அண்மை

திருமணத்தின் நுண்ணரசியல் - தீசன்

 

திருமணத்தின் நுண்ணரசியல்

பெரியார் சொன்னதுபோல, பெண்ணுடலே பெண்ணுக்குப் பெரும் பாதகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் காதல், திருமணம் முதலிய சமூக வடிவங்களும் பெண்களுக்கு மோசத்தையே செய்கிறது. (இவை பற்றியும் பெரியார் விளக்காமலில்லை) கொஞ்சம் சிந்தித்தாலே இது நன்கு விளங்கிவிடும். ஒரு சிறிய வடிவத்தைப் பற்றி மட்டும் இங்கு உரையாடுவோம். 


பெண்களை அதிகம் படிக்க வைக்க வேண்டாம். பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்று கூறுவோர் அனைவரும், பெண்கள் வீட்டில் கிடந்து ஆக்கிப்போடவும், பாத்திரந்தேய்க்கவும் தான் லாயக்கு என்று நினைக்கிறார்கள். குடும்ப அமைப்பிற்கும் இனவிருத்திக்கும் உதவும் பெண்ணுடல் அதிகம் படித்து என்ன செய்யப்போகிறது என்பது இவர்களின் வாதம். அத்தோடுமட்டுமல்ல. இங்குதான் நீங்கள் சமூக ஒழுங்கையும் புரிய வேண்டும். 


பெண்கள் ஆண்களுக்குக் கீழானவர்கள் என்பதே இந்திய (ம) தமிழ்ச் சமூக உண்மை. ஆணும் பெண்ணும் சமம் என்று பேசுவோருங்கூட திருமணம் என்று வரும்போது படிநிலை அதிகாரத்தைப்பற்றி யோசிப்பதில் இருந்து இதை அறியலாம். சில பொது உளவியலைத் தருகிறேன்,


1.ஆண் (மாப்பிள்ளை) பெண்ணை விட உயரமாக இருக்க வேண்டும். 

2.ஆணுக்குப் பெண்ணை விட வயது அதிகம் இருக்க வேண்டும். (குறைந்தபட்சம் ஒருமாதமாவது/ ஒரு வருடமாவது இருந்தே ஆக வேண்டும்.) 

3.ஆண்தான் வேலைக்குப் போக வேண்டும். பெண் வீட்டையும் குழந்தையையும் பார்த்தால் போதும். 

4.வேலைக்குப் போகும் பெண்எனில் பையனைவிட குறைந்த உத்யோகத்து வேலையாக இருக்கவேண்டும். 

5.பெண் பையனைவிட அதிகம் படித்திருக்கக் கூடாது. ஆண்தான் அதிகம் படித்தவனாக இருக்க வேண்டும்.

6.பதிலுக்குப் பேசும் பெண்ணாக /எதிர்த்துப் பேசும் பெண்ணாக இருக்கக்கூடாது. (இப்போது இவ்வடிவை ‘நீயா நானா பெண்’ என்கிறார்கள்)


மொத்தத்தில் பெண் ஆணுக்கு அடிமையாக இருக்க வேண்டும். ஒரு ஆண் தன்னைக்காட்டிலும் கீழான இடத்தில் தன் மனைவி இருக்க வேண்டும் என்று நினைக்கின்றான். அதற்கு நாமந்த ஆண்மேல் குற்றம் சொல்வதற்கில்லை. பொதுசமூக அறமே அதுவாகத்தான் இருக்கிறது. (தன்அறிவு/ சுயம் என்றொன்று இருப்பதாக நாம் எல்லோருமே நினைக்கின்றோம். ஆனால் அப்படி ஏதுமே இல்லை என்பது தான் உண்மை. இன்மையே இங்கு உண்மையாக இருக்கிறது.)


பெண்கள் அதிகம் படிக்க வேண்டாம் என்பதற்கான முக்கிய காரணமே அவளுக்குமேல் படித்த ஆணைத் தேடிபிடித்துவிட முடியாதோ என்ற சமூக உளவியல் தான்.


விளக்கமாகச் சொல்வதானால், ஒரு பெண் நிறைய படிக்க நினைக்கின்றாள். ஆனால் குடும்பத்திலிருந்து பலத்த எதிர்ப்பு வருகிறது. அதற்கு முக்கிய காரணம், அப்பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற சமூக உளவியலே. திருமணம் என்ற வடிவம் தான் பெண்களை அதிகம் படிக்கவிடாமல் செய்திருக்கிறது/ செய்கிறது/ செய்யப்போகிறது.


எப்படி எனில், அப்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேட வேண்டுமெனில் நம் இந்தியத் திருமண அதிகாரப் படிநிலை விதியின்படி, அவளைவிட படித்த ஆணை அவளின் பெற்றோர்கள் முதலில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அடுத்து அந்த ஆணின் பெற்றோர்கள் தன் படித்த பிள்ளைக்கு எதிர்பார்க்கும் பெருஞ்சீரைச் செய்ய வேண்டும். (உதாரணமாக மருத்துவராக இருக்கும் பையன் எனில் 50 - 100 பவுன் தங்க டவுரி கேட்கத் தயங்க மாட்டார்கள்)


நம் நாட்டில் பெண்கள் படித்துவிட்டால் இதுஓர் பெரிய பிரச்சனை. படித்த பெண்ணுக்குத் திருமணம் செய்வதென்றால் அவ்வளவு சாதாரண காரியமா என்ன? அவளைவிட படித்த பையனைத் தேடுவதற்குள்ளாகப் போதும் போதுமென்றாகிறது. அப்படி கிடைத்துவிட்டாலும் ‘அப்பையனைப் பெற்றோர்’ கேட்கும் டவுரிக்கு நம் வாழ்நாளே கடன்பட்டல்லவா கழிகிறது. இத்தனை இன்னலுக்குக் காரணம் இவள் படித்தது தானே. இவளைப் படிக்க வைக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் நம் தகுதிக்கு ஏற்ற பையனை இவளுக்குக் கட்டி வைத்திருக்கலாமே. வீணா போனவள் படித்துவிட்டாளே. இப்போது அவளுக்கு ஏற்ற பையனைத்தானே தேடியாக வேண்டும்…


இத்தகைய புலம்பல்தான் பெண்களைப் படிக்க வைத்த பெற்றோரின் கூற்றாக அமைகிறது. இந்தியாவில் சாதி-வர்க்க-பொருளாதார இணைவு இருப்பதால் மேல்நான் சொன்ன வடிவம் கிராமத்துவாழ் பெண்களுக்கும் நகரத்துவாழ் ஏழ்மை வீட்டோருக்கும் இடைநிலை சாதியினர் சிலருக்கும் பொருந்தும். வேறுபிற வடிவங்களும் இருக்கலாம். 


“திருமணம் பெண்களின் படிப்பிற்கு எதிரானது. பெண்களைப் படிக்க விடாமல் செய்வது. அதனால் திருமணத்தைக் குற்றமாக்க வேண்டும்” - சும்மாவா சொன்னார் பெரியார். சிந்தித்துப் பார்த்தால் பெண்கள்மேல் இயங்கும் சமூக அழுத்தம், பண்பாட்டு வரம்புகள், பாலியல் குறித்தான சட்டம் இதன்காரணமாய் எழும் மனஉளைச்சல் ஆகியவற்றிற்குத் திருமணம் எனும் வடிவம் மூலக்காரணமாய் அமைகின்றது. குறிப்பாக,


1.திருமணம் பெண்ணுக்கான பாலியல் பாத்திரம் என்பதை உறுதிசெய்கின்றது. (சமைத்தல், உடலுறவு, குழந்தை வளர்ப்பு)

2.உலகிற்கும் பெண்ணிற்குமான அறிவு துண்டிப்பை ஆதரிக்கிறது. (சமையல் குறிப்பும் குழந்தை வளர்ப்பு முறைகளும் மருத்துவ மற்றும் சுகாதார டிப்ஸ்களை மட்டும் கற்றால்போதும் என்கிறது. பெண்கள் பலர் அரசியல் செய்திகளை அறிய ஆர்வமில்லாமல் இருப்பதை ஆய்க. பெண்கள் மலர், தேவதை முதலிய வார இதழ்களிலும் அரசியல் செய்திகளின் இன்மையை அறிக)

3.திருமணம் எனும் வடிவம் பெண் குழந்தையைச் சுமையாகப் பார்க்கக்கூடிய மனப்பாங்கை பெற்றோர்களுக்கு அளித்திருக்கிறது. (இவளைக் கட்டிவைத்தால் தான் எனக்கு நிம்மதி/ கடமை தீர்ந்தது முதலிய தொடர்களை ஆயலாம்)

4.மிகவும் ஆபத்தான சமூக வடிவமாக, பெண்களின் அறிவு வளர்ச்சிக்கு நேரடி தடையாகத் திருமணம் இருக்கிறது. பெண்களின் தடையற்ற கல்விக்குத் தடையாகவும் சிறுவயதிலிருந்தே வரம்பிலா கல்வி/ விரும்பியபடி கல்வி எனும் தன்னுரிமையையும் பெண்களிடமிருந்து பறிக்கிறது.


இன்னும் நுட்பமாக ஆய்ந்தால் பெண்-ஆண் இருபாலரும் (சமூக பொதுஉளவியல்படி) திருமணத்தால் பாதிக்கப்படுவதாகவே முடிவுகள் பெருகும்.


இவ்வாறு பாதிப்பை உண்டாக்கும் வடிவம் எவ்வாறு நீண்ட காலம் பிழைத்தது? (கிடைக்கும் தரவுகள்படி சுமார் 1500 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாவது திருமண வடிவம் நம்மிடையே நடைமுறையில் உள்ளது) மோசமான வடிவமாகின் அழிந்திருக்க வேண்டுமல்லவா? என்றால்,


தக்கன பிழைக்கும், வலியது வாழும் எனும் கோட்பாடு உயிரினங்களுக்கு (உடலினங்கள்) மட்டுமல்ல. நிகழும்/ வாழும் கருத்துக்களுக்கும் தான். எந்த கருத்து சமூக அதிகார சக்தியைப் பாதிக்காத வண்ணம் அல்லது அதிகார மேலாண்மையை உறுதிசெய்யும் வண்ணம் இயங்குகின்றனவோ அவையே உலக விடுதலைக்கானது அல்லது அறம்/ பண்பாடு/ ஒழுக்கம் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதாவது பிழைத்திருக்கும் எனலாம்/ வலியது எனலாம். திருமணம் எனும் வடிவம் இருபாலருக்கும் மோசம் செய்வதாய் இருப்பினும் ஆண்களுக்கான சொகுசு வாழ்க்கையை அது உறுதிசெய்கிறது. ஒப்பிட்டுப் பார்க்கையில் திருமணத்தால் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். திருமணம் ஆணுக்கு, எக்காலத்திற்குமான தன்பாலியல் தேவைக்கான உடலைத் தக்கவைத்துக்கொள்கிறது. தன்ஆண்மை நிறுவலுக்கான சாதனமாய் குழந்தை பேறுஉள்ளது. (ஆண்களுக்கு ஆண்மை நிறுவல் என்பது சமூகக் கட்டாயம்) தன்னுடைமை கடத்தலுக்கான/ சாதி கடத்தலுக்கான/ பிரம வாத அல்லது ஆரிய நடக்கைகளுக்குத் துணை செய்வதற்கான வடிவமாகவும் திருமணம் உள்ளது. இவ்வாறாக கருத்தியல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் (பிள்ளைபேறு/ உடைமை சாதிய உடல்) காலந்தோறும் எழும் அதிகார நிறுவனங்களுக்குத் துணை செய்யக்கூடிய சமூக ஒழுங்காகத் திருமணம் வளர்ந்து வந்திருக்கிறது. 


உடைமை நாகரிக வளர்ச்சியிலிருந்து அதிகார போக்கை தனக்கான அடிப்படை தேவையாக உறுதி செய்துகொண்ட ஆண்கள், திருமணற்ற வடிவத்தைப் பொய்யும் வழுவும் என்றிருக்கின்றார்கள். வைதீகம் உலகாயதர்களை (இந்திய பூர்வகுடிகளை) கட்டற்ற இன்ப நுகர்விற்காக வாழ்பவர்கள், யாரோடு வேண்டுமானாலும் புணர்ச்சி வைத்துக்கொண்டு வாழக் கூடியவர்கள் என்று எவ்வளவு கீழ்த்தரமாக எதிர்த்ததோ அதேபோன்று திருமணமற்ற சமத்துவமான பாலியல் நுகர்வைத் தமிழின் தொடக்க கால உடைமை அதிகார நிறுவனங்கள் இழிவானதாக, புனிதமற்றதாக, பொய்யும் வழுவுமாக பாவித்தது. சங்க கால பாடல்களில் வரும் பெண்கள் தங்கள் புராதனமான காமத்திளைப்பில் இருந்து ஒடுக்கப்பட்டதை எண்ணி வருந்துகிறார்கள். உடைமை நாகரிக வளர்ச்சி அவர்களை ஓர் ஆணுடன் மட்டுமே புணர அனுமதித்தது. (அதாவது திருமணத்தை ஆதரித்தது) திருமணத்தால் பெண்கள் தங்கள் காம உணர்வை மிகக் கடுமையாக அடக்க வேண்டிவந்தது. அதேசமயத்தில் ஆண்களுக்கு அந்தக் கட்டாயம் ஏற்படவில்லை. திருமண வடிவத்தை (புணர்ச்சிக் கட்டுப்பாடு) உடைமை நாகரிகம் ஆதரித்தாலும் அது பெண்களுக்கே கட்டுப்பாடுகளை விதித்தது. ஆண்களுக்கு அல்ல. அதாவது ஒரு பெண் வெளிப்பட மணந்த ஒரு ஆணுடன் மட்டுமே புணர்ச்சி (Sex) வைத்துக்கொள்ள வேண்டும். ஆண் வெளிப்பட மணந்த ஓர் பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொள்ளலாம். அதே சமயத்தில் ‘காமக்கிழத்தி, காதற்பரத்தை’ என்று எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம். அக்கால சமூகத்தில் இத்தகைய பெண்களுக்குப் (பரத்தை) பிள்ளை பெற்கும் உரிமை கிடையாது. ஆண் வெளிப்பட மணந்த தன்சாதி பெண்வழியாக மட்டுமே பிள்ளைபெற்றுக் கொள்ள வேண்டும். ஒருவேளை காதற்பரத்தையாலோ அல்லது காமக்கிழத்தியாலோ அச்சமூக ஆண்கள் பிள்ளை பெற்றால் அப்பிள்ளைகள் சமூகத்தால் ஒடுக்கப்படும். இதே பிறப்பது பெண் பிள்ளையாயின் அதுமீண்டும் பரத்தையாக்கப்பட வேண்டும். (சான்று மணிமேகலை) இதுதான் திருமணத்திற்கான/ பாலியல் நுகர்விற்கான தமிழ்ச் சமூக வடிவம்.


இந்த வடிவம் இன்றுவரை தொடராமலில்லை. அதன் திரிபு/ பரிணாம வடிவத்தையே இப்போது பார்க்கின்றோம். திருமணத்திற்குப் பிறகு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிக சமூக அழுத்தம் இருக்கின்றது என்பது இக்கட்டுரையின் தொடக்கத்திலே விளக்கப்பட்டது. பாலியல் மட்டுப்படுத்தல், தன்னுடல்மீதான உரிமை இழத்தல், அறிவு பெருக்கத்தை ஒடுக்கல் இவை தான் திருமணத்தால் பெண்களுக்கு கிடைத்த பெருமதிகள். சொல்லப்போனால் இரண்டாயிரம் வருடமாக உரன் இழத்தலில்தான் பெண்களின் வாழ்க்கையே ஓடுகிறது. உரன் இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்தான் ஆண்களின் வெற்றி வாழ்கிறது. இதைப் பொதுவாக எந்த ஆணும் வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில்லை.


தீசன்

2 கருத்துகள்

  1. இது மாதிரியான பிரச்சினைகளிலிருந்து வெளிவருது கடினம் தான்.

    என்ன தான் கருப்பப்பையைக் கழட்டி எரிந்தாலும் நான் இவ்வுலகில் போகப் பொருளாகவே பார்க்கப்படுகிறேன்.
    நிறைய சொல்லலாம்.. இவ்வுடலை அறுத்தெரிய..


    இந்தியாவில் பெண்களின் நிலை பைத்தியகாரனிடம் பஞ்சம் பிழைக்க வந்த கதை தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் தோழர். பெண்ணுடல் என்பது தற்கால நுகர்விற்கோர் பண்டம்.

      இந்த எண்ணத்தை எப்படி மாற்றுவதோ தெரியலை.. ரொம்ப மோசம் தோழர்

      நீக்கு
புதியது பழையவை