எழுதிய கட்டுரைகளை நெருங்கியோரிடம் வாசித்துக் காட்டுவது என் வழக்கம். அப்படியாக வாசிக்கும் போது சிலர் என்னிடம், ‘எனக்கு எதுவுமே புரியல’ என்கிறார்கள். இப்படி ‘ஒன்னுமே புரியல’ என்று கூறும் மனநிலையை நாம் கொஞ்சம் புறநிலையாக ஆய்வோம்.
புரியவில்லை - என்ற ஒன்று இருக்கிறதா? புரியவில்லை என்றால் என்ன? ஒன்றுமற்ற நிலையா? சூன்ய பொருட்கோடலா? (அதாவது ஒன்னுந்தெரியாத சுழியா?) சொல்வதற்கு ஒன்றுமற்றநிலை?, எண்ணுவதற்கு ஒன்றுமற்றநிலை?, விளங்கி கொள்ளமுடியாத ஏதோ ஒரு நிலை? (புரியவில்லையே புரியலை)
புரியவில்லை என்பதாக ஒன்றே இல்லை என்பது தான் என் துணிபு. நாம் எந்த ஒன்றைப் ‘புரியவில்லை’ என்பதற்குள் அடக்குகின்றோமோ அதன்மீதான காட்சி, அனுமான, நூல் பழக்கம் (முன்னறிமுகம்) நம்மிடம் இல்லை. அதனால் உடனே புரியவில்லை என்று கூறிவிடுகின்றோம். ஆனால் அவ்வளவு எளிதாக மனிதர்கள், ‘எனக்குப் புரியவில்லை’ (புரிந்துகொள்ளும் அறிவில்லை) என்பதை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். உதாரணமாக, ‘வானொலி அறிமுகமானபோதில் வானொலிப்பெட்டியுள் குட்டி மனிதர் (லில்லிபுட்) இருப்பதாக மக்கள் நம்பினர்’ என்று எழுத்தாளர் சுஜாதா சொன்னதாக நினைவு.
இரவில் கயிற்றைப் புரிந்து கொள்ள முடியாத சமயத்தில் பாம்பாகப் புரிந்து கொள்கின்றோம். நிழலைப் புரிந்து கொள்ள முடியாத சமயத்தில் பேயாகப் புரிகிறோம். நம் அறிவின் இயலாமையைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் கடவுள் என்கிறோம்.
இப்போது கொஞ்சம் உணர்வு தளத்தோடு இயைத்துப் பார்த்தால், கடவுளும் புரியவில்லையும் ஒரே பொருட்தளத்தால் ஒன்றுகிறது.
“மனிதன், தான் எல்லாம் அறிந்தவன் என்கின்ற ஆணவத்தை உடையவன் ஆதலால், தன் புத்திக்கு எட்டாததைத் தனக்குத் தெரியவில்லை என்று கண்ணியமாய் ஒப்புக்கொள்ளச் சுலபத்தில் சம்மதிக்க இஷ்டப்பட மாட்டான் ஆகையால், அங்கு - அதாவது தனக்கு அறிவு கட்டையாய்ப் போனபோது, அவனுக்குக் கடவுள் நம்பிக்கையும் கடவுள் செயலும் வந்துதான் தீரும். இதை மாற்றுவது சுலபமான காரியமல்ல. பூரண அறிவு வளர்ச்சி பெற்றால்தான் முடியும் - பெரியார்”
வியப்பு என்பது எப்போது தோன்றுகிறது? அறிவு செயல்படாத அந்த ஒருநொடி தான் வியப்பு. பார்த்து வியந்த நிகழ்வின்/ பொருளின் தருக்கம் தெரிந்தால் வியப்பு வருமா? அறிவு வேலை செய்தால் வியப்பு வருமா? வராது. அதுதான் அறிவு. பேரறிவாளருக்கு வியப்பிருக்காது. வியப்பு என்பது அறிவு இயங்கா நிலையில் பிறப்பது. அறிவு முதிர்ச்சி (அனுபவ அறிவு/ பழக்கம்/ முன்னறிவு) வியப்பைத் (பழக்கமில்லாதது/ புதிது) தடை செய்கிறது.
இப்படித்தான் ‘புரியவில்லை’யையும் நாம் எதிர்க்க முடியுமே ஒழிய புரியவில்லல என்று கூறிக்கடப்பதினால் யாருக்கு நட்டம்?
இரண்டாவது, புரியவில்லை என்று கூறுவதுகூட ஒருவகை புரிதலே. புரியவில்லை என்பதான புரிதல் அது. உதாரணமாக, ஏதோ ஒன்றை நான் புரிந்துகொள்ள விழைகின்றேன் எனில் மூளை அதுதொடர்பான என் முன்னறிவுகளைத் தொகுக்கிறது. முன்னறிவு (காட்சி, அனுமானம், நூல் அறிவுகள்) இல்லாதபட்சத்தில் ‘புரியவில்லை’ என்ற ஒரு சொல்லைக் (முன்னறிவைக்) கூறி அப்புரியாத ஒன்றை விளக்(ங்)கியதாய் அது நிம்மதி அடைகிறது.
மொழி எப்போதும் எல்லாவற்றையும் தன் எல்லைக்குள் இழுத்துப் போட்டுக்கொள்ள விரும்பும். இப்படித்தான் உவமைகள் உருவாகின்றன. கடல்கடந்து திரும்பிவந்த பயணர்கள், தம்மக்களிடம் அங்கு தாங்கண்ட பொருட்களை விளக்க இங்கு தன்நிலத்தில் இருக்கும் பொருட்களுடன் ஒப்பிட்டுக் கூறி அதுமாதிரி இருக்கக்கூடியது என்பார்கள். இதனால் அப்பொருள் தன்னிலத்தில் இல்லாமல் போனாலும் தன்மொழிக்குள் வந்துவிடுகிற ஆறுதல் கிடைக்கிறது. அப்பொருளின் அனுபவமே இல்லாதவர்களாலும் அப்பொருளைப் புரிந்து கொள்ள முடிகிறது. இதனால் புரிதல் என்பதோடு மொழி, முன்னறிவு (காட்சி, அனுபவம், படிப்பு) ஆகியவை தொடர்புபடுகின்றன. எனவே மொழியைப் பயன்படுத்தும் யாரும் எதுவும் புரியாமல் இருப்பவர்கள் அல்லர். புரிந்து கொள்ள தயார் ஆகாதவர்கள். முன்னறிவு அனுபவம் இல்லாதவர்கள். அவ்வளவே.
எதையுமே ஒப்பிட முடியாதபட்சத்தில், எதோடும் பொருத்திப்பார்க்க முடியாத சமயத்தில் (மொழி எல்லைக்குள் கொண்டுவர முடியாதபோது) ‘புரியவில்லை’ என்ற சொல்லால் அதைப் புரிந்து கொள்கின்றோம். இதனால் தான், “இதன் மீதான என்புரிதல் புரியவில்லை என்பதே” என்று கூறுகிறார்கள்.
பொதுவாகவே மொழி மனிதர்களாகிய நாம் எல்லாவற்றையும் விளக்க முனைகிறோம். அதாவது புரிந்து கொள்ள பார்க்கிறோம். அதனால் தான் என்னமோ.. ‘விளக்குதல்’ எனும் வன்முறையை ஒடுக்கிய புத்தரின் மௌனத்தைக் கூட நாம் விட்டுவைக்கவில்லை.
தீசன்