மார்க்சியம் நமக்கு சமூகத்தின் பொருள் மற்றும் கருத்துற்பத்தியைத் தனிபொருளாய் எடுத்து ஆராய்வதற்கான பெருந்திறப்பை அளித்திருக்கின்றது. அதுபடி மொழியை ஒரு தனிபொருளாய் பார்க்கையில் அந்த மகத்தான உற்பத்தியின் விளைவு ‘உபரியான சிந்தனை’ என்பதை அறியலாம்.
நாளுக்கு நாள் நாம் நம் சிந்தனையின் வேகத்தைக் கூட்டிக்கொண்டே செல்கின்றோம். உலகத்தின் மொத்த உயிர்த் தொகுதியுள் மனிதர்களின் அறிவுப் பெருக்கம்/ சிந்தனை திறன் இயற்கைக்கு அடுத்தபடியாக மனிதர்கள் இருப்பதாக எண்ண வைக்கிறது. உலகின் வேறெந்த உயிரினமும் இத்தனை வேகமாக சிந்திக்கவில்லை என்பதுதான் மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ள வேறுபாடாய் காண்கிறோம். மொழிக்கும் சிந்தனை உபரிக்கும் நெருக்கமான தொடர்புண்டு. பொருட்களுக்குக் குறியீடு தருவதன் வழி நம்மால் எளிதல் அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முடியும். நினைவானது பொருளாக மட்டுமல்லாமல் அதுசார்ந்த அனுபவங்களோடும் குறிப்பான்களால் பதிவுசெய்யப்படுகின்றன. இதனால் மொழியால் நினைவை உற்பத்தி செய்ய முடிகின்றது. நினைவைக் கடத்த முடிகின்றது.
உதாரணமாக, குழந்தையின் நினைவு திறனும் மொழி முழுமையடைதலும் சீரான காலத்தில் பொருந்துவதைப் பார்க்கலாம். மொழியின் முழுமை அல்லது பொருட்களை விளங்கும் அறிவு பெறுதல் ‘நான், சுயம், நினைவு’ முதலிய பொருட்களை உற்பத்தி செய்கின்றது. இதனால் குழந்தையின் மொழியறிவு பொருட்களை விளங்குவதற்குரியதாய் வளரும் வரையுள்ள நினைவு மிதவைநிலையிலிருந்து பின் மறைகிறது/ நினைவில் இருப்பதில்லை.
எளிமையாகச் சொல்வதானால் நினைவு மொழியால் உண்டாகும் பொருளேயன்றி வேறில்லை. இதனால் மொழியின் தருக்க அறிவு ஒரு குழந்தைக்குக் கிட்டாதவரை அக்குழந்தைக்கு ‘நினைவு’ என்பது சாத்தியம் இல்லை. பிறந்ததிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னுள்ள நினைவுகளே நம்மால் மீண்டும் நினைத்துப் பார்ப்பதற்கு ஏதுவான நினைவுகளாய் பதிவு செய்யப்படுகின்றது.
இவற்றை நாம் நினைவு என்று கூறுவதால் அதுஒரு தனிபொருள் என்று கருதக்கூடும். மொழியின் இன்னொரு வடிவமே நினைவு. குழந்தைக்கு மொழியறிவு கிட்டிய பிறகே நினைவு சாத்தியப்படுகிறது. இதனால் வாய் பேச முடியாதோருக்கு நினைவு இருக்காதா? காது கேளாதோருக்கு நினைவு இருக்காதா? என்றால், இல்லை. நிச்சயமாக அவர்களுக்கும் நினைவு இருக்கும்.
மொழி என்பது வெறும் ஒலி வடிவம் மட்டுமன்று. அது ஒரு தருக்கவியல் காரணி. நான் எனும் தான்மையை என்னை உண்மை என்று நம்ப செய்வதற்கு ஏதுவாகும் பொருள். அதற்கு நிலத்தோடு, பொழுதோடு, பண்பாட்டோடு தொடர்புண்டு அதேசமயத்தில் நிலம், பொழுது, பண்பாட்டை விளங்கவும் கடத்தவும் உதவுமாறாகவும் உள்ளது. தொடக்கக்காலத்திலே கட்டி எழுப்பப்படும் அறிவு இந்த மொழியால் உண்டாகிறது. மொழியில் முன்னமே விளக்கி வைக்கப்பட்டிருக்கும் அந்நிலத்துப் பொருள் அறிவாக குறிப்பான்களால் (வார்த்தைகளால்) மூளையுள் பதிவு செய்யப்படும் போது வெறும் ஒலியாக மட்டுமல்லாமல் அர்த்தங்களாக/ மதிப்பீடுகளாக நினைவாக்கமாகிறது.
அதாவது, பன்றி எனும் பொருள் வெறும் குறிப்பான் குறிப்பீடாக மட்டுமன்றி இழிவு, வசை, நாற்றம், மலம் முதலிய பல்வேறு மதிப்பீடுகளுடனும் குறிப்பான்களுடனும் இணைந்து மூளையுள் பதிவாகின்றது. இந்த மதிப்பீடுகளை அந்நிலத்துப் பண்பாடு/ சமூகப் பெரும்பான்மை வழக்கு முடிவு செய்கின்றது.
இதனால் நினைவு என்றது வெறும் ஒலியின் மாற்றுவடிவமாக மட்டும் இல்லை. அது அந்த சமூகத்தின் சரி×தவறு, உயர்வு×தாழ்வு என்று சேருகிறது.
இவ்வாறு முன்னமே முடிவு செய்யப்பட்ட வடிவம்தான் நமக்கு அறிவாக, நினைவாக மூளையுள் அடைகின்றது. இம்முன்நினைவுகளைக் கொண்டுதான் நம்மால் சிந்தனையை மேற்கொள்ள முடிகின்றது. முடிவான தருக்கத்திற்குள் இருந்து கொண்டு செய்யும் சிந்தனையால் தருக்கத்தை மீற முடிவதில்லை. தருக்கத்தை மீறாத சிந்தனை சிந்தனையாகக் கொள்ள முடியாது. (If I Only Did What Can I Do, I Wouldn't Do Anything - Jacques Derrida)
இவ்வாறு புதிதாக ஒன்றையுமே ஆக்கமுடியாமல் மொழியின் கடந்த கால இருப்பிலேயே அனைத்தையும் செரித்து சிந்தனையை உபரி உற்பத்தி செய்யச் செய்ய நாம் நம் கால்களால் முன்னோக்கி நகர்கிறோம் ஆனால் வைதீகர்களைப்போல பின்னோக்கிச் செல்கிறோம். மொழியால் சிந்தனை எனும் பேரில் தேவையற்ற உபரி உற்பத்தி நடக்கிறது. இத்தனை உற்பத்தி தேவையில்லை.
இந்த உபரி ஏன் பெருகிக் கொண்டே போகிறதென்றால், மொழியின் தருக்கவியலை மீறாத சிந்தனை உபரி உற்பத்திக்கும் BJP/ RSSன் தடையற்ற மனித உடல் பெருக்கத்திற்கும் வேறுபாடில்லை. இரண்டும் ஓரிடத்தில் வந்து குவியும். அதுதான் அதிகார பெருக்கம். ஒருகுடையின் கீழ் ஆள்தல். அறிவற்ற மந்தை ஆக்கம். மனிதர்களை சிந்திக்கவிடாமல் செய்வதற்கான வழி.
மனிதர்களின் இத்தனை வேகமான வளர்ச்சி சிந்தனையின் உபரியால் வந்ததுதானே என்றால், ‘ஆமாம்’. எங்கெல்ஸ் உழைப்பு தான் மனித சமூகத்தை உருவாக்கியது என்பார். ஆனால் எனக்கு மொழிதான் உழைப்பை உண்டாக்கியதாகத் தோன்றுகிறது. உழைப்பு தனித்து இருக்கும் போது மனித சமூகம் உருவாகவில்லை. உழைப்பு ஒன்றுசேரும் போது கூட்டாகும் போது மனித சமூகம் தோன்றுகிறது. ஆனால் மனித உடல்கள் வெறும் உடல்களாக இருக்கும் பட்சத்தில் ஒன்றுசேர்தல் சாத்தியமில்லை. மனித உடல்கள் அர்த்த மதிப்பீடுகளாக மாறும் போது உற்றோர்×பகைவர் எனும் மொழி எல்லைக்குள் வரும் போதுதான் உழைப்பு ஒரு சமூக காரணியாகத் தோன்றுகிறது. மனித சமூகத்தை உற்பத்தி செய்கிறது. எனவே உழைப்பையே உண்டாக்கிய ஒரு பொருளாக உழைப்பிற்கு முன்வடிவமாக மொழி இருக்கிறது. இவ்வாறு சொல்லக்காரணம் உழைப்பும் மொழியின் வடிவமே ஆதலால்.
இந்த உபரிதான் வளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயத்தில் அழிவிற்கும், போர், தீவிரவாதம் முதலிய வணிக அதிகார வெறிக்கும் இதே உபரிதான் காரணமாகவும் இருக்கின்றது. இவற்றை தான் நான் தேவையற்ற உபரி என்கிறேன். தேவையான உபரி என்று மொழியில் ஏதும் இல்லை. உபரி என்றாலே அது தேவையற்றதாக்க வேண்டும். உபரி என்பது அதிகார இருப்பை மேலும் கூட்டுகிறது. அதிகாரத்திற்கு வலு சேர்க்கிறது. சிந்தனை உபரியும் இதையே செய்யும். செய்திருக்கிறது. அதனால் எந்த சிந்தனையாகினும் உபரியாகின் அழிக்கப்பட வேண்டியதே என்பதுதான் என் துணிபு.
தமிழ் மொழியில் சிந்தனை உபரியாக இருப்பதை நாம் பலவாக சொல்ல முடியும். பொதுவாக அறம், ஒழுக்கம், அன்பு, காதல், நட்பு, குடும்பம், பண்பாடு, மனிதம், வீரம், கொடை என்று பல்வேறு வடிவங்களில் சிந்தனை உபரி கொட்டிக்கிடக்கின்றது. இதையே தான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். சும்மா இல்லை.. இரண்டாயிரம் ஆண்டுகாலமாகச் சொல்லுகிறார்கள். இப்படியிருக்க இரண்டாயிர வருட உற்பத்தி நடந்து இருந்தும் இன்றும் இதையே சொல்கிறார்கள் எனில் இந்த கருத்துக்களுக்கும் அதிகார நிறுவனங்களுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதை அறிக.
இவை வெறும் வணிகப் பொருளாக மட்டுமல்லாமல் சமூக உடல்களை உருவாக்கும் கருத்தியல் வடிவமாகவும் உள்ளன. காதல், நட்பு, குடும்பம் இவற்றை சொல்லப்பட்ட வடிவத்திற்குள்ளாக நின்று நிகழ்த்துவது அறம், ஒழுக்கம் என்பதாகப் பார்க்கப்படும். இதற்குள்ளாகவே கிடந்து என்ன சிந்தனை செய்தாலும் அது உபரிதான். இப்படியான சிந்தனைகள் தான் இலக்கியங்களாக தொழிற்நுட்பங்களாக குப்பையைப் போல் பரந்து கிடக்கின்றன.
இதெல்லாம் எதற்கு என்று யோசித்துப் பார்க்கும் போதுதான் இதன் மிகப்பெரிய.. அச்சுறுத்தலான.. வணிகம் தெரிகிறது. முதலில் வணிகப் பொருள் உற்பத்தி அடுத்து அப்பொருளை வாங்கும் உடல்களின் கருத்தியல் உற்பத்தி இதற்கு முன்பாகவே சமூக உற்பத்தி, தேவையை உற்பத்தி செய்தல் எல்லாம் அடங்குகிறது. மிக மிக ஆழமாகப் போய் பார்த்தால் தொடக்கம் சிந்தனையின் உபரி உற்பத்தியாக இருக்கிறது. இந்தக் கொடும் வன்முறை பெரிதாக அகத்தில் விரிகிறது எழுத்தால் விளக்கமுடியாத அளவிற்கு வறுமையாக உள்ளேன்.
தீசன்