விடியற்காலை மணி நாலரை இருக்கும். "நல்லகாலம் பொறக்குது. நல்ல காலம் பொறக்குது" குடுகுடுப்பைக்காரனின் குரலைக் கேட்டு, அசந்து உறங்கிக் கொண்டு இருந்த அமுதா, லேசாக கண்விழித்துப் பார்த்தாள். குரல் மிக சமீபத்தில் கேட்டது.
"நல்ல காலம் பொறக்குது. நல்ல காலம் பொறக்குது. இந்த வூட்டு அய்யாவுக்கு வருமானம் கொட்டப் போவுது. இந்த வூட்டு அம்மாவுக்கு அந்த எல்லையம்மாவே மகளா பொறக்கப் போறா. எல்லா கஷ்டமும் தீரப் போவுது. ஜெய் ஜக்கம்மா"
படுக்கையை விட்டு திடுக்கிட்டு எழுந்த அமுதா, ஜன்னலோரம் நின்று வெளியில் பார்த்தாள். அமுதாவைப் பார்த்ததும், தான் சொன்னதை, மீண்டும் வேகமாகச் சொன்னான் அந்தக் குடுகுடுப்பைக்காரன். அவன் நல்ல வார்த்தைகளைத்தான் சொல்கிறான். ஆனால் அமுதாவுக்கு அது நெஞ்சில் ஈட்டியை எறிந்தது போல இருந்தது. மெதுவாக வந்து படுக்கையில் சாய்ந்தாள். அருகில் கள்ளம்கபடமற்ற அவளுடைய மூன்று பெண் குழந்தைகளும், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு, ஆசைப்பட்டு மூன்றும் பெண்ணாகவே பிறந்துவிட்டது. மூன்றாவது பிரசவம் பார்த்த டாக்டர்,
"இந்தப் பாரும்மா மூனு குழந்தை ஆயிடிச்சு, இனிமே ஒன்னோட உடம்பு தாங்காது. கருத்தடையும் சேர்த்து செஞ்சிடவா?" என்றார்.
"என்னங்க செய்யலாம்?" என்றாள் அமுதா, கணவன் துரைசாமியிடம்.
"இன்னும் ஒரு தடவ பார்க்கலாம் புள்ள. நமக்காக இல்லாட்டியும், இந்த ஊரு வாய அடைக்கவாவது, நாம ஒரு ஆம்பள புள்ளயப் பெத்துக்கனும்" என்றான்.
கணவன் துரைசாமி லாரி டிரைவர். நாமக்கல்லில் இருந்து வட மாநிலங்களுக்கு ஒரு தடவை சவாரி போனால், ஒரு மாதம் கழித்துத்தான் வருவான். பத்து நாள் லீவில் இருப்பான். பத்து நாளும் கறியும், மீனுமாகக் கொண்டாட்டமாக இருக்கும். மற்ற லாரி டிரைவர்களைப் போல, பெண் சகவாசம் துரைசாமிக்குக் கிடையாது. அமுதாதான் அவனுக்குச் சொர்க்கம். அதனால் காய்ந்த மாடு கம்மங் கொல்லையில் பாய்வது போல, பாய்ந்து விடுவான். அப்படி உண்டானதுதான் இந்த நாலாவது குழந்தை. தூக்கம் வரவில்லை அமுதாவுக்கு,
"இந்தப் பிள்ளையாவது, ஆம்பள புள்ளயா பொறக்கனும்னு, எத்தனை கோயிலுக்குப் போய் வேண்டினேன்? இப்படி வந்து இடிய எறக்குறானே, இந்தக் குடுகுடுப்பைக்காரன்". மன வேதனையோடு பல்வேறு சிந்தனைகள் அலை மோத, ஆறு மணியாகியும் எழாமல், படுத்துக் கிடந்தாள் அமுதா.
அம்மா படுத்துக் கிடந்ததால், அம்மாவுக்கு என்னவோ ஏதோவென, வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தாள் மூத்த மகள் செண்பகம். பத்தாம் வகுப்பு படிக்கிறாள். பல் துலக்கிவிட்டு, அவசரம் அவசரமாக வாசலைக் கூட்டிக் கோலம் போட்டாள் செண்பகம்.
பொதுவாகப் பெண் பிள்ளைகள், முதல் பிள்ளையாக, அதாவது, அக்காவாகப் பிறந்துவிட்டால் எல்லா வேலையையும் இழுத்து போட்டுக் கொண்டு பொறுப்பாகச் செய்வார்கள். தங்கையாகப் பிறந்த பெண்களோ, எதைப் பற்றியும் கவலைப்படாமல், அண்ணன் இருக்கிறான், அக்கா இருக்கிறாள் என்று எப்போதும் மகிழ்வாகவே இருப்பார்கள். கோலம் போடும்போது அந்தக் குடுகுடுப்பைக்காரன் மீண்டும் வந்துவிட்டான்.
"தாயீ! நான் வந்திருக்கேன்னு சொல்லி அம்மாவைக் கூப்பிடு" என்றான்.
குடுகுடுப்பைக்காரன் குரல் கேட்டு அவசரமாக வெளியில் வந்தாள் அமுதா.
"காலையிலேயே நல்ல சேதி சொல்லியிருக்கேன். ஏதாவது பழைய துணி இருந்தா போடு தாயீ" என்றான்.
"ஏம்பா, நீ சொன்னதெல்லாம் நடக்குமா?" கொஞ்சம் நடுக்கமான குரலில் கேட்டாள் அமுதா.
"நிச்சயமா நடக்கும் தாயி. நான் சொல்ற வார்த்தையெல்லாம், நான் சொல்றது இல்ல. எல்லையம்மாளும், அந்த மலையாள பகவதியும், மயான சாமியும், நாங்க வணங்கும், அந்த மகா காளி ஜக்கம்மாவும் சொல்ற வார்த்தையம்மா. நிச்சயம் நடக்கும்"
வேறு எந்த வார்த்தையும் கேட்க விரும்பாத அமுதா, வீட்டு உள்ளே சென்று ஒரு புதுப் புடவையையும், அரைப்படி அரிசியையும், எடுத்து வந்து, அவன் விரித்த துண்டில் போட்டாள்.
"அவரு என்னம்மா சொன்னாரு?" என்றாள் செண்பகம்.
"ஒனக்கு ஒன்றும் இல்ல. நீ போய் ஸ்கூலுக்குக் கிளம்பு" என்றாள் அமுதா.
பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, முதல் வேலையாகக் கணவனுக்குப் போன் செய்தாள்.
"எனக்கென்னவோ குடுகுடுப்பைக்காரன் சொன்னதிலிருந்து, இதுவும் பொண்ணாயிருமோன்னு பயமா இருக்குங்க. வேணாங்க கலைச்சிடுவோம்"
"என்னடி நீ லூசா, நாலு மாசம் வளர்ந்த புள்ளய கலைக்கனுக்கிங்ற?"
"இல்ல இல்ல, நீங்க கெளம்பி வாங்க. இதுக்கு ஒரு முடிவு கட்டிடுவோம்"
"சரி சரி மனசப் போட்டு அலட்டிக்காத. ரெண்டு நாள்ல நான் வரேன். நேர்ல பேசிக்கலாம்"
துரைசாமி வந்து விட்டான். தீவிர ஆலோசனைக்குப் பிறகு நாலாவது பிள்ளையைக் கலைத்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள்.
"என்ன கலைச்சிடாதம்மா" என்று வயிற்றில் உள்ள பிள்ளை, கெஞ்சுவது போலக் கனவு வந்தது. மனதைக் கல்லாக்கி கொண்டாள் அமுதா. நாலு மாத பிள்ளையைக் கலைப்பது என்பது, பிரசவத்துக்குச் சமம் என்பதாலும், பிரைவேட் ஆஸ்பிடலில் கருக்கலைப்புக்கு அனுமதி இல்லை என்பதாலும், கவர்மெண்ட் ஆஸ்பத்திரியிலேயே சேர்வது என முடிவு செய்தார்கள். மறுநாள் காலை, இருவரும் பெரிய ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டார்கள்.
"டூ வீலர் வேண்டாம். ஆட்டோவிலேயே போயிடுவோங்க" என்றாள் அமுதா.
சரி என்ற துரைசாமி அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்தான். துரைசாமியின் சிறுவயது நன்பன் இராஜவேலு, இங்கேதான் ஆட்டோ ஓட்டி வந்தான்.
"ஏம்பா, இங்கே இராஜவேலுன்னு ஒருத்தர் ஆட்டோ போட்டிருந்தாரே, அவர் எங்கே?"
"அட ஏன் சார், அத கேட்கிறீங்க. அவனுக்குக் குடி அதிகமாகி கல்லீரல் போயிட்டு. பக்கவாதம் வேற. அதனால அவன் பொண்ணு ஸ்வேதாதான், அந்த ஆட்டோவ ஓட்டுது. அதோ பாருங்க அந்த ஆட்டோதான்"
சவாரி ஒன்றை இறக்கிவிட்டு ஆட்டோவில் ஸ்டாண்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள் ஸ்வேதா. அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு,
"என்னமா ஆச்சு அப்பாவுக்கு" என்றான்.
"அப்பாவுக்குத் திடீருன்னு கை, கால் வெளங்காமா போச்சு. டெய்லி வருமானம் போயி, குடும்பம் நடத்தவே கஷ்டமா போச்சு. பிஏ படிச்சிருந்தும் வேலை எதுவும் கிடைக்கல. ஆனா என் மேல அப்பா ரொம்ப பாசமா இருப்பாரு. சின்னப் புள்ளயில அவர் ஆட்டோவ போட்டதும் விளையாட்டா ஓட்டி பார்ப்பேன். எங்க தெரு முனை வரையும், ஆட்டோவ ஓட்டி ஓட்டி வெளயாடுவேன்.
அவர் ஹாஸ்பிடல் போறதுக்கே, வேறு ஆட்டோவ புடிக்க வேண்டி இருந்தது. அதனால் தைரியமா நானே எங்க ஆட்டோவ, அப்பாவுக்காக ஓட்ட ஆரம்பிச்சேன். இப்ப, இதுவே தொழிலாகிவிட்டது. இப்ப அப்பாவுக்குப் பரவாயில்ல.
"சரி வா, நாங்களும் ஜி ஹெச்சுக்குதான் போகனும். போகும் போது பேசிக் கொள்ளலாம்"
இருவரும் ஆட்டோவில் ஏறி அமர்ந்தார்கள்.
"உங்களுக்கென்ன பிரச்சனை" என்றாள் ஸ்வேதா.
"அபார்ஷனுக்காக டாக்டர பார்க்கனும்மா" சுருக்கமாகச் சொன்னான் துரைசாமி.
பெரிய ஆஸ்பத்திரி வந்துவிட்டது.
"உன் போன் நெம்பர கொடும்மா. இன்னும் ரெண்டு மூனு தடவையாவது இங்க வர வேண்டியிருக்கும். உன்னையே கூப்பிடுகிறோம். நல்லாதான் பொறுமையா ஓட்டுறே" என்றான் துரைசாமி.
"அவசரப்படாதிங்க. நான் ஒங்க கூட வர்ரேன். இப்ப ஓபி சீட் வாங்க கூட்டமாக இருக்கும். ஆட்டோ டிரைவர்,108 டிரைவருக்கெல்லாம் பிரையாரிட்டி உண்டு. நான் சீட்டு வாங்கித் தரேன்"
அமுதாவின் பெயர், வயது, போன் நெம்பர் வாங்கிச் சென்ற ஸ்வேதா இரண்டு நிமிடத்தில் ஓபி சீட்டோடு வந்தாள். ஸ்வேதாவுக்கு நன்றி சொல்லி விட்டு, எட்டாம் நெம்பர் அறையில் உள்ள மகப்பேறு நிபுணர் டாக்டர் அஸ்வினியைப் பார்க்க சென்றார்கள்.
"எங்களுக்கு வசதி பத்தலம்மா. அதனால இந்த நாலாவது குழந்தையக் கலைச்சிடலாம்னு முடிவு செஞ்சிருக்கோம். நீங்கதாம்மா பார்த்து நல்லபடியா இத முடிச்சு தரனும்."
"எத்தன மாசம் ஆச்சு"
"நாலு மாசம் முடிஞ்சுருச்சுமா"
"நாலு மாச புள்ளயோட கருவை அழிக்கிறத, ஏதோ காய்கறி வாங்க வந்த மாதிரி சேதி சொல்றீங்க. இதுக்கெல்லாம் எவ்வளவு ஃபார்மாலிடீஸ் இருக்குத் தெரியுமா? கருவை அழிப்பது ஒரு உயிரைக் கொல்வதற்குச் சமம். 12 வாரம்னா கூட நானே செய்யலாம். அதற்கு மேல போனா இரண்டு மெட்டர்னிடி டாக்டர் பக்கத்துல இருக்கனும், ஸ்கேன் ரிப்போர்ட் வேணும். அதில எதாவது ஃபால்ட் இருக்கனும். மூனாவது குழந்தை பொறந்தப்பயே இதெல்லாம் உனக்குத் தெரியாதா? அப்பவே பர்த் கண்ட்ரோல் பண்ணலாம்ல. அட்லீஸ்ட் காப்பர் டீயாவது போட்டிருக்கலாம்ல. இப்ப வளர்க்க வசதி இல்லன்னா அப்ப வசதி இருந்துச்சா? மூனு பிள்ளைங்க சாப்பிடுறத நாலாவது பிள்ளைக்கும் வைக்க வேண்டியதுதானே! இதிலென்ன பிரச்சன?”
"சாப்பாடு போடுறதோட போற விஷயம் இது இல்லம்மா. நாளைக்குக் கல்யாணம், காட்சி செய்யனும். அடுத்ததும் பொம்பள புள்ள பொறந்தா, நான் என்ன செய்வேன்?"
"மூனு மாசம் முன்ன வந்திருந்தா கூட, இரண்டு மாத்திரை போதும். இரண்டு மாசம் முன்ன வந்திருந்தா கூட, சிரஞ்ச் வச்சு உறிஞ்சு எடுத்துருவேன். இப்ப நாலு மாசம். சர்ஜரிதான் செய்யனும். காலு, கைய வெட்டி கர்ப்பப் பைய சுத்தப்படுத்தனும். ஒரு பிசுறு தங்குனா கூட சில மாசம் கழித்து உன் உயிருக்கே ஆபத்தாயிடும். கொஞ்சம் யோசிச்சு பாரும்மா."
"இல்ல டாக்டர், என்னோட அக்காவா உங்கள நெனச்சு, இந்த உதவிய கேட்குறேன். நெறவேத்தி கொடுங்க டாக்டர்."
"இதுக்கு மேலே நான் என்ன சொல்ல. இந்தாங்க இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்துக்குங்க. ஸ்கேன் எடுத்துக்குங்க. கவர்மெண்ட் பர்மிஷன் வேணும். நல்ல நோட்டரி பப்ளிக்கா பார்த்து பக்காவா ரிப்போர்ட் வாங்கிடுங்க." என்று சொல்லி ஏழெட்டுப் பேப்பர்களைக் கிழித்துக் கொடுத்தார் கோபத்துடன் டாக்டர் அஸ்வினி.
"நீங்களே இந்த ஆப்பரேஷன நல்ல படியா முடிச்சு கொடுங்க டாக்டர்"
"அது என் கையில் இல்ல. அபார்ஷன் முடிவாயிட்டுன்னா அன்னக்கி யார் டூட்டில இருக்காங்களோ, அவங்க செய்வாங்க. பிரசவத்துக்குதான் ஒரு டாக்டர். இதுக்கெல்லாம் இரண்டு டாக்டர் இருக்கனும்."
ஒவ்வொரு ரிப்போர்ட்டுக்கும், ஒவ்வொரு டெஸ்ட்டுக்கும், அலைவதே பெரிய வேலையாக இருந்தது. டெஸ்ட் எடுக்கும் லேப்கள் அனைத்திலும், பெண்களே வெள்ளை உடை உடுத்திய பட்டாம்பூச்சிகளாக, வேலை செய்து வருவது அமுதாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அம்மா எதற்காக இப்படி அலைகிறாள் என்பது, செண்பகத்துக்கு அமுதா சொல்லாமலேயே தெரிந்துவிட்டது. பத்தாவது படிக்கின்ற, பதினாறுவயது பெண்ணல்லவா அவள். இருந்தாலும் தெரியாதது போலக் காட்டிக் கொண்டு, அம்மாவுக்கு எல்லா உதவியும் செய்து வந்தாள் செண்பகம். தேதி முடிவாகி விட்டது. வரும் ஐந்தாம் தேதி அமுதாவுக்குச் சர்ஜிகல் அபார்ஷன். துணைக்கு யாரை வைத்துக் கொள்ளலாம் என யோசித்த அமுதா, தன் பள்ளித் தோழி செல்விக்குப் போன் செய்தாள். தனது நிலையைத் தெரிவித்தாள்.
"செல்வி! நீதான் எனக்குத் துணையாக ஆஸ்பிடலில் இருக்கனும்"
"ஒன்னோட நெலம புரியுது அமுதா. இருந்தாலும் என் மாமியார் என்ன சொல்வாரோ தெரியலியே. எங்க அம்மா வீட்டுக்கு நான் போனாலே சும்மா கத்திகிட்டே கெடக்கும். இரண்டு பிள்ளைகளையும் மாமியாரிடம்தான் விட்டுவிட்டு வரனும். என்ன ஆனாலும் சரி, ஒன்ன பார்த்துக்க நான் வரேன். இதக் கூடச் செய்யலேன்னா நான் பொண்ணா பொறந்ததுக்கே, அர்த்தம் இல்லாம போய்விடும்."
அபார்ஷன் செய்யும் நாள் வந்தது. சொன்னபடி வந்துவிட்டாள் செல்வி.
காலையில் சாப்பிடாமல் வரச் சொல்லியிருந்தார்கள். மீண்டும் சுகர், பிரெஷர், ஈசிஜி எல்லாம் எடுத்தார்கள். எல்லாம் ஓகே ஆகிவிட்டது. ஸ்கேன் எடுத்த படங்களை, கூர்ந்து பார்த்த டாக்டர் மேகலாவுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆப்பரேஷன் அறைக்குக் கொண்டு செல்லப்பட்டாள் அமுதா. உடைகள் மாற்றப்பட்டன. அமுதா அருகில் வந்தாள் மகப்பேறு நிபுணர் டாக்டர் மேகலா,
"ஏம்மா இந்த அபார்ஷன நீ பண்ணிக்கிற"
"குடும்பச் சூழ்நிலைதான் டாக்டர். நாலும் பெண்ணாயிட்டா நான் என்ன செய்வேன் டாக்டர்? இப்பவே வரதட்சனையெல்லாம் எங்கேயோ போய் நிக்குது. இன்னும் பதினைஞ்சு வருஷம் கழிச்சு என்னாகுமோ?"
"ஒன்னும் ஆகாது. நான் ஏன் இவ்வளவு நேரம் பேசறேன்னா, நானே எங்க வீட்ல நாலாவதாகப் பிறந்த பொண்ணுதான். என்னோட சம்பளம் ஒரு லட்சத்துக்கும் மேல. நான் பணக்கார குடும்பத்திலேயும் பிறக்கல. நல்ல மார்க் மட்டும்தான் எடுத்தேன். இன்னக்கு என்ன கல்யாணம் செஞ்சுக்க, யாரும் வரதட்சனை கேட்கல.
கடவுள் பெண்ணுக்கு மட்டும்தான் ஈவு இரக்கம், பந்தம், பாசம் எல்லாத்தையும் கொடுத்து அனுப்பியிருக்காரு. இதுக்கு மேலேயும் அந்தப் புள்ளய, ஒன்னோட இரத்தத்த, நான் வெட்டி எடுக்கனுமா? சொல்லு… சரி, நாம ஒன்னு செய்வோம். எங்கிட்ட பணம் இருக்கு. பொறக்கப்போற புள்ளக்கி உள்ள படிப்பு, கல்யாணம், மத்த எல்லாச் செலவையும் நான் பார்த்துக்கிறேன். இந்த புள்ள உயிரோட இருக்கட்டுமா? என்ன சொல்றே?"
பெண்களின் அருமை அமுதாவின் கண்களில் காட்சிகளாய் ஓடியது.
செண்பகம், ஸ்வேதா, அஸ்வினி, செல்வி, மேகலா எல்லோரையும் ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தாள்.
"டாக்டர் என்ன மன்னிச்சுடுங்க! இந்த ஆப்பரேஷன் எனக்கு வேண்டாம். என்னோட புள்ளய நானே வளர்த்துக்கிறேன். அவள வளர்த்து, உங்கள மாதிரி பெரிய ஆளா ஆக்குறேன்."
ஆப்பரேஷன் டேபிளை விட்டு இறங்கி தனது உடைகளை அணிந்து கொண்டாள் அமுதா. மேகலாவின் கண்களிலிலும் கண்ணீர் வழிந்தது. மூன்று மணி நேராமாவது, அபார்ஷனுக்கு ஆகும் என்று நினைத்த துரைசாமிக்கு பதினைந்து நிமிடத்திலேயே அமுதா வெளியே வந்தது புதிராக இருந்தது. இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். நடந்த எல்லாவற்றையும் கணவனிடம் கூறினாள் அமுதா.
அடுத்த ஐந்தாவது மாதம். அமுதாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. எல்லோர் முகத்திலும் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கரைபுரண்டோடியது. ஸ்கேனில் ஆண்குழந்தை என்பது தெரிந்துதான் டாக்டர் மேகலா அந்த அபார்ஷனை தடுத்தாள் என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது.
ஜெ மாரிமுத்து
கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம். ஆனால் வெண்ணெய் திரண்டு வரும் போது தாழி உடைந்தது போல இருக்கிறது.
பதிலளிநீக்கு