பொதுவாகவே நம்மூர் ஆன்மீகம், நான் யார்? நான் ஏன் இங்கு பிறந்தேன்? ஏன் இவர்களுக்குப் பிறந்தேன்? இந்த நூற்றாண்டில் பிறக்க காரணம் என்ன? இப்படியாக யோசிக்க வைத்து விடுகிறது. இதுவும் ஒருவகையில் ஆராய்ச்சி தான் எனினும் பயனற்றுப் போகிறது. அதற்கு காரணம் என்னவென்றால், இவையாவும் காரணவாதம். நம்மால் அடையவியலாத விடைக்கான வீண் முயற்சி. காரண வாதம் முழுதுமாக வீண் முயற்சி ஆவதில்லை. அது முழுதுமாகக் கருத்தாகும் போதில் வீணாகிறது.
உதாரணமாக ‘நான் ஏன் இந்த ஊரில்/ மாநிலத்தில்/ நாட்டில் பிறந்தேன்?’ என்ற கேள்வியை எடுத்துக் கொள்வோம். இதற்கு ஏதும் பதில் சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னாலும் அதைச் சரிபார்க்க ஆதாரம் தான் இருக்க முடியுமா? முற்றிலுமாகக் கருத்தாகும் போது அதாவது, காரண காரிய உறவு இல்லாத போது அக்கருத்தின் மீதான உறுதித்தன்மை சுழியாகிவிடுகிறது.
பாவம் செய்தவர்கள் சூத்திரர்களாகப் பிறந்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் என்ன? என் முன்ஜென்ம புண்ணியத்தால் இப்போது சுகபோகமாக வாழ்கிறேன் என்பதற்கு தருக்கம் சொல்ல முடியுமா? ஆனால் அதிகமாக நீரெடுத்துக் கொண்டதால் அடிக்கடி சிறுநீர் வருகிறது என்று காரண காரிய உறவு சொல்ல முடியும். நேற்று இரவு தூங்கவில்லை அதனால் சோர்வாக இருக்கிறேன் என்றும் கூறிவிட முடிகிறது. இதனால் கருத்துக்கும் பொருளுக்குமான வெளிப்படை உறவுதான் இந்த காரண காரிய அறிவை நமக்குத் தருகிறது என்பதை விளங்க முடிகிறது. இதைத்தான் லாஜிக் என்கிறார்கள். தமிழில் இதை ஏரணம் என்பர். இச்சொல் தருக்கம் எனும் பொருள் தருவதாயில்லை என்று கூறுவோரும் உளர். நிற்க,
பின்னோக்கி நகர வைக்கும் சிந்தனை. இதைத்தான் பிற்போக்கு என்போம். நான், என்னால் அறியமுடியாத வரலாற்றுக்கு முந்தைய காலத்தை அனுமானித்தல். இது ஒருவகையில் நமது மூளைக்கு நல்ல வேலை தருஞ்செயலாய் இருப்பினும் முற்றுலுமாகக் கருத்துவயப்பட்ட காரண காரியமற்றவர்களாய் நம்மை மாற்றி முட்டாளாக்கும் வலியுடையது. வரலாற்றுக்கு முந்தைய என்பதால் பதிவு செய்யப்பட்ட வரலாறு யாவும் காரண காரியத்தோடு அமைந்திருக்கிறது என்றும் கூறிவிட முடியாது. அதனால் “நான்” தோன்றியபிறகான உலகம் தான் என்னைப் பொருத்தமட்டில் ஆராயத்தக்கது. நான் என்பது இங்கு நினைவு/ தான்மை எனலாம்.
இந்த உலகம் எப்படித் தோன்றியது? எனும் தருக்க விசாரம் நமது இந்திய வைதீக தத்துவக்காரர்களைக் கடவுளிடம் கொண்டுபோய் சேர்த்தது. இக்கரை இருந்தால் அக்கரை இருக்குமல்லவா! அதற்கு ஒரு எதிர்கூட்டமும் இருந்தது. மத்திமமும் இருந்தது.
ஏன் இந்த ஒரு கேள்வி பெரும்பாலான மனிதர்களைக் கடவுளிடம் கொண்டு போய் சேர்க்கிறது? என்றால், இதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான். இதைப் பற்றி ஓரளவு எனக்குப் புரிந்தமட்டில் “புரியவில்லை என்றொரு புரிதல்” எனும் கட்டுரையில் விளக்கியுள்ளேன்.
“மொழி மனிதர்கள்” எதையும் தங்கள் மொழி எல்லைக்குள் கொணர நினைக்கிறார்கள். மொழியாராய்ச்சியில் மிகவும் சுவைமிக்க இடமிது. இதை ஒலியால் விளக்குதல் (பொருளறிவுறுத்தும் ஓசை என்பார் நச்சினார்க்கினியர்) எனலாம். பின் அது குறியால் விளக்குவதாய் வளர்கிறது.
மொழியாராய்ச்சி எனும் பேரில் தனித்தமிழ் ஆர்வலர்கள் (ஆய்வாளர் எனும் பேரில்) சொல்லுக்கான காரணத்தைச் சொல்லுவர். பொருப்பு என்றால் மலை. பொருநன் என்றால் மலைவாழ்பவன். பொருதல் என்றால் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொள்ளுதல். களிறு பொருதல் என்றெல்லாம் சங்க இலக்கியத்தில் வரும். மலை என்பது நிலம் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொள்வதால் உண்டாவது. எழுவது. நிலம் ஒன்றோடு ஒன்று பொருந்தி எழுந்து பொருப்பாகிறது. அதாவது மலையாகிறது. எப்படி பாருங்கள் தமிழர் மாண்பை..! என்னே தமிழ்! வெறுந்தமிழன்று ஆய்தமிழ். தமிழில் உள்ள ஒவ்வொரு சொல்லும் இப்படித்தான் ஆய்வு முடிவுகளைக் கொண்டிருக்கும். எப்படிப்பாருங்கள்.. வெறுமனே பொருப்பு என்று ஒருபொருளை கூறிவிட முடியுமா? அது நிலம் பொருந்துதல் எனும் காரணத்தால் உண்டாகிறது என்பதனாலே தானே அதை பொருப்பு என்று கூறியிருக்கிறார்கள். கல் தோன்றி மண் தோன்றா காலத்திலே வாழ்ந்தவர்கள் தமிழர்கள் அதனால் நிலங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொள்வதை எட்டி நின்று பார்த்திருக்கக்கூடும்.
இப்படித்தான் ஆராய்ச்சி நடக்கிறது. சிந்தித்துப் பார்த்தால் இவை அனைத்துமே காரணவாதம். என் கருத்து. சில கேள்விகள் மூலம் இந்த ஆய்வை நிலைகுலையச் செய்துவிடலாம். பொருப்பு என்று பெயர்த்தோன்றுவதற்கு முன்னமே பொரு எனும் வினை தோன்றி இருக்குமா? எனில் பெயருக்கு முன்பாக வினை எவ்வாறு தோன்றிற்று? கால இடைநிலையற்ற தனிவினை வடிவம் எவ்வாறு இயங்கி இருக்கும்? அது ஒருமொழியாகத் தொடர்நிலையில் இயங்கி இருக்குமா? பொருதல் என்பதை ஏன் பொருதல் என்று கூறி இருக்கிறார்கள்? வேறு ஒலிவடிவைப் பயன்படுத்தி இருக்கலாமே?
இப்படியான கேள்விகள் மூலம் ஆய்வின் காரண காரியமற்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிடுகிறது. அத்தோடு இது காரணவாதப் போக்கை உணர்த்தக்கூறிய சான்றேயன்றி உண்மையன்று.
சாங்கியர்கள், இயற்கையைக் கடவுளாக வழிபட்ட இந்தியத் தொல்குடிகள், முற்றிலுமாக காரணவாதத்தை மறுக்கிறார்கள். காரணவாதம் என்ற ஒன்றே இல்லை என்பது அவர்கள் வாதம் அன்று. வேண்டாம் என்பதே அவர்களின் நிலைப்பாடு. அதுதான் புத்திசாலித்தனம் என்பேன். காரணவாதம் நம்மை முட்டாளாக்குகிறது. எல்லாவற்றிற்கும் ஏதோ காரணம் இருக்கும் என்பதில் எனக்கும் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. காரணமாக இந்த உலகம் சொல்லும் எல்லாமே உண்மை காரணம் அல்ல என்பதுதான் என்கருத்து. நானாக ஒரு காரணத்தை ஊகம் செய்தாலும் அது முழுஉண்மை அன்று எனும் தன்புத்தியோடுதான் நாம் காரணவாதத்தை அணுகி ஏற்க வேண்டும்.
அதாவது காரணவாதம் முழு உண்மையாக இருக்கமுடியாது எனும் பகுத்தறிவு எல்லோர்க்கும் வேண்டும் என்கிறேன். அப்படியெனில் காரியவாதம் முழு உண்மையாக இருக்க முடியுமா? என்று கேட்டால், இருக்கலாம் என்றுதான் சொல்ல முடியும். காரணம், காரியவாதமும் நூல் அளவையால் ஆகி நிற்கின்றது. அதனால் அதும் முழு உண்மையில் அடங்காது. இவ்வாறு முழு உண்மை அன்று எனும் கூற்றும் முழு உண்மை ஆகிவிடாது என்பதை நினைவிற்கொள்க.
இதனால் முழு உண்மை என்ற ஒன்று இல்லை என்பதை நீங்கள் அறிய வேண்டும். கடவுள் உள்ளார் இல்லார் என்ற இருகூற்றுமே முழு உண்மை அன்று என்ற பக்குவம் வேண்டும். காரணம் காரியம் இரண்டும் ஜப்பானிய தத்துவமான இங்-யாங் போன்று சமநிலையில் இருக்கவேண்டியது. கடவுள் என்பது ஒரு கருத்து. அந்தக் கருத்து உருவாவதற்குப் பல காரியங்கள் அடிப்படையாக இருந்திருக்கலாம். ஆனால் அவையாவும் அனைத்திற்குமான காரணமாக மாறும் போது மூளை தன்வேலையை நிறுத்திக் கொள்கிறது.
நான் ஏன் பிறந்தேன்? ஏன் இங்கு பிறந்தேன்? ஏன் இவர்களுக்குப் பிறந்தேன்? எனும் கேள்விக்கெல்லாம் மிகவும் எளிய உடனடித் தீர்வாகக் கடவுள் இருக்கிறார். பின்னோக்கிப் போகும் எல்லா சிந்தனைக்கும் கடவுள் மிக எளிய உடனடித் தீர்வு ஆகிறார். இதனால் மொழிக்கும் மிகவும் உற்ற நண்பராக கடவுள் விளங்குகிறார். அவர் காரணமாகவும் இருக்கிறார். காரியமாகவும் இருக்கிறார். அதனால் அவர் மொழியால் இருக்கிறார். யோசித்துப் பார்க்கையில் எவ்வளவு வியப்பாக இருக்கிறது.. உலகில் எத்தனையோ மொழிகள் உள்ளன. கடவுள் இல்லாத ஒரு மொழி இருக்கிறதா?
தீசன்