அண்மை

பெண்ணுடல் எனும் நினைவூட்டிகள் - தீசன்

 

பெண்ணுடல் எனும் நினைவூட்டிகள் - தீசன்

குறிப்பு - இக்கட்டுரை மேலை நாட்டுக் கோட்பாடுகளைப் பயன்படுத்திப் பார்க்கும் நோக்கில் எழுதப்பட்ட கல்வியியல்சார் கட்டுரையே அன்றி எந்த ஒரு நிறுவனத்தையும் ஊடகத்தையும் நபரையும் குற்றஞ்சொல்ல எழுதப்பட்டதன்று

____________________


இந்திய விளம்பர உலகம் பொருட்களைச் சந்தைப்படுத்த பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி வருகின்றன. அதில் காலனியத் தாக்கமுள்ள ஓர் உத்தியைப் பற்றி தான் இன்று சொல்லவுள்ளேன். எத்தனை வன்மமுள்ள உளவியலோடு மனித நனவிலி இயங்குகிறது என்பதை இதன்வழி நீங்கள் உணரலாம். அல்லது மறுக்கவும் செய்யலாம். அது இருக்கட்டும். 


பொதுவாகவே விளம்பரங்களில் தோன்றும் மனிதர்கள் மகிழ்ச்சியான ஓர் உணர்வைக் கடத்துபவர்களாக, கவலையற்றவர்களாகத் தெரிவார்கள். அது எல்லோர்க்கும் தெரிந்ததே. வண்ணமயம், மகிழ்ச்சி, உறவுகளோடு களித்திருத்தல், உண்டாட்டு, விழா முதலிய சமூக நடவடிக்கைகளை ஓர் ஊடகமாகக்கொண்டு விளம்பரப்படுத்த வேண்டிய பொருளின் மீதாக நன்மதிப்பை (Positive Value) உண்டாக்குவது விளம்பரங்களின் முதல் வேலை. மைய வேலையும் கூட. 


ஆனால் இத்தோடு விளம்பரங்களின் வேலை முடிந்துபோவதில்லை. அதற்கும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தனக்கான வாடிக்கையாளரைக் கண்டறிதல், 

தேவையை அறிதல், அதை விளக்குதல், (அதும் சுருக்கமாக விளக்க வேண்டும்) உளவியல் கட்டமைப்பு, நிறுவனம் மற்றும் பொருளின் மீதான உணர்வை தரப்படுத்தல் (Brand) அதன்வழி மக்களுக்குப் பழக்கப்படுத்தல், புழக்கத்தில் இருப்பின் மீண்டும் மீண்டும் மக்கள் மனத்தில் ஆழப் பதிய வைத்தல். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.


இதில் விளம்பரங்களினால் ஏற்படும் மிக முக்கிய தாக்கம் பொருளின் ‘குறியதிகாரம்’/ ‘குறிநிலையாக்கம்’ செய்தலே. குறியதிகாரம் அல்லது குறிநிலையாக்கம் என்பது வேறுறொன்றுமல்ல… ‘Good Day’ எனும் தொடர் இந்தியச்சூழலில் தன்பொருள் உணர்த்தாது ‘ரொட்டி’ எனும் பொருளைத் தரும். ஆகுபெயரைப் போல. அதே போல் தான் ‘Kiss Me’ யும். இது உள்ளடக்கத்திற்கேற்றாற் போல இயங்கினால் சிக்கல் இல்லை? உதாரணமாக, டைகர் எனும் சொல் பொதுவெளியில் அதன் பொருளும் (புலி) ஒரு பெட்டிக்கடையில் ‘ரொட்டி’ எனும் பொருளும் தருவதாய் இருக்கிறது. எங்கே சிக்கல் என்றால் (விளம்பரத்தின் வெற்றி) ‘சாக்லேட்’ என்று சொன்ன உடனே ‘Dairy Milk’ ஞாபகம் வரும்போதுதான். சிப்ஸ் என்று சொல்லும்போதே ‘Lay’s’ ஞாபகம் வரும்போதுதான். ஆனால் எல்லோரும் அப்படி நினைத்துவிடப் போவதில்லை. பெரும்பான்மையோரை அப்படி நினைக்க வைப்பதில் தான் விளம்பரம் வெல்கிறது.


அதுவும் அவ்வளவு சுலபமில்லை. உதாரணமாக சோப்பை எடுத்துக்கொள்வோம். இந்தியாவில் சோப்பு விற்பனைக்குப் போட்டி அதிகம். அழகாக்கும் சோப்பு, (வெள்ளையாக்கும் சோப்பு) சருமப் பிரச்சனையிலிருந்து பாதுகாக்கும் சோப்பு, இளமை தரும் சோப்பு, பெண் சோப்பு, ஆண் சோப்பு என்று ரகரகமாய் சோப்புகள் விளம்பரம் செய்யப்படுகின்றன. இப்படி இருக்க எப்படி குறிநிலையாக்கம் செய்வது? அதிக விற்பனையைச் செய்து காட்டுவது?


இங்கு தான் விளம்பரங்கள் மிகத் தந்திரமாக மனிதர்களின் கூட்டுநனவிலியைப் படிக்கின்றன. பயன்படுத்திக்கொள்கின்றன. இனி நன்றாகக் கவனித்துப்பாருங்கள். “ஒரு விளம்பரம் எந்த பொருளை விற்கவருகிறதோ.. அந்தப் பொருளின் நிறத்தை அந்த விளம்பரத்தில் வரும் பெண்ணுக்கு உடையாகக் காட்டும்.”


நான் சில உதாரணங்களைத் தருகிறேன்.











மேலே நான் குறிப்பிட்ட படங்களில் பெண் பாலுமையர்க்கான பொருள் ஒன்று தான். பிறவெல்லாம் எல்லோருக்குமான பொருட்களே. இருந்தாலும் பொருளின் நிறம் பெண்ணுடலுக்கே நிறநகல் செய்யப்பட்டிருப்பதைக் கவனிக்க.


இத்தகைய விளம்பரங்களில் பெண்ணுடல்கள் அப்பொருளின் நினைவூட்டிகளாக இயங்குகின்றன. பொருளின் நிறம் மறந்தாலும் அப்பெண்ணுடல் அப்பொருளைப் பற்றியான தரவை நனவிலிக்குள் சேர்ப்பிக்கின்றது. இதனால் பொருளின் பெயர் கடத்தப்படாவிடினும் தோற்றம் பதிவு செய்யப்படும். 


நுகர்வை நோக்கியும் துய்ப்பை நோக்கியும் செல்லும் பாலியலை மையப்படுத்திய உளவியல் எல்லோர்க்குமானதாய் இருக்கும் போது இது சாதாரணமாகக் கடக்கப்படும் செயல்பாடாகின்றது. குறியாதிக்கம் செய்ய முடியாத ஒரு பொருள் தன்நிலையாக்கத்திற்குப் பெண்ணுடல்களை ஊடகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஆண் பார்வையில் இருந்து இவற்றை அணுகுவதாகவும் படுகிறது. இதைத்தான் ஃபூக்கோ விக்டோரியன் காலத்திலிருந்து தோன்றும் பாலியலை மையப்படுத்தியதான உருவாக்கம் என்கிறார்.


அதாவது விக்டோரியன் காலத்திற்குப் பின்னே தான் ஒரு பண்டத்தின் மீது பாலியல் வேட்கையை வைப்பதன் மூலம் அதை வணிகரீதியாக வெற்றியடைய வைக்க முடியும் எனும் கருத்து எழுந்தது. இது இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சியால் விரவியிருக்கலாம். விளம்பர உத்திகள் பொதுவாகவே மேலை நாட்டுக் கல்விமரபில் இருந்து கற்பிக்கப்படுகின்றன. அதனால் கூட தற்போதைய விளம்பர முறைகளில் இத்தகைய போக்கு இருக்கலாம். 


ஒவ்வொரு விளம்பரமும் மூளை கிளர்ச்சியைக் குறைக்கா வண்ணம் நகர்த்தப்படுவதை சூரிய நிறுவனம் முதலான தொலைக்காட்சிகள் செய்கின்றன. இதைப்பற்றி விரிவாகப் பின்னே எழுதுகிறேன். இதனால் தமிழ் விளம்பர உலகிலும் பெண்ணுடல் ஓர்மையறிவுடனேயே தான் கையாளப்படுகிறது என்பேன்.


ஆணுடல் நுகர்விற்குரிய உடலன்று. அதை ஓர் விளம்பரத்திற்கான ஊடகமாய் பயன்படுத்த முடியாது. எங்கே நுகர்வு இருக்கிறதோ அங்கே தான் விளம்பரம் இருக்கும். பெண்ணுடல் சமூகத்தால் நுகர்விற்குரியதாய் மாற்றப்பட்டு விட்டது. அதை எல்லோரும் நுகர்கிறார்கள். எல்லா உறுப்பும் நுகர்கின்றது. பொதுபுத்தி என்பதை ஆணாக உருவகப்படுத்தும் போது பெண்களை இதிலிருந்து நீக்கிவிட முடியவில்லை. 


விளம்பரப் பொருள் நிறத்தைப் பெண்ணுடல் மீது நிறநகல் செய்வது மனித நனவிலி மனத்தின்/ பாலியல் துய்ப்பின் மீதான நிறுவன ஆதிக்கத்தைக் காட்டுகிறது. தற்போது உங்கள் எதிர்பாலீர்ப்பும்/ பாலியல் துய்ப்பும் ஓர் பண்டம். அதை வைத்தும் வணிகம் செய்யலாம். பொருட்களை எளிதாக விளம்பரப்படுத்தலாம். அதும் பார்க்கும் உங்களுக்கும் நடிக்கும் அவருக்கும் தெரியாமலே செய்யலாம்.


தீசன்

கருத்துரையிடுக

புதியது பழையவை