்களின் வேலை. குறிப்பாகச் சமணத்தின் அநேகாந்த வாதக்கூறுதான் தமிழ் மொழியின் அடிப்படை சொல் தொடர் இயக்கத்திற்குக் காரணமாய் இருக்கிறது என்பது என் எண்ணம். அதன் (சமணத்தின்) பன்மீயப் போக்கும் சியாத்வாதமும் தான் இலக்கிய வாசிப்பு, சூத்திர ஒழுங்கு முதலியவற்றைத் தொல்காப்பியம் மற்றும் அதன் முன்பனுவல்கள்வழி உருவாக்கி உள்ளன. இந்த குறிப்பிட்ட கருத்தைப் பற்றிய விரிவான கட்டுரையை விரைவில் தருகிறேன். மையமாக நாம் அறியவேண்டியது, உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரலபிற எனும் தருக்கவியல் நிலைப்பாடு சமணத்தின் சீவன், அசீவன் எனும் கோட்பாட்டுத்தளத்தில் இருந்து வந்திருக்கின்றது. அல்லது வந்திருக்கலாம் என்பதே. 


சமணம் தான் உலகை உயிருள்ளவை, உயிரற்றவை என்றும் மக்கள், விலங்குகள் என்றும் உணர்வுள்ளவை, உணர்வற்றவை என்றும் ஆன்மா உள்ளவை அற்றவை என்றும் விளக்க முனைகின்றது. ‘முடிவான உண்மை ஒன்றே’ (ஏகாந்தம்) என்று ஒற்றை புனித கருத்தான பிரம கருத்தாக்கத்தை ஆரியர்கள் உருவாக்கி வந்த அவ்வேளையில் (பேரரசு உருவான காலத்தில்/ பழங்குடிகள் கொல்லப்பட்ட காலத்தில்) அதற்கு நேர்எதிராக உலக இயக்கத்தின் அறமான பன்மீத்தை வலியுறுத்தியது சமணம். இதனால் உலக உண்மை ஒன்றல்ல பல எனும் அநேகாந்த வாதம் சமணத்தின் உயிர்கருத்தாக நிலைப்பெற்றது. பொதுவாகவே தத்துவச் சண்டைகளையும் இருநாடுகளுக்கிடையேயான போர்களையும் நாம் பிரித்துப் பார்க்கின்றோம். அது முற்றிலும் தவறான பார்வையாகும். இந்திய வரலாறென்பதே வைதீக அவைதீக சண்டையில் தான் இருக்கின்றது. 


தமிழின் அல்லது இந்தியாவின் பல்வேறு பூர்வகுடி மரபுகள் வைதீக ஒற்றையியத்திற்கு எதிரானவர்கள். ஆனால் ஒற்றையியமோ பெரும் பேரரசு உருவாக்கத்திற்கு (பெருவலியுடைய அதிகாரப் போக்கிற்கு) ஆதரவானது. வைதீகத்தை ஆதரித்த காந்தி, அதன் பூர்வகுடி மக்களுக்கு எதிரான ஒற்றையியத்தை ஆதரிக்காமல் கிராம சுயராஜியத்தை ஆதரிக்கும்போது இந்துத்துவவாதிகள் பார்வையில் கொல்லப்பட வேண்டியவராகிறார் எனில் தத்துவ நிலைப்பாட்டின் வலிமையை அறிக. இதே போக்குதான் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் கூற்றாய், ஒரே நாடு ஒரே கல்வி/ மொழி எனும் கருத்துக்களாய் திரிந்திருக்கின்றன. இவையாவும் பன்மீயத்திற்கு எதிரான வைதீகத்தின் நிலைப்பாடே.


ஒற்றையியம் இந்து என்ற பெயரில் இன்று பல்லாயிர இந்திய தொன்மரபுகளை திருநீறு வழியாகவும், அக்னி, வேள்வி வழியாகவும் உண்டு செரித்துக் கொண்டிருக்கின்றது. தமிழ் மொழியும் இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருப்பினும் அதன் அடிப்படை சமணத்தின் பன்மீய அறத்தால் வாழ்கிறது. இவை தமிழில் ஆழப் படிந்து கிடப்பினும் அகழ்ந்து எடுக்க முடியாதவை அல்ல. வைதீகத்தால் செரிக்கப்பட்டு வரும் தமிழுக்குச் சமண பன்மீய மீட்டுருவாக்கத் தேவை இன்று ஏற்பட்டிருக்கிறது. மொழி வெறும் கருத்துப்பரிமாற்ற கருவியாக மட்டுமல்லாமல் தத்துவத்தளமாகவும் இயங்குவதால் இச்சமண மீட்டெடுப்பு, சிந்தனை தளத்திலும் பன்மீய ஏற்பையும் சகிப்புத்தன்மையையும் தரவல்லது. விளிம்புநிலை சார்ந்த அனைத்துக் கோட்பாடுகளையும், படைப்புகளையும் (இலக்கியம், சினிமா) ஆராயாமல் வெறுக்கும் மனோநிலை அதிகரித்து வருகிறது. இவைகளுக்கெல்லாம் இச்சமண மீட்டெப்பு முற்றுப்புள்ளி வைக்கலாம். 


அத்தோடு, என்னதான் சமண பன்மீய மீட்டெடுப்புத் தமிழாய்விற்கு அவசியமாகினும் அதுவும் வைதீக ஒற்றையிய காலத்தில் எழுந்த கோட்பாடே என்பது உணர்வில் இருக்கட்டும். எல்லா அதிகார எதிர்ப்பின் போதும் விளிம்பு மையத்தின் கூறுகள் சிலவற்றைப் பெற்றுக்கொள்கிறது. இதன்வழி தானும் மைய அதிகாரத்துவத்திற்கு தயார் எனும் நிலைப்பாட்டை மையத்திற்கு அறிவிக்கிறது. (அறைகூவல்) இதன்காரணமாகவே தான் தொல்காப்பியம் ஒரு முழு சமண நூல் என்றும் கூறிவிடமுடியவில்லை. காரணம் அதன்காலத்திய வைதீக கூறுகள் பலவற்றையும் அது ஏற்றுக்கொண்டிருக்கின்றது. இதன்மூலம் அக்கூறுகள் (பெண்ணடிமை, நாற்பால் பகுப்பு முதலியவை) எவ்வளவு அதிகார வன்மை மிக்கது என்பதைத் தான் அந்நூல் காட்டுகிறது. வைதீகத்திற்கு முற்றிலும் எதிராக செயல்முடியாத நிலை அவைதீகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல யோகம், பக்தி, தாந்ரீகம், தவம், கொல்லாமை முதலியவற்றை எதிர்க்க முடியாத நிலையை வைதீகமும் அடைந்திருக்கிறது. ஆனால் புனிதத்துவமிக்க பிரமவாதம் இவற்றை மேலோர்க்கானது என்று அறிவித்ததன்வழி பன்மீயத்தை உடைத்து இத்தகைய (யோகம், தவம்) தொன்மரபுகளை தனதாக்கி தன்னொற்றை அதிகாரத்தை மீண்டும் நிறுவியது.


வைதீகம் ‘பகுப்பு, பகுத்தல்’ எனும் முறையை அவைதீகக் காரர்களிடமிருந்து பெறுவதாகத் தோன்றுகிறது. பகுப்பு எனும் செயல்பாடு - முடிவான உண்மைகள் பல எனும் அவைதீக போக்காகும். வைதீகம் இதற்கு எதிரானது. தொல்காப்பியம் நிலங்களை நிலத்தின் இன்னொரு வடிவமான பூவின் வழி பகுத்தலிலே அது வைதீகத்திற்கு எதிரான தன்நிலைப்பாட்டை உறுதிசெய்துவிட்டது. நிலத்தையும் முதலுக்குள் அடக்கிப் பகுத்திருக்கிறது. வைதீகத்திலும் பகுப்பு உண்டெனினும் அதன் பகுப்பின் முடிவு இவை அனைத்தையும் பிரமமே உண்டாக்கியது என்பது. ஆனால் இங்கு தான் தொல்காப்பியம் சிறக்கிறது. அது இயற்கை பொருளை இற்றென கிளத்தலே முறை என்றுகூறி ஆக்கியோனை முதன்மைபடுத்தும் பிரமவாதத்தைக் கொலை செய்துவிட்டது. அத்தோடு செயற்கை பொருளை மட்டுமே ஆக்கமோடு கூறவேண்டும் என்கிறது. இதைவிட வன்மையான பிரம கண்டனம் வேறு இருக்காது. பிரம்ம சூத்திரம் தான் நிலம், நீர், ஆகாயம், நெருப்பு, காற்று இவையனைத்தையும் பிரமம் படைத்தது என்கிறது. ஆனால் தொல்காப்பியமோ செயற்கை பொருளன்றி இயற்கை பொருளை ஆக்கமோடு கூறல் தமிழின் தொடர்முறைக்கே ஒவ்வாது என்று கூறி தமிழின் கிளவியாக்க அமைப்பிற்கே சமண/ லோகாயத பன்மீய அறத்தைச் சேர்த்திருக்கிறது. பலர் தொல்காப்பியம், தெய்வத்தைக் கருப்பொருளில் வைத்திருப்பதால் வைதீக நூலன்று என்று தட்டையாகக் கூறுவதைக் கேட்கையில் எனக்கு வேடிக்கையாக இருக்கும். கருப்பொருட்கள் மீபுனைவிற்கு எதிரான உலகியல் தன்மையைக் காட்டும் கூறாகும். உலக மக்களிடத்தில் தெய்வம் என்ற ஒரு பொருள் இருக்கிறது அதனால் தெய்வம் இருக்கிறது எனும் சமண சியாத்வாதத்தால்தான் (பன்மீய ஏற்பு) தொல்காப்பியம் கருப்பொருட்களில் தெய்வத்தை வைத்திருக்கின்றதே ஒழிய ஏதற்றில்லை.


இதன்மூலம் நான் கூறத்துணிவது என்னவெனில், தமிழ்ச் செவ்வியல் நூல்களில் பொதிந்துள்ள அல்லது மக்கள் வழக்காறுகளில்/ நடக்கைகளில் கலந்துள்ள சமண பன்மீய போக்கை வெளியெடுத்தல் - தொடர் வைதீக விழுங்கலில் இருந்து நம்மை காக்கும். தமிழின் இலக்கண தருக்க தளத்தில் இயங்கும் சமண உறுப்புகளைக் கழட்டி எடுக்க வேண்டும். அதை வைதீக எதிர்ப்பாக்கி பயன்படுத்த வேண்டும். (தமிழின் இயல்பை சமணம் தன் தத்துவ நோக்கில் விளக்கியுள்ளதே ஒழிய தமிழின் தத்துவமே சமணமாகிவிடாது) அதனால் அதன் முன்னைய மரபான உலகாயதத்தை மறக்கலாகாது. உலகாயத்தை மீட்டெடுத்தல் தொடக்க காலப் பூர்வகுடியின் பொருள்முதல்வாத அறிவுமரபையே மீட்டெடுக்கவல்லது. ஆனால் தமிழில் அவ்வேலை கைப்பிடி மண்ணிலிருந்து ஓர் அணுவை மட்டும் தனியே பிரித்தெடுப்பது போன்று சவாலாக இருக்கும். காரணம், தமிழ் மொழி இந்திய பெருந்தத்துவ அறிவு மரபுகளால் அவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. தனக்கென்ற அறிவுமரபே (சுயம்) இல்லை என்று கூறுமளவிற்கு அது பிறவற்றால் விளக்கப்பட்டுவிட்டது. எவ்வாறெனில், மனித விலங்குகள் உயர்திணை என்று விளக்கப்பட்டதை தன்சுயம் என்று நம்புவதைப் போல. 


தீசன்

கருத்துரையிடுக

புதியது பழையவை