அண்மை

பாலின விடுதலை - சிவனி

பாலின விடுதலை - சிவனி


எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கவே இவ்வுலகம்.  முன்னோர்கள் சிலரின் வேண்டுதல்களில் கூட “எல்லாரும் கை கால் சுகத்தோட நல்லா இருக்கணும்” என்ற பொதுநலமான வேண்டுதல்களைக் கண்டு கேட்டிருக்கலாம். ஆனால் இவ்வாறான எண்ணங்கள் இப்போது பாம்புகள் மேல்சட்டை உரிப்பது போன்று உள்ளது. எல்லோர்க்குள்ளும் பாலின அடிப்படையிலான ஒடுக்குமுறை எண்ணங்களே புகுத்தப்பட்டுள்ளன. குறிப்பாகப் பல்வேறு பாலின வகைகளை இப்போது அறிமுகப்படுத்தும் நிலையில் தான் இன்று உலகமும் உள்ளது. அவர் யார்? நான் யார்? என்ற பார்வைகளில் வெளிப்படையாக ஒளிந்திருக்கும் அதிகார குணமிக்க உயிர்கள். பாலற்ற இனங்களாக வாழ்வதிலேயே மகிழ்வு என நினைக்கிறேன். ஒவ்வொரு உயிரும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதற்கும், ஒடுக்கி இருப்பதற்கும் வேறுபாடு உண்டு. சார்ந்து வாழ்தல் என்பதே மெய்யான வாழ்வு ஆகும். பாலின விடுதலையும் சார்ந்திருத்தலில்  தான் விளையும். 


எனது அவளான நடப்பியல் நிகழ்வில்: பேருந்து பயணத்தில் நாம் அனைவருமே இதனை கண்டு இருப்போம். திருநங்கைகள்  உதவி கேட்பதையும், உதவி செய்வதையும் (ஆசிர்வதிப்பது). முதுகலை முடித்த கையோடு அவள் கல்வி சார்ந்த அடுத்தகட்ட நிகழ்விற்க்காகத் தேர்வு எழுத விருதுநகருக்குப் பயணம் மேற்கோள்கிறாள். தேர்வு முடிந்து தனது ஊருக்குச் செல்லும் வேலையில் பேருந்து பயணத்தில் ஒருவருடனான சந்திப்பு நடைபெறுகிறது. சந்தித்த நபர் இவரிடம் வெகுநேரம் உரையாடி வருகிறார். சிலமணி நேரத்திற்குப் பிறகு பேருந்து நிலையம் ஒன்றில் பேருந்து நிற்கிறது. திருநங்கை ஒருவர் உதவி கேட்டு வருகிறார். இவள் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறார். அருகிலிருந்த ஒரு வயதான பெண்மணி பெண்ணாய் இருந்து கொண்டு அதுங்களுக்கு பணம் தருகிறாயே? என்று அனைவரின் முன்னிலையிலும் இவளிடம் கடிந்து கொள்கிறார். அதுங்களுக்கு என்ன? கால் கை நல்லா தான இருக்கு, உழைக்கட்டுமே. அதுங்களும் அதுங்க உடுத்தியிருக்கிற துணியும், என்று 5நிமிடம் தன்னுடைய மனித நேயமற்ற உள்ளத்திலிருந்து வார்த்தைகளைக் கொட்ட தொடங்கினார். அந்த வயதான பெண்மணிக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம்? என அவள் வாய்மூடி சிந்தித்துக் கொண்டே நிம்மதியற்றவளாய் அமர்ந்திருக்கிறாள். திருநர்கள் இவ்வாறு இருப்பதற்கு நாம் தானே காரணம். அவர்களுக்கு வேலை தருவதற்கு நமக்கு தானே மனமில்லை. அவர்களைப் பாலியல் தொழிலுக்கு தள்ளுவதும் நாம் தானே. இவ்வாறு அனைத்தையும் அதிகார குணமிக்க நாம் செய்து விட்டு எவ்வாறு இவருக்கு இப்படி எல்லாம் பேச மனம் வருகிறது. எல்லோருக்கும் மனம் ஒன்றே என்பதை இந்தப் பெண்மணி ஏன் இத்தனை வயதிலும் புரிந்து கொள்ள மறுகிறார் என தன் சிந்தனையை கவிதையாக எழுதி தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்கிறாள்.


"மாற்றம் ஒன்றே மாறாதது வாசக்கத்தில் மட்டும் 

மாற்றம் அடைவதை 

இவ்வுலகம் ஏற்பதில்லை 

ஏனோ?”


இவ்வுலகம் பலவகையான மாற்றங்களைத் தினமும் பிறப்பித்துக்கொண்டிருப்பினும், பிறப்பிப்பதற்கான காலதாமதம் என்பது அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது.  அவ்வாறான மாற்றங்களும் மக்களிடத்தில் பெரும்பான்மையையும், விருப்பு வெறுப்பின்றி ஏற்றுக்கொள்ளுதலையும்  கொண்டுள்ளதா? என்றால் மனமில்லாமல் சொல்கிறேன் அவ்வாறு முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.   


அனைத்திலும் மாற்றம் மாற்றம் என்று  நாம் பேசிக் கொண்டிருப்பினும் அனைத்திற்குமான வழிமுறைகளை முன்னமே வகுத்தே வைத்திருக்கிறோம். இந்த காரியம் இப்படித்தான் வளர்ச்சியடைய வேண்டும் என்றும் அவ்வாறு இல்லையேல் அது எவ்வாறான நன்மையை நமக்குள் விளைவிப்பினும் ஏற்கப்படுவதில்லை. இங்கு சிந்திப்பதில் பிரச்சினை இல்லை. யார் சிந்திப்பது? எதன் மீதான விடுதலையை அச்சிந்தனை  வழங்கிருக்கிறது என்பதில் தான் பிரச்சினை. ஆதாலால் நாம் பொது சமூகமென முட்டாள் கூட்டங்களை நினைவில் நிறுத்திக்கொண்டு அவர்களிடமும் நம்மை நிரூபிக்க நினைப்பதே நாம் செய்யும் தவறு என்று எண்ணுகிறேன். நமக்காக நாம் முன்னேறுவோம். அனைவரும் அனைவரையும் ஒன்றென நினைத்து ஒன்றாகட்டும் நம்மோடு.


அனைத்து வடிவங்களையும் ஏற்றுக்கோடல் என்பதே மனித வாழ்விற்கும் நலம் பயக்கும். ஒன்றிரிலிருந்து ஒன்றை வித்தியாசப்படுத்துதல், அந்த வேறுபாட்டிற்கு உடன்பட்டவாறே சந்ததிகளைக் கட்டமைத்தல் இப்படியான நிகழ்வே பெரும் பிரிவுகளையும், ஒன்றின் மீது மற்றொன்றிற்கு ஏற்றத்தாழ்வு எண்ணத்தையும் கொண்டு வருகிறது.  பாலின விடுதலை என்பது இங்கு விரைவில் சாத்தியம் என்றே நமக்குப் படுகிறது. சமூகப் பாலினங்களும் தன்னை தானே அழித்துக் கொள்ளும் நிலையும் வரும். இங்கு யாரும் முழுமையான சுதந்திர வாழ்வை வாழ்வதில்லை. இருப்பினும் தன்னை முழுமையாக வெளிப்படுத்தாமல் இறப்பதிலும் இங்கு யாருக்கும் விருப்பமில்லை. ஆதலால் பாலின விடுதலையை நோக்கி அனைவரும் செல்வார்கள் என்ற எண்ணம் எனக்குண்டு. விட்டு விடுதலையாகி போ என்ற பாமாவின் (மனுசி - நாவல்) கருத்துப்போல பாலின விடுதலையை அடைவோம்.


சிவனி

3 கருத்துகள்

  1. அவர்களில் பெரும்பாலனவர்கள் ஆண்களை தொட்டு தொட்டு பேசுவது எல்லாரும் விரும்புறதில்லை.பெரும்பாலனவர்கள் கட்டாயமாக அவர்களுக்கு காசு தந்தே ஆக வேண்டும் என்பது போல் தான் அவர்கள் நடவடிக்கை உள்ளது. இதனால் சிலருக்கு பயமும் எரிச்சலும் தான் அதிகம் வருது. ஒரு முறை ரயிலில் நான் அறைகூட வாங்கி இருக்கேன் அது எதற்கென்றால் காசு தராமல் இருக்க தூங்குவது போல் நடித்தேன் என்பதற்காவாம், மற்றொரு முறை ரயில் இடம் இல்லாமல் கீழே படுத்து தூங்கிய என் மேல் படுத்து காதுகிட்ட கத்தி எழுப்பி தொந்தரவு ஏற்படுத்திவிட்டார் அந்த பயத்தில் இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.தனியாக பயணம் செய்யும் போதெல்லாம் இவர்களை பார்த்தாலே ஒரு வித பயத்தை தான் எனக்குள் எப்போதும் ஏற்படுத்துகிறது

    பதிலளிநீக்கு
  2. இந்தச் சமூகம் அவர்களை அப்படி நடக்க வைக்கிறது. தங்களை பாதுகாத்துக் கொள்ள அவ்வாறு நடந்து கொள்கின்றனர்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை