அண்மை

கற்பரா எனும் பின் நவீனத் திரைமொழி - தீசன்

கற்பரா எனும் பின் நவீனத் திரைமொழி - தீசன்

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் திருவாரூர் தைலமை திரையரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் உலகத் திரைப்பட விழா நடந்தது. ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக உலகத்திரைப்படங்கள் திரையிடப்பட்டன. மொத்தம் இருபத்திரண்டு படம். நான் அதில் பதிமூன்று படங்களைப் பார்த்தேன். ஒவ்வொரு படத்தைப் பற்றியும் தனித்தனியே எழுத முடியும். இப்போது ஏனோ எனக்குக் கற்பராவைப் பற்றி சொல்லத் தோன்றுகிறது. பொதுவாக இப்படிப்பட்ட படங்கள் வணிகரீதியில் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று உறுதியாகக்கூறி விடலாம். அதனால்தானோ என்னவோ தமிழ்நாட்டில் இப்படம் திரையிடப்படவே இல்லையாம். முதன்முதலாகத் திருவாரூரில் பார்க்கமுடிந்தது எனக்கு நல்வாய்ப்பாய் அமைந்துபோனது. படத்தைப் பற்றிச் சொல்வதற்கு முன்பாகப் படத்திற்குப் பின்னே நடந்த உரையாடலைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். திருவாரூர் மக்கள், போடுவதாகச் சொல்லப்பட்டிருந்த இருபத்திரண்டு படங்களில் மூன்றே படங்கள் தான் தமிழ் என்பதால் கற்பராவுக்குக் குவிந்து விட்டனர். தமிழ்ப்படங்கள் இதுநாள் வரை தந்திருந்த பொதுபுத்தியில் இருந்து வந்தவர்கள். “இதுபடமே இல்லை. இதைத் திரைப்படம் என்று நீங்கள் சொன்னதில் தான் எனக்கு வருத்தம். வெறும் காட்சிகளின் தொகுப்பு என்று கூறி இருந்தால் பொருத்தமாக இருக்கும்” என்று இயக்குநரிடம் கூறினார் ஒருவர். இயக்குநரும் எங்களோடு இருந்தார். உரையாடலுக்கு ஆர்வமாகவே வந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே கிடைத்ததாகத் தோன்றுகிறது. அவர் அதற்கு, “இல்லை இதுவும் திரைப்படம் தான். இதிலும் கதை இருக்கிறது. ஆனால் அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதையாக இருக்கிறது” என்றார். நான் மனத்திற்குள் நகைத்துக்கொண்டேன். இன்னொருவர் சடக்கென்று எழுந்தார், “அவங்க சொன்னதை நா முழுசா ஏத்துக்குறேன் சார். இதுவெறும் காட்சிகளின் தொகுப்பு தான்” என்று மீண்டும் அந்த கணநேர உருவாக்கக் கலைச்சொல்லைச் சொல்லி அமர்ந்தார். இயக்குநர் எதுவும் சொல்லவில்லை. பலர் “இதில் எதுவும் புதுசா இல்லையே. எங்க கிராமத்தில் இருப்பது தான்” என்று சலித்துக்கொண்டார்கள். சிலர் படத்தோடு தொடர்புடைய தங்களது தனிப்பட்ட அனுபங்களைப் பகிர்ந்தார்கள். அதில் சில சிறப்பாகவே இருந்தன. ஒருவர், “இப்டிலாம் படம் எடுக்கலாம்னு தெரிஞ்சிகிறதே வியப்பா இருக்கு” என்றார். பெரிதாக இயக்குநர் எதுவும் பேசவில்லை. கலைச்சொல்லை உருவாக்கியவர் மீண்டும் திடீரென்று எழுந்தார், “கற்பரா” பொருள் என்ன? என்றார். இயக்குநர் ஏதோ பொருள் சொன்னார். நினைவிலில்லை. அவரே மீண்டும் “இதற்கும் பொருள் வேண்டும் போலயே புரியலை” என்றார். ஆஆ… ஞாபகம் வந்துவிட்டது. என்னசொன்னாரென்றால், வித்திலிருந்து வெளிவரும் நிகழ்வு என்றார். விஸ்பரூபம் என்பார்களே அதுமாதிரி. ஆனால் அவர் இப்படிச் சொல்லவில்லை. இதையே வேறுமாதிரி சிக்கலோடு சொன்னார். கொஞ்சம் வாசிப்புள்ளோர்க்கு அர்த்தம் எளிதாய் இருந்திருக்கும் போல் தெரிந்தது. மீண்டும் பொருளுக்குப் பொருள் கேட்டவரிடத்தில் இயக்குநர் ஒன்று சொன்னாரே பாருங்கள்.. “இந்தச் சொல்லுக்கு எந்த பொருளும் கிடையாது. இது தமிழ்ச்சொல்லே இல்லை. அவரவர் இதற்கு என்ன பொருள் வேண்டுமானாலும் தரலாம்” என்று ஒரே போடாகப்போட்டார். அவ்வளவு தான். நம்மவர்கள், படத்தில் கதை சரியில்லை என்றாலே த்தூ என்று கூறிவிடுவார்கள். படத்தில் கதையும் இல்லை. படப்பேருக்குப் பொருளும் இல்லை என்றால் ஏற்றுக்கொள்வார்களா? ஐம்பதாண்டுகால தமிழ் சினிமாவின் ஆக்கங்கள்தானே இவர்கள். கற்பரா என்பதற்கு எந்தப் பொருளும் இல்லை என்ற போதுதான் எனக்கந்த இயக்குநரின் மீது நம்பிக்கை வந்தது. அதற்கு காரணம் மேலை நாட்டுக் கோட்பாட்டுப் பழக்கம். இவர் அரைவேக்காடல்ல என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டேன். அந்த இயக்குநர் பெயர் விக்னேஷ் குமுளை. கூழாங்கல் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர். 


படம் மிகவும் எளிய பொருண்மை ஒன்றையே நகர்த்தியது. முதுமை. சிக்கலான கதையோ ஆட்களோ கிடையாது. காட்சிக்குக் காட்சி நீண்ட காலத் தமிழ் சினிமாவின் ஒழுங்கிற்கு எதிரான ஒழுங்கின்மை. சங்கிலி இல்லாத திரைமொழி. இல்லை என்போருக்கு இல்லையாகவும் உண்டு என்போருக்கு உள்ளதாகவுமோர் உணர்வுக் கடத்தியாகக் கற்பரா இருந்திருக்கும். நிறைய பேர் அந்தப் பாட்டியை எப்படி சமாளித்தீர் என்று தான் கேட்டார்கள். அதற்கு இயக்குநர் பெரிதாக ஏதும் சொல்லவில்லை. “நான் எப்போதுமே கேமராவோடு இருந்து அவருக்கு என் உருவத்தையே கேமராவோடு இருப்பது போன்று பதிவு செய்துவிட்டேன். அதனால் எளிமையாயிற்று” என்று சாதாரணமாகச் சொன்னார். சிறப்பான ஒரு உத்தியைக் கற்றுக்கொண்டது போன்றிருந்தது. 


நாம் எல்லோருமே சொல்லுக்குப் பொருளிருக்க வேண்டும். படத்திற்குக் கதையிருக்க வேண்டும். உடலுக்குப் பாலினம் இருக்க வேண்டும் என்று பல எதிர்பார்ப்புகளோடு இருக்கின்றோம். ஆனால் வாழ்க்கை அப்படி பொருளோடு இருந்தாக வேண்டுமா என்றால் வாழ்க்கைக்கென்று எவ்வித பொருளும் இல்லை என்று தான் சொல்வேன். வடிவம் இருந்தால் அதற்கு உள்ளடக்கம் இருக்க வேண்டுமென்றும் உள்ளடக்கம் இருந்தால் அதற்கு வடிவம் இருக்க வேண்டும் என்றும் தான் எல்லோருமே நினைக்கிறார்கள். உள்ளடக்கத்தை வடிவில் இருந்து எப்படி பிரிப்பது என்று யோசிப்போம். ஆனால் கற்பரா வடிவத்தை உள்ளடக்கத்தில் இருந்து தனியே வெட்டி எடுத்துக் காட்டி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கற்பரா உள்ளடக்கம் இல்லாத வடிவம். வடிவமே அதன் உள்ளடக்கம்.


தீசன் 

1 கருத்துகள்

புதியது பழையவை