அண்மை

பேருந்து = அழுகாத பிணங்களின் ஊர்தி - சண்டைக்காரி

பேருந்து = அழுகாத பிணங்களின் ஊர்தி - சண்டைக்காரி


நான் ஏறிய பேருந்தில் நடத்துநரையும் என்னையும் தவிர மற்ற அனைவருக்கும் இருக்கை இருந்தது. சிறிது நேரம் கழித்து ஒரு நிறுத்தத்தில், ஒரு பாட்டி இறங்கினார். அந்த இடத்தில் சென்று நான் அமர்ந்தேன். எப்போதும் போல, என்னா ஊரு என்னா தெரு, அப்பா என்னா வேல பாக்றாங்க, நீ என்னா படிக்கிற… என்பது போன்ற வழக்கமான கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டு இருந்தபோது.. அவர் மருத்துவமனைக்குச் சென்று வருவதாகவும் 'மூட்டு வலியில உயிரே போய்டும் போல வீட்டுல எம்மோ வேல தான் நானும் செய்றது செத்தா தான் வலி நிக்குமோ என்னவோ! பொண்ணா மட்டும் பொறந்துடவே கூடாது.. என்று புலம்பிக்கொண்டு வந்தார்‌.


உச்சி வெயில் நேரம், கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை காலம்வேறு.. அதனால் பெரிதாகக் கூட்டமும் இல்லை. நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வருவதற்கும் சற்று நேரத்திற்கு முன் ஒருவர் பேருந்தின் முன்பக்கம் வழியாக ஏறினார். அவர் கண்கள் பின்னிருக்கைகளை நோக்கி இடம் இருக்குமா!? என தேடியது. இடம் இல்லை என்பதால், கம்பியை பற்றிக்கொண்டு நின்றிருந்தார். நான் இறங்கத்தானே போகிறேன், அவரை அமர செய்வோம் என முன்னதாகவே  எழுந்துவிட்டேன். எழுந்தவுடனேயே என் அருகில் அமர்ந்திருந்த பெண்மணி, இருக்கையின் மையத்திற்கு நகர்ந்து நன்றாக அமர்ந்துக் கொண்டார். அதுவரை கீழேயிருந்த பைகளையும் எடுத்து மேலே வைத்துக்கொண்டார். 'அக்கா, அங்க எடம் இருக்கு' என்றேன். அவரும் இருக்கை நோக்கி சென்றார். 'அம்மா கொஞ்சம் தள்ளி ஒக்காரும்மா என்றார்'. அவர் இரண்டு, மூன்று முறை சொன்னார். ஆனால், அந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி முகத்தைக்கூட திருப்பாமல் விடாப்பிடியாக, ஜன்னல் பக்கம்  முறைத்துக்கொண்டே முகத்தை வைத்திருந்தார்.


'எம்மா உன்னத்தாம்மா.. காதுல விழுவுதா இல்லியா தள்ளி உக்காரு என்றார், சற்றே உரத்த குரலில். நகர்வதாக தெரியவில்லை. அந்த அக்கா இதற்கு மேலும் கேட்க வேண்டாம் என நினைத்து முன்பு நின்றுக்கொண்டிருந்த இடத்திற்கே வேகமாக வந்து நின்றுவிட்டார். நடத்துநர் உட்பட நானும் எல்லோரும் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு தான் இருந்தோம். எதனால் அந்த மூட்டுவலி  பெண்மணி இவ்வாறு நடந்துக்கொள்கிறார் என ஒருவாறு புரிந்துக்கொண்டேன். அதை தவிர காரணம் வேறு இருக்க முடியாது என்று தோன்றியது.


'இன்னைக்கி வாங்கிக்கட்டிக்க ஒருத்தி சிக்கிட்டா' என்று நினைத்துக்கொண்டு.. கோவத்தினாலும் ஒருவித அவமதிப்பினாலும் ஏற்பட்ட வெறுப்பினால் அவரது கைகள் கோவமாக  கம்பியைப் பிடித்திருந்தது இறுக்கமாக. 'அக்கா நீங்க வாங்க க்கா' என்று அவர் கையைப்பிடித்தேன். கையை பிடித்த உடனேயே அவரின் இறுக்கம் குறைந்ததை உணர முடிந்தது.


இன்னும் அழுகி நாற்றமெடுக்காமல் ஒய்யாரமாக உக்கார்ந்திருந்த அந்த  பிணத்தின் பக்கத்தில்  சென்றேன், திருநங்கை அக்காவோடு.


தள்ளி உக்காருங்க, இடம் தான் இருக்குல்ல, எவ்ளோ தடவ கேக்றாங்க!?!!! என்றேன்.


அதுவரை திரும்பாத அவர் கழுத்து சட்டென என் பக்கம் திரும்பி… 'நீயா இருந்தா ஒக்காருவியா, என்ன தள்ள சொல்ற, உன் வேலைய பாரு, அது பக்கத்துலலாம் என்னால உக்கார முடியாது.' என்றார் கோவமாக.


'அவங்க எவ்ளோ மரியாதையா அம்மான்னு சொன்னாங்க, அது இதுன்னு பேசாதிங்க, மரியாதையா பேசி பழகுங்க, அம்பது வயசுக்கும் மேல ஆகிருக்கும் போல!' என்றேன்...


இங்க பாரு… சின்ன புள்ளையா இருக்க. அது கோசான்னு தெரிஞ்சிருந்தா இப்டி நீ பரிஞ்சு பேச மாட்ட, என்றார் என்றது. இன்னும் புதைக்கப்படாத பிணம்.


இந்த வார்த்தையக்கூட  சொல்லக்கூடாதுன்னு தெரியுமா தெரியாதா… அது இதுன்னு சொல்றதுக்கு அவங்க என்ன ஆடா மாடா...? நம்ம ஊருல நீங்களும் அது தான் நானும் அதுதான். நீங்களே அவங்கள அதுன்னு சொல்றிங்க. நீங்க பண்றது ரொம்ப தப்பு… அவங்க நினச்சா சட்டப்படி உங்க மேல இப்ப கம்ப்ளைண்ட் பண்ணமுடியும் தெரிஞ்சிக்கோங்க… இப்பவாச்சும் எடம் குடுங்க அவங்க உக்காரணும் இல்லன்னா நீங்க எழுந்திரிங்க என்றேன்.


'எம்மா என்னாம்மா உன் ப்ரச்சன நீ எறங்க தான போற வாம்ம்மா' என்றார் நடத்துநர். நீங்க பேச வேண்டியதலாம் நா பேசிட்டு இருக்கேன். உங்க மேலையும் சேத்து கம்ப்ளைண்ட் குடுப்பேன். இவங்கள உக்கார வைக்க முடியுமா? முடியாதா? என்றேன், நடத்துநரை நோக்கி. இவ்ளோ சொல்லுதுல்ல நீ தள்ளித்தான் உக்காந்துத்தொலையேன். வீட்ல கடக்காம வந்து தொலஞ்சி எங்க உயிர வாங்குதுங்க, என்றார் என்றது இன்னும் எரிக்கப்படாத ஆணாதிக்கம் பிடித்த பிணம்.


அந்த அழுகாத பிணத்துக்கு ஆதரவு குரலாக இன்னொரு பிணத்தின் குரல் வந்தவுடன் தகாத வார்த்தைகளைச் சொல்லி என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டது அந்த மூட்டுவலி பிணம்… அத்தனையும் பெண்களை இழிவுப்படுத்தும் வார்த்தை தான் என்பதுக்கூட தெரியாமல் ஒரு பெண்ணே இம்மாதிரி பேசுவதை என்னவென்று சொல்வது.


நீ ஏன்டா எனக்காக எல்லார்ட்டையும் பேச்சு வாங்குற நான் இன்னும் அற மணிநேரத்துல எறங்கிடுவேன், நீ யாருன்னே தெரியாது எங்களுக்காக பேச இப்படி ஒரு ஆளு இருக்குன்னு நெனைக்கவே ஒரு மாதிரி இருக்கு' என்றார், அந்த அக்கா. 'நின்னு நின்னே பழகிட்டு என்னா பண்றது.. நீ போய்ட்டு வாடா' என்றார், கண்கள் கலங்கியது அவருக்கு.


'அழுதாலாம் ஒன்னும் ஆகாது க்கா. தள்ளி உக்காரதப்போவே ஓங்கி ஒன்னு பொளிச்சுன்னு வச்சிருக்கனும். இப்டி தினமும் பத்து  பேருக்குக் குடுத்தா தான் மாற்றம் வரும். ஒதுங்கி போனா கடசிவரைக்கும் இப்டி தான் நடத்துவாங்க', என்றேன் ஆச்சரியமாக பார்த்தார்.


இருக்கையில் இருந்த பையை எடுத்து நானே கீழே வைத்தேன். உக்காருங்க என்றேன். அவர் உக்கார வருவதற்குள் அந்த பிணம் வெளியே வந்து நின்றுக்கொண்டது.


ஓஓ.. ரொம்ப நல்லது. அவ்ளோ கால் வலியோட நிற்கக்கூட செய்வாங்களாம். ஆனால், திருநங்கை பக்கத்தில் அமர மாட்டார்களாம். யாருக்கு வலிக்கப்போது நல்லா நில்லு என்று நினைத்துக்கொண்டே இறங்கினேன்...


ஜன்னல் வழியாக எனக்கு கையசைந்தார், மகிழ்ச்சியாக... பேருந்து கண்ணை விட்டு மறையும் வரை கையசைத்துக்கொண்டே இருந்தோம், இருவரும்.


பேருந்து நிறுத்தத்திலிருந்து என் வீட்டிற்குச் செல்ல அரைமணிநேரம் நடக்க வேண்டும். அந்த அக்காவைப் பற்றியே என் நினைவு இருந்தது...


நான் இதுவரை நேரில் சந்தித்த திருநங்கையருள் இவர் சற்றே வித்தியாசமானவராக இருந்திருக்கிறார். அவர் புடவைக் கட்டியிருக்கவில்லை. பொட்டும் வைத்திருக்கவில்லை. கையில் ஹேன்ட்பேகும் இல்லை. எந்த அணிகலன்களும் இல்லை. முகத்துக்கு எந்த முகப்பூச்சுகளும் இல்லை. நான் நேரில் பார்த்தவரை சுடிதார் அணிந்த முதல் திருநங்கை அவர்தான். துப்பட்டாவை தலைக்குப் போட்டு காதோரம் சொருகி இருந்தார். கூந்தலும் வளர்த்துக் கொள்ளவில்லை, என்று தான் தோன்றுகிறது. என் தலையில் கைவைத்து என்னை ஆசீர்வதிக்கவும் இல்லை.


பாலினம் என்பதே ஒரு நிகழ்த்துதல் தான்.‌ "பாலின நிகழ்த்துதல் இல்லாமை" என்ற இருப்பு அவரிடம் இருந்தது. நினைக்கவே ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.


கடைத்தெருவிற்கு அருகில் உள்ள குப்பை மேட்டில் அழுகிய காய்கறிகள், பழங்கள், விற்பனையாகாத வதங்கிய பூக்கள், மீந்து போன சோறு, குழம்பு, பாலித்தீன் பைகள் என எல்லா குப்பைகளும் சேர்ந்து குடலை பிடித்து வெளியே எடுக்கும். அந்த வழியாகப் போகிறவர் யாரும் நடந்து செல்வதில்லை. ஓடத்தான் வேண்டும். ஆனால், நான் நீண்ட நேரம் நின்று ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். கறுப்பு பன்றி, வெள்ளை கொக்கு, காகங்கள், மாடுகள், அதன் மீது குயில்கள் என ஒற்றுமையாக உணவு உண்டுக்கொண்டிருந்தார்கள். உண்மையில் அவர்கள் தான் உயர்திணை என்று எண்ணியபடியே நடக்கத் தொடங்கினேன். இரண்டு பன்றிக்குட்டிகளோடு வயதான நான்கைந்து பன்றிகள் சாலையோரத்தில் குப்பை மேட்டிற்குச் செல்வதற்காக நடந்தும் அதே சமயத்தில் ஓடாமலும் வந்துக்கொண்டிருந்தார்கள். டூ டூ இங்க வாங்க என்றேன்… குட்டி பன்றிகள் இரண்டும் என்னிடம் வருவது போல நெருங்கினார்கள். திடீரென முதிர்ந்த பன்றியொன்று குரல் கொடுத்தவுடன் அவர்களிடமே ஓடிச்சென்றுவிட்டார்கள். எல்லா பன்றிகளுமே தலைதெறிக்க ஓடிவிட்டார்கள். அந்த முதிர்ந்த பன்றி என்ன சொல்லியிருக்கும்...!! என்று எண்ணியபடியே மூச்சை ஆழமாக இழுத்தேன்.


அவர்கள் பார்வையில் மனிதர்கள் என்றாலே நாற்றமெடுக்கும் பிணம்தானே. என்மீதிலும் பிண நாற்றம் அடிக்கத்தானே செய்யும்.


சண்டைக்காரி

3 கருத்துகள்

  1. சிறுகதை சிறப்பு.
    பாலின சமத்துவத்தை சமுதாயத்துக்கு புரிய வைக்க இப்படிப்பட்ட கதைகள் உதவும்.

    பதிலளிநீக்கு
  2. சண்டைக்காரியா, கோவக்காரியா, திமிரு புடிச்சவளா, பைத்தியக்காரியாவே இரு... அப்பதான் கொஞ்சமாவது அன்பு மிஞ்சி இருக்கும்

    பதிலளிநீக்கு
புதியது பழையவை